November 02, 2015

அம்மு 3

அம்முவுக்கு என் நம்பர் எப்படிக் கிடைத்தது என்று தெரியவில்லை.  அவள் அழைக்கும் போது நான் முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். ஒரு எண்ணிலிருந்து அழைப்பு என்றதும் துண்டித்து விட்டேன்.
பின்பு இருக்கைக்கு வந்ததும் பூக்கள் பூக்கும் தருணம் ஒலித்தது.
“சொல்லும்மா”
“அம்முன்னு உங்க ரிலேஷனாமே.. ஃபோன் பண்ணியிருந்தா.. உங்களுக்கு கால் பண்ணாளாம். எடுக்கலியாமே.. யார் அவ”
அம்மு.. அம்முவா..
“இரும்மா.. கூப்பிடறேன்”
கால் ஹிஸ்டரியில் துழாவி அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன்.
” கண்ணா.. சௌக்கியமா”
என் வீட்டுப் பெயர் தெரிந்தவர்களில்.. மிகக் குறைந்தவர்களில்.. ஒருத்தி.
“ஸாரி.. மீட்டிங்ல..”
“பரவாயில்ல.. நீ மறுபடி கூப்பிடுவன்னு தெரியும்”
“எங்கே இருக்கே”
சிரித்தாள். “அதே கண்ணன்.. அதே படபடப்பு”
விலாசம் சொன்னாள்.
“கிளம்பிட்டேன்”
கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் தான் வீட்டுக்குப் போகும் நான்.. ஆபிஸ் முடிய நாலு மணி நேரம் இருக்கும்போதே கிளம்பியது சகலருக்கும் ஆச்சர்யம்.
“எதுவும் சிக்கலா.. உதவி வேணுமா” என்று விசாரிப்பும்.
நாசூக்காய் மறுத்து விட்டு கிளம்பினேன். சொந்த சாரத்தியம் என்றதால் வேறு தொல்லைகள் இல்லை.

அம்முவின் கண்களில் கரு வட்டம். இளைத்திருந்தாள். சற்றே வதங்கின தோற்றம்.
மூன்று குழந்தைகளாம். முதலிரண்டும் பெண்கள். கடைசி பையன். ‘அவருக்கு  ஒரு புள்ளை வேணும்னு ஆசை’
என் கையிலிருந்த ஸ்வீட் பாக்கட்டை நீட்டினேன். வாங்கி அந்தப் பக்கமாய் வைத்தாள். கொஞ்சம் நெருடியது.
“ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து”
“ம்ம்.. உன்னைப் பார்க்கணும்னு திடீர்னு தோணிச்சு. “
பார்வை வீட்டைச் சுற்றி வந்தது. அது வீடு என்று சொல்ல நாலு சுவர்கள்.. ஒரு கதவு இருந்தது. தரையில் காயாத ஈரம். இரு கைகளைத் தலைக்கு உயர்த்தி கும்பிட்ட மாதிரி மங்களூர் ஓடுகள் அடுக்கிய கூரை. கை உயர்த்தினால் விரலை நறுக்குகிற கிட்டத்தில் தேமே என்று சுற்றுகிற மின் விசிறி.
சமையலறை டல்லடித்தது. பிளாஸ்டிக் குடங்கள். அலுமினிய பாத்திரங்கள். அம்மு.. நீ.. நீயா.. இதில்..
“அம்மு.. வாயேன் என்னோட”
“எங்கே”
“சொல்றேன் வா”
கதவைப் பூட்டவில்லை. ஸ்டோர் போல வரிசையாய் வீடுகள். ஒரு கால் செருப்பு தைக்கப் பட்டிருந்தது.
காரில் உட்காரச் சொன்னேன். ஏசியில் ஒரு முறை சிலிர்த்துக் கொண்டாள்.
மெயின் தெருவில் மளிகைக் கடை வாசலில் காரை நிறுத்தினேன். அரிசி.. பருப்பு.. புளி.. எண்ணை.. சீரகம்..
“அம்மு வேறென்ன..”
“ஸாண்டல் பவுடர்”
அவளை வெறித்தேன். அதையும் வாங்கியாச்சு. காரில் ஏற்றிக் கொண்டு மறுபடி வீடு. உள்ளே இறக்கி வைக்க வந்தபோது அவன்..
“யாழு நீங்க”
அம்மு அவனை அமர வைத்தாள். கண்களில் ரெட் லைட் தெரிந்தது அவனுக்கு.
“வைதேஹியோட அண்ணா.. நம்மைப் பார்க்க வந்திருக்கார்”
அசட்டுத்தனமாய் கை கூப்பினான்.
“அதானே பார்த்தேன். தெரிஞ்ச முகமா இருக்கேன்னு.. எப்படிடா இருக்கே” என்றான் தோளைத் தட்டி.
“குழந்தைங்க எங்கே”
“வருவாங்க”
“சரி.. நான் வரேன்”
இதற்குள் அவன் கட்டிலில் படுத்துத் தூங்கி விட்டான்.
“அம்மு..”
“பார்க்கணும்னு தோணிச்சு.. பார்த்துட்டேன்” என்றாள்.
கார்க் கதவை அவள்தான் மூடினாள்.
“இது போதும் கண்ணா.. நீ வாங்கித் தந்ததை நான் மறுக்கல.. இனிமே எதுவும் வேணாம்.. இந்த வாரம் நாங்க வீடு காலி பண்ணிருவோம்.. வேற எடம் போயிருவோம்.”
நன்றாக இருட்டி விட்டது. அவள் வீட்டு வாசலில் விளக்கில்லை. தெருமுனையில் ஆள் நடமாட்டமில்லா ஒதுக்குப் புறம்.
கதவை மூடுமுன் என் நெற்றியில் முத்தமிட்டாள். அந்த நாளில் ஏங்கிய..  கிடைக்காத  முத்தம்.
“போயிட்டு வா கண்ணா”
பக்கவாட்டு கண்ணாடியில் அவள் தெரிகிற தூரம் வரை எனக்கு சாலையைப் பார்க்கத் தோன்றவில்லை.

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் ஸ்டைலில் மிகவும் அருமையான படைப்பு. அம்மு-3 இல் என்னால் வேறொருவளைத்தான் நினைக்கத்தோன்றியது.

பிறர் பார்வைக்கு மட்டுமே இவையெல்லாம் ஏதோ கற்பனைக்கதை எனத் தோன்றும்.

பாராட்டுகள். வாழ்த்துகள். படித்தாலே பரவசமூட்டிடும் பகிர்வுக்கு நன்றிகள்.

G.M Balasubramaniam said...

சில நெருக்கங்களுக்குப் பொருள் தேடக் கூடாது என்று தோன்றுகிறது. இது என்ன அம்மு சீரிஸா?

”தளிர் சுரேஷ்” said...

சில உறவுகள் மறப்பதற்கில்லை! அருமையான கதை!

வெங்கட் நாகராஜ் said...

அம்மு-3 - ஒவ்வொன்றும் படித்து முடித்ததும் சில மணி நேரங்களுக்காவது நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.... தொடர்கிறேன்.