May 05, 2012

காதல் காதல் காதல் - 2

பெண்கள் எப்போதும் ஏதோ ஒரு வகையில் சர்ச்சைக்கு உரியவர்கள் ஆகிவிடுகிறார்கள், ஆண்களிடம். அடுத்த மேஜை நண்பரின் முகம் சிவந்திருந்தது. அவரைச் சுற்றி சிலர்.
'
அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்.. புரபோசல் என்ன ஆச்சுன்னு கேட்கப் போனேன். மரியாதைக்கு விசாரிச்சேன். நேத்து உங்களைத் தேடினேன்.. ஹாஸ்பிடல் போனதாச் சொன்னாங்க. பையன் எப்படி இருக்கான்னு கேட்டேன். அது தப்பா?'
'
என்ன ஆச்சு'
'
கடிச்சுட்டாங்க.. உங்க ஃபைல் பத்தி கேளுங்க. தட்ஸ் எனஃப்..னு'
கிளம்பியவன் அப்படியே பிரேக் அடித்தேன்.
எனக்கும் அதே பதில்தான் கிடைக்குமா? போய் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா.. அம்மா சொன்னதை நிறைவேற்ற முடியாது போலிருக்கே.
ஆனால் போக வேண்டியிருந்தது. மதியம் மீட்டிங் என்பதால் வித்யாவைப் பார்த்து ஞாபகப்படுத்தி விட்டு வேறு சில ஃபைனான்ஸ் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு வரச் சொன்னார் பாஸ்.
தலை குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தவளை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"
ம்க்கும்"
"
யெஸ்.. பிளீஸ்"
"
டிஸ்டர்ப் பண்ணலாமா"
"
நோ ஃபார்மாலிட்டீஸ்"
வந்த வேலையை முடித்துக் கொண்டு விட்டேன். குரல் திடீரென கரகரத்தது.
"
வந்து.. உங்க குழந்தைக்கு இப்ப தேவலையா.. ஜஸ்ட்வொர்ரீட்"
நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். இதோ இப்போது அடி விழப் போகிறது. வார்த்தை அடி. என்னையும் அறியாமல் என் கண்களை மூடிக் கொண்டுவிட்டேன். கடவுளே.. கடவுளே..
"...."
என்ன சொன்னாள்.. கண்ணைத் திறந்து பார்த்தேன்.
"
தேங்க்ஸ்.. "
"
எ..துக்கு.."
"
குழந்தையைப் பத்தி கேட்டதுக்கு.. அவ பிறந்தப்பவே கொஞ்சம் வீக்.. மாசம் ஒரு தடவை டாக்டரைப் பார்த்தாகணும்.. வளர்ந்தா சரியாயிரும்னு டாக்டர் சொல்றார்.. ஆக்டிவ்வாதானே இருக்கா.. ஏன் வொர்ரி பண்றீங்கன்னு.."
பெண் குழந்தையா..
"
பேரு.."
"
சியாமளா.. ப்ச்.. மார்னிங் ஒருத்தர்.. உங்க டிபார்ட்மெண்ட்.. என்ன குழந்தைன்னுகூடத் தெரியாம.. பையன் எப்படி இருக்கான்னு ஒப்புக்கு விசாரிச்சப்ப.. கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டேன். பர்சனலா ஒரு கேள்வி கேட்கறப்ப மனசு பூர்வமா அது இருக்கணும்னு நான் நினைக்கறேன்.. அப்படி இல்லாம இருந்தா எனக்கு அது பிடிக்கறதில்லே.."
தேங்க் காட்! அம்மா நீ வாழ்க!
"
வீட்டுல பார்த்துக்க யாராச்சும் இருக்காங்களா"
"
ம். சர்வன்ட் மெய்ட்.. ஆனா அவங்க மோர் தேன் தட்.. என் சிஸ்டர் மாதிரிதான்.."
"
வ..ந்து.. சி..யாமளியோட அ..ப்பா.."
எனக்குக் கொஞ்சம் கொழுப்புத்தான். இந்த அளவு வித்யா என்னை அனுமதித்ததே பெருசு. அதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா.. இந்த யோசனையை மீறி என் கேள்விக் கணை பாய்ந்துவிட்டது.
கூடவே பதறினேன்.
"
ஸாரி.. வெரி வெரி ஸாரி..ரொம்ப பர்சனலா ஏதோ கேட்டுட்டேன்.. எக்ஸ்ட்ரீம்லி ஸாரி"
வித்யா நிதானிப்பது புரிந்தது. அவள் முக இறுக்கம் கலைந்து இயல்பானது.
மேஜை வெயிட்டை உருட்டினாள்.
"
மீட்டிங்ல பார்ப்போம்"
எழுந்தேன். திரும்பிக் கூட பார்க்காமல் பாதி ஓட்டமும் பாதி நடையுமாய் வந்து விட்டேன். என் அதிர்ஷ்டத்தை ரொம்பவும் சோதித்து விட்டேன் இன்று. நல்ல வேளை.. எதுவும் விபரீதமாய் நிகழவில்லை. இனி இப்படி ஒரு அசட்டுத்தனம் செய்து விடக் கூடாது.
மதியம் மீட்டிங்கில் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ், மெயின்டெனன்ஸ் அன்ட் சர்வீசஸ், ஃபைனான்ஸ், பர்ச்சேஸ் எல்லோரும் வந்து விட்டோம். டெக்னிகல் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. டெண்டர் விடுவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. சிவில் வொர்க், ஒயரிங், மாடுலர் ஆபீஸ் டிசைனிங் இப்படி ஒரேயடியாக ஹெவி மேட்டராக ஓட என் கவனமும் அதிலேயே இருந்ததால் வித்யாவை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அதுவும் நன்மைக்குத்தான் என்று நினைத்தேன்.
மீட்டிங் முடிந்து ஒவ்வொருவராகப் போய் விட்டார்கள். நானும் வித்யாவும் மட்டும். என் ஃபைல்களை அள்ளிக் கொண்டு ஏசி அறையின் கதவைத் திறந்து வித்யா வெளியே செல்ல வழிவிட்டு நின்றேன்.
"
அப்புறம் முடிஞ்சா என் ஸீட்டுக்கு வாங்க.. நாட் அர்ஜெண்ட்" என்றாள்.
அவள் முகத்தில் சிநேகப் புன்னகை!
எப்படி?.. இந்தக் கேள்வி நம் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் துரத்திக் கொண்டிருக்கிறது. சாதித்தாலும் சரி.. தோற்றாலும் சரி..சந்தோஷித்தாலும் சரி.. துக்கித்தாலும் சரி.. எப்படி ஆச்சு..?
வித்யாவின் கணவன் ஜஸ்ட் லைக் தட் அவளை விட்டு பிரிந்து போவதாய்ச் சொல்லிவிட்டு போனதும், அவள் கைக் குழந்தையுடன் இங்கு மாற்றலாகி வந்ததும் சாதாரணமாய் சொல்லிக் கொண்டு போனாள்.
எதிரில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்குத்தான் தாங்க முடியவில்லை.
நமக்குப் பிரியமானவர்களின் வருத்தம் நம்மையும் சங்கடப்படுத்திவிடும்போது நம்மையும் அறியாமல் கண் கலங்கும். இந்த நிமிஷத்தில் எனக்கும். அதை வித்யா கவனித்திருக்க வேண்டும்.
"
எனக்கு அனுதாபம் பிடிப்பதில்லை.. அது என்னை பலவீனப்படுத்தி விடும். சூழ்நிலை மீறி ஜொலிப்பதில்தான் என் கவனம் இருக்கும் எப்போதும்."
கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டேன் நாசூக்காக.
"
நான் சியாமளியைப் பார்க்கலாமா"
வித்யா இந்தக் கேள்விக்கு மறுக்கப் போகிறாள் என்றுதான் நினைத்தேன்.
"
ஓயெஸ்.. இந்த ஸண்டே?"
அட்ரஸ் கார்டை நீட்டினாள். "வருவதற்கு முன்னால் கிவ் மீ எ ரிங் பிளீஸ்"
எங்கள் தளத்தில் இருந்த அலுவலர்கள் எல்லோரையும் தளத்தின் மூலையில் இருந்த பெரிய கான்பரன்ஸ் ஹாலுக்கு மாற்றினார்கள். சிவில் வேலை எங்கள் அலுவலக சிவில் துறையே ஏற்றுக் கொண்டது. இடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கான்பரன்ஸ் ரூம்தான் பிரச்னையானது. அத்தனை பேரையும் ஒரே இடத்தில் அடைத்ததில் இட நெருக்கடி. எல்லோருடைய மேஜையிலும் கணிணி. நடக்க மிகக் குறுகிய இடம். ஹால் இடிக்க ஆரம்பித்ததில் புழுதி ஏசி அறையில் படிய ஆரம்பித்து தொடர் இருமலை வரவழைத்தது. இதில் நடுவே ஒரு முறை மானிட்டர் புகைந்து எந்த ஸ்விட்சை ஆஃப் செய்வது என்று அல்லாடியதில் குழப்பம்.
'
யாரோட ஐடியாங்க இது.. இத்தனை பேரை இங்கே உட்கார வச்சது'
ஸேஃப்டி டிபார்ட்மெண்ட் ஆட்கள் வந்து சத்தம் போட்டார்கள். எலக்டிரிகல் டிபார்ட்மெண்ட்காரர்களோ அவர்களுக்குத் தகவலே தரவில்லை என்று பல்டி அடித்தார்கள்.
எந்த வேலையிலும் பிரச்னைகள் வரக்கூடும். அதைத் தீர்க்கும் வழிமுறைகளை ஆலோசிப்பதை விட்டு யார் இன்சார்ஜ் என்று மண்டையை உருட்டுவதுதான் சாதாரணமாய் நிகழ்வது. எனக்குக் கிடைத்து வரும் முக்கியத்துவம் பொறுக்காத சிலர் இந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
'
மாடர்னைசேஷன் என்ன பண்றாங்க.. இதையெல்லாம் யோசிச்சிருக்க வேண்டாமா'
'
எங்கே ஸ்டைலா மீட்டிங் போகத்தானே நேரம் இருக்கு.. பாதுகாப்பு விதிமுறை பத்தி யாருக்கென்ன கவலை'
ஜிஎம் அழைத்தார்.
'
என்னப்பா.. என்ன பிரச்னை'
'
ஸார்.. முன்னாடியே எல்லாருக்கும் சொன்னதுதான். இந்த வேலை முடியறவரை நாம அட்ஜஸ்ட் பண்ணியாகணும்னு. அப்ப எல்லோரும் சரி..சரின்னுட்டு இப்ப சிக்கல் பண்றாங்க.'
'
ஃபயர் ஆயிருச்சாமே'
'
ஆமா ஸார்.. நல்ல வேளையா விபரீதமா எதுவும் நடக்கலே..'
'
எப்ப முடியும்'
அந்தக் கேள்வியை அவர் கேட்கக் கூடாது. ஜீரோ தேதி முதல் முடிவு தேதி வரை அவர் ஒப்புதல் பெற்றே வேலை ஆரம்பித்திருக்கிறது.
'3
மாசம் ஸார்.. செப்டம்பர்ல புது மாடுலர் ஆபீஸ்ல எல்லோரும் இருப்போம்'
'
இன்னொரு தடவை எதுவும் பிரச்னை வராம பார்த்துக்குங்க'
புகை நெடி இன்னும் முழுமையாகப் போகவில்லை. என்னைப் பார்த்து மற்றவர்கள் கை நீட்டி புகார் பேசுகிற பிரமை என்னுள்.
மெயில் வந்திருந்தது. டெண்டர் விட்டதில் எல் 1 ஆக இருந்தவர் திடீரென தம்மால் முடியாது என்று மறுத்திருந்தார். என் பாஸிடம் ஓடினேன்.
'
போச்சுரா.. இப்ப மறுபடி இல்லே நெகோஷியேஷனுக்குக் கூப்பிடணும்.'
மீண்டும் ஜிஎம் அறை. சலித்துக் கொண்டார்.
'
இத்தனை வருஷம் குப்பை கொட்டியிருக்கீங்க.. எவன் ஒழுங்கா சப்ளை பண்ணுவான்னு தெரியாதா?'
'
ஸார்.. எல் 1..'
'
இந்த சால்ஜாப்பெல்லாம் வேண்டாம்.. இப்பவாச்சும் கரெக்டா பேசுங்க. நம்ம தேவை என்ன.. அவன் கெபாசிட்டி என்ன.. இதையெல்லாம் பாருங்க.. வேர்ல்ட் மார்க்கட் போயாச்சு.. சுண்டைக்காய் மாடுலர் ஆபீஸுக்கு திணர்றோம்னா வழிச்சுகிட்டு சிரிக்க மாட்டாங்க'
ஜிஎம்முக்கு பொறுமை பறிபோனால் பிரயோகங்களில் நாசூக்கு குறையும்.
'
யெஸ் ஸார்.. பார்த்துக்கிறோம் ஸார்'
வெளியே வந்ததும் பொறுமினேன்.
'
இதுல நம்ம தப்பு என்ன ஸார்..'
'
ஹையர் அப்ஸ்கிட்டே எதுத்து பேச முடியாது..'
நாளை சண்டே என்பது இந்தக் கோபத்தில் எனக்கு சுத்தமாய் மறந்து போனது.
விளம்பரங்களில் சிறுமிகளைப் பார்த்திருக்கிறீர்கள்.. சோனியாய்த்தான் இருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு வித துறுதுறுப்பும் கண்களில் ஒளியுமாய்க் கவர்ந்து விடுவார்கள்.
சியாமளியும் அப்படித்தான். இதில் பியூட்டி என்னவென்றால் அவளே எனக்கு ஃபோன் செய்தாள்.
"
அங்கிள்.. என் பேர் சியாமளி.."
முதலில் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. பாத்ரூமில் டவல் கட்டிக் கொண்டு நுழையும்போது செல்போன் கிணுகிணுத்தது. வேகமாய் ஓடி வந்து எடுக்கவும் இந்தக் குரல்.
"
ச்யா.." ஆஹா.. வித்யாவின் பெண். கடவுளே இன்று ஞாயிறு!
"
ஹை.. செல்லம்.. எப்படி இருக்கே.."
"
ஃபைன்.. எப்ப வரீங்கன்னு கேட்கத்தான் ஃபோன் பண்ணேன்"
"
இன்னும் ஒன் ஹவர்ல உன் முன்னால இருப்பேன்.. பை த வே.. உனக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்"
"
என் ஹாபி பெயிண்டிங் அங்கிள்"
இதுவும் எனக்குப் பிடித்தது. சும்மா ஃபஸ் பண்ணாமல் தன் விருப்பம் சொன்ன விதம். வீட்டிற்குள் நுழையும்போதே எதிரில் வந்து விட்டாள்.
"
ஹை.. அங்கிள்"
"
நான் தான்னு எப்படித் தெரியும்?"
"
அ..ங்..கி..ள்.." ஒரு விதமாய் இழுத்தாள். அப்படியே அம்மா.
கையைத் தூக்கினேன். "ஸரண்டர்"
ஒரு ஓவியம். கூடவே பெயிண்டிங் மெடிரியல்ஸ். கிப்ட் பார்சலைக் கொடுத்ததும் நன்றி சொன்னாள்.
"
வாவ்.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. லைன் ஸ்கெட்ச்.. முழுமையான பெயிண்டிங் ஒரு ரகம்னா.. லைன் டிராயிங் தனி ரகம். ரெண்டு கோட்டுல ரியல் லைஃப் கிடைச்சுரும்.."
அவள் கண்களில் ஈடுபாடு தெரிந்தது. 'கோகுல் ஸாந்தல் ரியல் சந்தனம்' என்று விளம்பரத்தில் வரும் சிறுமி போல அழகாய் விரலை ஆட்டி சொன்னாள்.
'
சின்ன வயசுல நானும் கிறுக்கி இருக்கேன்.' என்றேன்.
'
'
'
உன் ஸ்கெட்சஸ் பார்க்கலாமா'
நிச்சயம் அவை வெறும் கோடுகள் அல்ல. எந்த விதியிலும் அடங்காதவை. கண்ணில் பட்ட எதுவும் சியாமளியின் பென்சிலுக்குத் தப்பவில்லை. குறிப்பாய் ஒரு படத்தில் அப்படியே லயித்துப் போனேன்.
'
மேரேஜ் இன்விடேஷன்ல இருந்தது..' என்றாள்.
மணமகன், மணமகள் இருவரையும் கோட்டோவியமாய் வரைந்திருந்தாள்.
'
உனக்கு என்ன வயசு சியாமளி' என்றேன் சீரியசாய்.
ரசித்துச் சிரித்தாள்.
'66'
'
உன் ஓவியங்கள் அப்படித்தான் சொல்கின்றன'
'
எனக்கு வயசு ஏழு தான் அங்கிள்'
வித்யாவுக்கு ஏழு வயது மகள் இருக்கிறாள் என்பதே நம்ப முடியாததாய் இருந்தது.
'
ஒரு நிமிஷம்.. அப்படியே இரு.. பிளீஸ்'
பக்கத்தில் இருந்த வெள்ளைத் தாளில் பென்சிலால் கிடுகிடுவென கிறுக்கினேன்.
'
இந்தா..'
ஏறக்குறைய 'சியாமளி' என் கை வண்ணத்தில்.
'
நீங்க பாஸ்' என்றாள் சிரிப்புடன்.
வித்யா டீ கோப்பைகளுடன் வந்தாள்.
'
என்ன.. ரெண்டு பேரும் பயங்கர ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டீங்க'
'
ஆமா' என்றோம் கோரஸாய்.
பேசினோம். மணிக்கணக்கில். நடுவே கொறிக்க.. குடிக்க என்று ஏதேதோ வித்யா கொண்டு வந்து வைத்தாள். பேசிக் கொண்டே சியாமளி ஒரு கட்டத்தில் படுத்துக் கொண்டு விட்டாள், என் மடியில்!
தூங்கியும் போய் விட்டாள்.
இந்த முறை என் கண்கள் கலங்கியதை நான் மறைக்கவில்லை. வித்யாவிடம் சொன்னேன். அம்மா மடி பற்றி. வித்யா சியாமளியை எடுத்துக் கீழே விட முயன்றாள். தடுத்து விட்டேன்.
'
அப்படியே இருக்கட்டும்'
'
ச்சே.. எதுக்கு சிரமம்'
'
இல்ல வித்யா.. ப்ளீஸ்..'
வித்யா சட்டென்று எழுந்து போய்விட்டாள். எனக்குள் குழப்பம். ஏன் இப்படி நடக்கிறது.. நிஜமாய் இந்தப் பெண் என் மீது பிரியம் வைத்திருக்கிறதா.. அதுவும் துளிக்கூட பழகி இராத ஒரு அன்னியனிடம் எப்படி சாத்தியம்? இது நீடிக்குமா.. இதன் பின் விளைவுகள் என்ன..
சியாமளி எழுந்து விட்டாள்.
"
தேங்க்ஸ் அங்கிள்"
நோ ஸாரி பிசினஸ்! இதுவும் எனக்குப் பிடித்திருந்தது. சுவாதீனம்.
"
சியாம்.."
என்னைப் பார்த்தாள். அவள் கையைப் பற்றிக் கொண்டேன்.
"
உன் நண்பர்களில் ஒருவனாக எப்போதும் நான் இருக்க வேண்டும்.."
"
கிராண்டட்" என்றாள் கம்பீரமாக.
"
இன்னும் என்னால நம்ப முடியலே.. யூ ஆர் நாட் அ சைல்ட்"
"
சைல்ட்னு நான் சொல்லலியே"
திரும்பி வரும்போது எனக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது. எண்ண அலைகள்!



(தொடரும்)

(தேவி - 09.05.2012)


14 comments:

Rekha raghavan said...

இரண்டாவது அத்தியாயத்தை இரண்டு முறை படித்தேன்! ஏ கிளாஸ் சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல விறுவிறுப்பாகச் செல்கிறது கதை.

அலுவலகங்களில் நடக்கு இயல்பான கூத்துக்கள் நன்கு நாசூக்காக எழுதியுள்ளீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சியாமளாவே போன் செய்து பேசியது [வித்யா தான் குழந்தையைப் பேசச்சொல்லியிருக்கிறாள் என்பதை அழகாக சொல்லாமல் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள்...] சூப்பர் சார்.

மடியில் குழந்தை படுத்துத் தூங்கியது. “அவளை எடுக்க வேண்டாம். அப்படியே இருக்கட்டும்” என்று கூறியுள்ள வரிகள் போன்றவை மிகவும் டச்சிங், சார்.

முதல் இரண்டு பகுதிகளையும் ”தேவி” பத்திரிகையில் படித்து மகிழ்ந்தேன். மூன்றாவது பகுதிக்காக வெயிட்டிங்.

புதன் வியாழனில் தான் எனக்கு இங்கு “தேவி” கிடைப்பாள்.

பாராட்டுக்கள்.

வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

கோகுல் ஸாந்தல் ரியல் சந்தனம்' என்று விளம்பரத்தில் வரும் சிறுமி போல அழகாய் விரலை ஆட்டி சொன்னாள்.

அழகான ஓவியம் !

மனோ சாமிநாதன் said...

மன உணர்வுகளை அருமையாக எழுத்தில் வ‌டித்திருக்கிறீர்கள்!!

ஸ்ரீராம். said...

ஒற்றைப் பிள்ளையாய் இருந்தால்தான் அம்மாவிடம் இந்த நெருக்கம் சாத்தியமோ.... முதல் பகுதி இப்போதுதான் படித்தேன். அதைப் படித்ததும்தான் இப்படித் தோன்றியது! சியாமளியின் உடனடி நெருக்கம் ஆச்சர்யம். ஒத்த மன அலைகள்!

ஹேமா said...

இரண்டு பதிவுகளையும் இப்போதுதான் வாசித்தேன் ரிஷபன்.வாசிக்க வாசிக்க உணர்வோட இருக்கு !

RAMA RAVI (RAMVI) said...

பிரமாதமாக இருக்கு சார். உணர்ச்சி பூர்வமான கதை.

G.M Balasubramaniam said...

உணர்வுகளை ஒருங்கிணைத்து நீங்கள் கதை சொல்வது படிக்கத் திருப்தி அளிக்கிறது. பாராட்டுக்கள்.

vasan said...

அத‌ற்குள்ளாக‌வே க‌தை கொண்டையூசி வ‌ளைவுக‌ளில் ஏற‌த் தொட‌ங்கி விட்ட‌தே!
க‌தையுச்சி விரைவில் வ‌ந்துவுடுமோ? இடையூற‌ற்ற‌ ப‌ய‌ண‌த்திற்கு வாழ்த்துக்க‌ள்.

ஸாதிகா said...

அருமையான சிறுகதை வாழ்கையில் நடப்பவற்றை அருகில் இருந்து பார்ப்பதைப்போனற உணர்வுப்பூர்வமான எழுத்துநடை.வாழ்த்துக்கள்.

arasan said...

இயல்பான வரிகளில் கதை நகரும் விதம் மிகவும் அருமை ..
அப்புறம் எல்லா அலுவலகங்களிலும் இந்த மாதிரி தான் இருக்குமா ?
எல்லாமே ஒரே குடையில் ஊறிய மட்டைகளாக தான் இருப்பார்களோ ?

கதைக்கு என் வாழ்த்துக்கள் சார்

சென்னை பித்தன் said...

மிக இயல்பான நடையில் அருமையாக நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.நன்று.

மாதேவி said...

அப்படியே கதைக்குள் நாமும் சென்றுவிடுகின்றோம்.