October 11, 2010

நேசம் மறப்பதில்லை நெஞ்சம்

பால் காய்ச்சியாகி விட்டது. எல்லாம் வந்து இறங்கி விட்டன. மாடி போர்ஷன். பின்னால் வேப்பமரக் காற்று. ஆள் உயர ஜன்னல்கள். கதவைத் திறந்தால் பிய்த்துக் கொண்டு போனது.
பூமா உபரியாய் ஒரு தடவை கணேசனை இறுக்கிக் கொண்டாள்.(ஒன்ஸ் மோர்!)
தனிக் குடித்தனம். அருமையான வீடு. சொன்ன உடன் ஏற்பாடு செய்து விட்டான். அருமைக் கணவன்.
"கீழே நம்மை மாதிரியே ஒரு ஜோடி. கூட ஒரு அம்மா... ஃ ப்ரெண்டு புடிச்சுக்க, ஃபோன் இருக்கு. ஓனர் வேற. பின்னால உதவும்..." என்றான், ஆபீஸ் கிளம்பிப் போகுமுன்.
வீட்டைப் பார்க்க வரும் போது பக்கவாட்டு வழியில், மாடிப்படி ஏறிப் போயிப் பார்த்தார்கள். இதே போர்ஷனுக்கு வீட்டுக்குள் இருந்ததும் மேலே வர படிகள் இருந்தன. இரு வழியாகவும் இறங்க வசதியாக ஒரு கதவு.
காலிங்பெல்லை அழுத்துவதா? என்று யோசிப்பதற்குள் அந்த வயதான பெண்மணி வெளியே வந்தாள்.
இருவரின் முகத்திலும் அதிர்ச்சி.
"நீ... ங்களா?"
"நீ...யா?"
மேலே என்ன பேசுவதென்று புரியவில்லை.
"எ... ன்ன வேணும்?" என்றாள் பாகீரதி.
"மாடி போர்ஷனில் குடி வந்திருக்கேன். நீங்க...?" என்றாள் பூமா.
"என் பையன் வீடுதான்."
"ஓ சித்ரா உங்க மருமகதானா? வீடு பார்க்க வந்த போது அவங்கதான் இடத்தைக் காட்டினது."
"வாடகைக்கு விடணும்தான் மேலே கட்டினது. அவ ஏற்பாடுதான். அவ ஆபீஸ்ல லோன் வாங்கி..." -இதை ஏன் இவளிடம் சொல்ல வேண்டும் என்று பாதியிலே நிறுத்தி விட்டாள்.
"வரேன்."
பூமா மேலே வந்த பிறகும் திகைப்பு அடங்கவில்லை.என்ன விசித்திரம். இந்த வீட்டுக்கா குடி வந்திருக்கிறாள்.
ஒரு வருஷம் இருக்குமா. இதே பாகீரதி தன் மகன் சுரேஷுடன் இவளைப் பெண் பார்க்க வந்ததும் , நிச்ச்யதார்த்தம் ஏற்பாடு செய்த பிறகு, காரணமே சொல்லாமல், நிராகரித்ததும்...
அப்பா ஆடிப் போய் விட்டார்.மறுநாள் காலை நிச்சயதார்த்தம். எல்லாம் தயார். உறவினர் கூட்டம் வேறு. ஃபோனில் தகவல்.
கேன்சல் பண்ணிருங்க. நாங்க வரலே.
ஏனென்று கேட்டால் பதிலே இல்லை.
அண்ணன் சற்று முன்கோபி.
'எல்லாம் ஏற்பாடு செஞ்சப்புறம் வேணாம்னா என்ன அர்த்தம்?
'இங்கே பாருங்க. நாளைக்கு நாங்க வரலேன்னு நீங்க ஃபீல் பண்ணக் கூடாது. முன்னாலேயே தகவல் சொல்லிட்டோம் விட்டுருங்க'.
நேராகப் போய்க் கேட்கலாமா என்று கூட யோசித்தார்கள். கடைசியில் அவர்களை மனதார சபித்தோடு சரி. அன்று சட்டென ஒரு வேடிக்கைப் பொருளாக்கியவர்கள் வீட்டிற்கா குடி வந்திருப்பது!
"ஏன் டல்லா இருக்கே?"
கணேசனின் கேள்விக்கு மழுப்பினாள்.
"வீடு பிடிச்சிருக்கில்லே..."
"ம்..."
"அப்பா ஞாபகமா?"
"ம்..."
"இந்த ஸண்டே போய்ப் பார்த்து விட்டு வரலாமா?".
எப்படியாவது அவள் முகத்தில் மலர்ச்சியைக் கொண்டு வரத் துடிப்பது புரிய, சிரித்தாள்..
"வேணாம். இப்பதானே வந்துட்டு போனாரு"...
மறுநாள் இன்னொரு அதிர்ச்சியும்- அதை அதிர்ச்சி என்பதை விட, மகிழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்
மாடி போர்ஷனுக்கே கேட்கிற அளவு இரைச்சல். சித்ராவின் குரல்தான்,
"இந்த வீட்டுல ஒண்ணு உங்கம்மா இருக்கணும்...இல்லே நான் இருக்கணும், முடிவு பண்ணுங்க..."
வேறு குரல்கள் கேட்கவில்லை.காய்கறி வண்டியைக் கூப்பிடுகிற சாக்கில் பூமா கீழே வந்தாள்.பாகீரதியின் இருண்ட, கண்ணீர் ததும்பிய முகம் பார்த்து உள் மனசு குதூகலித்தது.
"வேணும். நல்லா வேணும்!"
காய்கறி வண்டியைச சுற்றி எதிர், பக்கத்து வீட்டுப் பெண்கள்.
"புதுசா குடி வந்தீங்களா?"
பூமா தலையசைத்தாள்.வம்பு!
"இந்த வீட்டுக்கா"
"என்... போர்ஷன் நல்லாத்தானே இருக்கு."
பூமாவின் குரலில் பொய்யான ஆச்சர்யம்.
"வீட்டுக்காரிதான் ராட்சசி! மாமியாரை இவ படுத்தறதைப் பார்த்தா... ரத்தக் கண்ணீர்தான். தலைகீழ் நிலைமை இங்கே..."
"அவங்க புருஷன் எதுவும் சொல்ல மாட்டாரா"
பூமா இயல்பாய் வம்பு வளர்த்தாள்.
"அரைக் கிலோ போடுப்பா. அவன் ஏன் வாயைத் திறக்கறான்! மனைவி சொல்லே மந்திரம்"
பெண்கள் சிரித்தார்கள். பூமா படியேறிய போது பாகீரதி வாசல் வராந்தாவில் ஒடுங்கியிருந்தாள்.மறுபடியும் பூமாவிடம் இறுக்கம்"வேணும்... நல்லா வேணும்."
அதன்பின் நிறைய கூச்சல் நிறைய அழுகை. எப்படியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை.பூமா மனசு இறுக்கம் தளர ஆரம்பித்தது.
அப்பா, அம்மா வளர்ப்பு இப்படியில்லை. நேசம் மட்டுமே சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவள். சுலபமாய் மறந்து விடுகிற மனசு அப்பா, அம்மாவுக்கு.
பூமாவின் உள்ளம் இரக்கம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
"எ... ன்ன?"
சுருண்டு படுத்திருந்தவளின் கண்கள் இடுக்கியிருந்தன.
பூமாவைப் பார்த்ததும் மிரண்டு போயிருந்தாள்.
"என்ன மாமி... உடம்பு சரியில்லையா?"
பாகீரதியிடமிருந்து பதில் இல்லை. தொட்டதில் உடம்பு சுட்டது.
"டாக்டர் கிட்டே போகலியா?"
பதறிக் கேட்டதில் இன்னமும் மிரண்டாள்.
"வாங்கோ... போயிட்டு வந்திரலாம்..."
"இ...ல்லே... வே...ணாம்."
வற்புறுத்தி இழுத்துப் போனாள். ஊசி போட்டு, மருந்து வாங்கியதில் சற்று நிம்மதி வந்தது. ரிக்க்ஷாவில் வீடு திரும்பினார்கள்.
"நீங்க படுத்துக்கங்க. என்ன சமைக்கணும் சொல்லுங்க."
"நீ... எதுக்கு?"
"ஸ்ஸ். பேசாம படுங்க."
பரபரவென்று சுழன்றாள்.மிளகு ரசத்தில் சாதம் கரைத்துக் கொடுத்ததும் பாகீரதிக்கு அழுகை பீறிட்டது. தன்னிரக்க நிலை.
"வேணாம். நீங்க அலட்டிக்காதீங்க. படுங்க."
சின்னச் சின்னதாய் வெளியே தெரியாத உதவிகள். பாகீரதிக்கு உறுத்தல் குறைந்து பழக்கம் இயல்பானது.
சித்ரா எப்போது வேலைக்குப் போவாள் பூமா கீழிறங்கி வருவாள் என்று ஏங்கும் அளவு நெருக்கமானது.
பூமாவால் மனத்தோடு வைத்துக் கொள்ள முடியவில்லை. கணவனிடம் சொல்லி விட்டாள்.
"பாவமா இருக்குங்க. அப்படிப் படுத்தறா! இவ பொம்பளையான்னே சந்தேகமா இருக்கு."
"சரி. சரி. நீ எதாவது வம்புல மாட்டிக்கப் போறே."
"சேச்சே, அவ இல்லாதப்பதான் எங்க ராஜ்யம்."
"நினைச்சுகிட்டு இரு. வம்பு எந்த உருவத்துல வேணா வரும். யார் கண்டது..?இப்பவே அவளுக்குத் தெரிஞ்சிருக்குமோ... என்னவோ! காலி பண்ணச் சொல்லிடப் போறா..."
"இதுல என்னங்க தப்பு இருக்கு. எனக்கும் போரடிக்குது. சும்மாத்தானே இருக்கேன். கூடமாட ஒத்தாசை செய்யறதுலபொழுது போவது."
"ஓக்கே.. இட்ஸ் யுவர் ஹெட் ஏக்..."
ஊரிலிருந்து அப்பா, அம்மா இருவருமே வந்திருந்தார்கள். குடித்தனம் நடத்துகிற அழகைப் பார்க்க வேண்டுமாம்.அவர்களுடன் பேச்சு கொடுத்தபடி இருந்தவளுக்குப் பதற்றம் வந்து விட்டது. கீழே போய்ப் பார்க்க வேண்டும். மாமி என்ன செய்கிறாரோ!
"என்னடி... எங்கே போறே?"
"கீழே வீட்டுக்குத்தான்."
தகவல் சொன்னாள். எல்லாவற்றையும்.அப்பா சட்டென்று சீறினார்.
"நீ ஏன் அவங்களுக்கு ஹெல்ப் பண்றே?"
"பாவம்ப்பா!"
"நல்லா அனுபவிக்கட்டும்."
அம்மா நிதானமாய் இருந்தாள்.
"தொலையறது விடுங்க. நமக்கு என்ன... அதைவிட நல்ல வரன் அமைஞ்சாச்சு."

பாகீரதிக்குக் கேட்டிருக்க வேண்டும்.
"நீ எதுக்கு சிரமப்படறே. உங்கப்பா, அம்மா வந்திருக்காங்களே.." என்றாள் சங்கடமாய்.
பூமா சிரித்தாள்.
"உறவை விட சிநேகம் ரொம்ப தித்திப்பா இருக்கே மாமி.." என்றாள் - பதிலில் மனசு உண்மையாகவே இழைய.

26 comments:

Ponkarthik said...

அருமை சகா!
நம்ம பக்கமும் கொஞ்சம் வாரது??

http://ponkarthiktamil.blogspot.com/

Chitra said...

"உறவை விட சிநேகம் ரொம்ப தித்திப்பா இருக்கே மாமி.."

....How sweet! :-)

K.B.JANARTHANAN said...

உறவை விட சிநேகம் இனிப்பது இயல்பே. இயல்பாக சொல்கிறது கதை...

எஸ்.கே said...

அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!

வானம்பாடிகள் said...

ரிஷபன் ஸ்பெஷல்:)

மோகன்ஜி said...

அன்புள்ள ரிஷபன்.,எளிமையாகவும் சரளமாகவும் உங்களுக்கு எழுத்து இயல்பாய் வருகிறது. ரசித்தேன் நண்பரே!

அமைதிச்சாரல் said...

அருமையா இருக்கு..

ஹேமா said...

உண்மைதான் உறவைவிட நட்பு நிறையவே பகிர்ந்துகொள்ளும் புரிந்துகொள்ளும் !

நிலா மகள் said...

வழக்கம் போல் கலக்கிட்டீங்க மனசை... கதைக் களமும் கருவும் தேர்ந்தெடுப்பதில் நுட்பமான உங்கள் திறன் எனக்குப் பிடிக்கிறது.

Gopi Ramamoorthy said...

சூப்பர் ரிஷபன்.

நீங்க என் சவால் சிறுகதை போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று இப்போதுதான் தெரிகிறது. அப்புறம் எல்லா பரிசும் உங்களுக்குத்தான்.

RVS said...

//பால் காய்ச்சியாகி விட்டது// லிருந்து //பதிலில் மனசு உண்மையாகவே இழைய.// வரை கண்ணை எடுக்காமல் படித்து முடித்தேன். அட்டகாசம் ரிஷபன். ;)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மை ரிஷபன்.. நல்ல ஸ்நேகம் தித்திப்புத்தான்..

என்னோட பதிவை பாருங்க.. தீபாவளி மலருக்கு இன்று அல்லது நாளை படைப்பை அனுப்புங்க..

ஹுஸைனம்மா said...

கதை வழக்கம்போல.. இப்படி வித்தியாசமான தீம்களை எங்கேருந்து பிடிப்பீங்கன்னு ஆச்சர்யமாருக்கு!!

vasan said...

ரிஷ‌ப‌ன், எல்லாக் கேர‌க்ட‌ர்க‌ளும் நிஜ‌மாய்,இய‌ல்பாய்,
அந்த‌ வேப்ப‌ம‌ர‌ மாடிவீட்டில்.
கூர்ந்த‌ அவ‌தானிப்புதான் உங்க‌ளின் பெரிய‌ ப‌ல‌ம்.

kutipaiya said...

அருமையான உறவுகள்!

வசந்தமுல்லை said...

"உறவை விட சிநேகம் ரொம்ப தித்திப்பா இருக்கே மாமி.." என்றாள் - பதிலில் மனசு உண்மையாகவே இழைய.

நெஞ்சை தொட்டிட்டீங்க! ரிஷபன்

பத்மநாபன் said...

உறவில் எற்படும் சலிப்பை நட்பின் சுவை தான் சரிகட்டுகிறது...

அம்பிகா said...

அருமை.
கடைசிவரை காரணம் சொல்லப் படாமல், இயல்பாக செல்கிறது.

VAI. GOPALAKRISHNAN said...

தங்கள் சிறுகதைத் தொகுப்பு நூலில் என்றோ ஒரு நாள், நான் இந்தக் கதையைப் படித்தது. அது உறவு போன்றும், ஒரு கிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா டப்பா போன்றும், ஒரேயடியாக ஒரே தடவையாக நான் சுவைத்ததால் திகட்டியது போல ஓர் உணர்வு.

இப்போது அதையே வெகு நாட்களுக்குப்பிறகு ப்ளாக்கில் மீண்டும் படித்ததில், தனியாக ஒரே ஒரு மைசூர்பா மட்டும் சாப்பிட்ட தித்திப்புடன் அதன் சுவையை கபாலத்திலிருந்து கணுக்கால் வரை (வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைலில்) உணர முடிந்தது.

நவராத்திரி நாளில் சரஸ்வதி தேவியின் அருள் உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிப்பதை உணர முடிந்தது.

நன்றி. மனமார்ந்த பாராட்டுகள்.

அன்னு said...

//"உறவை விட சிநேகம் ரொம்ப தித்திப்பா இருக்கே மாமி.."//
அருமையான வரிகள். நிஜமான உணர்வுகள். மறுபடியும் ஒரு நல்ல கதை ரிஷபன் சார். :)

சரி, தொடர் பதிவெங்கே??

bandhu said...

உங்கள் கதைகளில் காணப்படும் உண்மை இதில் தென்படவில்லை. வெறும் செயற்கையே தெரிகிறது. ஆவலுடன் படித்து ஏமாந்தேன்.. (எனக்கு தான் வயசாயிடுச்சோ?)

தக்குடுபாண்டி said...

உறவுகளை விட ஸ்னேகமே உண்மையாக இருக்கிறது. அருமையான நடை!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

உறவை விட சினேகத்துக்கு ஸ்வீட் கொஞ்சம் தூக்கலாத் தான் இருக்கும். வாஸ்தவமான பேச்சு!!

வெங்கட் நாகராஜ் said...

உறவை விட ஸ்னேகம் தித்திப்பு தான் - அனுபவத்தில் கண்ட உண்மை....

கோவை2தில்லி said...

கதைக்கருவும் , சரளமான நடையும் மிகவும் நன்றாக உள்ளது. உறவுகளை விட சினேகம் என்றும் சிறந்தது தான்.

Harani said...

ரிஷபன்..
வெகு எதார்த்தமான கதை. நட்பின் மேன்மை உணர்த்தியிருக்கிறீர்கள். உங்கள் கதை எப்போதும் அலுப்பூட்டுவதில்லை. தவிரவும் இந்த சமூகத்தின் வெகு ஆரோக்கியமான பக்கத்திற்கு உரம் மூட்டுவதான சிறுகதை. வாழ்த்துக்கள். அப்புறம் ஒரு வேண்டுகோள் இயலுமாயின் உங்கள் வலைப்பூவின் டெம்ப்ளேட்டை வேறு வண்ணம் மாற்றலாமா? எனக்கு புதிய பதிவுகளைத் தேடிப் படிப்பதில் சற்று சிரமப்படுகிறேன். தொடர்ந்து உங்களைப் படிக்கமுடியாமைக்கு அதுவும் ஒரு காரணம். மேலும் பல புதிய கட்டுரைகள் எனப் பல புதிய பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்நோக்குகிறேன் வெகு ஆர்வமாய். நன்றி. உறரணி.