July 02, 2010

கிங் க்வீன் ஜாக் - பகுதி 2



சீட்டுக் கட்டைப் பிரித்ததும் அப்பாவின் முகம் என்னமாய் விகசிக்கும். புதுக் கட்டு என்றால் ஆசையாய் வாசனை பார்ப்பார்.கலைத்து இடை சேர்த்து பர்ரென்று அடித்து மீண்டும் குலுக்கி.. படங்களும் எண்ணும் அவரைத் தங்கள் ஆளுமையில் வைத்திருந்தன.


'ரம்மி ஆடணும்னா இது வேணும்'


தலையைத் தொட்டுக் காண்பிப்பார்.


சின்னவயசில் ஒரு தரம் உமாவையும், அம்மாவையுமே இழுத்து அமர வைத்து விட்டார்.


"ஒரு தரம்.. ஒரே ஒரு தரம்.. வந்து விளையாடிப் பாருங்க"


அம்மாவுக்கு மனசே இல்லை. உமாவுக்கு அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்.


"வாம்மா.. ஒரு தடவைதானே"


கலைத்து.. ஜோக்கர் வெட்டச் சொல்லி.. ஆளுக்கு 13 கார்டுகள் பிரித்துப் போட்டார்.அதற்கு முன்பே விளக்கம் சொல்லியிருந்தார்.


"இது ஏஸ்.. இது கிங்.. இது க்வீன்.. இதுதான் கிளாவர்..டைஸ்..ஆடுதன்..இப்படிச் சேர்ந்தா ஒரு செட்டு"


முதலில் புரிபடவில்லை. தானே இருதரப்பும் விளையாடிக் காட்டியதும் ஓரளவு புரிந்தது. தானும் சேர்ந்து விளையாடிப் பார்க்க பாதி ரகசியம் வெளிப்பட்டது.இரவுச் சாப்பாடு முடிந்து வீட்டில் இருந்த அபூர்வம். அப்பாவின் கைகள் பரபரவென்று சீட்டுகளை ஏந்தத் துடித்த தவிப்பு, அம்மாவையும் பெண்ணையுமே உட்கார வைத்து விட்டது.


அம்மா வெறுப்பாய் அமர்ந்திருந்தாள்.


"எதைப் போடறதுன்னு புரியலைப்பா"


"எதையோ ஒண்ணு போட்டுத் தொலைடி" என்றாள் அம்மா.


"ரெண்டு ஆடுதன் தனியா நிக்குமே.. அதைப் போட்டுடாதே"


அப்பா எப்படிக் கண்டு பிடித்தார்.. மூன்று சுற்று முடிந்து நாலாவது சுற்று.


"எப்படிப்பா?"


தலையைத் தொட்டுக் காண்பித்தார்.


"உங்கம்மாவுக்கு அது வேணும். வேற கார்டை இறக்கு. செட்டு சேர்ந்தது வேணாம். மூணு ஏஸ்.. மூணு கிங்னு வச்சிருப்பியே.. அதுல கழட்டு"


"போப்பா.. அப்புறம் எப்படி மறுபடி சேர்க்கறது"


"உங்கிட்டே ரியல் ரம்மியே இல்லியே"


"அது எப்படிப்பா தெரியும்?"


மறுபடி வியப்பு.


"உம்மூஞ்சியப் பார்த்தாலே தெரியறது.."


உமாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.அன்றைய ஆட்டத்தில் அம்மாதான் ஜெயித்தாள். கொத்தாய்க் கீழே போட்டு எழுந்து போனாள்.


"பாரேன் அலட்சியத்தை.."


அப்பா எரிச்சலாகி விட்டார்.


அம்மாவிடம் இரவுப் படுக்கையில் சிலாகித்தபோது "வாயை மூடுடி.." என்றாள்.


"எப்படிம்மா"


"எனக்கு அதுல வெறி இல்லைடி. எப்பவாவது அமையறதை எப்பவும் கிடைக்கும்னு தொரத்தறது உங்கப்பா"


வீட்டில் அதன் பிறகு அப்பா இவர்களைக் கூப்பிடுவதில்லை.


அப்பாவின் சட்டைப்பை வறட்சியான தினங்களில் தானே மானசீகமாய்ப் பிரித்துப் போடுகிற பாவனையில் அபிநயிப்பார்.


உமா அப்பாவுடன் பேசிப் பார்த்ததில் இன்னமும் இறுகிப் போனார்.


"நீ சின்னப் பொண்ணு.. பேசாம போ.. எனக்குத் தெரியும்"


"பொழுதுபோக்கா இருக்க வேண்டிய விஷயம்பா. இப்படி அதுவே வாழ்க்கைன்னு"


அப்பாவின் கோபம் முகத்தில் தெரிந்தது.


"வாயை மூடிண்டு போடி"


அப்பா கை நீட்டி அறைந்ததில்லை. அன்று அந்த வார்ததைகள் அறைந்தன. உமாவுக்குச் சலிப்பு வந்து விட்டது.'எப்படியோ போகட்டும்'கூட்டுக்குள் முடங்கியவளை வெளியே இழுத்தவன் தினகர்.


"எங்கப்பா நல்லவர்தான் தினகர். ஆனா சீட்டாடணுங்கிற வெறியில அந்த நிமிஷம் என்ன செய்யிறார்ங்கிற நிதனம் இல்லை"


தினகரைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரகம்.'சொல்லிப் பார். பதற்றப்படாமல். கேட்கவில்லையா.. விட்டு விடு'


"எப்படி முடியும் தினகர். எப்பவும் இறுக்கம் அப்பிக் கிடக்கிற குகைக்குள் காலடி வைக்கிற மாதிரி, வீட்டுக்குள் போனதும் வாடிப் போகுது மனசு"


"மனசுக்கு எல்லாத்தையும் கொண்டு போகாதே. அப்பாவைத் திருத்த முடியலைன்னு நீயும் உங்கம்மாவும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஏன் வீணாக்கணும். அது உங்க லைஃப்.. நீங்க வாழ வேண்டிய நிமிஷங்கள்"


புத்திக்குப் புரிந்தது. மனசு ஏற்க மறுத்து அடம் பிடித்தது.


"மேல.. மேல.. நீங்களாவே ஒரு வலை பின்னி முடங்கிப் போறீங்க. உங்க அப்பாவும் அதே போல இன்னொரு வலையில"


தினகர் நிதானமாய் துளிக்கூட சலிப்பு காட்டாமல் தினசரி சொல்லிச் சொல்லி, அவளைச் சுற்றி நெருக்கமாய்ப் பின்னப்பட்டிருந்த மானசீக வலையை அறுத்து விட்டான்.


அவனுடன் இருக்க நேர்கிற நேரங்களில் தன்னம்பிக்கை துளிர் விட்டுக் கொள்ளும். வீட்டுக்குத் திரும்பியதும் அப்பா இல்லாத வெறுமையும், அம்மாவின் சோக வலையும் அவளையும் முடக்கிப் போடும்.


"யாரு.. தினகர்.. சொல்லு"


அம்மா கேட்டதும் என்னவென்று சொல்ல?


"உனக்கு எப்படித் தெரியும்மா"


"பக்கத்து வீட்டுக்கு ஃபோன் பண்ணான்.. நீ அப்போ இல்லை. ஒரு வாரம் லீவுன்னு சொன்னான்"


"ஓ"


"யாருடி அவன்"


"இருட்டிலேயே பிடிவாதமா நிக்கறேன்னு நின்னப்ப.. வெளிச்சத்தைக் காட்டினவன்மா"


"புதிர் போடாதே"


தினகர் கொடுத்த தைரியம் பற்றிச் சொன்னாள்.


"இப்பல்லாம் என்னால எதையாவது ரசிக்க முடியறதுன்னா.. அது தினகராலதாம்மா"


"எந்த ஜாதி"


"எதுக்கும்மா"


"சொல்லேன் பதில் கேள்வி கேட்காம உன்னால பேச முடியாதா"


உமாவுக்கு முதலில் சிரிப்புத்தான் வந்தது. பாவம், அம்மாவால் சில எல்லைகளைத் தாண்டி வர முடியவில்லை.


"மனுஷ ஜாதிம்மா. நட்புக்கு அந்த விவரம் போதும்"


அம்மா ஏனோ மெளனமாகி விட்டாள்.


ஒரு கவலையை அலசித் தீர்வு தேடிய மெளனமும் உண்டு. தீர்வு புலப்படாமல் விரக்தியில் வாய் மூடிப் போகும் மெளனமும் உண்டு.


உமாவும் மேலே பேசவில்லை. அம்மாவைச் சமாதானப்படுத்தவென்று ஏதேதோ பேசிக் கொண்டு போக, அம்மாவின் பயம்தான் அதிகரிக்கும்.


தினகர் ஆனால் இதற்கு முரணாகப் பதில் சொன்னான்.


"உன் அம்மாவைப் பொறுத்தவரை அந்தக் கேள்விகளில் நியாயம் இருக்கு"


"நியாயம் இருக்கோ இல்லியோ, பயம் இருக்கு அம்மா மனசுல"


"அப்ப நீ வெளிப்படையா இல்லேன்னு அர்த்தம். உன்னைப் பார்த்து உங்கம்மா எதுக்குப் பயப்படணும்"


உமா நிதானமாய்ச் சொன்னாள்.


"இது என்னால வர்றதில்லை. எங்கப்பாவால வந்தது. எதிர்பார்ப்பு.. ஏமாற்றம் எல்லாத்துக்கும் அம்மா அவர்கிட்டேதான் கத்துக்கிட்டா"


சிரிப்போடுதான் சொன்னாள். சொல்லி முடிக்கும்போது மனசு கசந்து வழிந்தது.தினகர் பேசாமல் இருந்தான். அவள் தரப்பு வாதத்தின் நியாயம் முழுமையாய்ப் புரிகிறவரை.மறுபடி மென்மையாய்ச் சொன்னான்.


"பேசு. உமா. அம்மா மனசுல கவலை விருட்சமாக விட்டுராதே. தினகர் விஷயமோ.. வேறெந்த விஷயமோ.. அம்மா ஏத்துக்கணும்னு போராடாம.. உன் மனசுல இவ்வளவுதான்னு புரிய வைக்கிற மாதிரி. அதுல ஒண்ணும் தப்பு இல்லை.. நாம மனுஷங்கதான். பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே"


அவன் பேசப் பேச.. அதன் தாக்கம் தன்னைப் பாதித்த மாதிரி.. அம்மாவுக்கும் தன்னுடைய பேச்சு அவசியம் என்று புரிந்தது உமாவுக்கு. இன்னொன்றும்.. அதே போலத்தான் அப்பாவுக்குமா?




(தொடரும்)


- கல்கியில் வெளிவந்த நாலு வாரத் தொடர்

6 comments:

ஸ்வர்ணரேக்கா said...

//அப்பாவைத் திருத்த முடியலைன்னு நீயும் உங்கம்மாவும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஏன் வீணாக்கணும். //

அருமை...

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாவது பகுதியிலும் உங்கள் தனித்துவம். தொடருங்கள்.

Chitra said...

பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே"


......

நல்ல கருத்து.... இப்பொழுதெல்லாம், உங்கள் கதையில் கூட, நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தான் தேடுகிறேன்..... அதுதான், ரிஷபன் சாரின் எழுத்தின் சிறப்பு. :-)

ஹேமா said...

தன் பெண் யாருடனோ பழகுகிறாள் என்று தெரிந்ததும் "சாதி" கேட்கும் காட்சி இயல்பாய் எம் குடும்பங்களைச் சொல்கிறது.நல்லாவே நகர்கிறது ரிஷபன்.

சுந்தர்ஜி said...

மூணாவது இடுகைக்கு நகர்த்திட்டீங்க எங்களை.ஒவ்வொருத்தரோட உலகமும் அதனதன் தர்மங்களுடன் விரிகிறது-இந்த நாலு பேரும் நாலு விதம் போல.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்பவும் அழகாய் கதையை நகர்த்திச் செல்கிறீர்கள். அது மட்டுமல்ல ..எங்களையும் கைப் பிடித்து அழைத்துச் செல்கிறீர்கள்,கூடவே.....!!