January 23, 2010

விலகாதே ப்ளீஸ் !


அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது.

வழக்கமாய் அவன் வந்தாலே எங்கள் குழுவே புத்துணர்ச்சியாகி விடும். கடி ஜோக்ஸ்..முதல் சீரியஸ் ஜோக்ஸ் வரை எடுத்து விட்டால் நேரம் போவதே தெரியாது. நகைச்சுவை சம்பவங்களை அவன் விவரித்தால் சிரித்து சிரித்து கண்ணில் நீர் வரும்.

சமீப காலமாய் அவனைப் பார்க்கவே சகிக்கவில்லை.

'அவளுக்கு என்னைப் பிடிக்கலைடா' என்றான் முனகலாக.

யாருக்கு.. மண்டையைக் காய்ச்சியதில் அவன் காதலிப்பதாகச் சொன்ன பெண் ஞாபகத்துக்கு வந்தாள்.

'அவளை தொலைவுல பார்த்தாலே கண்ணு பளிச்சிடும்.. பேசினா உற்சாகம்.. நினைச்சா சும்மா ஜில்லுனு ஒரு பீலிங் .. இதெல்லாம் எனக்குத்தான் வருது.. ஆனா அவ நானாப் போய் பேசினாத்தான் பேசறா.. அதுவும் விளக்கெண்ணை குடிச்ச மாதிரி முகம்.. இதுவே வேற ஆள்கிட்ட பேசும்போது.. நான் முதல் முதல்ல அவகிட்ட எதைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆனேனோ.. அந்த கண் சிமிட்டல்.. பேசும்போதே ஒரு சுவாதீனம்.. இப்ப அது மிஸ்ஸிங்.. டோடலா..'

'நீயா கற்பனை பண்ணிக்கறே' என்றேன்.

'ப்ச்.. நான் பொய் சொல்லல..'

'ஒரு வேளை உன்கிட்ட அவ இயல்பா இருக்காளோ என்னவோ.. மத்தவங்க கிட்ட தன்னோட ரியல் பீலிங்ஸ் காட்டாம.. உரிமையா உன்கிட்ட மட்டும் காட்டிகிட்டு.. நம்மால எப்பவுமே சிரிச்சுகிட்டு இருக்க முடியாதுப்பா.. ஹியூமன்லி இம்பாசிபிள்'

'நாட் ஆல் 24 ஹவர்ஸ்..'

'சரி.. அவகிட்ட பேசவேண்டியதுதானே'

'டைம் கொடுத்தாத்தானே'

'நான் ஒண்ணு சொல்லவா.. நீ சொல்றது நிஜம்னு வச்சுகிட்டா.. அவளுக்கு இப்ப உன்னைப் பிடிக்கலைன்னா.. விலகிடேன்..ஏன் மனசைக் குழப்பிக்கணும்'

அவன் கண்கள் கலங்கிப் போய் விட்டன.

'நான் அவளை மனப்பூர்வமா நேசிக்கறேண்டா'

வேலையில் புலி இந்த நிமிஷம் பூனைக்குட்டி போல பம்மியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிராஜக்ட் முடிப்பதில் சமர்த்தன். நட்பு வட்டத்தில் யாருக்கு எந்த மனஸ்தாபம் வந்தாலும் முன்னே நின்று கை குலுக்க வைத்து விடுவான். பிரச்னை என்று சொல்ல ஆரம்பிக்குமுன்னே தீர்வு சொல்வதில் கில்லாடி. சூழலைக் கலகலப்பாக்குவதில் அவனுக்கு நிகர் அவனே.

ஒருமுறை எனக்கு உடம்பு முடியாமல் ஹாஸ்பிடலில் சேர்த்தபோது இரவு முழுக்க கண் விழித்து, ட்ரிப்ஸ் கண்காணித்து, நர்சை அழைத்து வந்து.. உடம்பு சற்று தேறியதும் முதல் இட்லி அவன் தான் ஊட்டி விட்டான்.

'நான் பேசிப் பார்க்கட்டுமாடா'

'வேணாம்டா'

எனக்கு ஒரு குழப்பம்.. ஒரு ஆணாய்த்தான் இந்தக் கேள்வி. (பெண்கள் தரப்பில் இதைப் போலவே எதிர் வினைகள் இருக்கக்கூடும்.)

'அது ஏன் ஒருத்தியை லவ் பண்றேன்னு ஒரு ஆண் கமிட் பண்ணதும் உடனே நோகடிக்கறாங்க..'

லவரை மட்டுமல்ல.. மனைவியா வந்தாலும்.. மறு மாசமே 'இந்த ஆளை எப்படி இத்தனை வயசு வளர்த்தாங்களோ தத்தியான்னு' கமெண்ட்!

என் பக்கத்து இருக்கை அம்மணி காலையில் ஆபிஸ் வந்ததும் (மணமாகி ஒரு வருடம் கூட முடியவில்லை) 'பாவா'வைத் திட்ட ஆரம்பிச்சா.. சாயங்காலம் ஆபீஸ் முடியறவரை வசைமாரிதான்.

'எதுக்கும் துப்பில்லை'

தனக்குத்தான் அறிவில்லை.. சுயபுத்திதான் இல்லை.. சொல்பேச்சு கேட்கலாமில்ல.. மாடியிலேர்ந்து குதின்னா சொல்றோம்..'

இதே ரீதியில் வசனங்கள்.எல்லாப் பெண்கள் பற்றிய விமர்சனம் இல்லை இது.. இதே போல ஆண்களிலும் கொடுமைக்காரர்கள் உண்டு.

என் குழப்பம் எல்லாம்.. நான் கேள்விப்பட்ட / பார்த்த மனிதர்கள் பற்றி..

நேசிப்பை சொன்னதும் ஆணோ.. பெண்ணோ.. சற்று விட்டேத்தியாய் மாறிப் போவதேன்?

இந்தப் பதிவில் நான் என் நண்பன் சார்பாகப் 'பெண்ணைப் பற்றி' மட்டும் கேட்க நினைத்தேன். இரு தரப்பு பதில்களும் மன வெளிச்சம் கொடுத்தால் சந்தோஷம்தான்.

காதல் என்பது கடைசி வரை அல்லவா ஜீவராசிக்கு.. முதுமையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழும் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.ஆனால்.. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாய்.

ஏன் ஆரம்பிக்கிறது 'விலகல்' - நேசிப்பு பகிர்ந்த மனிதரிடையே..

பதில் சொல்லுங்களேன்.. பிளீஸ்.

10 comments:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

விலகல் இருந்தால் தான் அதன் ருசி தெரியும். இல்லாவிட்டால் எல்லாமே
திகட்டி விடும்!!
தலைவனைக் காணாத் தலைவி பசலை நோயினால் வாடி,அவளின் கையறு நிலையைக் கண்ணாடி போல்
காட்டுவதால் தானே புற நானூறுப் பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன!

Chitra said...

காதல் என்பது கடைசி வரை அல்லவா ஜீவராசிக்கு.. முதுமையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழும் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.ஆனால்.. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாய்.

ஏன் ஆரம்பிக்கிறது 'விலகல்' - நேசிப்பு பகிர்ந்த மனிதரிடையே..

ரிஷபன் சார், நான் அடுத்த வாரம், ஒரு பதிவுக்குக்காக இதை ஒத்த சிந்தனையில் இருந்தேன். என்ன ஒரு ஒற்றுமை. .....!
நிச்சயம் இன்னும் கொஞ்சம் யோசித்ததும் எழுதுகிறேன். :-)

கமலேஷ் said...

எனக்கு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல தெரியல ஆனால் உங்க அந்த நண்பனோட காதலிக்கிட்ட கொடுத்து இந்த பதிவை படிக்க சொல்லுங்க....நிச்சமாய் அந்த பொண்ணு யோசிக்கும்..ஏன்னா உங்க நண்பர் கூட இவளவு அழகா விலகளோட வலிய சொல்லி இருக்க முடியாது...அவ்வளவு அழகா வலியோட நீங்க விவரிட்சி இருக்கீங்க...

Siva said...

ஆதிக்கம் இல்லாத நேசம் இருந்தால் விலகலுக்கான காரணத்தினை கண்டுணர வாய்ப்பு அமையும் என்று நினக்கிறேன்

malar said...

விலகல் என்பது கல்யாணதுக்கு முன்னாடியே என்றால் பேசி பார்த்து ஒத்து வரவில்லை என்றால் ஒதிங்கி கொள்வது நல்லது.

கல்யாணத்திற்க்கு பின்பு என்றால் முடிந்த்தவரை சேர்த்து வைப்பது நலலம்.

K.B.JANARTHANAN said...

சில கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடையாது அதான் அந்த மௌனம்!

வசந்தமுல்லை said...

ஊடல் இருந்தால் நிச்சயம் கூடல் உண்டு. அதனால் விலகல் பரவாஇல்லை!

ஹேமா said...

எதோ ஒரு வேகத்தில் நேசிக்கத் தொடங்கியிருக்கலாம்.பின்புதான் ஒருவரையொருவர் புரிய ஆரம்பித்திருப்பார்கள்.மனங்கள் முரண்பட்டிருக்கலாம்.

VAI. GOPALAKRISHNAN said...

தூரத்துப்பச்சை கடைசிவரை கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.
தூர இருந்தே உங்கள் நண்பர் அவள் நினைவாகவே இருந்து விட்டுப்போகலாம்.

சில பொருட்கள் கடையின் ஷோகேசில் இருப்பதே நல்லது. நாம் அடிக்கடி போய் பார்த்துவிட்டு ரசித்து விட்டு வரலாம்.

நம் வீட்டுக்கு வாங்கி வந்து வைத்துக்கொண்டால், ஒட்டடை படிந்து ஒரு நாள் நமக்கே பார்க்க சகிக்காமல் போய்விடும்.

தூக்கி எறிந்துவிடனும் என்று கூடத் தோன்றும். காலுக்கு உதவாத காஸ்ட்லி செருப்பு நமக்கு எதற்கு? சுமாராக இருந்தாலும் பொருத்தம் தானே முக்கியம்.

மஞ்சுபாஷிணி said...

தத்ரூபமான வரிகள் என்று சொல்லலாமா தலைப்பே மனதை இளகவைத்துவிடும் யாருக்குமே... விலகாதே ப்ளீஸ்.... தன் மனதிலுள்ள நேசத்தை எல்லாம் முழு பலத்துடன் திரட்டி கண்களில் எந்த நொடியும் நீரை கொட்டிவிடும் அபாயத்தில்...... ” விலகாதேப்ளீஸ் “ அந்த கெஞ்சலில் தொக்கி நிற்கும் அன்பு, பாசம், நேசம் எல்லாமே ஒரு நொடியில் மனமிளகிவிடச்செய்துவிடுகிறது....

தன் மனதில் உள்ள நேசத்தை சொன்னால் “ சந்தோஷமாய் சரி என்று சொன்னால் ஓகே “ அப்படி இல்லாமல் எதிர்வினையாகி “ இல்லையே அப்படி நான் நினைத்துப்பழகலையே அண்ணா “ என்று சமயோஜிதமாய் சொல்லிவிட்டாலோ.... இன்னும் ஒரு சிலப்பெண்கள்... நட்பாய் பழகினால் என்ன இப்படி எடுத்துண்டுட்டே அப்டின்னு பிளேட்டை திருப்பி போட்டுவிட்டாலோ? இருதயம் சுக்குநூறாகிவிடும் என்ற பயத்தினாலேயே நிறைய ஆண்கள் இந்த ரிஸ்க் எடுப்பதில்லை...

காதல் என்பது எத்தனை அற்புதமான உணர்வு.... அதை ஒரு ஆண் முழுமையாய் உணர்ந்து பரிபூரணமாய் தன் எல்லாம் பகிர்ந்து, நேசித்து பழகி உயிர் ஒன்று என்று முடிவெடுத்தப்பின் நேசிக்கிறேன் என்று சொல்லும்போது..... நேசிக்கப்படும் பெண்ணுக்கு தலையில் வைரக்கிரீடம் வைத்தது போல் ஆகிவிடுமா? பின் ஏன் அத்தனை விட்டேத்தி.. படிக்கும்போதே அந்த நண்பனின் நிலை குறித்த கவலை தொடங்கிவிட்டது எனக்கும்..

ஐயோ பாவம்.... உண்மையான நேசத்திற்கு மதிப்பில்லை போலிருக்கு... நேர்மையாய் தன் நேசத்தை சொன்னவரை விட்டு போகும் பெண்ணின் நிலை குறித்து என்னச்சொல்வது? தேடி வரும் நேசத்தை ஒதுக்கிவிட்டு நாடிச்செல்லும்போது கண்டிப்பாக நாம் எதிர்ப்பார்க்கும் நேசம் கிடைக்காது என்பதை பாவம் அந்தப்பெண் உணரவில்லை என்று நினைக்கிறேன்...

நேசம் மனதில் இருக்கும் வரை தான் அதற்கு மதிப்பு போல.. பகிராத காதல் மனதுக்குள்ளேயே பூட்டிவைத்து புதையலை காக்கும் பூதம்போல காலம் முழுக்க காப்பதனாலும் பயனில்லை... பகிர்ந்த நேசத்தை ஒதுக்கிவிட்டு விட்டேத்தியாய் அலையவிட்டு அழவிட்டு செல்வதும் சரியில்லை.... ஆத்மார்த்தமான அன்பை இருவருமே அனுபவித்து அந்த நேசத்தை பகிரும் தருணம் எத்தனை சந்தோஷம் என்பதை ஒருவேளை அந்த பெண் உணராததால் தான் இத்தனை சிரமங்கள்...

அருமையான ரசிக்கவைத்த மனம் நெகிழவைத்த உருகவைத்த கதைநடை.... மனதின் உணர்வுகளை மிக சிறப்பாக அந்த நண்பனின் நிலையில் இருந்து எழுதியது போல அத்தனை சிறப்பு ரிஷபா.... அழுத்தமான ஒருதலை காதல் கதையைச்சொல்லி சென்றது மிக தத்ரூபம்....

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா....