October 23, 2011

தூது சென்ற தூதுவளை - 2
பரவை நாச்சியார் குரலில் வெகு நேரமாய்க் காத்திருத்தலின் பரபரப்பு தெரிந்தது.
"தயாரா சுவாமி"
"இதோ .. இன்னும் ஒரே நொடியில்.."
அறைக்குள் இருந்த சுந்தரர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. கண்ணாடியின் முன் நின்று நேர், பக்கவாட்டு கோணங்களில் தம் அழகைப் பார்த்துக் கொண்டார். வேட்டி மடிப்புகள் சரியாக இருக்கிறதா என்று மறுபடியும் பார்த்தார். வாசனைத் திரவியத்தை மீண்டும் கழுத்தில் தடவிக் கொண்டார்.
"பெண்களைத்தான் அழகுபடுத்திக் கொள்ள தாமதிப்பதாய் குறை கூறுவார்கள். இங்கோ நீங்கள் செய்யும் ஆடம்பரம் பார்த்தால்.."
பரவை நாச்சியாரின் குரலில் உரிமையுடன் கேலி தெரிந்தது.
"என்ன செய்ய பெண்ணே.. இன்னும் ஏதோ ஒரு குறை இருப்பது போல.."
சுந்தரர் மறுபடி கண்ணாடியைப் பார்க்க பரவை நாச்சியார் கூவினார்.
"திருச்சிற்றம்பலம்.. ஈசனே என்னை ஏன் சோதிக்கிறீர்"
சுந்தரர் திரும்பி அவளைப் பார்த்தார்.
"உண்மையைச் சொல் பரவை .. நான் அழகாய் இருக்கிறேனா"
"நான் ஒருத்தி உங்களிடம் சிக்கிக் கொண்டது போதாதா.. இன்னுமொருத்திக்கு ஏற்பாடா.."
"அப்படி இல்லை பரவை.."
"உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் சுவாமி. அந்த கயிலைப் பிரான் ஒரு நாள் ஆடியில் அழகு பார்த்து வியந்து.. வா சுந்தரா.. என்று சொல்லியிருப்பார்.. அப்படி வந்தவர்தானே நீங்கள்.. நிச்சயம் அழகாய்த்தான் இருக்கிறீர்கள்.. குறையே வேண்டாம்.."
"பசிக்கிறது கண்ணே.."
"அடடா.. உம்மோடு இதென்ன கூத்து.. அலங்கரிக்க பல நாழிகை.. பிறகு பசியென்று அடம்.. என்னால் உம்மை சமாளிக்க இயலாது சுவாமி"
"தயை செய் பெண்ணே.. வாடிய வயிறுடன் ஆலயம் வந்தால் பார்ப்பவர் கண்ணுக்கு நன்றாய் இருக்குமா"
"இப்போது என்னவென்று உங்களுக்கு படைப்பது.. சமையல் பாதிதான் ஆனது.. உங்கள் வற்புறுத்தலால் சன்னிதிக்குக் கிளம்பினேன்.. சித்தம் போக்கு சிவம் போக்கானது இன்று"
"கீரை சமைத்திருப்பாயே.. அது மட்டும் கூட போதும் . "
பரவை நாச்சியார் முகம் சற்றே வாடியது. சுந்தரருக்குப் பிரியமான தூதுவளைக் கீரை இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. அதுவும் அவருக்கு இருமல் தொந்திரவு ஏற்பட்டு அவதியுற்ற போது எத்தனை விதமாய் வைத்தியம் செய்தாகி விட்டது.. போகிற வருகிறவர் எல்லாம் ஆளுக்கொரு மருந்து சொல்லிப் போனார்கள். எதிலும் குணம் தெரியாமல் திண்டாடி கடைசியில் தூதுவளைக் கீரை சமைத்துக் கொடுத்தால் குணம் தெரியும் என்று ஒருவர் கொண்டு வந்து தந்தார். அவர் யார்.. என்ன என்று விசாரிக்கும் பொறுமை கூட இல்லை. சுந்தரர் குணம் பெற்றால் போதும் .. என்று வாங்கிக் கொண்டார் பரவை. ஓயாமல் இருமிக் கொண்டிருந்த சுந்தரரிடம் நல்ல மாற்றம் தெரிந்தது தொடர்ந்து சாப்பிட்டபோது.
அப்போதிருந்து அவருக்கு அந்தக் கீரை மீது ஒரு ருசி.
அயலாரிடம் கூடச் சொல்லிப் பார்த்தாகி விட்டது. வழக்கமாய் கீரை கொண்டு வரும் பெண்ணிடம் கேட்டாகி விட்டது. எங்கும் கிடைக்கவில்லை. நடுவில் ஒரு நாள் வாடிப் போய்க் கிடைத்ததை அரைமனதாய்ச் சமைத்து வைத்திருந்தாள். அதைக் கூட சுந்தரர் அவ்வளவு ஆசையாய் சாப்பிட்டார். பரவையைக் காதலாய்ப் பார்த்தார். குரல் கணீரென்று ஒலித்தது.
எந்த உணர்வானாலும் உடனே சுந்தரர் மனம் கசிந்து ஆரூரானை அழைக்க மறந்ததில்லை.

பொய்த்தன்மைத்தாய மாயப்
போர்வையை மெய்யென்றெண்ணும்
வித்தகத்தாய வாழ்வு
வேண்டி நான் விரும்பகில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
முடிகளால் வணங்குவார்க்கு
அத்தன்மைத்தாகும் ஆரூர்
அப்பனே அஞ்சினேனேபசி என்று சொன்னவர் அடுத்த நொடி அதை மறந்தவர் போலக் கிளம்பி விட்டார். உற்சாகமாய் வீதியில் இறங்கி எதிர்ப்பட்டு வணக்கம் சொல்பவர்களுக்கு 'திருச்சிற்றம்பலம்' சொல்லி துள்ளல் நடையுடன் செல்ல, பின்னால் வாடிய முகத்துடன் பரவை வந்தார்.
'ஈசா.. எனக்கிரங்க மாட்டீரா.. கேவலம் ஒரு கீரைக்கு நான் இத்தனை அல்லல் படுவதா'
"அம்மா.. "
பிஞ்சுக் குரல் அருகில் கேட்டது. யாரது..
எதிரே இடுப்பில் அழகாய்க் கட்டிய துண்டுடன் கை உயர்த்தி அந்தச் சிறுவன். நீட்டிய கரங்களில் பசுமை மாறாமல் புத்தம்புது தூதுவளைக் கீரைக் கட்டு.
"என்னப்பா.."
"பிடியுங்கள் அம்மா. என் கை வலிக்குது.." கொஞ்சியது மழலை.
வாங்கிக் கொண்டாள். ஈசனே என் குரல் கேட்டு விட்டதா உமக்கு. கண்ணீர் ஒரு நொடி பார்வையை மறைக்க சுதாரித்து எதிரில் பார்த்தாள். எங்கே அந்தச் சிறுவன்.. வந்த சுவடு அறியாமல் மறைந்து விட்டான்.
"பரவை.. அங்கே என்ன செய்கிறாய்.." சுந்தரரின் குரல் கேட்டது தொலைவில்.
"இதோ வந்து விட்டேன் சுவாமி"
தன் வீட்டு வழியே செல்கிற பெண்ணிடம் கீரைக்கட்டைக் கொடுத்து அனுப்பினாள். வீட்டை விட்டுக் கிளம்பும் போது இருந்த வருத்தம் பரவையிடம் மறைந்து போக தானும் சுந்தரரின் உற்சாகத்தில் பங்கேற்றவளாய் கோவிலுக்கு உள்ளே போனாள்.
அன்று மட்டும் இல்லை. தொடர்ந்து யாரோ ஒருவர் பரவையிடம் தினமும் தூதுவளையைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
"கொஞ்சம் இருங்கள்.. எதுவும் வாங்காமல் போகிறீர்களே.."
"இது நான் கொண்டு வரவில்லையம்மா. உங்களிடம் கொடுக்கச் சொல்லி யாரோ தருகிறார்கள்.. அவரைக் கேட்டால் இன்னொருவரைச் சொல்கிறார். "
இது என்ன விளையாட்டு.. அலகிலா விளையாட்டுடையானின் திருவிளையாடலா.
அதிர்ஷ்டவசமாய் ஒரு நாள் கீரை கொடுத்தவர் சிக்கிக் கொண்டார்.
"திருச்சிற்றம்பலம்.. என்ன இது.. விளையாட்டு.."
அவள் எதிரே சோமாசி மாறன். சிவனடியார்களைப் பார்த்தால் நெக்குருகிப் போய் பணிவிடை செய்யும் அருட் தொண்டர். தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடுவதையே வழக்கமாய்க் கொண்டவர். சுந்தரர் மீது மாறாப் பாசம் கொண்டு அவர் தம் நட்பைப் பெற விரும்பி இருக்கிறார். அதற்கான நேரம் வருமென்று காத்திருந்தாராம். இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தூதுவளைக் கீரை கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
"என்ன யோசனை.. பரவை"
சுந்தரருக்கே அவள் முகக் குழப்பம் புரிந்து விட்டது.
"இப்போதெல்லாம் தினசரி கீரை வருகிறது.. கவனித்தீர்களா "
"அடடா.. என் மீது பிரியம் காட்டுகிற அந்த மகான் யார் "
வாசல் நடையில் இருந்து நிழலாய் ஒரு உருவம் உள்ளே ஓடி வந்தது. 'திருச்சிற்றம்பலம்..'
'அடியேன்.. அடியேன்'
"யாரது.. எழுந்திருங்கள்.."
சுந்தரர் கைலாகு கொடுத்து எழுப்பிப் பார்த்தார்.
"அடியேன் மாறன்.. "
"சோமாசிமாறனா.. தவறாமல் சோம யாகம் செய்து எம்பிரானுக்குப் பிரியமான சோமாசிமாறனா"
தம்பிரான் தோழர் சுந்தரர் கண்களில் ஆச்சர்யம்.
"தங்கள் பிரியத்துக்கு ஏங்கித் தவிக்கும் அடியவன் மாறன்.. காணாமலே நெஞ்சில் நேசம் வளர்த்து, இன்று கண்டதால் புத்துயிர் பெற்றேன்.. "
"என்ன பாக்கியம் எனக்கு.. தங்கள் நட்பு கிட்டியது.." சுந்தரர் 'அடியார்க்கும் அடியேன்' என்னும் தொனியில் முகமெல்லாம் மலர்ச்சியாய்க் கூறியதைக் கேட்ட மாறன் மெய் சிலிர்த்துப் போனார்.
"சிவ..சிவ"
"நண்பரே.. என்னால் ஆகக் கூடியது ஏதேனும் உண்டா.. சொல்லும்.. அவனருளால் கூட்டித் தருகிறேன்.."
சட்டென்று வாய் மொட்டு மலர்ந்து விட்டது!
"அடியேன் செய்யும் யாகத்திற்கு ஈசனே வந்து அவிர்ப்பாகம் பெற்றுப் போக வேண்டும்.. தாங்கள்தான் அருள் கூட்ட வேண்டும்"
ஆஹா. மாறனிடம் வசமாய் சிக்கிக் கொண்டேனே.. சுந்தரர் மனம் விட்டு சிரித்தார்.
"அப்படியே ஆகட்டும்.. உங்கள் யாகத்திற்கு அந்த கைலாய நாதனே வருவார்.. செல்லும். ஏற்பாடுகளைச் செய்யும்"
ஊரெல்லாம் செய்தி பரவி விட்டது. 'சோமாசிமாறனார் நடத்தும் யாகத்திற்கு ஈசன் வருகிறாராம். சுந்தரர் வாக்கு கொடுத்திருக்கிறாராம்.'
திருவம்பர் திருமாகாளம் விழாக் கோலம் பூண்டு விட்டது. எல்லா ஊரிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என பெருங்கூட்டம். யாகம் விமரிசையாக நடந்து பூர்ண ஆகுதி நேரம்.
யாகசாலை வாசலில் திடீரென ஒரு பரபரப்பு.
"ஓடுங்கள்.. இடம் அசுத்தமாகி விட்டது.. ஓடுங்கள்"
கூக்குரல் எழுந்தது. வேதியர்கள் வெளியே ஓடினார்கள்.
"என்ன குழப்பம்.."
சோமாசி மாறனார், மனைவி சுசீலா அம்மையாரைப் பார்க்க அவர் சொன்னார்.
"வாசலில் இறந்த கன்றைச் சுமந்து நாய்களுடன் ஒருவர் வந்திருக்கிறார்.. அவருடன் அவர் மனைவி, இரு பிள்ளைகளும்.. மனைவி தலையில் மதுக் குடம் வேறு.. வேதியர்கள் அஞ்சுகிறார்கள்.. சுத்தம் பறிபோனதாய்"
சோமாசிமாறனார் எழுந்து வெளியே வந்தார். எதிரே சுசீலா சொன்னது போலவே காட்சி.. இறைவா இது என்ன சோதனை.. சுந்தரர் வாக்கு பொய்யானதா.. யாகம் அரைகுறையாய் முடிந்ததா.. என் மனக் குறை தீராதா..
கண்ணீர் பெருகியது மளமளவென்று. தடுமாறி கீழே சரியப் போனார். தாங்கிப் பிடித்தான் வாசலில் வந்த இரு பிள்ளைகளில் சற்றே பருத்த பிள்ளை.
"மாறா.. கவலை வேண்டாம்.. நன்றாகப் பார்.."
அவன் தொட்டதும் நம்பிக்கை துளிர்த்தது நெஞ்சில். கை பட்ட இடம் தும்பிக்கை தெரிந்தது அவர் கண்ணில்.
"விநாயகா.. வேழ முகத்தோனே"
"எதிரே பார்.. அம்மையப்பன் தான் உனக்கருள வந்திருக்கிறார்.."
சுசீலாவுடன் தாள் பணிந்து தொழுதார் சோமாசி மாறனார். தம் கையாலேயே ஈசனுக்கு அவிர்ப்பாகமும் தந்தார்.
போட்டிருந்த வேடம் கலைத்து எம்பிரானும் பார்வதி சமேதரராய்க் காட்சி தந்தார். உடன் பிள்ளையாரும், முருகப் பெருமானும்.
தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவருமாய் ஆனார்.

துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்

(சோமாசி மாற நாயானார் - வைகாசி-ஆயில்யம்)


(கல்கி - வெளியிடும் ஆன்மிக மாதமிரு முறை இதழ் - தீபம் - 20.10.2011 ல் பிரசுரம்)

23 comments:

நிலாமகள் said...

அவன் தொட்டதும் நம்பிக்கை துளிர்த்தது நெஞ்சில். கை பட்ட இடம் தும்பிக்கை தெரிந்தது அவர் கண்ணில்.//

//என்னால் ஆகக் கூடியது ஏதேனும் உண்டா.. சொல்லும்.. அவனருளால் கூட்டித் தருகிறேன்.."
சட்டென்று வாய் மொட்டு மலர்ந்து விட்டது!//

//அலகிலா விளையாட்டுடையானின் திருவிளையாடலா.//

//சித்தம் போக்கு சிவம் போக்கானது இன்று//

//பொய்த்தன்மைத்தாய மாயப்
போர்வையை மெய்யென்றெண்ணும்
வித்தகத்தாய வாழ்வு
வேண்டி நான் விரும்பகில்லேன்//

//எந்த உணர்வானாலும் உடனே சுந்தரர் மனம் கசிந்து ஆரூரானை அழைக்க மறந்ததில்லை//

சிலிர்த்துப் போக‌ச் செய்யும் 'தூது‍வ‌ளை' சிவ‌ சிவ‌!
அபார‌ ந‌டை!! த‌லைவ‌ண‌ங்குகிறேன்.

சேட்டைக்காரன் said...

எதுவும் சொல்லத் தெரியவில்லை! பரவசத்தில் ஆழ்த்தும் சரளநடைக்கு எனது வந்தனங்கள்!

கவி அழகன் said...

நல்ல கதை

தக்குடு said...

சம்பவத்தை நேர்ல பாத்த மாதிரி இருக்கு சார்!! சோமாசி நாயனாரும் ஆயில்யத்துல அவதரிச்சவரா?? கேட்கவே சந்தோஷமா இருக்கு! :))

வானம்பாடிகள் said...

என்ன சொல்ல. அருமை என்பதைத் தவிர

வை.கோபாலகிருஷ்ணன் said...

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறனார் கதையை வெகு அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

தூது சென்ற தூதுவளை 1 ஆழ்வாரைப் பற்றியும் 2 நாயன்மார்களில் ஒருவரைப் பற்றியும், கொண்டு வந்திருப்பது தங்களின் தனிச்சிறப்பையும், ”ஹரியும் சிவனும் ஒன்றே” என்ற உண்மையை அனைவரும் அறியச்செய்வதாகவும் அமைந்துள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

Tamilmanam 2 to 3 & Indli 1 to 2

//(கல்கி - வெளியிடும் ஆன்மிக மாதமிரு முறை இதழ் - தீபம் - 20.10.2011 ல் பிரசுரம்)//

மனமார்ந்த பாராட்டுக்கள்.
மனம் நிறைந்த சந்தோஷங்கள்.
மேலும் மேலும் பல வெற்றிகள் தங்களை வந்தடைய அன்பான வாழ்த்துக்கள். vgk

raji said...

தூது சென்ற தூதுவளை - 1 படித்து அதிலிருந்தே நான் இன்னும் வெளி வரவில்லை.அப்படி ஆழ்ந்திருந்தேன்.
தற்போது தூது சென்ற தூதுவளை- 2.
நல்ல வேளை தங்கள் ப்லாக் மீண்டு வந்து நாங்கள் இதனையும் கிடைக்கப் பெற்றோம். அற்புதப் பகிர்வு.நன்றி

raji said...

ப்லாக் மீண்டும் வந்து விட்டதல்லவா?வலைச்சரம் பக்கம் ஒரு நடை வரலாமே சார்!

நிலாமகள் said...

கண்ணாடியின் முன் நின்று நேர், பக்கவாட்டு கோணங்களில் தம் அழகைப் பார்த்துக் கொண்டார். வேட்டி மடிப்புகள் சரியாக இருக்கிறதா என்று மறுபடியும் பார்த்தார். வாசனைத் திரவியத்தை மீண்டும் கழுத்தில் தடவிக் கொண்டார்.//

எங்க‌ மாம‌னாரை ஒத்த‌வ‌ராய் இருப்பார் போலிருக்கிற‌தே அல‌ங்கார‌த்தில் இந்த‌ சுந்த‌ர‌ர்...?!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு. சோமாசி நாயனார் கதை கேட்டு உள்ளம் மகிழ்ந்தது.

உங்கள் பக்கம் காணாமல் திரும்பிக் கிடைத்தது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஹேமா said...

இரண்டு பாகங்களையும் சேர்த்துப் படித்தேன்.வித்தியாசமான ஒருவித சந்தோஷம் !

அமைதிச்சாரல் said...

சரளமான நடை மனசை அப்படியே கதையுடன் பின்னிப் போட்டு விட்டது.

kavithai (kovaikkavi) said...

ரிஷபன்! மிக அருமையாக எழுதியிருந்தீர்கள். ஒரே மூச்சில் படித்து விட்டேன் நன்று வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ஷர்மி said...

தூதுவளை என்று அழைப்பதால் தூது சென்றதா அல்லது தூது சென்றதால் தூதுவளை என்று பெயர் வந்ததா என்று கேட்கத் தோன்றுகிறது. அரிய இப்படியான நிகழ்வுகளை சரளமாக எழுதும் உன் கதைகளுக்கு நான் பெரிய ரசிகையாகி விட்டேன் தம்பி... தொடரட்டும் நின் பணி. இனி எப்போது தூதுவளை சாப்பிட்டாலும் உன் நினைவு தான் வரப்போகுது...

RVS said...

சார்! பக்தியிலக்கியத்தில் அசத்துகிறீர்கள். சோமாசிமாற நாயனார் சரித்திரம் நேரில் நிகழ்ந்தது போல இருந்தது. தங்கள் எழுத்துக்கு ஒரு வந்தனம். :-)

Harani said...

அருமை ரிஷபன்...

ஒரு தமிழ்ப் பேராசிரியராக சொல்கிறேன். ஒரு தமிழ்ப்பேராசிரியர் கூட இத்தனை சுவையாக எழுத முடியாது. படிப்பதும் ஒன்றை சுவைபட சொல்வதும் அதுவும் ஈர்ப்புடன் எளிமையாக சொல்வதும் இறைவன் கொடுத்த வரம். வரம் பெற்றுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

சுந்தர்ஜி said...

மிகத் தாமதமாய் வந்தால் இதுதான் வினை. நிலாமகள் பந்தியை ருசித்த அழகுக்குப் பின்னால் நான் என்ன புதிதாய்ச் சொல்லிவிட முடியும் ரிஷபன்?

ஆனாலும் இதுபோன்ற புராணத் தொடர்புள்ள கதைகளை எழுதும்போது அதற்கென்று சரளமான ஒரு நடையும் மொழியும் அமைந்துவிடுவதுதான் தெய்வ சங்கல்பமோ?

எழுதிய கைகளை மானசீகமாகத் தொட்டுக்கொள்கிறேன்.

ஷைலஜா said...

அருமை ரிஷபன்.கல்கியின் தீபத்தில்வந்திருக்கா? எழுத்துலகின் தீபம் எங்க ரிஷபன் ஆயிற்றே! தீபாவளித்திருநாளில் மேலும் உங்களின் எழுத்து பிரகாசிக்க வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி said...

தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவருமாய் ஆனார்.


அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... said...

உங்கள் கதைக்கு நிகர் உங்கள் கதைதான்!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

மஞ்சுபாஷிணி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
மஞ்சுபாஷிணி