மண் சாலைகளில்
நடந்திருக்கிறீர்களா..
மழை பெய்து ஓய்ந்த பின்
நடந்தால்
ஈரப் பதம் அப்பி
கால் சுவடுகளை
விட்டு செல்லலாம் ..
மண்ணின் ஸ்பரிசம்
எத்தனை சுகமென்று
உள்மனம் சொல்லும்.
செருப்புகளைத் தவிர்த்த நடை
நகரங்களில் சாத்தியமில்லை..
இரு புறமும் மரங்கள் வாய்த்தால்
இன்னும் சுகம்..
கிளைக் கரங்கள் மானசீகமாய்
தழுவும் பாவனையில்
கால்கள் பின்னிக் கொள்ளும்..
தலைக்கு மேல் குடை பிடிக்கும்
மரங்கள் ஊடே
தாய் மடியில் தவழ்கிற
குழந்தையாய்
நகர்ந்து செல்கிற நேரம் ..
சொல்லப் போவதில்லை..
இன்னொரு மழையும்
இன்னொரு மரங்களும்
இன்னொரு மண் பாதையும்
தேர்ந்தெடுத்து நடந்து பாருங்கள்..
இந்தக் கவிதை உங்களால்
பூர்த்தியாகும்.
31 comments:
//தலைக்கு மேல் குடை பிடிக்கும்
மரங்கள் ஊடே
தாய் மடியில் தவழ்கிற
குழந்தையாய்
நகர்ந்து செல்கிற நேரம் ..//
சுகமோ சுகம் தான்....
ஓ! ரிஷபன் மண்ணின் ஏக்கத்தை என்னுள் அள்ளி அப்பியது தங்கள் கவிதை. மிக ஏக்கமாக உள்ளது...அந்த மண்ணில் நடக்க. மிக நல் வாழ்த்துகள். உங்கள் கவிதைக்கு இந்த வெற்றியே போதும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
க்ளாஸ்!!
கால்களில் ஜில்லிடுகிறது கவிதை! :-)
//இந்தக் கவிதை உங்களால்
பூர்த்தியாகும்.// ஆஹா, அருமை!
வெற்றுக்கால்களோடு அடர்ந்த மரங்கள் குடைந்து நடக்கவைக்கிறது கவிதை.மிகக் குளிர்ச்சி !
வாழ்த்துகள்
அருமை!வாழ்த்துகள்...
சொல்ல வந்ததை அனுபவித்துப் பார்த்தால்தான் கவிதை பூர்த்தியாகும். பல முறை நான் எண்ணி எண்ணி மருகுவது இது. மண்ணின் ஸ்பரிசம் ஒரு வகை மகிழ்ச்சி என்றால் எண்ணியது உணரப் பட்டால் அதன் சுவையும் தனி. சுகமும் தனி.
fantastic!!!!
தேர்ந்தெடுத்த ஒவ்வொரு வரிகளும் மண் ஸ்பரிச சுகத்தை அனுபவிக்கத் தூண்டுகிறது
hats off!!
தவழ்ந்து வாழ்ந்து உவந்திருக்கிறேன் அத்தருணங்களை.
இனிக் கிடைக்குமோ அப்பேறு,
என எண்ணி ஏங்க வைத்துவிட்டது உங்கள் ஈர வரிகள்.
//
தலைக்கு மேல் குடை பிடிக்கும்
மரங்கள் ஊடே
தாய் மடியில் தவழ்கிற
குழந்தையாய்
நகர்ந்து செல்கிற நேரம் ..//
மழை நாட்களில் செருப்பில்லாக் கால்களுடன் மரநிழலில் மண்ணை மிதித்தவாறு நடந்த அனுபவத்தை உணர்ந்தேன் இந்த உங்கள் கவிதை வரிகளில்.
ஜில்லென்று உள்ளது கால்களும், மனமும். பாராட்டுக்கள்.
மண் சாலைகளில்
நடந்திருக்கிறீர்களா..
இப்படித்தொடங்கியும் ஒரு கவிதை எழுதும்படி
நேர்ந்துவிட்டதல்லவா ரிஷபன் ஜி!
நூறடி தூரம்தான் அம்மா வீடு, அதற்கும் பைக் கேட்கிறது மனது.
ஆனாலும் பழனி, மருதமலை பாத யாத்திரைகளின்போது
பாதணி இல்லாமல் நடந்து செல்கையில் அனுபவித்து நடப்பதும் உண்டு நான்.
கவிதை ஜில்லுனு இருக்கு, சார்!
//தலைக்கு மேல் குடை பிடிக்கும்
மரங்கள் ஊடே
தாய் மடியில் தவழ்கிற
குழந்தையாய்
நகர்ந்து செல்கிற நேரம்//
ஹைய்யோ.. அதுவும் வேப்ப மரமா இருந்தா கேக்கவே வேணாம். இப்பவும் மழைச்சாரலோடு அடிக்கும் அந்தக்காத்து, பொக்கிஷமா மனசுக்குள்ளயே இருக்கு குளிர்ச்சியா..
ஆம்! அந்த ஈர அனுபவத்தை உணர்ந்தவர்களால் கவிதை பூர்த்தியாகும்தான். உண்மையில் மனதைத் தொட்டு விட்டீர்கள்!
அருமை அருமை
மழையின் ஈரம் கவிதை நனைத்தது
கவிதையின் ஈரம் மனம் நனைத்தது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
silirppu ...
சூப்பர் நண்பா..
நடக்க நடக்க கூடவே வரும்
சுகமான தென்றல்
பஞ்சு மெத்தையின் மேல்
நடப்பது போன்ற ஒரு
சுகம் பாதத்துக்குத் தரும்
மண் பாதை ஆஹா
எண்ணமே காட்டுதே அந்த
சொர்க்கம் எப்படி இருக்குமென்று!
கட்டாயமா நடந்திருக்கிறோம், சின்ன வயதில்,
இப்போது, வீட்டில் கீட பாதங்கள் தரையில் படுவதில்லை!
தைரியம் இல்லை, ஆனால் உங்கள் வரிகளை படிக்கும் போதி ஆசையாக இருக்கிறது.
இந்த அனுபவம் எத்தனை முறை எனக்கு வாய்த்திருக்கிறது. ஒருநொடியில் அத்தனையையும் உங்கள் கவிதையால் நினைவுபடுத்திவிட்டீர்கள்.அருமை அருமை.
கவிதையைப் பூர்த்தி செய்யும் உத்தி கச்சிதம். பாராட்டுகள் ரிஷபன் சார்.
ஜில்லென்று ஒரு கவிதை....
அருமை.
வாழ்த்துகள்.
"தலைக்கு மேல் குடை பிடிக்கும்
மரங்கள் ஊடே
தாய் மடியில் தவழ்கிற
குழந்தையாய் "
அந்த மண்ணும் மழைநீரும் எம்முடனே ஒட்டிவருகின்றன.
Arumai. Particularly the end part.
I am in Tanjore today on 1 day trip
இயற்கையோடு இனவைதுதான் உண்மையான கவிதை.
தஞ்சையின் புது ஆற்றங்கரையோரம் , ரயிலடியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் வழியிலும் நடந்த அனுபவம் கிளர்ந்து எழுந்தது உங்களுடைய கவிதையால்
தஞ்சையின் புது ஆற்றங்கரையோரம் , ரயிலடியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் வழியிலும் நடந்த அனுபவம் கிளர்ந்து எழுந்தது உங்களுடைய கவிதையால்
உங்களின் கவிதை நடை
அழகு.
இதைப் படிக்கும் போது நா பார்த்தசாரதி அரவிந்தனின் பாதங்கள் செம்மண் இட்ட தாமரை போல் இருந்ததை நினைவூட்டியது ...
Post a Comment