October 06, 2010

எனக்கு நீ வேணும்

கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் .

பத்மா எட்டிப் பார்த்தாள். மாடிப் போர்ஷனில் குடியிருக்கிறாள். ஒரே மகன்; ஷாம்.

"உங்களுக்கு ஃபோன்..."

"தேங்கஸ்... இதோ வரேன்..."

ஃபோனில் பேசும் போது பத்மாவின் குரல் திடீரென உரத்துக் கேட்டது.

"அதெல்லாம் முடியாது...."

"வேணாம்... எனக்குப் பிடிக்கல..."

மறுபடி தணிந்து போனது யாராக இருக்கும், பத்மாவிற்கு தொலைபேசி அழைப்பு வருவது மிக அபூர்வம்.பேசி முடித்திருக்க வேண்டும். அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

"ஸாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.."

"சேச்சே... அதெல்லாம் இல்லே..."

மேஜை மீது வெள்ளைத் தாள்களும். பேனாவும்.இரண்டு வாரங்களாய் எதுவுமே எழுதாமல் பொழுதைக் கழித்தாகிவிட்டது. வாசிப்பும் இல்லை. என்னுள்ளே ஒரு குற்ற உணர்வு.

'வான் நிலா' வார இதழைப் பார்த்தவள் அதை எடுத்தாள்.

"உங்க கதை வந்திருக்கா..."

"ம்..."

"படிச்சுட்டுத் தரவா..."

தலையாட்டினேன். நகரப் போனவளிடம் கேட்டேன்.

"எதாச்சும் பிரச்னையா..."

"என்ன..." என்றாள் திகைப்புடன்.

"ஃ போன்ல... குரல் பலமாக் கேட்டது... அதான்"

பத்மா சிரித்தாள்.

"எழுத்தாளருக்குக் கற்பனை பிச்சுக்கிட்டு பறக்குதா... சந்திரா எங்கே...?"

"அவ அம்மாவைப் பார்த்துட்டு வரேன்னு போனா... அடுத்த தெருவுல மாமியார் இருந்தா...இது தான் ஒரு வசதி... ரெண்டு மணி நேரமாகும். நானும் கதை ஒண்ணு எழுதிருவேன்."

"ஆல் தி பேஸ்ட்"

போய்விட்டாள். பதில் சொல்லாமல்.திடமான மனசு, காதல் கல்யாணம். கணவன் திடீரென மனம் மாறி விரட்ட ஆரம்பித்தான். ஒரே அலுவலகம் என்பதால் ஏற்பட்ட அறிமுகம், பழக்கமாகி காதலாகி இன்று பிரிந்து வாழ்கிறார்கள்.

சந்திராவுக்கு முதலில் பத்மாவைப் பிடிக்க வில்லை. கணவனை உதறியவள் என்கிற பார்வை. பிறகு பழகப்பழக கோபம் இடம் மாறியது.

"இவளை ஒருத்தன் வேணாம்னு சொன்னா.. அவனைத்தான் செருப்பால அடிக்கணும்."

எந்தத் தொந்தரவும் இல்லை அவர்களால்.. டி.வி.இல்லை. ரேடியோவில் காலை விவித்பாரதியில் எதாவது ஸ்லோகம். ஷ்யாம் காம்பவுண்ட்டிற்குள் பந்தை உதைத்து ஒருவனாய் விளையாடுவான். சில நேரம் நானும் அவனுக்குக் கம்பெனி கொடுப்பேன்.

எழுத்து ஓடவில்லை. சில நேரங்களில் கற்பனைக் குதிரை சண்டித்தனம் செய்துவிடுகிறது.

மறுபடி தொலைபேசி மணி பிடிவாதமாய் ஒலித்தது அலுப்புடன் எழுந்து போனேன்.

"ஹலோ..."பத்மா இருக்காங்களா..."

அதே குரல் கீழே வைத்தேன். மறுபடி காலிங் பெல்லை அழுத்தினேன்.பத்மா எட்டிப் பார்த்தாள்.

"ஃபோன்..."

பத்மா முகம் சுளித்தது தெரிந்தது.

"ஸாரி... நான் இல்லேன்னு கட் பண்ணிருங்க..."

சட்டென்று மனசு மாறி வேகமாய் இறங்கி வந்தாள்.

"ஹலோ..."

எதிர் முனையில் என்ன சொன்னாரோ... பத்மாவின் முகம் மாறுதல் அடைந்து கொண்டே போனது.

"வேணாம்... வராதீங்க...""...

"ஒரு தடவை சொன்னா..."

அப்படியே திகைப்புடன் ரிசீவரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றாள். எதிர் முனையில் அவர் வைத்து விட்டிருக்க வேண்டும்.என்னைப் பார்த்தாள். எவரிடமாவது பகிர வேண்டும் என்கிற தவிப்பும் 'சொல்லாதே' என்கிற சுய கட்டுப் பாடும் அவள் கண்களில் நடத்திய போராட்டம் புரிந்தது.

"என்னை நீங்க நம்பினா.. அதாவது.. என் மூலம் தெளிவு கிடைக்கும்னு தோணினா.. ப்ளீஸ்... என்ன பிராபளம்னு சொல்லுங்க" என்றேன்.

வற்புறுத்தாத ஆனால் தூண்டுகிற தொனி.

"அவர்தான்.. இங்கே வரணு மாம்.. ரொம்ப அர்ஜண்ட் மேட்டர்.. என்னைப் பார்க்கணும்னு. வராதீங்கன்னு சொன்னா.. கேட்கலே.. எனக்கு அவர் இங்கே வர்றது பிடிக்கலே.. இப்பதான் கொஞ்சநாளா நாங்க மனசு விட்டு சிரிக்கிறோம்... நிம்மதியா இருக்கோம்..."

நிதானமாய் சொன்னேன்:

"வரட்டுமே. என்ன விஷயம்னு கேளுங்க. நத்திங் ஸ்பெஷல்னா.. டீசண்டா திருப்பி அனுப்பிடலாம்.உங்களுக்கு மறுப்பு இல்லேன்னா நானும் சொல்றேன்... வெளியே போயிருங்கன்னு. வீட்டு ஓனர்ங்கிறதால அவருக்கும் ஒரு பயம் இருக்கும்."

பத்மாவிடம் ஒருவித அமைதி வந்தது.

"தேங்க்ஸ்..."

அறைக்குள் நுழைந்தேன்.எழுதப்படாத தாள்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. வசப்படாத கருவை எப்படித் தேடிக் கண்டு பிடிப்பது என்கிற தவிப்பும், எழுத இயலாத பட படப்பும் என்னைச் சங்கடப்படுத்தின.

காலிங் பெல் ஒலித்தது. சந்திராவா அதற்குள் திரும்பி விட்டாளா... எழுந்து போனேன்.எனக்கு அறிமுகமில்லாத ஆனால் மனசு உணர்த்திய மனிதர் நின்றிருந்தார்.

"பத்மாவைப் பார்க்கணும்"

"மாடி போர்ஷன்.. இதோ காலிங் பெல்..."

அவர் கவலைப்படவில்லை. விறு விறுவென்று படியேறினார். நான் ஏன் அதைச் செய்தேன் என்று புரியவில்லை. அவசரமாய் மாடி போர்ஷன் காலிங் பெல்லை அழுத்தினேன்.

பத்மா எட்டிப் பார்க்கவும் அவள் கணவர் மேலேறிச் செல்லவும் சரியாக இருந்தது.பத்மா பேசாமல் நின்றாள். என்னை உதவிக்கு அழைத்தால் உடனே படியேறிப் போகும் அவசரத்தில் அவளைப் பார்த்தேன்.

ஊஹும் பத்மா அவரை உள்ளே அழைத்துக் கொண்டு மறக்காமல் கதவை மூடினாள்.எதிர்பாராத திருப்பம். எனக்குள் அந்த நிமிஷம் என்னவோ நிகழ்ந்தது.

சரிதான் அவளும் பொம்பளை தானே. சராசரி மனுஷி. தாலி கட்டிய கணவன். ஒரு வருடப் பிரிவு. அவனே திரும்பி வந்து நிற்கும் போது எதற்கு வீம்பு என்று உள்ளே அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.

சரசரவென்று மனக் குதிரை பாய்ச்சல் காட்டியது. பதினைந்து பக்கங்களுக்குத் தடைப் படாத வேகம். அப்படியே பத்மாவின் கதை. பிரிந்து வந்து இருப்பவளைத் தேடி வருகிறான் கணவன்.

'என்னால என்னோட உணர்வுகளை அடக்க முடியலே. நீ வேணும்'என்கிறான். அவளுக்கும் அதே நிலை. வேறு வடிகால் தேடிப் போகாத நேர்மைக்குப் பரிசாக வீம்பைக் கைவிட்டு தன்னைத் தருகிறாள். ஆனால் மறுநாள் காலையயே அவனை அனுப்பி விடுகிறாள்.

திரும்பிப் படித்துப் பார்க்கும் போது வார்த்தைகள் அழுத்தமாய் விழுந்து விறு விறுப்பு குறையாமல் கதை வளர்ந்திருந்தது புரிய, பெருமிதம் வந்தது.

அடுத்த மாதம் கதை பிரசுரமானது. தபாலில் வந்த வார இதழைப் பிரித்து சந்திரா படித்திருக்க வேண்டும்.

"சகிக்கலே... கட்டின பொண்டாட்டியே கணவனை... ப்ச்.. அபத்தம்.." என்றாள்.

"அவ்வளவும் நெஜம்... ஹண்ட்ரெட் பர்சண்ட்..."

"என்ன உளர்றீங்க... யாரு அது?"

சட்டென்று சுதாரித்தேன். உளறிக் கொட்டி வேறு பிரச்னையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.

பத்மாவின் குரல் கேட்டது.

"என்ன... எதோ... கதைன்னு..."

வாங்கிக் கொண்டு போனாள். சந்திரா எங்கோ வெளியே போயிருந்த நேரம் பத்மா வந்தாள்.

"இந்தாங்க..."

ஆர்வமாய்க் கேட்டேன்.

"கதை படிச்சீங்களா?"

"ம்"

"எப்படி...?"

பத்மா நிதானமாய் என்னைப் பார்த்தாள்..

"ஸாரி... சுந்தர்... நீங்களும் சராசரி ஆம்பளைன்னு நிரூபிச்சுட்டீங்க. ஒரு எழுத்தாளன்னா அடுத்தவங்க உணர்வுகளைப் புரிஞ்சுக்கற, மதிக்கிற ஆளாத்தான் இருப்பான்னு ரொம்ப பேர் தப்புக் கணக்கு போடறோம் ... இல்லே.. நீங்களும் விதிவிலக்கு இல்லே..."

"எ.. ன்ன" என்று குழறினேன்.

"அவர் அன்னிக்கு வந்தது.. ஆபீஸ்ல கையாடல் பண்ணி... பிரச்னையில் மாட்டிக்கிட்டதால.. எனக்கு... என்னைத் தேடி வந்தது... பண உதவிக்கு.. அரை மணியிலே திரும்பிப் போயிட்டார்.. உங்க கற்பனை கொஞ்சம் ஓவர்தான். ஆனா நெஜத்துல.. மனசு வெறுத்துப் போனப்புறம் வடிகாலுக்குக் கணவன்தான் வேணும்னு காத்திருக்கிற மாதிரி.. சுய மதிப்புள்ள எந்தப் பொண்ணும் இருக்க மாட்டா.. அதுவும் என்னப் போல வாழ்க்கையோட ரெண்டு பக்கமும் பார்த்தவங்க மனசுல.. நல்லாவே தெளிவு இருக்கும்... புரிஞ்சுக்கிற... கெளரவிக்கிற ஆண் துணைதான் அவசியம். தன் விருப்பம் தீர்த்துக்கிற சுயநலவாதியை இல்லே..."

நிறுத்தினாள் மெல்ல. ஆனால் அழுத்தமாய்ச் சொன்னாள்:

"முந்நூறு ரூபா வருமா... இந்தக் கதைக்குச் சன்மானம்? எத்தனை நாள்... எந்தெந்த தேவைக்கு அந்தப் பணம் உங்களுக்கு உதவும்.. சொல்லுங்க...இதுக்குப் பதிலா... பிறரோட அந்தரங்கம் துழாவறதை விட்டுட்டு.. உங்க எழுத்துல ஏன் மாற்றத்தை தேடிப் போகக் கூடாது..."

வார்த்தைகளை வீசி விட்டுப் போனாள்.

எனக்குத்தான் யாரோ என்னைக் கன்னத்தில் மாறி மாறி அறைந்த உணர்வு அப்போது.

(குமுதம்)

23 comments:

பத்மா said...

சில சமயம் எழுத்தாளர் பார்வை தவறாய் போய்டும் இல்லையா?

நல்ல விறு விறு வென்ற நடையுடன் கூடிய கதை

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்கு ரிஷபன்

nis (Ravana) said...

நல்ல இருக்கு

KALYANARAMAN RAGHAVAN said...

கதை கிளாசிக். நான் எப்படி குமுதத்தில் இதை படிக்காமல் மிஸ் பண்ணினேன்?

ரேகா ராகவன்.

வானம்பாடிகள் said...

செம. சபாஷ்!!!

kutipaiya said...

கடைசி வசனங்கள் நச்!! வழக்கம் போல தடையில்லா நடை!! அருமை ரிஷபன்..

பத்மநாபன் said...

கதைக்காரன் சுற்றம் விட்டு சற்று தள்ளியே கவனமாக இருக்கவேண்டும்..என்பதான கதை உங்கள் அருகில் வரவைக்கிறது...

பத்மநாபன் said...

கதைக்காரன் சுற்றம் விட்டு சற்று தள்ளியே கவனமாக இருக்கவேண்டும்..என்பதான கதை உங்கள் அருகில் வரவைக்கிறது...

ஹேமா said...

இந்தக் கதைபோலவே தங்களுக்குள் இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளை ஒத்திவைத்துவிட்டு பிறரது அந்தரங்கள் தேடுவோர் நிறையவே எம் வாழ்வில் !

Balaji saravana said...

கதைல ஒரு சின்ன அதிர்வு இருந்துகிட்டே இருக்கு!
ரொம்ப நல்லா இருக்கு ரிஷபன்..

இனியவள் புனிதா said...

அசத்துறீங்க ரிஷபன்

நிலா மகள் said...

அருமையான,ஆழ்ந்த உளவியல் நோக்கில், விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி... கை கொடுங்க சார்... தேர்ந்த எழுத்துத் திறனுடன் பெண் மனசின் ஆழம் காட்டும் வகையில்... வாழ்த்துப் பூக்களைத் தூவுகிறேன்!

Chitra said...

அவர் அன்னிக்கு வந்தது.. ஆபீஸ்ல கையாடல் பண்ணி... பிரச்னையில் மாட்டிக்கிட்டதால.. எனக்கு... என்னைத் தேடி வந்தது... பண உதவிக்கு.. அரை மணியிலே திரும்பிப் போயிட்டார்.. உங்க கற்பனை கொஞ்சம் ஓவர்தான். ஆனா நெஜத்துல.. மனசு வெறுத்துப் போனப்புறம் வடிகாலுக்குக் கணவன்தான் வேணும்னு காத்திருக்கிற மாதிரி.. சுய மதிப்புள்ள எந்தப் பொண்ணும் இருக்க மாட்டா.. அதுவும் என்னப் போல வாழ்க்கையோட ரெண்டு பக்கமும் பார்த்தவங்க மனசுல.. நல்லாவே தெளிவு இருக்கும்... புரிஞ்சுக்கிற... கெளரவிக்கிற ஆண் துணைதான் அவசியம். தன் விருப்பம் தீர்த்துக்கிற சுயநலவாதியை இல்லே..."

..... அந்த பெண், நேரில் இருந்து பேசுவது போல ஒரு உணர்வு. அருமையான நடையும் கதையும். வாழ்த்துக்கள்!

LK said...

good one

ஹுஸைனம்மா said...

என்னதான் பெரிய இடத்துல இருந்தாலும், பலரும் சில சமயங்களிலாவது சராசரி மனிதர்கள் ஆகிவிடுகிறார்கள்!!

Ponkarthik said...

superb..

சுந்தர்ஜி. said...

ஒரு கலைஞன் சம்பவங்களைத் தேடும் போது இப்படியும் விபத்துக்கள் நேர்கின்றன. நல்ல கரு கலைஞனைத் தேர்ந்தெடுக்கிறது.

நல்ல அருமையான நடையுடன் கூடிய ரிஷபனின் முத்திரைக்கதை.

VAI. GOPALAKRISHNAN said...

மீண்டும் படித்தேன்.”எனக்கு நீ வேணும்” என்ற விருந்து நிறைவாகவும், திருப்தியாக இருந்தது. நன்றி.

கமலேஷ் said...

அருமையாக இருக்கிறது ரிசபன்.

Jagannathan said...

கொஞ்ஜ காலத்திற்கு பிறகு உன் கதையைப் படிக்க வந்தேன். நானும் இதை எப்படி குமுதத்தில் தவற விட்டேன் என்று தெரியவில்லை. கதையும் எழுத்து நடையும் ரொம்பவும் சிறப்பு. வாழ்த்துக்கள். - ஜெகன்னாதன்

VAI. GOPALAKRISHNAN said...

trial
கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யப்பட்டது.
சோதனைக்காக அனுப்பும தகவல் இது.

வெங்கட் நாகராஜ் said...

அப்பாடா, என்ன ஒரு கற்பனைத் திறன். Hats Off to you... வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

கோவை2தில்லி said...

சூப்பர் சார்.