March 29, 2013

பால்யம்

அம்மாவின் கனவுகளுக்கு
வண்ணம் பூச
நீ எப்போது
பெரியவன் ஆவாய்..

உன்னைக் கொடுத்ததும்
என்னை மறந்தவன் முன்


நானும் நிமிர வேண்டுமடா
ஒரு ராணியாய்.

என் அரண்மனைக் கதவுகள்
திறந்தே இருக்கட்டும்.
உன் குதிரையில்
நீ பவனி வரும் வரை.

சின்ன வயசில் சிரித்ததை
மீட்டுக் கொடுத்தவன் நீ.
என் புன்னகைக்கு அர்த்தம் நீ.
வலி தடவிசிரித்த நாட்கள்
தொலைந்து
வழி தெரிந்து சிரிக்கவேணும்

மெதுவாகவேனும் வளர்ந்து வா..
பால்யங்கள் அழகானவை !

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தம், சின்ன ஆசை, தன்னம்பிக்கை எல்லாம் கலந்த கலவை... அருமை...

வாழ்த்துக்கள்...

வரிகளுக்கேற்ற படம் படம் சூப்பர்ப்...

ராமலக்ஷ்மி said...

அன்னையின் கனவு நிறைவேறட்டும். அழகான கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

அம்மாவின் ஆசை மிகவும் நியாயமானது.

இருப்பினும் அவசரப்படாமல்

//மெதுவாகவேனும் வளர்ந்து வா..
பால்யங்கள் அழகானவை !//

என்று வாத்சல்யமாகச்சொல்வது அழகோ அழகு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

அழகான கவிதை. இந்த அன்னையின் கனவு வண்ணமயமாக நிறைவேறட்டும்....

கவியாழி said...

அம்மாவின் ஆசை அருமை.

பால கணேஷ் said...

தங்கள் பிள்ளைகளின் மீதான கனவை, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் அன்னையர்க்கு எண்ணிக்கையுண்டோ? அன்னையின் ஏக்கத்தைச் சொன்ன அழகிய கவிதையை மிக ரசித்தேன்! அந்த அன்னையின் எண்ணம் ஈடேற வாழ்த்தலாம் நாம்!

Unknown said...



உன்னைக் கொடுத்ததும்
என்னை மறந்தவன் முன்.....!
இவ்வரிகளில் அனைத்தும் அடங்கி விட்டது!மிகவும் நன்று!

உஷா அன்பரசு said...

வஞ்சிக்கப்பட்டவளின் நியாயமான போராட்ட கனவு.

ADHI VENKAT said...

அந்த அன்னையின் கனவு நிறைவேறட்டும்....

படமும், வரிகளும் அழகு.

நிலாமகள் said...

என் அரண்மனைக் கதவுகள்
திறந்தே இருக்கட்டும்.
உன் குதிரையில்
நீ பவனி வரும் வரை.//

வலி தடவிச் சிரித்த நாட்கள்...

கவிதை வரிகளுள் அடங்கிவிட்ட அபலையின் வாழ்வு!!

நம்பிக்கையே வாழ்க்கை!!

கவிதையிலொரு புதினம்! படைப்பின் கம்பீரம்!!

Ranjani Narayanan said...

தன் பால்யம் தொலைந்தாலும் குழந்தையின் பால்யத்தை தொலைக்க விரும்பாத அம்மா. ஒரு மிகப் பெரிய நாவலை சிறு கவிதைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள்.
அம்மாவின் சிரிப்பும், குழந்தையின் பார்வையும் நிஜமாகப் பார்ப்பதுபோல இருந்தது.

கோமதி அரசு said...

மெதுவாகவேனும் வளர்ந்து வா..
பால்யங்கள் அழகானவை !//

அம்மா தனக்காக அவன் தன் பால்யங்களை சீக்கிரம் முடிக்க சொல்லவில்லை மெதுவாய் பாலயங்களை ரசித்து விளையாடி களித்து பின் தன் குறை தீர்க்க வரச்சொல்லும் தாய் அற்புதம்.
தாயின் கனவை நனவாக்க வேண்டும் குழந்தை.

கவியாழி said...

ஒவ்வொரு அம்மாவும் தன பிள்ளையிடம் விரும்பும் கனவுதான்

கதம்ப உணர்வுகள் said...

தனக்கு கிடைக்காத சந்தோஷமெல்லாம் தன் பிள்ளைக்கு கிடைக்கவேண்டும் என்று ஏங்கும் தாய்மையின் மனசே ஒரு அற்புதம் தான்...

தான் தொலைத்த சந்தோஷம் சிரிப்பு எல்லாமே தன் மழலையில் கண்டு நிறைவடைகிறாள்..

உங்க வரியிலும் தாய்மை பூரணம் அடைகிறதுப்பா.. தாயின் மனதில் இருக்கும் சோகமெல்லாம் பிள்ளை தன் பால்யம் கடந்து வளர்ந்து துடைக்கட்டும்....

அற்புதமான வரிகள்.. தாயின் மனசை மிக அழகாக பிரதிபலிக்கிறது கவிதை வரிகள்....