October 26, 2011

கடவுள் இருக்கிறாரா இல்லையாயார் செய்த புண்ணியமோ இப்போது காவிரியில் வற்றாமல் நீர் ஓடுகிறது. அதுவும் கடந்த இரு வருடங்களாக.
அம்மா மண்டபப் படித்துறையில் தினசரி தீர்த்தமாட வரும் வயோதிகப் பெண்மணிகள் முதல் டூரிஸ்ட் பேருந்துகளில் வந்து இறங்கும் கூட்டம் வரை நீர்ப் பெருக்கைப் பார்த்து உள்ளூர மகிழ்ச்சி ததும்பி, கண்களில் பிரதிபலிப்பதை ரெங்கனும் ரசிக்கிறான்.
வாங்கோ.. பிதுரு காரியம் பண்ணலாம். பேஷா.. ஜலம் நிறைய ஓடறது. காவிரிக்கரையில் தர்ப்பணம் பண்ணா ரொம்பப் புண்ணியம். கங்கையிலும் புனிதமாய காவிரி..
ஆழ்வார் பாசுரம் பாதி சொல்லி வரவேற்பு கொடுப்பான். ஒரு சிலர் - இதில் நம்பிக்கை உடையவர்கள் - அவனை அணுகுவார்கள். அன்றைய தினம் அவனுக்கு வாழ்வின் சொர்க்க வாசல் திறந்து விட்ட மாதிரி.
இன்று கணிசமாய்ப் பணம் சேர்ந்து விட்டது. ரெங்கனும் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஐந்தோ ஐம்பதோ எது கொடுத்தாலும் யத் கிஞ்சித் ஹிரண்யம்..
க்ஷேமமா இருப்பேள்.. ஸதமானம் பவது
அம்புஜமே அவனைச் சந்தேகமாய்ப் பார்த்திருக்கிறாள்.
ஏன்னா.. நிஜமாவே உங்களுக்கு வைதீகம் தெரியுமா
என்னடி இப்படிக் கேட்டுட்டே
இல்லே கேட்கணும்னு தோணித்து..
சரியாகப் படிப்பு வராத பிள்ளைக்கு எவர் பெண் தரப் போகிறார்கள் என்கிற கவலையில் ரெங்கனின் விதவை அம்மா இருந்தபோது ஏழையாகப் பிறந்த காரணத்தால் தாலி கட்டிக் கொண்டவள் அம்புஜம்.
அவனுக்குப் படிப்பு ஏறலே.. ஆனா நல்லவன்டி
எல்லா அம்மாக்களும் சொல்கிற வசனம் என்றூ அப்போது அம்புஜம் நினைத்தாள். ஆனால் ரெங்கன் நல்லவனாகவே இருந்தான்.
உண்மையில் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அனுபவ பாடம். ஒரு சாஸ்திரிகளுடன் கூடப் போன அனுபவம். அது இன்று வரை அவனைக் காப்பாற்றி வருகிறது.
அவன் பேச்சுக்கு ஆகர்ஷண சக்தி உண்டு.
மறுத்து விட்டுப் போனவர்கள் கூட நின்று பேசிவிட்டுத்தான் போவார்கள் சிரிப்புடன்.
*****
அப்படிப்பட்டவனிடம் பிடி கொடுக்காமல் இருந்த முதல் ஆத்மா அந்தப் பெரியவர்தான். சற்று ஆகிருதியான உடம்பு. நரைத்த முடி, தாடி. ரிஷி போலிருந்தார். எப்போது வந்தாரோ.. இவன் பார்த்தபோது அம்மாமண்டபப் படித்துறையில் குளித்து விட்டு படியேறிக் கொண்டிருந்தார்.
பித்ரு காரியம் பண்ண..
ரெங்கனுக்கு பேச்சு அடைத்துப் போனது அவர் பார்த்த பார்வையில்.
உரப்பையில் தர்ப்பை பூணூல் குங்குமம் இன்ன பிற சங்கதிகள் வைத்திருப்பான். பை சட்டென்று கை நழுவிக் கீழே விழுந்தது. குனிந்து எடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோது அவர் நகர்ந்து போயிருந்தார்.
அடுத்தடுத்த நாட்களிலும் அவரைப் பார்த்தான். எங்கே போகிறார், எப்போது வருகிறார் .. தெரியவில்லை. அம்மாமண்டபத்திலேயே படுத்திருந்தார், கைப்பையில் மாற்றுடை மட்டும் வைத்திருந்தார். வேறு பொக்கிஷங்கள் அவரிடம் இல்லை.
கிராமத்திலிருந்து வந்த ஒரு குடும்பத்திற்கு தர்ப்பணம் செய்து வைத்துக் கொண்டிருந்தபோது பெரியவர் சட்டென்று கீழே சாய்வதைப் பார்த்தான். எழுந்து ஓடிப்போய் அவரைத் தாங்கிக் கொண்டான்.
சோடா வங்கிட்டு வாங்க
முகத்தில் அடித்து வாயில் ஊற்ற கண்விழித்தார். அவன் மடியில் அவர்.
லேசான புன்னகை அவரிடம்.
ஏதாச்சும் சாப்பிடறீங்களா.. டீ.. காப்பி
வேண்டாம்” என்று மறுத்து விட்டு நடந்தார்.
அதன்பிறகு அவன் அவரைப் பார்த்தால் சிரிப்பதும் அவர் அந்தச் சிரிப்பை அங்கீகரிப்பதும் வழக்கமானது.
அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்று பின்னால் தெரிந்தது. மகன் நல்ல வேலையில் இருக்கிறான். மகளுக்குத் திருமணமாகி விட்டது.
நீங்க ஏன் தனியே வந்து சிரமப்படறீங்க
அடக்க இயலாமல் கேட்டு விட்டான்.
அவர் பதில் சொல்லவில்லை.
உங்க மனைவி கூடவா உங்களைத் தேடல
அதற்கும் பதில் இல்லை. எதிரே காவிரி காற்றில் நீர் சலசலக்க ஓடிக் கொண்டிருந்தாள் எவ்வித ஆச்சர்யமும் காட்டாமல்.
****
அன்று காவிரியில் விழுந்த ஒரு கிழவியைத் தீயணைப்புப் படையினர் போராடி மீட்டு வந்தனர். கிழவியின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
எம்புள்ளை விரட்டி விட்டான்யா.. செத்துப் போவோம்னு குதிச்சேன்
பேட்டி கொடுத்தாள் கிழவி. மறுநாள் தினசரியில் புகைப்படத்துடன் செய்தி. தீயணைப்புப்படை மீட்டு வந்ததின் புகைப்படமும் அம்மாமண்டபப் பின்னணியில்.
ரெங்கன் பெரியவரிடம் செய்தித்தாளைக் காட்டினான்.
உங்க போட்டோவும் வந்திருக்கு
பெரியவர் அப்போதுதான் பதறிப் போனார்.
அது நாள் வரை எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தவர்.
எங்கே.. எங்கே
துல்லியமாய் அவர் உருவம். புகைப்படம் எடுத்த கலைஞ்ன் செய்தியை விடவும் பெரியவரின் உருவத்தால் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். போட்டோஜெனிக் தோற்றம். பளிச்சென்ற புகைப்படம்.
பெரியவர் பரபரவென்று செய்தித்தாளைக் கிழித்தார். என்னவோ அது ஒன்றுதான் இருப்பதுபோல.
ரெங்கன் எதுவும் சொல்லவில்லை. தம்மைப் பற்றி வெளியே தெரியக்கூடாது என்று அவர் விரும்புவது அவனுக்குப் புலப்பட்டுப் போனது.
மறுநாள் அவனிடம் மூன்று ரூபாயை நீட்டினார்.
ஸாரி.. உங்க பேப்பரை நேத்து நான் கிழிச்சுட்டேன்
பரவாயில்லை.
இந்தாங்க
அதெல்லாம் வேணாம்
அவன் மறுக்கும் போதே கீழே வைத்து விட்டு நகர்ந்து விட்டார்.
*****
நேற்று விழுந்த கிழவியை ஊரிலிருந்து வந்த மகன் அழுது புலம்பி திரும்ப அழைத்துக் கொண்டு போனதாய் பேச்சு வந்தது.
அம்மா மண்டப அரட்டை சங்கம்!
என்னதான் சொல்லுங்க.. மனுசன் என்னதான் முரட்டுத்தனமா நடந்தாலும் பாசம் விட்டுருமா
அப்புறம் ஏன் பெண்டாட்டி பேச்சைக் கேட்டு அவங்களை அடிச்சு விரட்டினான்
அய்யா.. முதல்ல புத்தி கெட்டுப் போச்சு. அப்புறம் நம்மாலதானே அம்மா தற்கொலை செஞ்சுக்கப் போனாங்கன்னு தவிச்சுட்டானே
திரும்பவும் அதே தகறாறூ வராம போவுமா
வராது.. வந்தாலும் இத்தனை வேகம் இருக்காது. அடக்கி வாசிப்பான்
கட்சி கட்டிக் கொண்டு விவாதம். ரெங்கனும் பெரியவரும் பேச்சைக் கவனித்தனர். நடுவில் ரெங்கன் அவரைப் பார்த்தான். 'மனைவி பேச்சைக் கேட்டுக் கொண்டு அம்மாவை விரட்டியவன்' என்றபோது அவர் கண்களில் லேசான கலக்கம்.
அங்கு அம்மா.. இங்கு அப்பாவா..
*****
வெள்ள அபாயம் என்று ஊரே கதிகலங்கிப் போனபோது அம்மாமண்டபம் மணல் மூட்டைகளால் தடுக்கப்பட்டிருந்தது. நீர் குழம்பிப் போய் மூட்டைகளைத் தள்ளிக் கொண்டு ஊருக்குள் வரப் பார்த்தது.
பெரியவர் அப்போதுதான் தடுமாறிப் போனார்.
எங்கே தங்குவது..
ரெங்கன் தயக்கமாய் அவரிடம் போய் நின்றான்.
எங்காத்துக்கு வரேளா
மறுப்பார் என்று நினைத்தான். ஒரு நிமிடம் யோசித்தவர் வந்துவிட்டார். அந்த பத்து நாட்களும் அவனுட்ன் தங்கினார். பேசமாட்டார். சாப்பிடக் கொடுத்தாலும் ஏற்கமாட்டார். தொந்திரவு இல்லாத வகையில் திண்ணையில் (அபூர்வமாய் இப்போதும் திண்ணை இடிபடாமல் இருக்கிற பழங்கால வீடு!) தங்கிக் கொண்டார்.
கோவிலில் தேசாந்திரிகளுக்கான சாப்பாட்டைத்தான் அவர் சாப்பிட்டார் என்று ரெங்கனுக்குத் தெரிய வந்தது.
அம்மா மண்டபம் மறுடி வெள்ள அபாயம் நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்பியபோது பெரியவரும் பழைய இடத்திற்குத் திரும்பிவிட்டார்.
கிளம்புவதற்கு முன் அவனிடம் வந்தார்.
ஒரு துண்டுச் சீட்டை நீட்டினார். கூடவே ஐம்பது ரூபாய்ப் பணமும்.
எ.. என்ன
எம்பேரு.. கோத்ரம்.. நட்சத்திரம்.. பின்னால எனக்கும் .. எனக்கும்
முடிக்காமலேயே புரிந்துவிட்டது அவனுக்கு.
'
பத்மநாபன்.. வாதூல கோத்ரம்.. பரணி நட்சத்திரம்'
ரெங்கன் நிமிர்ந்தபோது அவர் தெரு முனைக்குப் போய் விட்டார்.
அந்த மனுஷன் என்ன கிறுக்கா” என்றாள் அம்புஜம்.
ரெங்கன் ரூபாயையும் சீட்டையும் பத்திரமாக வைக்கச் சொன்னபோது.
இல்லே ஞானி” என்றான் அவனுக்கே நம்பிக்கையற்ற குரலில்.
ஏனோ அவரை விட்டுக் கொடுக்க மனமில்லை.
அம்புஜத்திடம் அவன் யூகத்தை முன்பே சொல்லியிருந்தான்.
கடவுள் இருக்காரா.. இல்லியா.. பாவம். இவரை இப்படி அல்லாட் விட்டுட்டாரே என்றாள்
தெரியலே
*****
காரில் வந்திருக்க வேண்டும் அந்தப் பெண்மணியும் நடுத்தர வயது மனிதனும்.
காவிரி நீரைத் தெளித்துக் கொண்டு கரையேறி வந்தவர்களிடம் வழக்கமான வசனத்தைச் சொன்னான் ரெங்கன்.
என்னம்மா.. இன்னும் நீ நம்பறியா.. அவர் உயிரோட இருப்பாருன்னு
பெண்மணியின் உடம்பு நடுங்கியது தெரிந்தது.
காவிரிக்கரையில் பண்ணால் விசேஷமாம்.. பண்ணிரலாமா
விடாப்பிடியாய் நச்சரித்த குரலில் அவன் கேட்கவும் அந்தப் பெண்மணி அழுதாள்.
எவ்வளவு.. அம்பதா,, பேரு பத்ம்நாபன்.. வாதூல கோத்ரம்.. என்ன நட்சத்திரம்.. ஆங்.. பரணி
கடகடவென அவன் பேச ரெங்கனுக்கு ஏனோ கோபம் பீரிட்டுக் கொண்டு வந்தது.
என்னால முடியாது
ஓய்.. நூறா வாங்கிக்குங்கோ.. பணம் தானே உமக்கு வேணும்..
என்னால முடியாதுன்னா முடியாது
பரபரவென விரித்து வைத்திருந்த சாமாங்களை உரப்பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு ரெங்கன் அன்றைய தின வரும்படி ஏதுமற்ற பையுடன் கிளம்பியதைப் பார்த்தனர் அரட்டை சங்கத்தினர் ஆச்சர்யத்துடன்.


(அதீதம் - பிரசுரம்)


http://www.atheetham.com/story/கடவுள்-இருக்கிறாரா-இல்லையா23 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூப்பர்யா..கதை! தீபாவளியும் அதுவுமா சிந்தனைக்கு ஒரு சூப்பர் விருந்து!

Harani said...

எனக்கு அழுகை வந்துவிட்டது ரிஷபன். உங்களால்தான் இப்படி எழுத முடியும்.

ஷைலஜா said...

தீபாவளி வாழ்த்துகள் ரி!

Ramani said...

அருமை அருமை
எதையும் மிக அதிகமாக விளக்காமல்
படிப்பவர் யூகத்திற்கு விட்டுச் செல்லும் யுக்தி
மிக மிக அருமை .வாழ்த்துக்கள்
த.ம 1

Rathnavel said...

மனசை நெகிழ வைக்கும் அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அப்படியே அடிச்சுப் போட்டா மாதிரி இருக்கு சார்... என்ன ஒரு கதை?

கடவுள் இருக்கிறாரா இல்லையா? இந்தக் கேள்வி என்னுள்ளும் அவ்வப்போது வந்து போகும்.....

விடைதான் தெரியவில்லை...

ரேகா ராகவன் said...

கண்களில் நீரை வரவழைத்த கதை. பிரவாகமாய் ஓடும் வார்த்தைகள் காவிரியைப் போல.

Matangi Mawley said...

அம்மா மண்டபம் படித்துரையோடு வெகு கால பழக்கம்... கதையில்- அதன் வருணனை- அந்த இடங்கள் என்னைப் பார்த்து "சௌக்யமா.."? என்று கேட்பது போல் இருந்தது!

நான் படித்த வெகு குறைவான தமிழ் கதைகளில்-ஜெயகாந்தனின் "சுயதரிசனம்"- என்ற கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் நினைவு வந்தது... ஆனால் அதைத் தாண்டி-- அப்பா சொன்ன ஒரு நிகழ்வு. அப்பாவை மதிக்காத ஒரு பிள்ளை. அவர் இருப்பதை பாரமாக நினைப்பவன், அந்த பிள்ளை. பிள்ளை தினமும் நாய்க்கு சாதம் வைப்பான். "தோ-தோ-விற்கு சாதம் வை" என்று அவன் பிள்ளையிடம் சொல்லுவான்... ஒரு நாள்- வாய் தவறி- "தாத்தா விற்கு..." என்று அவன் கூற- அப்பா விற்கு வாழ்வு கசந்து போய் விட்டது. வசதியுள்ள குடும்பம் ஒன்று- காசிக்கு செல்ல இருந்தது. அப்பா- ப்ரோஹிதர் ஆதலால்- அவரையும் அழைத்திச் செல்லுமாறு அந்த குடும்பத்திடம் கேட்டுக் கொண்டார். அவர்களுடன் சென்றவர், அங்கேயே கங்கையில் கரைந்துவிட்டார்...

பல- நெகிழ்ச்சியூட்டும் விஷயங்களை... மனிதர்களை.. நினைக்க வைத்து விட்டது- இந்த கதை.. அற்புதம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

சார். மிகவும் உருக்கமான கதை. எனக்கு கண்ணில் நீர் வந்து விட்டது. தலைப்பும் அருமை.

இன்று பலரும் இதே விரக்தியில் ஆங்காங்கே அலைந்து கொண்டிருப்பார்களோ என்ற பயம் என்னுள் எழுந்துள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் & இண்ட்லி 3 to 4 vgk

Matangi Mawley said...

forgot!! :)

Thamaso Maa Jyotir Gamaya...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...!

கிருபாநந்தினி said...

கதை ரொம்ப நல்லாருக்குங்ணா! தி.ஜானகிராமன் கதை படிச்ச எஃபெக்ட் இருக்கு.

DrPKandaswamyPhD said...

மனதைப் பிசையறது ஓய், என்னங்காணும் கதை எழுதறேள், அவாளைச் சேத்து வைக்கப்படாதோ, என்ன மனுசன்யா நீ?

RVS said...

//யத் கிஞ்சித் ஹிரண்யம்.//
அற்புதமான கதை சார்!
//கட்சி கட்டிக் கொண்டு//
பெரியவரை வைத்து அசத்திவிட்டீர்கள். :-)

சேட்டைக்காரன் said...

நாளுக்கு நாள் குறைந்து வரும் மனித உறவுகள் குறித்த ஆதங்கத்தை புனைவாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

middleclassmadhavi said...

குடும்பத்தினர் பேப்பரைப் பார்த்திருப்பார்கள் என நினைத்தேனே....

எல்லா பாத்திரங்களும் அருமையான உருவாக்கம்; மனதைத் தொட்ட கதை!

அமைதிச்சாரல் said...

கதை அருமையா ஒவ்வொருவரின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்குது..

அசத்தல்.

சுந்தர்ஜி said...

நான்கைந்து பாத்திரங்கள் வைத்து மிகப் ப்ரமாதமாகச் சமைத்துப் போடும் என் பாட்டியை நினைவுபடுத்திவிட்டீர்கள் ரிஷபன்.

அந்தப் பெரியவர் தன்னுடைய பெயர் கோத்ரம் நக்ஷத்ரம் என்னவென்று முந்தைய பாராவில் சொல்லாமல் இருந்திருந்து கடைசிப் பாராவில் யூகிக்க வைத்திருந்தால் இன்ன்மும் கனமாய் இருந்திருக்கும்.

கீதா said...

உயிருடன் இருக்கும்போது ஒருபிடி சோறும் உணர்வுகளுக்கு மதிப்பும் அளிக்காதவர்கள், இறந்தபின் கர்ணசிரத்தையாய் திவசம் கொடுப்பது வேடிக்கையோடு வேதனையான விஷயம். அதிலும் வீட்டைவிட்டுப் போனவரை உயிரை விட்டவராகவே பாவித்து திதி கொடுப்பது அதனிலும் வேதனை. கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை வாசகரை ஒரு நெகிழ்வான மனநிலையில் கட்டிப்போடும் சாமர்த்தியம் உங்களுக்கு கைவந்த கலை. பாராட்டுகள் சார்.

மனோ சாமிநாதன் said...

நெகிழ வைக்கும் அருமையான சிறுகதை! இப்படித்தான் வாழ்க்கையில் பல சமயங்களில் இரத்த சம்பந்தமான உற‌வுகள் பொய்யாய் போய்விட, உள்ள‌த்தால் உணர்ந்து கொண்ட உறவுகளின் அன்பும் கரிசனமும் மனதை நெகிழ வைத்து விடுகிறது!

KParthasarathi said...

இன்னும் மீளவில்லை உங்கள் கதையின் தாக்கத்திலிருந்து.
மிகவும் அழகாக எழுதி உள்ளீர்கள்

raji said...

நான் வேணும்னா உங்களுக்கு சிஷ்யையா இருந்து எழுதக் கத்துக்கட்டுமா சார்! (அப்பவும் இந்த ஞான சூன்யத்துக்கு ஏறுமோ ஏறாதோ?)

நிலாமகள் said...

வ‌ய‌சான‌வ‌ங்க‌ளோட‌ நிர்க்க‌தி சுளீர்ன்னு முக‌த்தில‌றைகிற‌து. த‌வித்துப் போகிற‌து ம‌ன‌சு.