November 22, 2015

அம்மு 9


“ I is loving you “
அம்முவுக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித் தருவது எனக்குத் திணிக்கப்பட்டது. நான் எவ்வளவு மறுத்தும். அவளின் நோக்கம் பாடம் அல்ல என்பதும் ஏதோ ஒரு வழியைக் கண்டுபிடித்து என்னுடன் இருப்பது மட்டுமே என்பதாலும்.
அசால்ட் என்கிற தவறாகப் பயன்படுத்துகிற வார்த்தையை முதன் முதலில் எனக்கு அறிமுகம் செய்தவள் அவள்தான். படிக்க வந்தவள் மாதிரியா இருப்பாள். தாவணி. ரெட்டை ஜடை. கண்ணில் மை. சாந்துப் பொட்டு தினம் ஒரு கோணத்தில். கண்கள் எப்போதும் ஒரு திசையில் நிற்காமல் சுழலும். என்னை மாதிரி திட சித்தனுக்கே வேட்டு வைக்கிற அத்தனை ஆயுதங்களும் பிரயோக நிலையில் அவளிடம்.
”தப்பு அம்மு”
“லவ் பண்ணா என்ன தப்பு”
“ப்ச்.. இங்க்லீஷ் தப்பு..”
“அப்போ தமிழ் ஓக்கேவா”
ஹைய்யோ. அம்மா நீ லூசா.. இவதான் கேட்டான்னு என்னைப் பிடிச்சு இவ கையில் கொடுத்துட்டு வேடிக்கை பார்க்கிறே.
”நீ டீ குடிப்பியோ”
அம்மாவின் குரல் கேட்டது.
“அவனுக்குக் கலக்கப் போறேன்.. அதான் கேட்டேன்”
வேண்டாம் என்று சொல்லப் போனவள் ‘தாங்கோ’ என்று கத்தினாள்.
கருணாஸ் காமெடி மாதிரி அரை டம்ளரை அரை மணி நேரம் சீப்பிக் குடித்தாள்.
“வச்சிடு. நான் அலம்பிக்கிறேன்”
“இல்லம்மா. நானே அலம்பித் தரேன்”
புழக்கடைப் பக்கம் போனவள் என்ன சொல்லித் தொலைத்தாளோ அம்மாவின் சிரிப்பு கூடம் வரையில் கேட்டது. அம்மாவின் சிரிப்பு அழகு. தினசரி வாழ்க்கையில் அதற்கு எப்போதாவதுதான் நேரம் கிடைக்கும்.
“இந்தப் பொண்ணைப் பாரேன்.. வேடிக்கையா பேசறது”
“என்ன சொன்னா”
“அது ஏன் கஷாயம் மாதிரி டீயை மளக்குன்னு முழுங்கறான் கண்ணன்.. ரசிச்சு சாப்பிடத் தெரியாதான்னு கேட்கிறா. சாப்பாட்டையே அப்படித்தான் ஒரே வாயில் அள்ளிப் போட்டுண்டு ஓடுவான்னேன். கபந்த வம்சம் போல இருக்குன்னு கேலி”
உனக்கு அவ்வளவு கொழுப்பா.. முனகினேன்.
வசந்திக்கும் ஆச்சர்யம். என் தங்கை.
‘ஏண்டா அவ ஸ்கூல்ல கிராமர்ல ஃப்ர்ஸ்ட் ஆச்சே.. எங்க இங்க்லீஷ் டீச்சர் வராதப்ப அவளைத்தானே கிளாஸ் எடுக்கச் சொல்வா ஹெச் எம்’
நீரை விட காதல் சாமர்த்தியமானது. அதற்கான வழியைக் கண்டுபிடித்து பாய்ந்து விடுகிறது. உயரங்களையும் அனாயசமாகத் தொட்டு விடுகிறது.
என்னமாய் யோசிக்கிறது.. 


“டேய்.. அம்மா எங்களை சினிமாக்கு கூட்டிண்டு போகச் சொன்னா”
“என்ன சினிமா.. யாரைக் கூட்டிண்டு”
எங்கே ஒளிந்திருந்தாளோ.. சரியாக அந்த நேரம் வெளிப்பட்டாள்.
“சொல்லுடி வசந்தி.. அம்மாவே சொல்லிட்டாளே”
ஆட்டோவில் அந்த லூசு வசந்தி முதலில் ஏறிக் கொள்ள.. அல்லது அது அம்முவின் சாமர்த்தியமா.. அந்த நிமிஷம் பர்ஸைக் கீழே போட்டது.. ஆட்டோக்காரர் அவசரப்படுத்த.. வசந்தி.. அம்மு.. அவள் அருகில் நான்.
அது எப்படித்தான் ஆட்டோ குலுங்குவதற்கு முன்பே யூகித்து என் பக்கம் சரிவாளோ.. நிறுத்தச் சொல்லி டிரைவர் பக்கம் உட்காரலாம் என்று பார்த்தால் ‘ட்ராபிக் போலிஸ் நிக்கிறார்’ என்று மிரட்டல்.
தியேட்டரில் நான் சுதாரித்து வசந்தியை என் பக்கம் அமர்த்தினேன். அம்முவா கொக்கா.. ஐந்து நிமிஷத்திற்குள் ‘மறைக்கிறதுடி..நீ இந்தப் பக்கம் வாயேன் என்னை விட நீ ஹைட்’ என்று கெஞ்ச.. நான் எதுவும் சொல்வதற்குள் வசந்தி இடம் மாறிக் கொண்டாள். அம்மு என்னருகில் வந்ததுமே இருட்டில் என் கையைப் பிடித்து வலிக்காமல் கிள்ளினாள்.
இண்டர்வெல்லில் மட்டும் சாதுவாய். மற்ற நேரம் முழுக்க என் கையோடு அவள் கையைப் பிணைத்துக் கொண்டு. ஒரு பாதுகாப்பு போல.. ஒரு தன்னம்பிக்கை போல.. உலகம் தோன்றிய முதல் நாள் தொட்டு மனிதன் பிறப்பதற்கு முன்பே ஜனித்த அச்சு அசலான நேசம் போல.
ஆட்டோவில் திரும்பினோம். அம்முவின் வீட்டு வாசலில் முதலில் நிறுத்தி அவளை இறக்கி விட்டோம். ‘தேங்க்ஸ்’ என்று முனகினாள். வசந்தியை ஏனோ கட்டிக் கொண்டாள். தெரு விளக்கின் ஒளியில் அவள் கண்கள் பளபளத்ததைப் பார்த்தேன். என்னைப் பார்க்காத மாதிரி உள்ளே போய் விட்டாள்.


ஜாதகம் பொருந்தலடா.. அம்மு மாதிரி ஒருத்தி நம்மாத்துக்கு வந்தா எவ்வளவு நன்னா இருக்கும். எப்படி சொல்றதுன்னே புரியல. அதுவும் அவங்களே கேட்டு வரும்போது”
அம்மா புலம்பித் தீர்த்து விட்டாள்.
 நான் எதுவும் பேசவில்லை. வசந்திக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்ததைப் பார்த்தபோது ஆச்சர்யமாய் இருந்தது.
“இதுவரைக்கும் ஜாதகம் பார்த்து பண்ணதெல்லாம் ரொம்ப சௌக்கியமா இருக்காளா”
வரிசையாய் லிஸ்ட் வைத்திருந்தாள். அம்மா தவிப்பது தெரிந்தது.
“ஏம்மா தாயார்ட்ட பூக்கட்டிப் பார்க்கலாம்னு சொல்வியே”
அப்பாவி போலக் கேட்டேன். வசந்திக்கு முகத்தில் பளிச்சென்று ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
“கையைக் கொண்டாடா. உருப்படியா உன் வாழ்க்கைல ஒரு யோசனை சொல்லியிருக்கே”
அம்மா.. வசந்தி.. நான்.. போனோம். சேர்த்தி மண்டபம் யாருமற்று காலியாய் இருந்தது.
“நானே கட்டிண்டு வந்திருக்கேன்.. சேப்பு வந்தா கல்யாணம்.. வெள்ளை வந்தா வேணாம்.. சரிதானாம்மா” என்றாள் வசந்தி.
என் அடி வயிற்றில் பிரளயம். என்ன வரும்..
“நீயே எடும்மா”
அம்மா நமஸ்கரித்தாள். அவளைப் பெண் பார்க்க வந்தபோது கூட இப்படி பதற்றப்பட்டிருக்க மாட்டாள். வாய் ஏதோ ஸ்லோகத்தை முனகியது.
குனிந்து ஒரு பொட்டலத்தை எடுத்தாள். வசந்தி லபக்கென்று அதைப் பறித்துப் பிரித்தாள்.
சிகப்பரளி ! வசந்தி அம்மாவைத் தூக்கிக் கொண்டு தட்டாமாலை சுற்றினாள்.
நான் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தேன்.
“வாடா.. நமஸ்காரம் பண்ணிக்கோ..”
விழுந்து சேவித்தோம். படியிறங்கி பிராகாரம் வலம் வரும் போது சட்டென்று எனக்குத் தோன்றியது. அந்த இன்னொரு பொட்டலம் ?  ஓடிப்போய் சேர்த்தி மண்டபம் மேலே ஏறித் தேடினால் காணோம்.


ம்மு ஜாடையில் ஒரு பெண். செம்ம வாலு.. என் அம்மா ஜாடையில் ஒரு பையன். கொஞ்சம் அமுக்கு. என்னை மாதிரி. அம்மு கொஞ்சம் வெயிட் போட்டு இன்னமும் அதே வசீகரத்துடன். சமையல் உள்ளில் என்னைச் சீண்டுவதும்.. என் தட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடுவதும்.. நான் தூங்கி விட்டதாய் நினைத்து முத்தமிடுவதும்.. ஜோடி சிம் போட்டுக் கொடுத்ததில் அவ்வப்போது மிஸ்டு கால் கொடுப்பதும்.. குறுஞ்செய்தியில் லவ் யூ.. டேங்க் யூ சொல்வதும்..

அன்று கோவிலிலிருந்து வெளியே வந்தபோது வசந்தி எதையோ எங்களுக்குத் தெரியாமல் தூக்கி எறிந்ததை நான் மட்டும் பார்த்துத் தொலைத்து விட்டேன். இன்று வரை அது என்ன என்று அவளிடம் நான் கேட்கவேயில்லை.

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அம்மு என்னருகில் வந்ததுமே இருட்டில் என் கையைப் பிடித்து வலிக்காமல் கிள்ளினாள்.
இண்டர்வெல்லில் மட்டும் சாதுவாய். மற்ற நேரம் முழுக்க என் கையோடு அவள் கையைப் பிணைத்துக் கொண்டு. ஒரு பாதுகாப்பு போல.. ஒரு தன்னம்பிக்கை போல.. உலகம் தோன்றிய முதல் நாள் தொட்டு மனிதன் பிறப்பதற்கு முன்பே ஜனித்த அச்சு அசலான நேசம் போல.//

மிகவும் ரஸித்தேன். :)

//அன்று கோவிலிலிருந்து வெளியே வந்தபோது வசந்தி எதையோ எங்களுக்குத் தெரியாமல் தூக்கி எறிந்ததை நான் மட்டும் பார்த்துத் தொலைத்து விட்டேன். இன்று வரை அது என்ன என்று அவளிடம் நான் கேட்கவேயில்லை.//

அதுவும் சிகப்பு அரளியேதான் :)

அம்மு-9 க்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

middleclassmadhavi said...

பாரதிக்கு ஒரு கண்ண(ன்)(ம்மா) போல் ஒரு அம்மு. ஹேப்பி எண்டிங்க் ரொம்ப பிடிச்சிருக்கு. நன்றி

G.M Balasubramaniam said...


அம்மு என்ன கற்பனைக் காரக்டரா இல்லை அனுபவத்தில் பார்த்த சில / ஒரு பெண்ணின் பிரதிபலிப்பா? இப்படியும் காதல் செய்ய விடுவாளோ.?

”தளிர் சுரேஷ்” said...

ரசிக்க வைத்த கதை! அருமை!