November 08, 2015

அம்மு 5

அம்மு 5

மானுஷ்யம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதைகளைச் சொல்லியிருப்பார்கள். சொன்னவர்கள் ரொம்ப வேண்டியவர்களாயிருந்தால் தீவிர முகத்துடன் கேட்டு ஆறுதல் தந்திருப்பீர்கள். உள்ளுக்குள் ஒரு நமுட்டுச் சிரிப்புடன்.
என் அம்மு கதையையும் கேட்டு வையுங்கள்.
அந்த நாளில் யாரோ ஒரு பெரியவர் தங்கி இருந்ததாய்ச் சொல்லப்பட்ட மண்டபம். பின்னாளில் மானாவாரியாய் சுவர் எழுப்பி 6 ஒண்டுக் குடித்தனங்கள் குடியிருக்க ஆரம்பித்தன. எத்தனை வருடங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததோ.. தெரியாது. நாங்கள் குடியிருந்த வீட்டைக் காலி செய்யச் சொன்னதும் டக்கென்று அமைந்த வீடு இது. ஒரு போர்ஷனில் நாங்களும் குடி போனோம்.
எனக்கு முதலில் மனசே இல்லை. முன்பிருந்த வீடு பெருசு. அதுவும் எங்கள் குடும்பம் மட்டுமே – அதாவது என் சித்தப்பா, அத்தைகள் இருவர் என நான்கு குடும்பங்களின் கூட்டணி. அவரவர் சமையற்கட்டு தனி. கொல்லைப்பக்க கிணறு. தோட்டம் போடுமளவு பின்பக்கம் பெரிய வெளி.
இப்போது கிடைத்ததோ அதில் பாதி அளவு கூட இல்லை. அதிலும் 6 குடித்தனம். பெரிய கூடம். அதில்தான் எல்லாக் குடும்ப நபர்களும் எல்லை பிரித்து தூக்கம். அழுது வடிகிற குண்டு பல்பு. இரவில் அதையும் அணைத்து கிரசின் சிம்னி. அது முணுக் முணுக்கென்று எரிந்து நள்ளிரவில் உயிரை விட்டு விடும். படுத்தால் அடித்துப் போட்ட மாதிரி தூக்கம் என்பதால் இருட்டு கவ்விய கூடம் ரொம்ப நாளைக்குத் தெரியவில்லை.
இந்த புது வீடு பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்கள். தெருவுக்குள் வந்து விட்டோம். ரெங்கன் ஆன்னா ஊன்னா வாசலோட போவார். ரெண்டு தேர்கள் ஓடும் சித்திரை.. பங்குனி. முன்பு புறப்பாடு ஆனது தெரிந்து ஓடி வருவதற்குள் எங்கள் தெரு முக்கைத் தாண்டி விடுவார். பின்னால் ஓடணும். இப்போ அந்தத் தொல்லை இல்லை.
இரண்டாவது அம்மு.
ஆறு குடித்தனங்கள் போக எக்ஸ்ட்ராவாய் வாசல் பக்கம் ஒரு அறை இருந்தது. சாதாரணமாய் என்னோடு பேசிக் கொண்டிருக்கிற மாமியை திடீரென ஒரு நாள் அந்த அறைக்குக் கூட்டிப் போவார்கள். ‘நீ போடா ஸ்கூலுக்கு என்று என்னை விரட்டி விடுவார்கள். பியூன் கூட வந்திருக்க மாட்டான் அப்போது. பழைய சாதம் டப்பாவில் போட்டு என்னைத் தள்ளி விட்டதும் மாலை நான் வீடு திரும்புவதற்குள் என்ன அதிசயமோ.. மாயமோ.. ஒரு புது ஜனனம் நிகழ்ந்திருக்கும்.
அம்மு மூத்தவள். என்னை விடச் சின்னவள் என்று நினைத்திருந்தேன் மாதக் கணக்கில்தான் என்று பின்னால் தெரிந்தது. அம்முவின் அம்மா தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்ரமாதித்தி. ஆறாவது குழந்தையை அந்த அறையில் தான் பெற்றெடுத்தாள்.
அம்மு ஒரு வகையில் இரண்டாவது அம்மா ஆகி விட்டாள்.. தன் தம்பி தங்கைகளுக்கு. எட்டாவதோடு படிப்பை நிறுத்தினார்கள். கொஞ்சம் பூசின உடல்வாகு, கிணற்றடியில் துண்டைக் கட்டி குளிக்கிற ஆண்களும் இருக்கிற ஒரே ஒரு பாத் ரூமில் குளிக்கிற பெண்களுமான பிரதேசம் அது. அம்மு 5 மணிக்குள் குளித்து விட்டு வந்து விடுவாள்.
புத்தகங்களோடு திரிகிற என்னிடம் அவள் படிக்க ஏதாவது இருக்கா என்று கேட்டதும் ஜெயகாந்தனையும் லா.ச.ராவையும் காட்டினேன். முகம் சுளித்தாள். வாண்டுமாமாவும் முத்து காமிக்ஸும் பிடித்திருந்தது. ஆளப்பிறந்தவன்.. சிலையைத்தேடி.. பலே பாலுவும் பாட்டில் பூதமும்.. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..
பதின்ம வயதில் பெண் என்றால் பத்து தப்படி தள்ளிப் போய்க் கொண்டிருந்த என்னுடன் அம்முதான் முதலில் பேச ஆரம்பித்தது,. என் தங்கைகள் பெண்களில் சேர்த்தியில்லை.
அமானுஷ்யம் பற்றி பேச ஆரம்பித்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்.
எனக்கு கூடத்தில் படுக்கப் பிடிக்கவில்லை. வாசல் திண்ணையில் தான் படுக்கை. அந்தப் பக்கம் படுக்கிற குழந்தை இல்லாத இன்னொரு ஜாகை மாமா, மாமி தனிக்கதை.
பத்து மணி ஷோவிற்குப் போவது என் அத்திம்பேருக்குப் பிடிக்கும். அவர் நள்ளிரவு ஒரு மணிக்குத் திரும்பியபோது நான் ரோட்டில் எங்கள் வீட்டு வாசலில் படுத்திருந்தேனாம். காற்றுக்காகப் படுத்திருக்கிறேன் என்று எழுப்பாமல் போய்விட்டாராம். இது முதல் அனுபவம். திண்ணையில் இருந்தவன் எப்படி முழுப்படுக்கையுடன் வாசலுக்குப் போனேன் என்பதற்கு எவ்வித சப்பைக் கட்டுகளும் இதுவரை இல்லை.
இன்னொரு இரவில்.. அதே திண்ணை.. எனக்கு விழிப்பா இல்லை மயக்கமா புரியவில்லை. ரோட்டில் போகிற ஏதோ ஒன்று சட்டெனத் தாவி என் கையைப் பற்றி அப்படியே ஒரு சக்கரவட்டம் என் உடம்பைச் சுழற்றி கையை முழங்கால் அருகே சொருகி விட்டு நகர்ந்த பிரமை. நான் ராமா ராமா என்று கத்தியிருக்கிறேன். உடலெங்கும் வியர்த்து கண் திறந்து பார்த்தால் திண்ணையில்தான் படுத்திருக்கிறேன். கை மட்டும் முழங்கால்களுக்கிடையில்.
பிரசவ அறைக்குள் ஒரு முறை விளையாட்டாய் ஒளிவதற்காய்ப் போய் யாரும் தேடாமல் தூங்கிப் போய் விட்டிருக்கிறேன். என் மேல் யாரோ ஏறி அமர்ந்து என்னை நசுக்க முயல என்ன முயன்றும் உதற முடியவில்லை. அப்போதுதான் ‘எங்கே கண்ணனைக் காணோம் ரொம்ப நாழியா’ என்று குரலும் கதவு திறக்கும் சத்தமும். அந்த உருவம் என்னை விட்டு விலகி விட்டது.
போதுமென்று நினைக்கிறேன். இந்த வீட்டின் அசாதாரணம் குறித்து எல்லோருமே அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இருவர் பேசுவது மற்ற இருவருக்குத் தெரியாது என்கிற பாவனையில்.
ந்த சமயத்தில்தான் அம்முவுக்கு வரன் பார்த்தார்கள். சமையல் வேலை. ஆளும் அவனும். வெற்றிலை போட்டு காவி ஏறிய பற்கள். எப்போதும் துப்பிக் கொண்டிருந்தான். பாக்குத் துகள்கள் தெரித்தன. ‘இந்தா சாப்பிடு’ என்று அவன் நீட்டிய ஜாங்கிரியைக் கையில் வாங்கிய போது மிச்ச விரலை நக்கினான். உவ்வே. அவனுக்குத் தெரியாமல் தூக்கிப் போட்டு விட்டேன். கூடத்திலேயே அம்முவின் கல்யாணம். புகை வெளியே போகாமல் சுழன்று கொண்டிருந்தது. தயிர்வடை எனக்குப் போடவில்லை. எத்தனை முறை கேட்டும். சமையல் செய்தது போதவில்லை. நல்ல கூட்டம்.
அம்முவின் பர்ஸ்ட் நைட் பிரசவ அறையில்தான். அன்று கூடத்தில் யாரும் படுக்கவில்லை. அவரவர் போர்ஷன் சமையலறையில் ஒடுங்கிக் கொண்டார்கள். பிரசவ அறையின் வாசல் பக்க ஜன்னலின் கீழ் என் படுக்கை. நள்ளிரவில் ஏதோ மேலே தெறித்தது. வெற்றிலைச் சாறு.
மறுநாள் மாலையில்தான் அம்முவைப் பார்க்க முடிந்தது. கண்களில் சிவப்பு. அழுதாளா. அவனைக் காணவில்லை. ஏதோ கல்யாண காண்ட்ராக்டாம். போய் விட்டான். எப்போ வருவான் எப்போ போவான் என்று தெரியாது. அம்மு ‘பிள்ளையாண்டிருப்பதாய்’ச் சொன்னதும் பிரசவ அறைக்கு வேளை வந்து விட்டதாய் நினைத்துக் கொண்டேன்.
நாட்கள்தான் என்ன வேகமாய் ஓடுகின்றன.. அம்மு வெளிறி.. நடக்க முடியாமல் வயிற்றைச் சாய்த்துத் திணறி.. ‘ஏண்டி.. ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிடறாளா.. இப்படி சோகை பூத்திருக்கு’ என்கிற விசாரணைக்கு ‘பையன் தான் பிறக்கப் போறானாம்.. அதான் இப்படிக் காட்டுது’ என்று ஏதோ சால்ஜாப்பு சொல்லப்பட்டு..
அம்மு அறைக்குள் போனாள் நடந்து. பெண் குழந்தை சுபஜனனம். அம்மு உறையும் போது முகத்தில் ஒரு அலாதி சிரிப்பு. அவ்வளவு பெரிய அழுகையை அதுவரை வீதி கேட்டிருக்கவில்லை.
ங்கள் குடித்தனம் அதன் சோபையை இழந்து விட்டது. அம்மு குடும்பத்தார் அந்த கைக் குழந்தையுடன் காலி செய்து போய்விட்டார்கள். வேறு ஆள் குடி வந்தாகி விட்டது. பிரசவ அறைக்கும் ஒரு குடி வைக்கப் போவதாய் சொன்னார்கள். அது வைப்பதற்கு முன் அந்த அறைக்கு வெள்ளை அடித்தார்கள். ஒரு வாரம் சும்மா கிடந்தது. ஒரு பகல் வேளை. விடுமுறை. ஏதோ அலுப்பு. தொந்திரவு இல்லாமல் கொஞ்ச நேரம் தூங்க நினைத்தேன். அந்த அறைக்குள் போய்விட்டேன்.
கண்ணசந்திருக்க வேண்டும். என் மேல் ஏறி அமர்ந்து அது என்னை நசுக்க ஆரம்பித்தது. யாழு.. நீ.. என்னை விடு.. கத்த முடியவில்லை. அம்மா.. அம்மா.. அப்போதுதான் ஏதோ சொன்னது.
‘அம்மு டா..ஏன் சத்தம் போடறே..’
அம்மு.. இன்னும் பீதியானது. அறைக் கதவை உட்பக்கம் தாளிட்டது தப்பாப் போச்சு. எழவும் முடியவில்லை. அம்மு அப்படியே என் மீது அமர்ந்திருந்தாள். என் கன்னத்தை வருடினாள். ‘ஏண்டா சீக்கிரமா பொறந்திருக்கக் கூடாதா முன்னாடியே.. ‘ என்றாள். செயலற்று பிரமிப்பில் படுத்திருந்தேன். எத்தனை நேரமென்று தெரியவில்லை. அவளாக விலகிப் போனாள். போகுமுன் என் கன்னத்தில் ஒரு முத்தம்.
வெளியே வந்ததும் அம்மாவிடம் கேட்டேன்.
“ஏம்மா அந்த ரூமை நாமே வாடகைக்கு எடுத்துக்கலாமே.. நமக்கும் இடம் வேண்டியிருக்கே.. கேட்டுப் பாரேன்”
”என்னடா சொல்றே”
அப்பாவுக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது.
“அவன் சரியாத்தான் சொல்றான்.. கேப்போம்” என்றார்.

ப்போது சொல்லுங்கள்..  அமானுஷ்யம் உண்டா இல்லையா ?

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கதை. இதைப்படித்ததும் அமானுஷ்யம் நிச்சயமாக உண்டு என்றும் அதுவும் இதுபோல ஒரு அமானுஷ்யம் அத்யாவஸ்யமான தேவைதான் என்றும் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘அம்மு டா..ஏன் சத்தம் போடறே..’ அம்மு.. இன்னும் பீதியானது. அறைக் கதவை உட்பக்கம் தாளிட்டது தப்பாப் போச்சு. எழவும் முடியவில்லை. அம்மு அப்படியே என் மீது அமர்ந்திருந்தாள். என் கன்னத்தை வருடினாள். ‘ஏண்டா சீக்கிரமா பொறந்திருக்கக் கூடாதா முன்னாடியே.. ‘ என்றாள். செயலற்று பிரமிப்பில் படுத்திருந்தேன். எத்தனை நேரமென்று தெரியவில்லை. அவளாக விலகிப் போனாள். போகுமுன் என் கன்னத்தில் ஒரு முத்தம். வெளியே வந்ததும் அம்மாவிடம் கேட்டேன். “ஏம்மா அந்த ரூமை நாமே வாடகைக்கு எடுத்துக்கலாமே.. நமக்கும் இடம் வேண்டியிருக்கே.. கேட்டுப் பாரேன்” ”என்னடா சொல்றே” அப்பாவுக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. “அவன் சரியாத்தான் சொல்றான்.. கேப்போம்” என்றார். //

சீக்கிரமாகப் பிறக்காததற்கு பிராயச்சித்தமாக அந்த ரூமையே இப்போது வாடகைக்கு எடுக்க நினைத்தது மிகவும் அருமையான புத்திசாலித்தனமான ஐடியாவாக உள்ளது. தினமும் அம்முவுடன் ஜாலியாக இருக்கவும் வாய்ப்பு அமையலாம். வேறு ஏதேனும் விபரீதங்கள் நடந்து ஓட்டமெடுக்கவும் வைக்கலாம். நல்லதையே நினைப்போம் ..... நல்லதே நடக்கட்டும். வாழ்த்துகள்.

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான கதை! மற்ற அம்முக்களை போல் இவளது குணாதியசங்கள் விளக்கப்படவில்லை என்றாலும் சுவாரஸ்யமாக சென்றது!

sury Siva said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

subbu thatha
www.vazhvuneri.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

அருமை. தொடரும் அம்மு..... நானும் தொடர்கிறேன்.