October 17, 2010

நான் ஒரு மாதிரி

என்னோட ரசனைகளைச் சொன்னா எல்லோரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க.

எனக்குப் பவழமல்லிப்பூ பிடிக்கும்.

லேசான தூறல்ல நடக்க பிடிக்கும்.

பிடிச்ச முகங்களோட தயக்கமில்லாம அறிமுகப்படுத்திக்கிட்டு பேசப் பிடிக்கும்.

அழகை ரசிக்கப் பிடிக்கும்.

தாவணி போட்ட பெண்கள் ரொம்பப் பிடிக்கும்.

பஸ்ஸில், டிரெயினில் தொலைதூரம் போகணும்னா பயணத்தை அலுப்பில்லாம கழிக்க என்னோட வழியே தனி. பக்கத்து ஸீட்டுகளில் ரசனையான ஒரு பெண் நபரைத் தேர்ந்தெடுத்துப் பயணம் முழுக்க மானசீகமாகப் பேசிக்கிட்டு வருவேன்.- இப்படி இன்னும் எத்தனையோ!

ஆனா, மொத்தமா பார்த்தா என்னால யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது.

பாருங்க.... அன்னிக்கு அந்த பஸ்ஸில நாகர்கோவில் போனேன்.

எனக்கு முன் ஸீட்டுல ஒரு தம்பதி, ரெண்டு குழந்தைகளோடு. பெரியவனுக்கு நாலரை வயசிருக்கும். சின்னவளுக்கு மூணு வயசிருக்கலாம். அந்தப் பெண்ணைப் பார்த்தா ரெண்டு குழந்தைகளுக்கு அம்மான்னே சொல்ல முடியாது.

புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மௌனமாகத்தான் பயணம் செஞ்சாங்க. ஏதாவது சண்டையா? மனஸ்தாபமா?பஸ்ஸில் இருந்தவர்களில், இவங்கதான் முதல் மார்க் வாங்கற அளவுக்கு அழகு!

ஆனா இன்னொருத்தனோட மனைவியாச்சே... மனசாட்சி உறுத்த, கண்களை வெளியே வேடிக்கை பார்க்கவிட்டேன்.

பஸ்ஸின் எதிர்க் காற்று, வெளியே பறந்த புழுதி பொட்டல்வெளி எல்லாம் அலுப்புத் தர,... தூங்கக்கூட முயற்சித்தேன், முடியலை.

ஏதோ ஓர் இடத்துல பஸ் நின்னுச்சு."பத்து நிமிஷம் பஸ் இங்கே நிக்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்." என்ற அறிவிப்பு கேட்டுது.

நானும், முன் ஸீட் கணவனும், குழந்தைகளும் இறங்கினோம். அவள் மட்டும் ஸீட்டிலேயே இருந்தாள்.ஒரு கூல் டிரிங்கை வாங்கி ஸ்டிராவினால் உறிஞ்ச ஆரம்பித்தேன்.

மூன்று இளநீர்களுடன் வந்தான் முன் ஸீட்டுக்காரன். தனக்கு ஒன்றும், குழந்தைகளுக்கு இரண்டுமாக.

"அப்பா, அம்மாவுக்கு..."என்றது பெண்.

"உனக்குக் கொடுத்ததைக் குடி...' என்றான் கடுப்பாக.

"அம்மா பாவம்ப்பா..." என்றான் பையன்.

"ஏய், பேசாம குடிக்கறியா... இல்லே!" என்று மிரட்டினான்.

நான் யூகித்தது சரிதான். கணவன் - மனைவிக்குள் ஏதோ பிணக்கு போலிருக்கு.

மனசே இல்லாமல் இளநீரைக் குடித்துவிட்டுத் தயங்கித் தயங்கி பஸ் ஏறின குழந்தைகள் இரண்டும்... பின்னாலேயே அவனும்.

பஸ் கிளம்பும்போது நானும் தொற்றிக்கொண்டேன்.புத்துணர்ச்சியுடன் முன் ஸீட்டைக் கவனிக்க ஆரம்பிச்சேன். அரை மணி நேரம் போனது.

முதலில் பையன்தான் கவனிச்சான்.அவனைத் தொடர்ந்து அந்தப் பெண் குழந்தை.அவர்களின் கசமுசாவில் அந்தக் கணவன் திரும்பினான்.

"என்னடா...?" என்றான் பையனிடம்.

"அந்த மாமா இங்கேயே பார்த்துக்கிட்டிருக்கார்..." என்றான் கிசுகிசுப்பாக!

"உஸ்ஸ்... பேசாம இரு!"

முன் ஸீட்டுக்காரனுக்குக் குறுகுறுப்புத் தோன்றிவிட்டது.தற்செயலாகத் திரும்புவது போல் அடிக்கடி என்னைப் பார்த்தான்.ஸீட்டில் நெளிந்தான். மனைவியைத் திரும்பத் திரும்பப் பார்த்தான்.

"வந்து... அம்மாவை..." என்று ஏதோ சொல்ல நினைத்துத் தயங்கினான்.

நான் அசையாமல் அமர்ந்திருந்தேன்.கடைசியில் அவன் பொறுமையிழந்து அவளிடம் பேசியேவிட்டான்.

" நீ இந்தப் பக்கம் வாயேன்..."

"ஏங்க... இதுவே நல்லாத்தானே இருக்கு" என்றாள் ஒன்றும் புரியாமல்.

கணவன் தன்னிடம் பேசியதில் உள்ளூரக் குதூகலம் தெரிந்தது.

"வான்னா வா..."

இடம் மாறிக் கொண்டனர்.

"இதுவும் நல்லாத்தான் இருக்கு.." என்றாள் மகிழ்ச்சியாக.

"பசிக்குதா ... அடுத்த தடவை நிறுத்தும்போது ஏதாவது வாங்கிக்கிட்டு வரேன்..." என்றான் அவனாகவே.

அவன் பார்வை என்னைத் திரும்பவும் அலசியது.

எந்தவித முக மாறுதலுமின்றி அவனை உற்றுப் பார்த்தேன். பார்வையைத் திருப்பிக் கொண்டான். பயணம் முடியும் வரை குழந்தைகளுடனும் மனைவியுடனும் பேசினான்.இறங்கும்போது என்னை முறைத்தான்.

' நான் ஒரு மாதிரியாம்!'

அவன் பார்வையில் தெரிந்தது.

இப்போ சொல்லுங்க... நான் ஒரு மாதிரியா?

(ஆனந்த விகடன்)

35 comments:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஒரு மாதிரி தான்! ஆனா, நல்ல மாதிரி!!

சுந்தர்ஜி said...

ஒரு வார்த்தை பேசாம மனஸ்தாபத்தோட வந்த ஜோடிய நெருங்க வச்சுட்டீங்களே. நீங்க எப்படி ரிஷபன் ஒரு மாதிரி?

உளவியலைத் தொட்டு நறுக்குத் தெறிக்கும் கதை. சபாஷ் ரிஷபன்.

Balaji saravana said...

//ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
ஒரு மாதிரி தான்! ஆனா, நல்ல மாதிரி!!//

ஒரு சின்ன திருத்தம்.. ரொம்ப நல்ல மாதிரி :)

Gopi Ramamoorthy said...

நீங்க கலக்குறீங்க பாஸ்

kutipaiya said...

:) :)

பொதுவான சைக்காலஜி :)
அருமை!

வானம்பாடிகள் said...

:)). இல்லை. வேறமாதிரி..different. very nice story.

KALYANARAMAN RAGHAVAN said...

நீங்க எப்படி இவ்வளவு அருமையா கதையை யோசிக்கறீங்க?

ரேகா ராகவன்.

K.B.JANARTHANAN said...

கதை ரொம்ப நல்ல மாதிரி...

மோகன்ஜி said...

அழகான மனவியல் களம்..

ஈரோடு கதிர் said...

nice

VAI. GOPALAKRISHNAN said...

//பக்கத்து ஸீட்டுகளில் ரசனையான ஒரு பெண் நபரைத் தேர்ந்தெடுத்துப் பயணம் முழுக்க மானசீகமாகப் பேசிக்கிட்டு வருவேன்.//
நீங்க மானசீகமாகப் பேசிக்கிட்டு வந்தது எப்படியோ அந்தப்பொடியன் மூலம் அவள் கணவனுக்குத் தெரிந்து போய், அதன் விளைவாக அவர்களின் மெளனராகம் கலைந்து போக உதவியுள்ளீர்கள். எப்படியோ அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வந்த நீங்கள் ஒரு மாதிரியான ஆளு தான் - அதாவது - உதாரண புருஷர். கதையில் பவழமல்லிபோல் ஒரு வித சுகந்தமான மணம் வீசுகிறது.

RVS said...

ரிஷபன்... என்னா மாதிரி எழுதியிருக்கீங்க... சூபெர்ப்..

நிலா மகள் said...

போறாங்க விடுங்க புரியாத (புத்தி இல்லாப்) பசங்க... எங்க மனசுல இன்னும் உசரமாத்தான் நீங்க! பவழச் சிவப்பும் வெள்ளையுமா வர்ணக் கலவையும், மென்மையான வாசமுமாக எனக்கும் இஷ்டம்தான் பவழமல்லி.நேற்று பவழ மல்லி பொறுக்கும் போது பூக்களுக்கு அருகிலேயே கருப்பு உடம்பில் மஞ்சள் ஓரக் கோடுகளோட மரவட்டைகள்...வர்ணக் கலவை ரசிக்க முடியாமல் பார்வையை நகர்த்திக்குது மனசு... ஆனா, கதை தொடக்கத்துல உங்க 'தனி மாதிரி பட்டியல்' நல்லத்தான் இருக்கு!!

ஈரோடு தங்கதுரை said...

கவிதை வரிகள் அருமை ...

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

sweatha said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

எஸ்.கே said...

ரசித்தேன்! நல்லாயிருந்தது!

நிலாமதி said...

உளவியலைத் தொட்டு நறுக்குத் தெறிக்கும் கதை. ரொம்ப நல்ல மாதிரி!

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லமாதிரி..

பூங்குழலி said...

அழகான மனவியல் களம்..

உண்மைதான் .வித்தியாசமான கதை

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான கதைக் களம். ”ரொம்ப நல்ல மாதிரி....”. கதை எழுத உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேன்டும்....

வெங்கட்.

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க ரிஷபன்

Chitra said...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஒரு மாதிரி தான்! ஆனா, நல்ல மாதிரி!!....Repeattu!! very nice story. :-)

vasan said...

நீங்க‌ "ஒரு மாதிரி"யான‌ மாதிரி.
ச‌ரியா ரிஷ‌ப‌ன்?

சத்யராஜ்குமார் said...

உங்களை சாவியில் நான் எழுதி வந்த காலம் தொட்டு அறிவேன். இந்தக் கதை மிக நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

வாழ்க்கை வாழ்வதற்கே said...

அட என்னங்க நீங்க ஒரு புருஷன் பொண்டாட்டி சேர்த்தது வைச்சுபுட்டு ஒரு மாதிரி ரெண்டு மாதிரி சொல்லிட்ட்ருக்கீங்க

வசந்தமுல்லை said...

very nice

அன்னு said...

அருமையான கதை, கொண்டு சென்ற விதமும் அழகு. வாழ்த்துக்கள் அண்ணா!!

பத்மா said...

ஆமாம் அதிலென்ன சந்தேகம் ? ஒரு (நல்ல) மாதிரியான ஆள்
சபாஷ் சார்

பத்மா said...

ஐயோ இதை ஏற்கனவே எல்லாரும் சொல்லிட்டாங்களா?சபாஷ் உட்பட .next நாதான் முதல் கமெண்ட் சார்
As usual Rishban touch

நாஞ்சில் மனோ said...

ரிஷபன்னு பேரை வச்சிகிட்டு முட்டாம ஏன் விட்டீங்க???
அதுதான் நீ மாதிரின்னு உங்களையே யோசிக்க வச்சிடிச்சு,

கோவை2தில்லி said...

அருமையான கதை. இப்படியெல்லாம் கூட எழுத முடியுமான்னு யோசிக்க வெச்சுட்டீங்க. ”ஒரு மாதிரி ” என்ன “ரொம்ப ரொம்ப நல்ல மாதிரி”.

Harani said...

ரிஷபன்..
தொடர்ந்து உங்க வலைத்தளத்தைப் பார்க்கிறேன். பழச எல்லாம் படித்துவிட்டேன், ஆனா புது பதிவைத் தேடறதுல இடர் வருது.
ஆனாலும் தேடிப் படித்துவிடுவேன். இன்னும் இந்த வலைத்தளத்துலே ஒரு பழகுநனனாகவே
இருக்கிறேன். இந்த கதை மேலோட்டமாக ஒரு சாதரணத்தை எதார்த்தமாகச் சித்தரித்தாலும் அதன் பின்னணியில் உள்ள உளவியல் ரொம்ப
கவனமானது. சமுகப் பொறுப்பு கணவனுக்கும் கதை சொல்பவனுக்குமான பார்வை பரிமாற்றத்தில் இழைந்திருப்பது சரியானதாகும். உங்க முத்திரை வழக்கம்போலவே. இருப்பினும் புறத்தளவிலும் இன்னும் கொஞ்சம் நான் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ரிஷபனைப் பல்லாண்டுகளாகப் பழகி பார்த்து பேசி படைப்புக்களைப் படித்துக் கொண்டிருப்பவன் என்கிற உரிமையில். ஒரு ஆழமும் தன்முனைப்பின் வீரியமும் கொண்ட ஒரு கதை இது. சந்திப்போம்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா எழுதியிருக்கீங்க ரிஷபன்!

பத்மநாபன் said...

காதலை சேர்க்க ஒரு மாதிரியாக இருக்கலாம்..முன் மாதிரியாகவும் இருக்கலாம்

கதை படித்து ஒரு மாதிரி யானேன் ..கவிதை படிக்க வருகிறேன்.

Lakshminarayanan said...

எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான 'ஒரு மாதிரி'கதை.......நல்லா இருந்தது !