June 30, 2010

கிங் க்வீன் ஜாக்- பகுதி 1



அப்பாவின் குரல் உரத்துக் கேட்கிறது என்றால், இரண்டே காரணங்கள்தான். ஒன்று அப்பா வீட்டில் இருக்கிறார். இரண்டாவது, அப்பா அம்மாவிடம் பணம் கேட்கிறார்.

உமா புரண்டு படுத்தாள். எழுந்து போய்ப் பார்க்க மனசில்லை. அப்பாவின் இப்போதைய தோற்றம் ஏற்கெனவே பலமுறை பார்த்துச் சங்கடப்பட்டது.

"என்ன சொல்றே. உங்கையில ஒரு பைசா கூட இல்லியா"

அம்மாவின் முகம் நசுங்கிப் போய் பல மாதங்களாகி விட்டன. ஆறு கஜம் புடைவை தன் வர்ணம் இழந்து அம்மாவின் மெலிந்த தேகத்தை அவஸ்தையாய் சுற்றிக் கொண்டிருந்தது.

"பதில் சொல்லுடி"

"இல்லே"

"ஒரே ஒரு ரூபா"

"இல்லே"

"தெருவுல நிமிஷத்துல நூறு ரூபா பார்த்துருவேன். வீட்டுலேர்ந்து ஒரு பைசாவாவது எடுத்துக்கிட்டுப் போகணும். அதான் கேட்கிறேன்"

அம்மாவின் குரல் கேட்கவில்லை. இதே சால்ஜாப்பை அப்பா நிறைய தடவைகள் உபயோகித்து இருக்கிறார்.

"கொடுடி.. எனக்கு நேரமாச்சு"

முள் நகர நகர அப்பாவின் தீவிரம் வலுப்பெற்று ஏதேனும் காசு பார்க்காமல் விட மாட்டார் என்று புரிந்தது உமாவுக்கு.இதன் அடுத்த கட்டமாய் அம்மாவின் மீது 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' நிகழக்கூடும்.அம்மாவாவது கொடுத்து தொலைக்கலாம். வெட்டி வீம்பினால் இந்த மனிதனைத் திருத்த முடியப் போவதில்லை.

"என்னடி.. தருவியா.. மாட்டியா"

குரல் நிதானமானது. உமா சட்டென்று எழுந்து வந்துவிட்டாள்.

"அம்மா"

கண்ணீர் துளிக்கூட புலப்படாத இறுக்கமான முகத்துடன் அம்மா திரும்பினாள். ஆறு கால பூஜை தவறிய அம்மன் போல சோகை அப்பிய முகம்.

"இதை அப்பாகிட்டே கொடும்மா"

அம்மாவின் பிடிவாதம் உமா நீட்டிய ரூபாய் நோட்டை வாங்க மறுத்தது.

"பிளீஸ்மா"

அருகில் வந்து கையில் திணிக்க, பிடி அகன்று கீழே தவறிய தாளை அப்பா லாகவமாய் ஏந்திக் கொண்டார்.முகம் பிரகாசித்தது.

"இனி ஜெயம்தாண்டி. இதை முதல்லேயே செஞ்சிருக்கலாம்ல"

செருப்பு சப்திக்க தெருவில் இறங்கிப் போனார். இனி எப்போது வீடு திரும்புவாரோ அவருக்கே வெளிச்சம்.

ஐம்பத்திரண்டு கார்டுகள். ஏஸ்.. கிங்.. க்வீன்..ஜாக்.. என உபரியாய் ஜோக்கர்களுடன் கடை வீதியின் ஒரு கட்டட முதல் மாடி அறைக்குள் வேறு ஒரு உலகத்தில் பிரவேசித்து நிற்பார்.

அப்பா.. உமா மனசுக்குள் தேம்பினாள்.மெளனமாய் நகர்ந்தது அன்றைய விடுமுறை தினம்.நாளையிலிருந்து ஆறு நாட்களுக்கு அலுவலகம் சொர்க்க வாசலைத் திறந்து வைத்திருக்கும். இரவில் தூங்கும் நேரம் கூட அலுவலகம் சம்பந்தப்பட்ட கனாக்கள். அம்மாவும் அவளுங்கூட சம்பிரதாயப் பேச்சு மட்டும் பேசிக் கொண்டு.

உமாவால் முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அம்மா புதுப் புது சோகம் வைத்திருப்பாள். பேசப் போனால் பாரம் தலை மாறி ஏறிக் கொண்டு அழுத்தும்.அப்பாவின் சீட்டாட்டப் பைத்தியம் ஒன்றும் புதிதில்லை. அம்மாவைப் பெண் பார்த்துத் திரும்பிப் போன தினத்திலேயே தெரியும். அதே ஊரில் அப்பா மட்டும் தங்கி விட்டார்.

'கச்சேரிக்குப் பெயர் போன ஊர்'

'நம்ம ஜானாவைப் பார்க்க வந்தானே.. குப்புசாமி வீட்டுத் திண்ணையில.. சீட்டு விளையாடிண்டிருக்கான்'

இத்தனை வெறியாய் இருப்பார் என்று தோன்றவில்லையாம். பெண் பிடித்துப் போனதால், இன்னொரு தரம் பார்க்க வசதியாய் பொய்க் காரணத்தோடு திண்ணையில் இடம் பிடித்ததாக நினைத்தார்களாம்.மாப்பிள்ளை அழைப்பன்று இரவும் இடை விடாத கச்சேரி.

'முகூர்த்தத்துக்கு நேரமாச்சு.. வாடா' என்று கையைப் பிடித்து இழுக்காத குறை.

உமா பிறந்த நாள் அன்று அப்பா அதிக சந்தோஷத்தில் இருந்தாராம். ஆயிரம் ரூபாய் வரவு.

'இவ பிறந்தவேளை'

அம்மாவுக்கு அப்பா, அவரது சீட்டாட்ட மற்றும் பிற வெறிகள் பழகிப் போய் விட்டன.பழைய பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தில் அம்மாவின் புஷ்டியான தோற்றம் இப்போதும் பிரமிப்பு தரும். அப்பாவைப் பின்னுக்குத் தள்ளி ராணி போல கம்பீரம் காட்டிய புகைப்படம்.இப்போது எடுத்த புகைப்படம் ஏதோ 'திருஷ்டி' போலத் தெரிகிறது.

அந்த அம்மாவா இப்படி ஆனாள்?

'உன்னால தடுக்க முடியலியாம்மா'

உமா ஆற்றமாட்டாமல் ஒருதரம் கேட்டிருக்கிறாள்.அம்மா சிரித்தாள். வெற்றுச் சிரிப்பு.

"இல்லம்மா.. அப்ப நீ என்ன சொன்னாலும் அப்பா கேட்டிருப்பார். அந்த மாதிரி இருந்திருக்கே"

அம்மாவின் புன்முறுவலில் இன்னமும்கூட தேயாத பிரபை.

"ஆம்பிளையை நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான். அவன் என்ன தீர்மனிக்கிறானோ அதுதான்.. சில சமயம் அந்தத் தீர்மானம் நம்மாலன்னு பொய்யா கெளரவப்படுத்துவான்"

"என்னம்மா.. நம்ம திரிவேணி அத்தை.. ஙேன்னு இருந்துகிட்டு.. மாமாவை எப்படி கையில வச்சிருக்கா"

"திரிவேணி அத்தை பேர்ல எவ்வளவு சொத்து இருக்குன்னு தெரியுமா.. மாமா அடங்கிப் போனது சுயநலத்துல.. அவருக்குப் பணத்தாசை.. உங்க அப்பாவுக்கு வேற"

உமாவுக்கு இது மாதிரியான உரையாடல்கள் அலுத்துப்போனதால்தான் வீட்டில் பேச்சைச் சுருக்கியது.

அப்பா எப்போதாவது குடும்பத் தலைவர் வேஷமும் போட்டிருக்கிறார். உமாவைக் கையைப் பிடித்து ஆற்றங்கரைக்கு அழைத்துப் போன சிறு வயசு ஞாபகங்கள்.

"ஏம்பா.. தண்ணியே இல்ல"

"மழை பேஞ்சாதானே"

"மழை ஏன் பெய்யலே"

"மரமே இல்லியே. எல்லாத்தையும் வெட்டிட்டா"

"ஏம்பா.. மரத்தை வெட்டறா"

சங்கிலித் தொடர் போலக் கேள்விகள். அலுக்காமல் பதில் சொல்லிய அப்பா. இருட்டிய பின்னும், எதிர் உருவம் சரிவரப் புலப்படாத நிலையிலும் மணல் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கொடி ஏற்றும் வரை பொறுமையாய்க் காத்திருப்பார்.

"அம்மாவும் நம்ம கூட வரலாம்ல"

"அவளுக்கு சமையலறை போதும். வான்னா வரமாட்டா"

"அம்மாவுக்கு ரசனையே இல்லைப்பா"

அப்பா பதில் சொல்ல மாட்டார். எப்படிச் சொல்வார். அவரால் சிறகு முறிக்கப்பட்ட பறவையைப் பற்றி என்ன சமாதானம் தர இயலும்?

உமாவுக்கு அப்போது அப்பாவைப் பிடித்துப் போனது. அருகே இருக்கிற நேரங்களில் தோழனாய் நிற்கிற அப்பா, சிடுசிடுக்கிற அம்மாவை விட கூடுதலாய்ப் பிரியம் சம்பாதிக்கிறார்.

பத்து வயசுக்கு மேல்தான் அம்மாவைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதுவும் சீட்டாட பணம் கிடைக்காத ரெளத்திரத்தில் அம்மாவின் தலையைத் தாக்கிய டம்ளர். மூன்று தையல்கள். ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அம்மா.அப்பாவின் பிம்பம் அன்று முதல் முறையாகத் தகர்ந்தது. இவர் தகப்பன் இல்லை. தகப்பனுக்குரிய குணங்கள் இல்லை.

"அப்பா வேணாம்மா"

"போடி பைத்தியம்"

அம்மா ஏன் அப்பாவைத் தாங்கிப் பிடிக்கிறாள் என்று புரியவில்லை. இந்த நிமிஷங்கூட. பி.காம். படித்து வேலைக்கு அமர்ந்த பின்னும், சுயமாய் முயற்சித்து அலுவகத் தேர்வு எழுதித் தேறி, இன்று கெளரவமாய் இருக்க முடிந்தபோதும், அம்மா அப்பாவின் நிழலில் நிற்பதுபோல ஏன் காட்டிக் கொள்கிறாள்?

"சாப்பிட வரியா"

அம்மாவின் குரல் கேட்டது.வேளை தவறாமல் நிகழ்கிற ஒரே வேலை.

"அம்மா"

"ம்"

"கையில் போடறியா.. பிசைஞ்சு"

அம்மா எதுவும் பேசவில்லை. உள்ளே போனாள். ஒரு ஏனத்தில் கலந்து கொண்டு திரும்பியவளின் இன்னொரு கையில் அப்பளத்தட்டு.உருட்டிப் போட்ட கவளம் இதமாய் தொண்டைக் குழியில் இறங்கியது.

எதிரே அப்பாவும் இதே போலக் கை நீட்டி அமர்ந்தால்..கொடுப்பினை இல்லை. இயற்கை தன் போக்கில் நிர்ணயிக்கிறது.

"கீழே வழியறது பாரு."

"துடைச்சிரலாம். இப்பவும் சாம்பார்ல நீதான் எக்ஸ்பர்ட்..அதே டேஸ்ட்"

"ஒரே புழுக்கமா இருக்குடி"

"போம்மா ஐஸ் வைக்கிறேன்னு கிண்டல் பண்றியா"

மீண்டும் உருண்டையைக் கையில் போட்ட அம்மாவிடம் சொன்னாள்.

"உன்கிட்டே நல்ல புடைவையே இல்லியே. ஏம்மா பிடிவாதமா பழசையே கட்டிக்கறே"

"யாருடி தினகர்"

அம்மா பதில் கேள்வி கேட்டதும் உமாவுக்குப் புரையேறியது. தும்மியதில் சாதம் சிதறியது.

"அம்மா.."

"யாரு தினகர்.. சொல்லு"

(தொடரும்)


(கல்கியில் பிரசுரமான நான்கு வாரத் தொடர் )

June 26, 2010

விண்ணைத் தொடுவோம்


பூமிக்குள்தான்

இத்தனை சண்டை ..

வானத்தைப்

பங்கிட்டு கொள்ளலாம் ..

அத்தனை பேருக்கும்

கொடுத்தபின்னும்

மிஞ்சும் வானம்!

பார்வை எட்டும் தூரம் வரை

அவரவர்க்கான வானம்

அவரவர் தலை மீதுதான்..

யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை..

இனி தலை கவிழ்ந்து

பூமி பார்க்கும் இச்சை விட்டு

தலை நிமிர்ந்து

விண்ணைத் தொடும்

புத்தியில் நடப்போம் ..

June 21, 2010

தாமரைக் குளம்


எங்கள் கிராமத்திற்கு வருடத்தில் இரண்டு தரம் நிச்சயம் போய் விடுவோம் . ஒன்று பொங்கலுக்கு மறுநாள் .. அடுத்தது நவராத்திரி முதல் நாள்.

போகிற வழியில் .. அதுவும் கிராமம் நெருங்கும் 30 கிலோ மீட்டர்களில் தென்படுகிற குளங்கள் .. என்ன அழகு!

சில இடங்களில் கொஞ்சம் சின்னதாய் .. சில இடங்களில் சற்றே பெரிதாய் நீர் தளும்பிக் கொண்டு .. வட்டம் வட்டமாய் தாமரை இலைகள் .. பூக்கள்..

சிவப்பு தாமரைப் பூ .. வெள்ளைத் தாமரைப் பூ ..

எங்கள் கிராமத்திலேயே ஓர் குளம் கிழக்கு பகுதியில் உண்டு.. அங்கும் தாமரைப் பூக்கள் ..

'இறங்கிடாதடா.. கொடி சுத்திக்கும்' என்று சிறு வயசில் மிரட்டி கரையிலேயே நிற்க வைத்து விடுவார்கள். குளத்தின் நாலு பக்கமும் குளிக்க இறங்கி தண்ணீர் சாலை போல இரு புறமும் தாமரைக் கொடிகள் நடுவே தெரியும்.

தாமரையின் வாசனையே தனி. அந்த இலையில் சாதம் சாப்பிட்டால் அது ஒரு ருசி. தாமரையும் துளசியும் கலந்து மாலை கட்டித் தருவார்கள். அதன் அழகே அலாதி .

இப்போதும் கிராமம் போகிறோம். அந்தக் குளங்கள் எங்கே என்று புரியவில்லை..

இருக்கும் குளங்களிலும் தாமரையை காணோம் முன்பு போல.

அதற்குப் பதிலாக செல் போன் டவர் .. தொலைக் காட்சிப் பெட்டிகள்.. புகை கக்கி போகும் வாகனங்கள் ..

எனக்குத் தெரிந்து இப்போது இருப்பதெல்லாம் வளர்ந்த நகரங்கள்.. வளர்கிற நகரங்கள்.. உண்மையான கிராமம் அதன் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போவதாய்..


June 18, 2010

மேகம்


ஜன்னல் வழி பார்க்க

வானம் இருட்டிக் கொண்டு

வருகிறது..

எங்கிருந்துதான் கிளம்பியதோ

அத்தனை மேகங்களும்..

என் வீட்டு மாடி தாண்டி

அவை போகும்போது

நின்று கையசைக்கத்தான்

தோன்றுகிறது..

அதன் அன்பும் என் மீது

தூறலாக..

சற்றே பெருமழை எனப்

பொழிந்து

நனைத்து விட்டுப் போகும் பொழுதில்

விலகி விலகிப் போகும்

மேகங்களை

விட்டுப் பிரிய மனமின்றி

அண்ணாந்து பார்த்து

ஏங்குகிறேன் ..

வீடெனும் கூண்டில்

என்னை அடைத்து விட்டு

எத்தனை சுதந்திரமாய்

உலா வருகின்றன

இந்த மேகங்கள் !




June 16, 2010

கருப்பு வெள்ளை


கருப்பு வெள்ளை படங்களில் தான் உயிரோட்டம் இருக்கிறது என்று நம்புகிற பலரில் நானும் ஒருவன்.
புகைப்படம் எடுக்க ஆரம்பித்த நாட்களில் அந்நாளைய மனிதர்களை கருப்பு வெள்ளையில் படம் பிடித்து வைத்திருப்பார்கள் .
இப்போது பார்த்தால் காலம் அதன் மேல் அழுத்தி வைத்த தடங்களும் சேர்ந்து அப்போது புலப்படாத அழகும் இப்போது தெரியும்!
அம்மா, அப்பா சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இன்னொரு உறவினர் மூலம் கிடைத்தது. அப்பா அமர்ந்திருக்க அம்மா ஜம்மென்று அருகில் நிற்கிறார். இந்நாள் நவீன தொழில் நுட்பத்தில் மறு பிரதி எடுத்து (பழைய படம் அங்கங்கே சேதாரம் ஆகியிருந்தது ) லேமினேட் செய்து விட்டோம்.
எந்த உறவினர் வீட்டுக்கு போனாலும் இம்மாதிரி பழைய படங்கள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து ரசிப்பது வழக்கமாகி விட்டது.
கல்லூரியில் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ நாலு பக்கமும் கரையான் அரித்து முழுமையும் போனபோது (அப்போது பிரேம் செய்து மாட்டும் முன்புத்தி இல்லை) அந்த இழப்பு இன்னமும் வலியாய்..
கருப்பு வெள்ளையும் வண்ணங்களில் சேர்த்திதான் .. ஆனால் அப்படி சொன்னால் 'கலர் இல்லை' என்பது போல மனசுக்குள் ஏன் தோன்றுகிறது?!

June 13, 2010

உனக்கும் எனக்கும்


எனக்கு பிடித்ததை
எல்லாம் உன்னிடம் சொன்னேன்
உனக்குப் பிடித்ததை எல்லாம்
என்னிடம் சொன்னாய்
நானும் சொல்லவில்லை
நீயும் சொல்லவில்லை
நமக்குப் பிடிக்காததை...
மணமான முப்பதே நாட்களில்
பிடிக்காததை கண்டுபிடிப்பதே
நம் வேலையாகி விட்டது!
உனக்கும் எனக்குமான பிணக்கை
வார்த்தைகளிட்டு நிரப்ப முயன்றேன் என் புத்தியால்
கூடுதலாகிப் போனது இடைவெளி
சின்னதாய் ஒரு முத்தம்
சரி செய்திருக்கும் சுலபமாய் என்று
என் குழந்தை மனசு
கேலி செய்தது அப்போது !



(நன்றி : ஆனந்த விகடன் - இந்த வாரம்)










June 07, 2010

மாற்றம்


இன்று ஏனோ என் மனம்

காலையில் இருந்தே

எனக்குப் பிடித்த பாடலை

முணுமுணுக்கிறது

என் மேல் உரசிப் போனவரைக் கூட

'பார்த்துப் போ' என்று

சொல்லத் தூண்டுகிறது..

பேருந்தில் சில்லரையாய்க் கொடுத்து

பயணச் சீட்டு எடுக்கிறேன்..

இன்னொரு மிகப் பெரிய வேலையும்

என் மீது சுமத்தப் படுவதை

மகிழ்ச்சியாய் ஏற்கிறேன்..

என்னைக் குறை சொன்னவரிடம்

நிதானமாய் என் தரப்பை

சொல்லிப் பார்க்கிறேன்..

எதிர்ப்பட்ட எவரிடமும்

என் புன்னகையே முதல் பேச்சாய் ..

நேற்றைய கனவில்

'நாளை உனது கடைசி நாள் ..' என்று

யாரோ ஒருவர்

என் தலை வருடி

சொல்லிப் போனார்..

கனவு பொய்யோ நிஜமோ ..

இன்றொரு நாள்

'இப்படித்தான் இருக்கலாமே '

என்று யோசித்தேன்..

எதுவும் நிகழாமல்

மீண்டும் விழித்தபோது

உள்ளே குரல் கேட்டது..

'இப்படியே இருந்து விடலாமே'





June 05, 2010

தனிமை



இதுவரை தனியாகத்தான்

பயணிப்பதாய் நினைத்தேன் ..

அந்த நினைப்பின் துணிச்சலில்

செய்ய நினைத்ததெல்லாம்

செய்து கொண்டு..

மரங்களில் ஆடி..

பூக்களை முகர்ந்து..

நீர் வாரி இறைத்து..

கர்ண கடூரக் குரலில்

பாட்டும் இசைத்து..

எல்லாம் முடித்து

திரும்பிப் பார்க்கையில்..

பாதையின் ஒரு எல்லையில்

என்னைக் கடந்து போனார்கள்

அவர்கள்

புன்முறுவலுடன்.,.

வெட்கத்துடன்

திரும்பிப் பார்த்ததில்

நடந்து வந்த வழி எங்கும்

சிதறிக் கிடந்தன

என்னுள் ஒளிந்திருந்த

என் இயல்புகள்!