November 05, 2015

அம்மு - 4


ம்முவை முதன் முதலில் என் இருக்கையில்தான் பார்த்தேன்.
குழப்பமாக இருக்கிறதா.. அலுவலகத்தில் என் இருக்கையில். எங்களுக்கு ஆபிஸ் எட்டு மணிக்கு ஆரம்பம். நான் கேண்டின் போய் முக்கால் மணி நேர அலுப்பான பயணத்தின்  (அது அலுப்பில்லை.. பக்கத்து இருக்கை நண்பருடன் அரட்டை.. அல்லது ஜன்னல் வழி வெளியுலக தரிசனங்கள்) களைப்பைப் போக்க சூடான தேநீர்.
இருக்கைக்கு வரும் போது என் சீட்டில் யாரோ அமர்ந்திருப்பது போலத் தெரிந்தது. என்னால் எந்த பயனுமில்லை என்று வேறு ஆள் போட்டு விட்டார்களா.. உள்ளே சின்னதாய் ஒரு உதைப்பு. கிட்டே வந்தால் குறு குறு விழிகளுடன் அம்மு.
”நீ..ங்க”
“அலமேலு.. வீட்டுல அம்மு” சிரித்தாள்.
என் வீக் பாயிண்ட்டை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறாள். சிரிக்கிற மனிதரிடம் என்னைத் தொலைத்து விடுவேன் சுலபமாய்.
பொதுவாய் ஒருவர் இருக்கையில் இன்னொருவர் அமர மாட்டார்கள். அலுவலக நியதி. விதிவிலக்கு நண்பர்கள். உரிமையாய் அமர்வார்கள். என்னைப் பொறுத்தவரை சிக்கலில்லை. பெரிய அதிகாரிகள் முறைப்பார்கள்.
கேஸுவலாய் எழுந்தாள். பக்கத்து சீட்டில் அமர்ந்தாள்.
“இதான் உங்க சீட்னு சொன்னாங்க. ஆனா நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. கண்டுபிடிக்கத்தான் உங்க சீட்டிலேயே உட்கார்ந்தேன்”
இந்த சிரிப்பு ஒன்று பிறவியிலேயே வாய்த்திருக்க வேண்டும் அவளுக்கு. அல்லது நன்றாகப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் இயல்பு போல.
”ட்ரெய்னி.. ரிப்போர்டிங் டூ யூ.. “
அலுவலக உத்திரவைக் காட்டினாள். படிக்கவில்லை. அதிலென்ன சந்தேகம். நேற்றே தகவல் வந்து விட்டது.
“அம்மு.. ப்ச்.. அலமேலு”
“நீங்க என்னை அம்முன்னே கூப்பிடலாம்” சிரிப்பு.
“ஆபிசில் அம்மு பொம்முலாம் செல்லாது” என் சிரிப்பு அத்தனை இயல்பாயில்லை என்று எனக்கே புரிந்தது.
முகத்தில் விளக்கணைந்து எரிந்தது உடனேயே.
பக்கத்து சீட்டில் கணினி.. இவள் வரவிற்காகவே. ஷேர்பாயிண்ட்டில் இருவரும் பயன்படுத்துகிற ஃபைல்கள்.
ஒரு ஃபோல்டர் பெயரைச் சொன்னேன். ஷுக்லா புத்தக சைசில் ஒரு ஃபைலைக் கொடுத்தேன்.
“ஓப்பன் பண்ணி பில் அப் பண்ணு”
எனக்கே உறைத்தது, நியூ கமர். அவளிடம் இன்னும் கொஞ்சம் பதவிசாய்ச் சொல்லி இருக்கலாம். ஆனால் என் கெத்தைக் காட்ட வேண்டும். கொஞ்சம் அழ அடிக்க வேண்டும். இந்த வேலை வேண்டாம்.. அல்லது வேறு சீட் மாற்றிக் கொடு என்று கெஞ்ச வேண்டும்.
கார்பரேட்டுக்கு அனுப்பவேண்டிய தினசரி சடங்குகளை முடித்து விட்டு டைரியை எடுத்துக் கொண்டு இருக்கையை வேகமாய்ப் பின்னால் தள்ளி..
“ஜிஎம்மைப் பார்த்துட்டு வரேன்” என்று முனகலாய்ச் சொல்லி விட்டு கிளம்பி விட்டேன். ஜிஎம் மூன்று நாள் லீவு.
அரை மணி சுற்றி விட்டு சீட்டுக்கு வந்தபோது அவள் வேறேதோ எக்சல்லில் மூழ்கி இருந்தாள்.
“ஏய்.. அதை ஏன் ஓப்பன் பண்ண.. ஃபார்முலாஸ்ல இருக்கு..”
“டிஸ்டர்ப் பண்ணல. ஜஸ்ட் பார்த்தேன்”
“கொடுத்த வேலை ??”
சிரித்தாள். கான்பிடன்ஸ்.
முடித்திருந்தாள். ஒன்றிரண்டு சந்தேகங்கள் வைத்திருந்தாள். யாருக்கும் வரக் கூடிய பொதுவான சந்தேகங்கள்.
“ஒவ்வொரு வாரமும் இதை அப்டேட் பண்றீங்க போல”
அவள் ஓப்பன் செய்திருந்த வொர்க் ஷீட்டைக் காட்டினாள்.
“ஆமா. அதுக்கென்ன”
“லாஸ்ட் வீக் க்ளோசிங் ஃபிகர் கேரி அவுட் ஆகல..”
ப்ச்.. தப்பு. கவனப் பிசகு.
“இந்த வாரம் அனுப்பும் போது செக் பண்ணிருவேன்” என்றேன் மீசையில் மண் ஒட்டாமல்.
“கிரேட்”
“எ..ன்ன”
“பட்ஜெட் ஃபுல்லா நீங்கதானா.. யப்பா.. எவ்ளோ வொர்க்கிங்ஸ்.. சத்தியமா கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு”
“இதுக்கு முன்னாடி நீ..”
“கார்பரேட்ல தான் செலக்ட் ஆனேன்.. இப்போ எல்லா யூனிட்லயும் ஒவ்வொரு மாசம் ட்ரெயினிங்”
ஓ.. அதான் இத்தனை சுலபமாய் வேலையா.
“பை த வே.. எனக்கு நேட்டிவ் திருச்சி”
“திருச்சில..??”
“ஸ்ரீரங்கம்”
என் ஐஸ்கட்டி உடைந்தது. காபி குடிப்பதில்லை அவளும் என்னைப் போலவே. சாப்பாடு கேண்டினில் ஆண்கள் பகுதியிலேயே ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டோம். வெளியே போய் இளநீர் குடித்தோம். இளநீர் விற்கிற பெண்மணி என் சிநேகிதி. அரிவாளை வைத்து லாவகமாய் சீவுகிற நேர்த்தி எனக்குப் பிடிக்கும். அதற்காகவே குடிப்பேன். தண்ணியா.. இல்லாட்டி வழுவலா.. என்று நான் சொன்னதையே அம்முவும்.
செக்யூரிட்டி அவளை பாஸ் கேட்டபோது பர்ஸைத் துழாவி எடுத்துக் காட்டினாள். ஒட்டியிருந்த போட்டோ நிஜத்தைப் போல அத்தனை அழகாயில்லை.
மாலை அலுவலக நேரம் முடிந்து கிளம்பும்போது பேருந்தின் இந்தப் பக்கம் அவள். அந்தப் பக்கம் நான். தற்செயலாய்த் திரும்பிப் பார்த்தபோது அவளும் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ம்மா என்னைப் பார்த்ததும்என்னப்பனேஎன்று வழக்கம் போல முனகினாள். நம்பெருமாள் முன் நாலு மூலையும் மஞ்சள் தடவிய பெண் ஜாதகம் இருந்தது.
“அவா இன்னிக்கும் வந்து என்ன சொல்றேள்னு கேட்டுட்டு போயிட்டா”
“சொல்ல வேண்டியதுதானே.. எம்புள்ளை என் பேச்சைக் கேட்க மாட்டான்னு”
அம்மாவின் அழுகை கொஞ்சம் கவிதை.. கொஞ்சம் ரசனை.. நிறைய உறுத்தல்.
“ஏண்டா என்னை இப்படி சோதிக்கிறே”
“யாரு நானா”
“நான் அவனைச் சொன்னேன்”
அன்றிரவு வேப்பம்பூ ரசம். சுட்ட அப்பளம். அதுவும் தேவார்மிதமாகத்தான் இருந்தது.
டுவில் வருகிற ஞாயிறுகள் விடுமுறை நாட்கள் எனக்குப் பிடிக்கவில்லை.
அம்மு சுவாரசியமாய்த் தெரிய ஆரம்பித்தாள். டெய்லி ஷீட்டைக் கிழிக்கும் போது உள்ளே ஒரு மளுக் கேட்டது.
கடைசி நாள். அம்முவின் வேலையைப் பாராட்டி ஜிஎம்மிடம் சொன்னபோது என் குரலில் கூடுதல் அழுத்தம். அதை அவரும் கவனித்திருக்கவேண்டும். பிறகு தனியே அழைத்து கேலி செய்யலாம்.
லா.ச.ரா தொகுப்பு ஒன்றை என் ஞாபகமாய்ப் பரிசளித்தேன்.
“படிப்பியோன்னோ”
”ஜனனி.. அபிதா.. ” என்று ஆரம்பித்தாள்.
வேடிக்கையாய்க் கை கூப்பினேன். “தெரியாம கேட்டுட்டேன்”
டாக்ஸி புக் செய்தேன். பஸ்ஸில் போக வில்லை இன்று. என்னோடு வீட்டுக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தாள். அம்மாவைப் பார்க்கணுமாம்.
முன்னே அமரப் போனவனைப் பின்னிருக்கைக்கு அழைத்தாள். இடைவெளி விட்டு அமர்ந்தேன். இந்த ஜன்னல் வழி நான்.. அந்த ஜன்னல் வழி அவள்.
காவிரிப் பாலம் கடக்கும் போது ஒரு மணல் திட்டில் கூட்டமாய் அமர்ந்திருந்த பறவைகளை ஒரே நேரத்தில் இருவரும் பார்த்து ‘ஹை’ என்றோம்.
அம்மா அம்முவைப் பார்த்ததும் சிரித்தாள். நெடுநாளைக்குப் பின் இதயச் சிரிப்பு. “வாடிம்மா.. உன்னைப் பத்தி நிறைய சொல்லி இருக்கான்”
அம்மு என்னைத் திரும்பிப் பார்த்தபோது நான் நகர்ந்திருந்தேன்.
கீழே சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள். அம்மா வற்புறுத்தியும் கேட்கவில்லையாம். டீ டம்ளர் ஆறிக் கொண்டிருந்தது.
“உன்னோடதான் சாப்பிடுவாளாம்”
இந்த நிமிடத் தேநீர் இதுவரை குடித்திராத சுவையில் இருந்தது.
“குளிச்சுட்டு வரேன்” எழுந்து போய் விட்டேன்.
ஒரு மணிநேரம் கழித்து அம்மு விடை பெற்றுக் கிளம்பியபோது அம்மா பிளவுஸ் பிட்.. மஞ்சள் துண்டு வைத்துக் கொடுத்தாள். நமஸ்கரித்து வாங்கிக் கொண்டாள். வாசலில் காத்திருந்த காரில் ஏறிக் கொண்டபோது அம்மா அவள் கையைப் பற்றி அழுத்தி விடை கொடுத்தாள். அன்றிரவு அம்மா ஏனோ என்னிடம் எதுவும் பேசவில்லை. மௌனமாய் சாப்பாடு.. மௌனமாய் படுக்கை.
மூன்றாவது நாள் எனக்கு மெயில் வந்திருந்தது அம்முவிடமிருந்து.
நீங்கள் நினைப்பது சரிதான். அவசியம் எங்க கல்யாணத்திற்கு வாங்க. பத்திரிக்கை அனுப்பறேன்.. இன்பாக்ஸில் அட்ரஸ் கொடுத்தால். இல்லாவிட்டால் இதையே அழைப்பாய் ஏற்கவும்.



5 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அன்னியோன்னியமாக உடன் இருப்பதைப்போல உள்ளது, கதையைப் படிக்கும்போது. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

தொடர்ந்து அம்மு - 3 மற்றும் அம்மு - 4 படித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..... பாராட்டுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையானதோர் எழுத்துநடை. மனம் நிறைந்த பாராட்டுகள்.

கடைசியில் நான் மட்டும் எதிர்பார்த்ததோர் அழகான டிவிஸ்ட். நாம் தினமும் நம் அலுவலகத்தில் எவ்ளோ அம்முக்களைப் பார்த்திருக்கிறோம். நம் அலுவலகம் ஓர் மிகப்பெரிய ரெயில் வண்டி போல. ஆயிரக்கணக்கானோர் தினமும் புதிதாக ஏறுவார்கள். இறங்குவார்கள். சிலருடன் மட்டும் எப்போதாவது சில மணி நேரங்கள் நாம் பழக நேரிடும். ஏதோவொரு தனிச்சிறப்பினால் அவர்கள் நம்மை சொக்க வைத்து விடுவார்கள். பின் அவர்கள் ஸ்டேஷன் வந்ததும், அவர்கள் இறங்கிப்போய்க்கொண்டே இருப்பார்கள். நாம் இன்றும் அவர்கள் நினைவலைகளில் .....

இதையெல்லாம் அழகாக கோர்வையாக சிருங்கார ரஸத்துடன், தங்களால் மட்டுமே எழுத்தில் வடிக்க இயலும். வாழ்க தாங்களும் .... கதைக்குத் தளம் அமைத்துத்தரும் நம் மிகப்பெரிய அலுவலகமும் .... :)

அன்புடன் வீ......ஜீ

”தளிர் சுரேஷ்” said...

அம்முவுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்! ஹாஹா! உடன் பயணித்த உணர்வு தந்தது கதை! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

பெண்கள் கொஞ்சம் இயல்பாக இருந்துவிடக் கூடாதே ஆண்மனம் ஏதேதோ நினைக்கத் துவங்கும் அம்மு 4-ம் ரசித்தேன்