October 05, 2011

தூது சென்ற தூதுவளை

வியர்த்திருந்தது அந்த மனிதருக்கு.. அங்க வஸ்திரத்தால் விசிறிக் கொண்டு எதையோ தொலைத்ததைத் தேடி வருபவரைப் போலத் தெரிந்தார்.

"ஸ்வாமி.."

முதலில் கவனிக்கவில்லை. மறுமுறை சற்றே அழுத்திக் கூப்பிட்டதும் நின்றார். அவர் எதிரில் வயதான அந்தணர்.

"என்ன"

"தேவரீர் அரண்மனைக் கைங்கர்யம் தானே.. ராஜா யமுனைத் துறைவரிடம் தானே"

"ஆமாம்.. அதற்கென்னவாம்"

"தங்களுக்கு சித்தம் என்றால் அடியேன் ஏதும் செய்யக்கூடும்.."

"உம்மால் ஆகாது.. நகரும்"

"அப்படிச் சொல்லக் கூடாது.. கிருபை பண்ணும்"

"என்ன இது.. உங்களோடு தொந்திரவாப் போச்சு.. ஏற்கெனவே எனக்கு தளிகை பாக்கி நிற்கிறது.. இந்தக் கீரை வேறு கிடைக்காமல்..ஸ்ஸ்.. ஸ்ரீமன் நாராயணா"

தடுத்தவர் சிரித்தார்.

"என்ன கீரை வேணும் ஸ்வாமி"

"தூதுவளை.. என்ன தரப் போறீரா"

"கிலேசம் விட்டு திருமாளிகைக்குப் போங்கோ.. பின்னாலேயே எடுத்துண்டு வரேன்.."

சொன்னபடியே கொண்டு வந்து விட்டார். ஹப்பா.. என்ன பச்சைப் பசேலென்று.. வாசம் வீசியது.

பரிசாரக ஸ்வாமி (சமையல்காரர்) கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.

"இனிமேல் இந்தக் கீரைக்காக தேவரீர் அலைய வேண்டாம். அடியேனே தினமும் கொண்டு வரேன்.."

அதே போல கொண்டு வந்தார். பணம் கொடுக்க வந்தபோது வாங்க மறுத்துவிட்டார்.

"வேறெதுவும் வேண்டாம். "

ஆறு மாதங்கள். தொடர்ந்து சலிக்காமல் தூதுவளைக் கீரையுடன் அந்த வயோதிக ஸ்வாமி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.

"ஸ்வாமி.. ராஜா எதுவும் தெரியப்படுத்தினாரா"

பரிசாரகர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"ரசித்து சாப்பிட்டார்.."

"ஓ.."

மறுநாள் தூதுவளை வரவில்லை. எங்காவது வெளியே சென்றிருக்கலாம். நாளை வந்து விடும். ஊஹூம். நாட்கள் ஓடின. கீரை மட்டும் வரவே இல்லை. அவர் தோட்டம் எங்கே இருக்கிறதோ.. அதைக் கூட விசாரித்து வைத்துக் கொள்ளவில்லை. அதைவிடவும் சங்கடமானது ராஜாவே கேட்டது.

"இன்னிக்கும் கீரை பண்ணலியா"

குரலில் தெரிந்த சலிப்பு. அதுவும் அவருக்கு மிகவும் இஷ்டமான தூதுவளை இல்லாமல் சாப்பாடா.

"க்ஷமிக்கணும். கிடைக்கல.."

"அதெப்படி.. நாள் தவறாம பண்ணின்டு இருந்தேளே"

வேறு வழியில்லை. உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

"ஒரு பெரியவர்.. ரொம்ப வயசானவர்.. அவரா ப்ரீதியோட கொண்டு வந்து இத்தனை நாளும் தந்தார்.. இப்ப என்னமோ தெரியல.. காணோம்."

"அப்படியா"

ராஜா யமுனைத்துறைவரின் கண்களில் ஆச்சர்யம்.

"ஆமாம். அவர் கூட அடிக்கடி விசாரிப்பார்.. ராஜா எதுவும் சொன்னாரான்னு"

"ஓ.. அப்படின்னா அவரை நான் பார்க்கணுமே"

அவ்வளவுதான். இனி அது அரச கட்டளை. யமுனைத் துறைவர் ஒரு தடவை சொன்னால் சொன்னதுதான். ஏகசந்தாக்ரஹி.

பரிசாரகர் அவசரம் அவசரமாய் உணவை அள்ளிப் போட்டுக் கொண்டு அப்போதே கிளம்பி விட்டார். கீரை கொண்டு வரும் பெரியவர் இல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக் கூடாது..

வீதி வீதியாய்த் தேடி கொண்டு அலையும் போதே ராஜா யமுனாச்சார்யார் என்கிற ஆளவந்தார் பற்றிய நினைப்பேதான்.

நாத முனிகளின் திருப்பேரன். ஈஸ்வரமுனிகளின் திருக்குமாரர். ஷேத்திராடனம் போனபோது யமுனை நதிக்கரையில் அவதரித்ததால் 'யமுனைத் துறைவன்' (யாமுனாச்சார்யார்) என்று திரு நாமம்.

நாதமுனிகளால் தான் நாலாயிரத் திவ்யப்ரபந்தம் புத்துயிர் பெற்றது.
பேரன் யமுனைத் துறைவன் சின்ன வயசிலேயே பயங்கர சூட்டிகை. ஆச்சார்யன் சந்தை (வேதம் பாடம் சொல்லித் தருதல், ஒரே பகுதியை நாட்கணக்கில் உருப் போடுதல்) சொல்லித் தரும்போது, முதல் நாள் சொல்லித் தந்ததை மறு நாள் திருப்பி உருப் போடச் சொன்னால் செய்யாமல் விளையாடப் போய் விடுவான் யமுனாச்சார்யன்.

அழைத்து விசாரித்தால் 'அதையே எத்தனை முறை சொல்வது' என்று அலுத்துக் கொள்வானாம். ஒரு முறை கேட்டாலே அப்படியே மனப்பாடமாகிவிடும் அவனுக்கு.

அவனது குரு மஹா பாஷ்ய பட்டர். அப்போது சோழ ராஜாவின் அரசவைக்கு ஆக்கியாழ்வான் என்கிற பண்டிதர் வாதப் போர் செய்ய வருகிறார்.

அந்த நாட்களில் இது சகஜம். பெரும் பண்டிதர்கள் தங்கள் புலமையை பறைசாற்ற இப்படி தேசம் தேசமாய்ப் போவார்கள். அரசர்களின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. 'எம்மோடு வாதம் செய்ய எவர் உண்டு இங்கே' என்று ஆக்கியாழவான் சவால் விட சோழ அரசர் தமது நாட்டில் இருக்கும் பண்டிதர்களுக்கு அதை எதிர் கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

தனது ஆசார்யன் இல்லாத நேரம். அரச சபையில் இருந்து வந்தவர்களிடம் தானே வருவதாக யமுனாச்சார்யர் சொல்லி பல்லக்கில் ஏறிக் கொள்கிறார்.

வரும் சிறுவனைப் பார்த்து சோழ ராஜா கேலியாகச் சிரிக்க, ராணிக்கோ ஆக்கியாழ்வானின் கர்வத்தின் மேல் கோபம்.

"நிச்சயம் இந்தச் சிறுவன் தான் ஜெயிப்பான்" என்றாள் ராணி

"அப்படி அவன் ஜெயித்து ஆக்கியாழவான் தோற்றால் பகுதி ராஜ்யம் தருகிறேன்" என்றார் ராஜா சவாலை ஏற்று.

அன்று சபையில் பெருங்கூட்டம். நம் யமுனாச்சர்யன் ஆக்கியாழ்வனுடன் போட்டியாமே.

ஆக்கியாழ்வான் முகத்தில் ஏளனம். 'அடே பொடியா'

"அரசே.. வாதத்தைத் துவங்கலாமா" என்றான் யமுனாச்சார்யன்.

"உன் குரு வரவில்லையா" இது ஆக்கியாழ்வானின் கர்ஜனைக் குரல்.

"உம்மோடு போட்டி போட அடியேனே போதும்."

"ஹா.. ஹா.. உன் பெயர் என்ன"

"அடியேன் யமுனைத் துறைவன்"

"பாவம் நீ,, உனக்கு சிரமம் தர விரும்பவில்லை.. வாதத்தை சீக்கிரமாய் முடித்துக் கொள்ளலாம்.. நீ உண்டு என்று சொல்வதை நான் இல்லையென்று சொல்கிறேன்.. அதேபோல நான் உண்டு என்று சொல்வதை நீ இல்லையென்று நிரூபி.. "

"அப்படியே ஆகட்டும்.. இதோ எனது வாதம்.. உம் தாயார் மலடி இல்லை.. அரசர் சார்வபௌமன் புண்ணியம் செய்தவர்.. ராணி பத்தினி.. எங்கே இல்லையென்று நிரூபியும்"

ஆக்கியாழவான் ஆடிப் போனார். சிறுவன் என்று நினைத்தது தவறாகிப் போய் விட்டது. எப்படிச் சொல்லி இல்லையென்று நிரூபிப்பது..
"உன்னால் முடியுமா"

"நீர் தோல்வியை ஒப்புக் கொள்கிறீரா"

"ம்.. எங்கே நீ சொல்.."

"தர்ம சாத்திரங்களின் படி ஒரு பிள்ளை பெற்றவள் மலடிக்கே சமம்.. அரசரோ தனிப்பட்டு புண்ணியவானாய் இருந்தாலும் குடிமக்களின் பாவம் அவரையே சேர்வதால் புண்ணியவான் இல்லை.. ராணி கன்னிகாதானத்தின் போது இந்திரன் முதலான தேவர்களுக்கு அளிக்கப்பட்டு பிறகே ராஜாவின் மனைவி ஆகிறாள்.. மேலும் அரசனே இந்திரன், அக்னி முதலான தேவர்களின் அம்சம்.. ஆக அவளும் பத்தினி என்று கொள்ள முடியாது.. இது தர்க்க ரீதியான வாதத்திற்காக அடியேன் சொல்வது”

"ஆஹா.. ஆஹா “

சபையில் அனைவரும் சிறுவனின் வாதத் திறமையை மெச்சினார்கள்.

ராணி எழுந்து வந்து சிறுவனைக் கட்டிக் கொண்டாள்.

“எம்மை ஆளவந்தீரோ”

அன்று முதல் யமுனாச்சார்யன் 'ஆளவந்தாராகவும்” ஆனார்.
சோழ ராஜா தம் வாக்கின் படியே ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்து அரசராக்கி விட்டார்.

இவ்வளவும் மனதில் ஓடிக் கொண்டிருக்க பரிச்சாரக ஸ்வாமி வீதிகளில் கீரை கொண்டு வந்த பெரியவரைத் தேடி அலைந்தார்.

“அதோ.. அதோ''

வஸ்திரம் கீழே விழுந்ததைக் கூட கவனிக்காமல் ஓடினார்.

“எங்கே ஸ்வாமி உங்களை ரொம்ப நாளாக் காணோம்.. ராஜா வேற கேட்டுட்டார்.. அவசியம் என்னோட வரணும்.. கையோட அழைச்சுண்டு வரலைன்னா ராஜா கோபிச்சுப்பார்”

பெரியவர் கண்களில் ஆனந்த பாஷ்பம். ஆஹா.. வேளை வந்தாச்சு.

“போலாம்”

ஆளவந்தார் இவரைப் பார்த்ததும் கேட்டார்.

“நீர்தானா.. கீரை கொண்டு வந்தது”

“ஆமாம்..”

“உமக்கு என்ன வேணும்.. ப்ரியத்தைச் சொல்லும்.”

“உம்மோடு கொஞ்சம் பேசணும்.. தனியே”

குறிப்பறிந்து மற்றவர்கள் விலகிப் போக ஆளவந்தார் கேட்டார்.

“என்ன சொல்லும்”

“அடியேன் தங்கள் தாத்தாவோட சிஷ்யன்.. மணக்கால் நம்பின்னு அழைப்பா.. ராமமிஸ்ரர்னு பேரு.. உங்க பாட்டனார் சொத்து ஒண்ணு அடியேன்ட்ட இருக்கு.. அதை உங்க கிட்ட சேர்க்கணும்”

“ஓ.. அதுக்கென்ன.. வாங்கிண்டா போச்சு”

“என்னோட தனியா வரணும்..”

ஆளவந்தார் அவரைப் பின் தொடர்ந்து போனார்.

இருவருமாய் ஸ்ரீரங்கம் வந்தார்கள். ஆளவந்தாரை அரங்கன் ஸந்நிதிக்கு அழைத்து வந்தார்.

பச்சை மாமலை போல் மேனி
பவழவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறிினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே


சயனித்திருந்த அரங்கனைக் காட்டினார்.

“இதோ.. உம்ம குடும்பச் சொத்து.. அடியேன் இத்தனை நாள் உங்களுக்குக் காட்டிக் கொடுக்கவே காத்திருந்தேன்.. தேவரீரோட பாட்டனார் உங்களுக்காக விட்டுப் போனது”

அரங்கனின் திருமுகத்தில் புன்முறுவல். 'எம்மைப் பார்க்க இத்தனை நாளாச்சோ உமக்கு' என்று கேலியாகக் கேட்பது போல.

ஆளவந்தார் அக்கணமே கண்ணீர் மல்கி அரங்கனின் திருமேனி அழகில் லயித்து அரச போகத்தைத் துறந்தார்.

இவரே உடையவர் என்று அழைக்கப்படும் ஸ்ரீராமனுஜரின் மானசீகக் குருவும் ஆவார்.

'மச்சு அணியும் மதில் அரங்கம் வாழ்வித்தான் வாழியே ' என்று கொண்டாடப்படும் ஆளவந்தார் காலத்தில் தான் திருவரங்கத்தில் வைணவத் தலைமைப் பீடம் அமைந்தது.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கட்டிக் காத்த ஆளவந்தாரை ராஜபோகத்திலிருந்து ஆன்மிகப் பாதையில் திருப்பிக் கொண்டு வந்தது தூதுவளைக் கீரை. பகவானிடம் இருந்து பக்தனுக்கு தூது போன தூதுவளை!ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதி
ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே
அகிஞ்சானோனான்யகதி: சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே


நான் தர்மத்தை அறிந்தவனல்லன்.
அன்றி தன்னையறிந்தவனுமல்லன்.
உன்னுடைய பாத கமலங்களை சரணடைந்த பக்தனுமல்லன்.
வேறொன்றுமறியாது உன்னைச் சரணடைவதே கதியென்றெண்ணி
உன் பாதங்களில் சரணடைகிறேன்.


-ஆளவந்தார்

(ஆளவந்தார் - ஆனி மாதம் உத்திராட நட்சத்திரம்.
1017 AD - 1137 AD) சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் அவதார ஸ்தலம்.


( கல்கி நிறுவனம் வெளியிடும் ஆன்மீக மாதம் இருமுறை இதழ் - தீபம் முதல் இதழில் பிரசுரம் - அக்டோபர் 5, 2011 )22 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Good post

கோகுல் said...

நல்ல தூது!
நன்றி!

Easwaran said...

ஆஹா! ஆஹா! அழகான விஷயங்களையும் தகவல்களையும் அருமையான கதை வடிவில் உங்களைப் போன்ற நல்லதொரு கதை சொல்லி மூலம் கேட்கும் சுவையை விட மேலானது, அரங்கனை காணும் சுவையாக மட்டுமே இருக்கும்.

(தூது சென்ற தூதுவளை என்றதும் ”சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா” பாடிய கண்ணதாஸனை நினைக்காமல் இருக்க முடியவில்லை)

வானம்பாடிகள் said...

சர்வாங்கமும் புருபுருன்னு ஒரு உணர்ச்சி. சிலிர்க்கறது படிக்கிறப்பவே.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படைப்பு.

கல்கியின் “தீபம்” முதல் இதழிலேயே தங்களின் புகைப்படத்துடன் வெளியானது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அந்தப்புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு, பத்திரமாக ஸ்டாக்கில் ஏற்றி வைத்துள்ளேன்.

பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.
2 to 3 in Indli
3 to 4 in Tamilmanam vgk

middleclassmadhavi said...

Arumaiyana varalaRRuk kathai!

மஞ்சுபாஷிணி said...

முதன் முதல் ஒரு முழுமையான ஆன்மீக பகிர்வு படிக்கிறேன் ரிஷபன்.....

மனதை முழுதும் ஆழ்ந்து ஆளவந்தாரை அறியவைத்தது....

தூதுவளை கீரையில இத்தனை மகத்துவமா? இல்லை இல்லை இத்தனை ருசியா? இல்லை இல்லை... அரங்கநாதர் அனுப்பிய தூதுவளை விடுத்த தூதா? நம் பக்தன் இன்னும் நம்மை தேடி வரவில்லை என்ற எண்ணத்தில் பகவானே இப்படி ஒரு உருவம் எடுத்து வந்தாரா?

மனம் நிறைந்துவிட்டது ரிஷபன்.. இதுபோன்ற பதிவுகளை எதிர்நோக்கி....

வெங்கட் நாகராஜ் said...

தூது சென்ற தூதுவளை... என்ன அருமையான தகவல்... படிக்கும்போது எங்கேயும் தடங்கலில்லாமல் சலிப்பில்லாமல் விறுவிறுவென படித்து முடிக்க வைப்பது உங்களின் தனித்திறமை....

நல்ல விஷயம் சொல்லித் தந்தமைக்கு மிக்க நன்றி.

ஷர்மி said...

மெய்சிலிர்க்கும் படைப்பு. என் குழந்தைகளுக்கும் படித்துக் காட்டி விளக்கம் அளித்தேன். வாய்ப்புக்கு மிகவும் நன்றி ரிஷபன்.

சேட்டைக்காரன் said...

உபதேசம் கேட்கிற சீடனின் இடத்திலிருந்து மனதுக்குள் இறக்கிக்கொண்டேன்.

வேதநூல் பிராயம் நூறு
மனிதர்தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப்போகும்
நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும்
பிணி,பசி,மூப்பு,துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகருளானே!

bandhu said...

மெய் சிலிர்த்தது என்று நான் சொல்வது சம்ப்ரதாய வார்த்தைகள் இல்லை, அத்தனையும் ஸத்யம்!

KParthasarathi said...

மெய்சிலிர்க்க வைத்தது.
சொல்லவொணா பரவசத்துடன் இந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ள சிலருக்கு அனுப்பி வைத்தேன்.
உங்களுடைய எல்லா பதிவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன்.நன்றி

raji said...

மிகுந்த ஈடுபாட்டோடு படிக்கும் வண்ணம் அமைகிறது உங்கள் எழுத்து.படிக்கும் பொழுது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி தகவல்களையும் அறிய வைக்கிறது.பகிர்விற்கு நன்றி

அம்பாளடியாள் said...

மிகச் சிறப்பானா ஆன்மீகப் பகிர்வு மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர........

கே. பி. ஜனா... said...

அற்புதமான நடை. இது போன்ற வரலாற்றுக் கதைகளை நிறைய எழுதுங்கள்.

பத்மநாபன் said...

தூது சென்ற தூதுவளையில் அரிய தகவல்கள்.யமுனாச்சார்யன் ஆளவாந்தாரகி பின் அரங்கனுக்கு உடையவர் ஆன கதை சிலிர்ப்பானது...

vasan said...

தூது வ‌ளைக்குள் இப்ப‌டி ஒரு வ‌லையா?
க‌ட்டுப்போட்டு விட்ட‌து ந‌டை.
க‌ற்க‌ண்டு சுவையாய் இந்த‌க் க‌தை.

நிலாமகள் said...

ஆஹா ஆஹா... த‌ங்க‌ள் அக்ஷ‌ய‌ பாத்திரத்திலிருந்து தேவாமிர்த‌க் க‌சிவின் ருசி அபார‌ம்!

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கட்டிக் காத்த ஆளவந்தாரை ராஜபோகத்திலிருந்து ஆன்மிகப் பாதையில் திருப்பிக் கொண்டு வந்தது தூதுவளைக் கீரை. பகவானிடம் இருந்து பக்தனுக்கு தூது போன தூதுவளை!/

அருமையான அற்புதமான அமிர்தப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

RVS said...

சார்! என் போன்றோரின் போக்கற்ற பதிவுகளின் வலைப்பூ கறைகளை உங்களைப் போன்றோர் பதிவிட்டு களைகிறீர்கள்.

தீபத்தில் பார்த்தேன்! மெய் சிலிர்த்தேன். ராஜாக் கால வசன வர்ணனை அற்புதம்.

ஆளவந்தார் என்னை ஆளவந்தார்!! :-))

kavithai (kovaikkavi) said...

பாதி தான் படித்தேன் களைப்பாக வந்தது. தெம்ப நீட்டம். மீதி பிறகு படிப்பேன் வாழ்த்துகள் ரிஷபன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ப.தியாகு said...

எண்ணிப்பார்க்கிறேன் ரிஷபன் ஜி,

இன்றைக்கு நம் ஆளவந்தார்களை
பகவான் நேரில் வந்தே அழைக்கட்டுமே,
இப்படியிருக்கும் காட்சி :

'எத்தினி சீட் வோணும் கேளு சாமி,
மல்லுக்கட்டாம தந்திறலாம், நீயும் வாங்கிக்கலாம்.
அத்த விட்டுப்டு, என்னமோ சொல்றியே..
என்னாதது, ஆங்... ஆன்னுமிகம்!
அதெல்லாம் நமக்கு சரிபட்டு வறாது.
போ, போ.. திரும்பி பாக்காம போயினேயிரு.