சம்மர் வந்து விட்டாலே 'ஹா.. ஹா' என்று பெருமூச்செறிந்து திண்ணையில் (இப்போது பெரும்பாலான வீடுகள் இடித்துக் கட்டப்பட்டதில் திண்ணை தான் முதல் இழப்பு) விசிறியுடன் திறந்த மார்புடன் அமர்வார்கள்.
பள்ளி / கல்லூரி தினங்களில் அப்போது தேர்வுகள் முடிந்து ஏ.வி. கே. (அவிழ்த்து விட்ட கழுதை) யாக நாங்கள் இருந்த நேரம்.
"சும்மாதானே இருக்க..வா.. கோடை ஜலம் கொட்டப் போகலாம்" என்று எனக்கு அழைப்பு வந்தது.
ஸ்ரீரெங்கனாதர் பள்ளி கொண்ட மூலஸ்தானம் காயத்ரி மண்டபம். உட்பக்கம் சின்ன அகழி போல் அமைப்பு. வெளிப்புறம் தொட்டி போல ஒன்று. பக்கத்திலேயே கிணறு. ஸ்ரீரங்கம் வந்தவர்களுக்குத் தெரியும். சேனை முதலியார் சன்னிதிப் பக்கம் அந்தக் கிணறு இருக்கிறது.
கிணற்றிலிருந்து நீர் எடுத்து தொட்டியில் ஊற்ற வேண்டும். அதன் அவுட்லெட்டில் களிமண் வைத்து அடைத்து வைத்திருப்பார்கள். ஊற்றும் தண்ணீர் உள்ளே போய் மூலஸ்தானம் சுற்றி அணை கட்டினாற்போல நிற்கும் இயற்கையாய் குளிர்ச்சி.
இரவு எட்டரை மணிக்கு மேல் களிமண்ணை நீக்கித் திறந்து விடுவார்கள். அதில் குளிக்க ஒரு கூட்டம் வரும்.
நீர் இறைத்து ஊற்றுவது ஒரு ஜாலக்கான வேலை.
கிணற்றில் அடி மட்டத்தில் இறங்கி ஒருவர் காலை விரித்து வாகாக நிற்க, கிணற்றின் நடுவே அதே போல ஒருத்தர். மேலே வளைவில் அமர்ந்து மூன்றாவது ஆள்.
மண் பானை தான் நீர் எடுக்க. கிணற்றின் விட்டம் இரண்டு ஆள் நிற்கும் அளவே. பானை கீழே போய் நீருடன் மேலே வரும் வேகம் என்னால் சொல்ல முடியவில்லை.
ஒரு தரம் கூட உடைந்ததில்லை. சர் சர்ரென்று காலிப் பானை கீழே போய் நீருடன் மேலே வரும் வித்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். சொட்டச் சொட்ட நனைந்து விடுவோம்.
இது நடப்பது சேவை (தரிசனம்) நிறுத்தப்பட்ட மதிய இடைவெளியில். அதனால் யாரும் இருக்க மாட்டார்கள்.
உள்ளே கர்ப்பகிரகத்தில் அடுத்த பூஜைக்கான ஏற்பாடுகள் அல்லது சற்றே ஓய்வு. அக்னி நட்சத்திர நாட்களில் இது நடக்கும்.
வேலை முடிந்ததும் பானைகளை ஒரு ஜம்ப் பண்ணி சேனை முதலியார் சன்னிதி மேல் பகுதியில் உடையாமல் பத்திரமாய் வைத்துவிடுவோம், மறு நாள் உபயோகத்திற்கு.
எதற்காகவோ ஒரு முறை என்னை உள்ளே மூலஸ்தானம் போய் எதுவோ எடுத்து வரச் சொன்னார்கள். போனேன். ஆளே இல்லை.
"மாமா.. " என் குரல் எனக்கே கேட்கவில்லை.
துவாரபாலகர் பக்கம் திரை. படியேறி திரை விலக்கி உள்ளே பார்த்தால் யா..ரு..மே இல்லை.
தப்பு.. தப்பு.. பள்ளி கொண்ட பெருமாள் மட்டும் தன்னந்தனியே. ஏகாந்தமாய்.
'போ.. போ..' என்று சொல்ல ஆளில்லை. நானும் பெருமாளும் மட்டும்.
விளக்கின் ஜ்வாலை மெல்ல அசைந்து கொண்டிருந்தது.
ஒரே போஸில் படுத்திருப்பவர் கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டு மறுபடி பழைய சயனக் கோலத்திற்கு வரும் அவகாசம்.
அந்த நாட்களில் நம்பிள்ளை என்னும் ஆசார்யன் காலட்சேபம் செய்கையில் திருவிளக்கு தூண்டுவான் மட்டும் ரெங்கனாதர் அருகே இருக்க மற்றவர்கள் சொற்பொழிவின் ஆனந்தத்தில்.
நம்பிள்ளை கோஷ்டியோ, நம்பெருமாள் கோஷ்டியோ என்பார்களாம். அந்த அளவு நம்பிள்ளை மேல் மக்களுக்கு ஈடுபாடு.
படுத்திருந்த பெருமாள் எழுந்து ஆர்வமாய் நம்பிள்ளை பேசுவதை எட்டிப் பார்த்தாராம்.
விளக்கு தூண்டுபவர் (அதாவது விளக்கு அணையாமல் நெய் ஊற்றி பார்த்துக் கொள்பவர்) அதே கோலால் ( குச்சியால்) தட்டி "போய்ப் படும்." என்று சொன்னாராம்!
அதாவது பெருமாள் அவர் பொசிஷனை மாற்ற வேண்டாம்..
இப்படி ஒரு சுவாரசிய கதை குருபரம்பரையில் பதிவாகி இருக்கிறது.
விருட்டென்று வெளியே வந்து விட்டேன்.
இப்போது உள்ளே நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வரும் போதெல்லாம் 'சே.. அன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே அவரைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம்' என்று மானசீகமாய் தலையில் குட்டிக் கொள்கிறேன்.
19 comments:
சுவாரஸ்யம்.
இப்போது கூட நீங்கள் நினைத்தால் பார்க்கலாமே சார்!
வர்ணனை அற்புதம்...
சிறு சிறு சம்பவங்களை நினைவு கூறி என்னை மைய் சிலிர்க்க வைக்கிறீர்கள்.
மற்றவர்களுக்கு தொழில் நிமித்தமாக பகவான் அருகில் நிற்கும் ஒரு புண்ணியம் கிடைத்தது.உங்களுக்கோ ஏகாந்தமாக தரிசிக்க ஒரு காரணமும் இல்லாது கிட்டியது பெரிய பாக்கியம்.நீங்கள் கொடுத்துவைத்தவர்
சொல்லத் தெரியாத, சொல்லில் அடங்காத உணர்வுகள்...
சபாஷ்!
AVK :)
இன்னும் கொஞ்சம் நின்று தனியாக பெருமாளோடு பேசியிருக்கலாம்! இப்போது நினைத்தாலும் முடியாதே!
நல்ல பகிர்வு....
ஆஹா..கிடைத்தற்கரிய அனுபவம்
மிக அழகாகவும் சொல்லிப் போகிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
த.ம 3
இந்தப்பேறு ஜன்மத்துக்கும் பெண்ணாய்ப்பி்றந்தவர்களுக்குக்கிடைக்காது....ரங்கன்கிட்ட இதுக்காக சின்ன ஊடல் உண்டு எனக்கு நீங்க பாக்கியசாலி ரிஷபன்
கிடைப்பதற்கு அரிய அழகான அனுபவம் தான். சொல்லியவிதமும் அந்த பள்ளிக்கொண்ட பெருமாள் போலவே அழகோ அழகு தான்.
தமிழ்மணம்:4;யூடான்ஸ்:4;இண்ட்லி:6
vgk
ஆகா... ஏகாந்தமாய் ஸ்ரீரங்கநாதனை தரிசித்த அனுபவம் அருமை. எனக்குக் கூட முன்னாட்களில் மீனாட்சியை தரிசித்ததுபோல இப்போது மதுரை போனால் தரிசிக்க முடிவதில்லையே என்ற வருத்தம் உண்டு. உங்கள் அனுபவத்தை மிக ரசித்தேன். நன்றி...
சொன்ன நிகழ்ச்சிகள்(நீர் இறைத்தல்)பலவும் அறியாதவை. அரங்கனை தரிசிக்க ஒவ்வொரு முறையும் நாங்கள் படும் பாடு, நீர் கொடுத்துவைத்தவர். பொறாமைப் படுகிறேன். எப்பொழுதும் எண்ணி எண்ணியாவது மகிழலாமே. சொன்ன விதமும் அருமை. வாழ்த்துக்கள்.
இப்போது உள்ளே நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வரும் போதெல்லாம் 'சே.. அன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே அவரைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம்' என்று மானசீகமாய் தலையில் குட்டிக் கொள்கிறேன். அனுபவம்,உணர்வுகள், அற்புதம்
நிழலின் அருமை வெய்யிலில்...
அருமையா சொன்னிர்கள்
இன்று
நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?
கிடைத்தற்கரிய அனுபவம்.. பகிர்வுக்கு நன்றி.
அருமை.. இப்படி வீட்டிலெயே சில சமயம் சாமி படங்களை பார்க்கத் தோன்றுவது உண்டு..ரிஷபன்..:)
நல்ல தர்சன அனுபவம்.
ஸ்ரீரெங்க... ரங்க.. நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.....பாடல்தான் நினைவில் வருகின்றது.
கொடுப்பினை வேண்டும்! நீ கொடுத்துவைத்தவன்! - ஜெ.
திருச்செந்தூர் சந்நிதியில் மூலவரைச் சுற்றிய அகழியில் நீர் நிரப்பியிருக்க ஒரு முறை தரிசித்திருக்கிறேன். வாராது வந்த அந்த அரிய சந்தர்பத்தை நழுவ விட்ட சோகம், ஒரு முதல் காதல் தோல்வியாய், வாழும் நாளெல்லாம் குறுகுறுக்கும்.
அந்த 'அவஸ்தை'யை அநுபவிக்க வேண்டியது தான்.
"அவஸ்தை" என்பது இன்பத்தின் உச்சமா? துன்பத்தின் மிச்சமா?
Post a Comment