October 31, 2010

மணமகள் அவசரத் தேவை 4

'கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா...கண்களுக்குச் சொந்தமில்லை...'
மண்டப ஸ்பீக்கர் அலறியது.எனக்குள் இதயத் துடிப்பு ஒரு வினாடி நின்று இயங்கியது.
குளிர் ஜீரம் வந்தவன் போல நின்ற நிலையில் உதறிக் கொண்டிருந்தேன்.சங்கரனின் முகம் நிமிர்ந்து பார்க்கக் கூசினேன். அப்பட்டமான பொய்கள்.
'குரல் கேட்டுதே... யாரும் இல்லியா?'
அடுத்து நிகழ்ந்தவை என்னைத் திகைப்பின் உச்சத்தில் கொண்டு சென்றன.சங்கரன் அவசரமாய்க் கதவை மூடி உட்புறம் தாளிட்டான். ஜன்னலையும் மூடினான்.இது நான் செய்ய வேண்டியவை அல்லவா? இவன் ஏன் செய்கிறான்?
"மெதுவாப் பேசு" என்றான் கிசுகிசுப்பாய்.
"சங்கரா" என்றேன் குழப்பமாய்.
"பாவம் அவருக்கு எதுவும் தெரியாது" என்றாள் என்னைக் காட்டி.
"நீ சொல்லலியா..." என்றான்.
"ம்ஹீம். எங்கே பேச விட்டார். எப்ப கதவைத் திறந்தாலும் மூடு... ஒளிஞ்சுக்கோதான்" என்றாள் கேலியாக.
"பாதி சக்சஸ்" என்றான் சங்கரன்.
"அவரைப் பார்த்தீங்களா?"
"சொல்றேன். அதுக்கு முன்னால சிவாகிட்டே பேசிருவோம்."
என் பக்கம் திரும்பினான்.
"ஸாரிடா. இவ இங்கே ஒளிஞ்சிருக்கிறது எனக்குத் தெரியும். அதனாலதான் சாப்பாடு, டிபன் கூடவே வச்சு அனுப்பினேன்."
எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. எத்தனை சுலபமாய் முட்டாள் பட்டம் கட்டி விட்டார்கள்.
"நானும் ஸார்" என்றாள்.
நான் பேசவில்லை. என்னிடம் ஏன் மறைத்தார்கள்?
சங்கரன் சொன்னான்.
"நடந்ததை முழுசா சொல்லிடறேன். அப்பத்தான் உனக்கு எல்லாமே புரியும். நேத்து காலைல இவங்க வந்து இறங்கினதும் சாப்பாடு பத்தி டிஸ்கஸ் பண்ண நான் போனேன்."
வசந்தி தொடர்ந்தாள்:
"என்னையே முறைச்சுப் பார்த்தார். மணமகள் முகத்துல வழக்கமா இருக்க வேண்டிய உற்சாகமோ... துள்ளலோ இல்லையே ஏன், அழுத மாதிரி இருக்கான்னு யோசிச்சாராம்."
சங்கரன் சிரித்தான்.
"என்னோட கணிப்பு தப்பாகலே. அப்புறம் ரெண்டு, மூணு தடவை முயற்சி பண்ணி... கடைசியா.. இவ சாப்பிட வந்தப்ப.. புடிச்சுட்டேன். நானே பரிமாறினேன். சாப்பாடு விசாரிக்கிற மாதிரி ரகசியமா கேட்டேன்."
"இவர் மேல் என்னவோ ஒரு நம்பிக்கை. எனக்கு ஹெல்ப் பண்ணுவார்னு. தந்தி ஸ்பீடுல என்னோட பிரச்சனையை சொன்னேன். இந்தக் கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லே. என்னால தவிர்க்க முடியலேன்னா சாகறதைத் தவிர வேற வழியில்லே" என்றாள்.
"பிடிவாதக்காரின்னு புரிஞ்சுது. சிவா, என்னோட மனசு உனக்குத் தெரியும். நான் உயிருக்கு உயிரா சித்ராவைக் காதலிச்சது. அப்புறம் எங்க காதல் தோற்றுப் போனது. நீயே சொல்லு சிவா, என் கண்ணெதிரே இன்னொரு காதல் தோல்வியைப் பார்க்க என்னால எப்படி முடியும்? எப்படியாவது ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சேன்."
சங்கரன் உணர்ச்சிமயமாய்த் தெரிந்தான்.வசந்தி அவனைப் பார்த்த பார்வையில் ஆழ்ந்த நன்றி தெரிந்தது.
"அப்பத்தான்.. உன்னோட உதவியை பயன்படுத்திக்கத் தோணிச்சு. மண்டபத்துக்கு பக்கத்துல இத்தனை வசதியா... மறைஞ்சுக்க ஒரு இடம் இருக்கும்னு யாருக்கும் தோணாது. யாரும் இங்கே தேட மாட்டாங்கன்னு யூகம் பண்ணேன். அதே மாதிரி அவங்க இவளைத்தேட, வெளியே ஆளை அனுப்பினாங்களே தவிர, இங்கே கவனிக்கவே இல்லே."
இப்போது பேச வேண்டியது என் முறை.
"வெளியே இவளைத் தேடிக்கிட்டுப் போயிருக்காங்களா?"
"ம். ஆனா எப்படி கண்டுபிடிக்க முடியும்? அதான் இங்க இருக்காளே!"
"உளறாதே. இன்னமும் ஆபத்து நீங்கலே. இவளை எப்படி வெளியே கொண்டு போறது?" என்றேன் எரிச்சலாக.
"அதுக்குத்தான் நான் போனது. இவ காதலனைத் தேடிப் போனேன். செஸ் தெரியுமா... சிவா? சரியான காயினை மூவ் பண்ணலேன்ன ஒண்ணு வெட்டுப் படுவோம் இல்லே... செக் ஆயிருவோம். இது காதல் சதுரங்கம்."
சங்கரன் உற்சாகமாய்ச் சிரித்தான்.
"கணேஷைப் பார்த்தேன் வசந்தி. அவன் உன்னை விட படப்படப்பா இருக்கான். என்னை வெட்டிப் போட்டாலும் சரி, மண்டப வாசல்ல வந்து கலாட்டா பண்றேன்னு துடிச்சான். நான் தான் அவனை கண்ட்ரோல் பண்ணி வச்சேன்."
காதலன் பெயரைக் கேட்டதும் வசந்தியின் முகம் பிரகாசித்தது.
"சிவா, இனிமேல் என்ன ரகசியம். இவ இங்கே இருக்கிறது எனக்கும் தெரியும். இப்பத்தான் உன்னோட ஒத்துழைப்பு கூடுதலா தேவை" என்றான் சங்கரன்.
நான் பேசாமல் நின்றேன்.
என்னதான் இருந்தாலும் எனக்கு ஏமாளிப் பட்டம்தானே?

சங்கர் என் உணர்வுகளைப் படித்திருக்க வேண்டும்.

"உனக்குக் கோபம் வரும் சிவா. அது நியாயம்தான். ஒண்ணு சொல்றேன். நாம எல்லோருமே எப்பவாவது ஒரு தடவை நம்ம லைஃப்ல காதலை ஃபீல் பண்றோம். மனசளவுல காதலை ஆதரிக்கிறோம். நம்மை யாராச்சும் லவ் பண்ண மாட்டாங்களான்னு ஏங்கறோம். உன்னால இல்லேன்னு மறுக்க முடியுமா சிவா?" என்றான் சுட்டு விரலை நீட்டி.

"எப்படி முடியும்?"

"அதனால்தான் சிவா, உன் மனசுலயும் காதலுக்கு ஆதரவு இருக்கும்னு நம்பினேன். விஷயம் வெளிப்படும் போது நீ மனப்பூர்வமா இதை ஏத்துப்பேன்னு நினைச்சேன். முழுசா ஆரம்பத்துலேயே சொல்ல அவகாசமும் இல்லே. சூழ்நிலையும் ஒத்து வரலே."

தேர்ந்த இயக்குநர் போல காட்சிகளை நடத்தியவனாய்த் தெரிந்தான்.

"எனக்குக் கொஞ்சம் த்ரில். கொஞ்சம் சஸ்பென்ஸ் பிடிக்கும் சிவா. உனக்குக் காப்பி சர்ப்ரைசா அனுப்பினேனே... அடுத்த சர்ப்ரைசா இவளையும் அனுப்பினேன்" என்று சிரித்தான்.

"ஜனவாசக் காரோட எல்லோரும் போயாச்சு. நாலஞ்சு லேடீஸ்தான் என் கூட. பாத்ரூம் போறேன்னு தப்பிச்சு வந்தேன். என்னோட அதிர்ஷ்டம் யாரும் கவனிக்கலே. இவர் ஸ்டூலை வச்சிண்டு காத்திருந்தார்."

"இப்ப நினைச்சா ஜோக்கா இருக்கு சிவா. அந்த நிமிஷம் யாராவது கவனிச்சிருந்தா..."

என்னால் நம்ப முடியவில்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் இத்தனை அலட்சியமாகவா விட்டுப் போவார்கள்?

"சிவா, கணேஷ்கிட்டே பேசிட்டேன். இன்னைக்கு நைட் வேனோட இங்கே வருவான். இவளை எப்படியாவது அதுல ஏத்திவிட்டுரணும். வசந்தி... இந்தா நீ கேட்ட சுரிதார். எத்தனை நேரம் பட்டுப் புடைவையில் இருப்பே?"

பொட்டலத்தை நீட்டினான்.

"கசகசன்னு ஆயிருச்சு. குளிக்கணும். ரூம்ல வேர்த்துக் கொட்டிருச்சு" என்றாள்.

"சிவா - இவளை உன்னோட ரிலேட்டிவ்னு சொல்லிக்க முடியுமா? வசந்தி... நீ டிரஸ் சேஞ்ஜ் பண்ணிக்க. ரெட்டை ஜடையா போட்டுக்க. ஏமாத்த முடியுமான்னு பார்க்கலாம்."

"என்ன உளர்றே? அவங்க கண்ணுல இவ பட்டுட்டா.."

"யார் இருக்கா? மேக்சிமம் கிளம்பிப் போயாச்சு. வழியனுப்பிட்டுத்தான் வரேன்."

ஆச்சர்யமாய்ப் பார்த்தேன்.

"நிஜம்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு ஆனதும் கிளம்பிப் போயிட்டாங்க. அவங்க குலதெய்வம் கோவிலுக்குப் போகணுமாம். மண்டபத்துல இவ சொந்தக்காரங்க யாரும் இல்லே..."

வசந்தி சுரிதாரில், ரெட்டை ஜடையில் சற்று வித்தியாசப்பட்டுத் தெரிந்தாள். தூரப் பார்வையில் ஆறு வித்தியாசங்கள்.

"போம்மா. சிவா, நீயும் கூடப் போ. பாத்ரூம்ல விட்டுட்டு வந்திரு."

இரவு எட்டரை மணிக்கு வேன் வந்தது.

கணேஷ் முரட்டு மீசையுடன், வசந்தியின் மீது ஏகக் காதலுடன் வந்தான்.

"வசந்தி..."

"கணேஷ்..."

நானும் சங்கரனும் நாசூக்காய்ப் பார்வை விலக்கிக் கொண்டோம்.

"கிளம்பிரலாம். கணேஷ் இனிமேல் வசந்தி உங்க பொறுப்பு. உங்கப்பா.. அம்மா முழு மனசா இவளை மருமகளா ஏத்துக்கிறதா சொன்னதாலதான் இந்தத் திருட்டுத்தனத்துக்கு நான் சம்மதிச்சேன்" என்றான் சங்கரன்.

"நிச்சயமா..."

கணேஷ் சங்கரனின் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

"இவரை மறந்துடாதீங்க"

சங்கரன் என்னைக் காட்டினான்.

"சிவா... ரொம்ப... ரொம்ப தேங்க்ஸ்!"

கணேஷுடன் வசந்தியும் சேர்ந்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

கடைசி ஸ்பரிசம்.

"கிளம்புங்க."

வேனை சமீபித்தோம்.

மண்டப வாசலில் அமைத்த பந்தல் மறைக்க, எங்கள் வீட்டு வாசலில் இருட்டு கவிழ்ந்திருந்தது.

வேனுக்குள் ஏற முயன்ற போது வசந்தியை யாரோ ஓடி வந்து பிடித்துக் கொண்டார்.

"யா... யாரு?"

நாங்கள் திடுக்கிட்டு முகம் பார்த்தோம்.

"அ...ண்ணா..."

வசந்தி கூவினாள்.

"உங்க அண்ணனா?"

எங்கள் பங்கிற்கு திகைத்தோம்.

கணேஷ் தடுமாறி நின்றான்.

"என்னம்மா... என்னையும் உதறிட்டுப் போறியா?"

"அ...ண்ணா"

"கணேஷ்... இவளை நல்லா வச்சுப்பீங்கன்னு நம்பறேன். அதனாலதான் எங்க பெற்றோர் விருப்பத்தை மீறி இங்கே காத்திருந்தேன்."

நான் சங்கரனைப் பார்த்தேன்.அவன் விரும்பும் த்ரில்... சஸ்பென்ஸ்.

"நல்லா இருங்க."

இருவரின் கைகளையும் சேர்த்து வாழ்த்தினார்.சப்தமின்றி தானும் இவர்கள் காதலுக்கு வெற்றி பெற உதவியிருக்கிறார் என்பது புரிய நெகிழ்ச்சியுடன் பார்த்தேன்.

வேன் கிளம்பிப் போனது.

(ஹப்பாடா !)

கல்கி - நாலு வாரத் தொடர்.

முதல் பகுதி இங்கே

இரண்டாம் பகுதி இங்கே

மூன்றாம் பகுதி இங்கே

15 comments:

சுந்தர்ஜி said...

நாலும் முடியட்டுமென்று காத்திருந்தேன்.வழக்கமான உங்கள் முத்திரை இதில் இல்லை ரிஷபன்.கதையும் சஸ்பென்ஸ் factorக்காக ஒவ்வொரு பாகமும் முடிந்தது போலத் தோன்றியது.ஒரு பெண்ணை இவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்கள் என்று தோன்றவில்லை. நம்பிக்கையுடன் உங்கள் அடுத்த பதிவுக்கு உங்கள் எழுத்தின் மேலுள்ள காதலுடன் காத்திருக்கிறேன்.

Chitra said...

இருவரின் கைகளையும் சேர்த்து வாழ்த்தினார்.சப்தமின்றி தானும் இவர்கள் காதலுக்கு வெற்றி பெற உதவியிருக்கிறார் என்பது புரிய நெகிழ்ச்சியுடன் பார்த்தேன்.


..... Thats sweet!

கதை நல்லா இருந்துச்சு.....
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இராமசாமி கண்ணண் said...

முதல் ரெண்டு பாகத்துல இருந்த ஸ்பீடு அடுத்த ரெண்டு பாகத்துலயும் மிஸ்ஸிங்க் ரிஷபன்...

வானம்பாடிகள் said...

எனக்கு பிடிச்சிருக்கு:)

அன்னு said...

ஆஹா...கடைசில கொஞ்சம் இழுவை மாதிரி ஆயிடுச்சு. ஆனாலும் நல்ல ஃப்லோ அண்ணா. சரி, தொடர் பதிவெங்கே... ??

நிலா மகள் said...

ஹப்பாடா !

Balaji saravana said...

நல்ல இருந்துச்சு ரிஷபன்..
அந்த சஸ்பென்ஸ் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு.. :)

VAI. GOPALAKRISHNAN said...

சீரியஸ் ஆன மேட்டர். குறைவான கதா பாத்திரங்கள். திரில்லிங்கான நடை. அப்புறம் என்ன ஆகுமோ என்று சரிவர யூகிக்க முடியாத வருணனைகளும், சம்பவங்களும். சுபமான முடிவு. மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

vasan said...

நாலு கேர‌க்ட‌ர்க‌ளை வைச்சு நாலு வார‌ம் க‌ல்கி தொட‌ராக்கிட்டிங்க‌.
ஆனா, ரிஷ‌ப‌ன் ஸ்டைல் ரொம்ப‌வே (கல்யாண‌பெண் மாதிரி)மிஸ்ஸிங்.

ஆர்.ராமமூர்த்தி said...

ஹப்பாடா..வர,வர திரில் தாங்க முடியல, சாமி!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

ஆதிரா said...

கதை நல்லா இருந்திச்சு...

வாழ்வின் ஆதார சுருதியாய் அன்பு அரசாள, மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க....இறைவனை வேண்டி.. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ரிஷபன்.

K.B.JANARTHANAN said...

செம விறு விறு... கடைசியில் எல்லா புதிருமே கணக்காக அவிழுவதை ரசித்தேன்.

பத்மநாபன் said...

இந்த காதல் திகில் கதை இன்றுதான் முழுமையாக படிக்கமுடிந்தது ..
//சரியான காயினை மூவ் பண்ணலேன்ன ஒண்ணு வெட்டுப் படுவோம் இல்லே... செக் ஆயிருவோம். இது காதல் சதுரங்கம்."//

நல்ல மூவ்கள் நிறைய ...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

பத்மா said...

நாலையும் முழுசா ஒருக்கா படிச்சேன் ...
கதை மன்னர் தான் நீங்க

கோவை2தில்லி said...

தாமதமாய் வாசித்தேன். நான்கு பகுதியும் விறுவிறுப்பாக சென்றது. சூப்பர்.