June 30, 2010

கிங் க்வீன் ஜாக்- பகுதி 1அப்பாவின் குரல் உரத்துக் கேட்கிறது என்றால், இரண்டே காரணங்கள்தான். ஒன்று அப்பா வீட்டில் இருக்கிறார். இரண்டாவது, அப்பா அம்மாவிடம் பணம் கேட்கிறார்.

உமா புரண்டு படுத்தாள். எழுந்து போய்ப் பார்க்க மனசில்லை. அப்பாவின் இப்போதைய தோற்றம் ஏற்கெனவே பலமுறை பார்த்துச் சங்கடப்பட்டது.

"என்ன சொல்றே. உங்கையில ஒரு பைசா கூட இல்லியா"

அம்மாவின் முகம் நசுங்கிப் போய் பல மாதங்களாகி விட்டன. ஆறு கஜம் புடைவை தன் வர்ணம் இழந்து அம்மாவின் மெலிந்த தேகத்தை அவஸ்தையாய் சுற்றிக் கொண்டிருந்தது.

"பதில் சொல்லுடி"

"இல்லே"

"ஒரே ஒரு ரூபா"

"இல்லே"

"தெருவுல நிமிஷத்துல நூறு ரூபா பார்த்துருவேன். வீட்டுலேர்ந்து ஒரு பைசாவாவது எடுத்துக்கிட்டுப் போகணும். அதான் கேட்கிறேன்"

அம்மாவின் குரல் கேட்கவில்லை. இதே சால்ஜாப்பை அப்பா நிறைய தடவைகள் உபயோகித்து இருக்கிறார்.

"கொடுடி.. எனக்கு நேரமாச்சு"

முள் நகர நகர அப்பாவின் தீவிரம் வலுப்பெற்று ஏதேனும் காசு பார்க்காமல் விட மாட்டார் என்று புரிந்தது உமாவுக்கு.இதன் அடுத்த கட்டமாய் அம்மாவின் மீது 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' நிகழக்கூடும்.அம்மாவாவது கொடுத்து தொலைக்கலாம். வெட்டி வீம்பினால் இந்த மனிதனைத் திருத்த முடியப் போவதில்லை.

"என்னடி.. தருவியா.. மாட்டியா"

குரல் நிதானமானது. உமா சட்டென்று எழுந்து வந்துவிட்டாள்.

"அம்மா"

கண்ணீர் துளிக்கூட புலப்படாத இறுக்கமான முகத்துடன் அம்மா திரும்பினாள். ஆறு கால பூஜை தவறிய அம்மன் போல சோகை அப்பிய முகம்.

"இதை அப்பாகிட்டே கொடும்மா"

அம்மாவின் பிடிவாதம் உமா நீட்டிய ரூபாய் நோட்டை வாங்க மறுத்தது.

"பிளீஸ்மா"

அருகில் வந்து கையில் திணிக்க, பிடி அகன்று கீழே தவறிய தாளை அப்பா லாகவமாய் ஏந்திக் கொண்டார்.முகம் பிரகாசித்தது.

"இனி ஜெயம்தாண்டி. இதை முதல்லேயே செஞ்சிருக்கலாம்ல"

செருப்பு சப்திக்க தெருவில் இறங்கிப் போனார். இனி எப்போது வீடு திரும்புவாரோ அவருக்கே வெளிச்சம்.

ஐம்பத்திரண்டு கார்டுகள். ஏஸ்.. கிங்.. க்வீன்..ஜாக்.. என உபரியாய் ஜோக்கர்களுடன் கடை வீதியின் ஒரு கட்டட முதல் மாடி அறைக்குள் வேறு ஒரு உலகத்தில் பிரவேசித்து நிற்பார்.

அப்பா.. உமா மனசுக்குள் தேம்பினாள்.மெளனமாய் நகர்ந்தது அன்றைய விடுமுறை தினம்.நாளையிலிருந்து ஆறு நாட்களுக்கு அலுவலகம் சொர்க்க வாசலைத் திறந்து வைத்திருக்கும். இரவில் தூங்கும் நேரம் கூட அலுவலகம் சம்பந்தப்பட்ட கனாக்கள். அம்மாவும் அவளுங்கூட சம்பிரதாயப் பேச்சு மட்டும் பேசிக் கொண்டு.

உமாவால் முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அம்மா புதுப் புது சோகம் வைத்திருப்பாள். பேசப் போனால் பாரம் தலை மாறி ஏறிக் கொண்டு அழுத்தும்.அப்பாவின் சீட்டாட்டப் பைத்தியம் ஒன்றும் புதிதில்லை. அம்மாவைப் பெண் பார்த்துத் திரும்பிப் போன தினத்திலேயே தெரியும். அதே ஊரில் அப்பா மட்டும் தங்கி விட்டார்.

'கச்சேரிக்குப் பெயர் போன ஊர்'

'நம்ம ஜானாவைப் பார்க்க வந்தானே.. குப்புசாமி வீட்டுத் திண்ணையில.. சீட்டு விளையாடிண்டிருக்கான்'

இத்தனை வெறியாய் இருப்பார் என்று தோன்றவில்லையாம். பெண் பிடித்துப் போனதால், இன்னொரு தரம் பார்க்க வசதியாய் பொய்க் காரணத்தோடு திண்ணையில் இடம் பிடித்ததாக நினைத்தார்களாம்.மாப்பிள்ளை அழைப்பன்று இரவும் இடை விடாத கச்சேரி.

'முகூர்த்தத்துக்கு நேரமாச்சு.. வாடா' என்று கையைப் பிடித்து இழுக்காத குறை.

உமா பிறந்த நாள் அன்று அப்பா அதிக சந்தோஷத்தில் இருந்தாராம். ஆயிரம் ரூபாய் வரவு.

'இவ பிறந்தவேளை'

அம்மாவுக்கு அப்பா, அவரது சீட்டாட்ட மற்றும் பிற வெறிகள் பழகிப் போய் விட்டன.பழைய பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தில் அம்மாவின் புஷ்டியான தோற்றம் இப்போதும் பிரமிப்பு தரும். அப்பாவைப் பின்னுக்குத் தள்ளி ராணி போல கம்பீரம் காட்டிய புகைப்படம்.இப்போது எடுத்த புகைப்படம் ஏதோ 'திருஷ்டி' போலத் தெரிகிறது.

அந்த அம்மாவா இப்படி ஆனாள்?

'உன்னால தடுக்க முடியலியாம்மா'

உமா ஆற்றமாட்டாமல் ஒருதரம் கேட்டிருக்கிறாள்.அம்மா சிரித்தாள். வெற்றுச் சிரிப்பு.

"இல்லம்மா.. அப்ப நீ என்ன சொன்னாலும் அப்பா கேட்டிருப்பார். அந்த மாதிரி இருந்திருக்கே"

அம்மாவின் புன்முறுவலில் இன்னமும்கூட தேயாத பிரபை.

"ஆம்பிளையை நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான். அவன் என்ன தீர்மனிக்கிறானோ அதுதான்.. சில சமயம் அந்தத் தீர்மானம் நம்மாலன்னு பொய்யா கெளரவப்படுத்துவான்"

"என்னம்மா.. நம்ம திரிவேணி அத்தை.. ஙேன்னு இருந்துகிட்டு.. மாமாவை எப்படி கையில வச்சிருக்கா"

"திரிவேணி அத்தை பேர்ல எவ்வளவு சொத்து இருக்குன்னு தெரியுமா.. மாமா அடங்கிப் போனது சுயநலத்துல.. அவருக்குப் பணத்தாசை.. உங்க அப்பாவுக்கு வேற"

உமாவுக்கு இது மாதிரியான உரையாடல்கள் அலுத்துப்போனதால்தான் வீட்டில் பேச்சைச் சுருக்கியது.

அப்பா எப்போதாவது குடும்பத் தலைவர் வேஷமும் போட்டிருக்கிறார். உமாவைக் கையைப் பிடித்து ஆற்றங்கரைக்கு அழைத்துப் போன சிறு வயசு ஞாபகங்கள்.

"ஏம்பா.. தண்ணியே இல்ல"

"மழை பேஞ்சாதானே"

"மழை ஏன் பெய்யலே"

"மரமே இல்லியே. எல்லாத்தையும் வெட்டிட்டா"

"ஏம்பா.. மரத்தை வெட்டறா"

சங்கிலித் தொடர் போலக் கேள்விகள். அலுக்காமல் பதில் சொல்லிய அப்பா. இருட்டிய பின்னும், எதிர் உருவம் சரிவரப் புலப்படாத நிலையிலும் மணல் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கொடி ஏற்றும் வரை பொறுமையாய்க் காத்திருப்பார்.

"அம்மாவும் நம்ம கூட வரலாம்ல"

"அவளுக்கு சமையலறை போதும். வான்னா வரமாட்டா"

"அம்மாவுக்கு ரசனையே இல்லைப்பா"

அப்பா பதில் சொல்ல மாட்டார். எப்படிச் சொல்வார். அவரால் சிறகு முறிக்கப்பட்ட பறவையைப் பற்றி என்ன சமாதானம் தர இயலும்?

உமாவுக்கு அப்போது அப்பாவைப் பிடித்துப் போனது. அருகே இருக்கிற நேரங்களில் தோழனாய் நிற்கிற அப்பா, சிடுசிடுக்கிற அம்மாவை விட கூடுதலாய்ப் பிரியம் சம்பாதிக்கிறார்.

பத்து வயசுக்கு மேல்தான் அம்மாவைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதுவும் சீட்டாட பணம் கிடைக்காத ரெளத்திரத்தில் அம்மாவின் தலையைத் தாக்கிய டம்ளர். மூன்று தையல்கள். ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அம்மா.அப்பாவின் பிம்பம் அன்று முதல் முறையாகத் தகர்ந்தது. இவர் தகப்பன் இல்லை. தகப்பனுக்குரிய குணங்கள் இல்லை.

"அப்பா வேணாம்மா"

"போடி பைத்தியம்"

அம்மா ஏன் அப்பாவைத் தாங்கிப் பிடிக்கிறாள் என்று புரியவில்லை. இந்த நிமிஷங்கூட. பி.காம். படித்து வேலைக்கு அமர்ந்த பின்னும், சுயமாய் முயற்சித்து அலுவகத் தேர்வு எழுதித் தேறி, இன்று கெளரவமாய் இருக்க முடிந்தபோதும், அம்மா அப்பாவின் நிழலில் நிற்பதுபோல ஏன் காட்டிக் கொள்கிறாள்?

"சாப்பிட வரியா"

அம்மாவின் குரல் கேட்டது.வேளை தவறாமல் நிகழ்கிற ஒரே வேலை.

"அம்மா"

"ம்"

"கையில் போடறியா.. பிசைஞ்சு"

அம்மா எதுவும் பேசவில்லை. உள்ளே போனாள். ஒரு ஏனத்தில் கலந்து கொண்டு திரும்பியவளின் இன்னொரு கையில் அப்பளத்தட்டு.உருட்டிப் போட்ட கவளம் இதமாய் தொண்டைக் குழியில் இறங்கியது.

எதிரே அப்பாவும் இதே போலக் கை நீட்டி அமர்ந்தால்..கொடுப்பினை இல்லை. இயற்கை தன் போக்கில் நிர்ணயிக்கிறது.

"கீழே வழியறது பாரு."

"துடைச்சிரலாம். இப்பவும் சாம்பார்ல நீதான் எக்ஸ்பர்ட்..அதே டேஸ்ட்"

"ஒரே புழுக்கமா இருக்குடி"

"போம்மா ஐஸ் வைக்கிறேன்னு கிண்டல் பண்றியா"

மீண்டும் உருண்டையைக் கையில் போட்ட அம்மாவிடம் சொன்னாள்.

"உன்கிட்டே நல்ல புடைவையே இல்லியே. ஏம்மா பிடிவாதமா பழசையே கட்டிக்கறே"

"யாருடி தினகர்"

அம்மா பதில் கேள்வி கேட்டதும் உமாவுக்குப் புரையேறியது. தும்மியதில் சாதம் சிதறியது.

"அம்மா.."

"யாரு தினகர்.. சொல்லு"

(தொடரும்)


(கல்கியில் பிரசுரமான நான்கு வாரத் தொடர் )

12 comments:

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு நண்பா.

கல்கியில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

வானம்பாடிகள் said...

எதிர்பாராத இடத்தில்ப் புரையேறிய மாதிரி. என்னமாதிரி எழுதறீங்க ரிஷபன்.

vasan said...

அப்ப‌ப்பா!!
என்ன‌ ச‌ர‌ள‌மான‌ நடை,
ச‌ல‌ச‌லன்னு அருவி ம‌ண‌ல், சிறு கூழ‌ங்க‌ள்
உருட்டியேடும் தெள்ள‌த்தெளி நீரில் துள்ளியேடும்
சிறு மீன் ச‌ட்டென‌ விழும் ப‌ற‌வை நிழ‌ல் க‌ண்டு
அசைவ‌ற்று.... தெட‌ருங்க‌ள் விரைவில்.

சுந்தர்ஜி said...

குடும்பங்களின் ஆன்மா உறைந்திருக்கிறது உங்களின் கதைகளில்.இந்த நடை போல எழுதுவதற்கு இப்போது யாருமில்லை-ரிஷபனைத் தவிர.உங்கள் பலம் உரைநடைதான் ரிஷபன்.கடவுள் நிறைய ஆயுசைத் தரட்டும் உங்களுக்கு-நாங்கள் நிறையப் படிக்க.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஆரம்பமே ஜோர்! உம்...தொடரட்டும்!!

அம்பிகா said...

நல்ல நடை
தொடருங்கள் ரிஷபன்.

Chitra said...

வாழ்த்துக்கள், ரிஷபன் சார்..... அருமையான தொடர். கல்கியில் வந்ததற்கு பாராட்டுக்கள்!

இராமசாமி கண்ணண் said...

அபாரமான எழுத்து நடை ரிஷபன். வாசன் ஜயா சொல்றத அப்படியே அமோதிக்கறேன். கல்கில வந்தற்கு வாழ்த்துகள்.

ஹேமா said...

தொடக்கமே ஆர்வமாயிருக்கு ரிஷபன்.சீக்கிரமா அடுத்ததும் போடுங்க.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தொடக்கம் சார். கல்கி இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

பத்மா said...

na padichuruken

appove romba pidichchurunthathu


ingayum padippen

K.B.JANARTHANAN said...

விறு விறுப்பான ஆரம்பம்! -கே.பி.ஜனா