January 12, 2010

மறதிக்கு மருந்து இருக்கா?

'உங்களை எங்கேயோபார்த்த மாதிரி இருக்கு'

எப்படியும் மாசத்துல ரெண்டு பேர் இந்த டயலாகை சொல்லிடறாங்க என்கிட்டே..

எனக்கோ அவங்களை பார்த்த ஞாபகமே இல்லை.

'இருக்காதே' என்றால் விடமாட்டார்கள்.என் பூர்வீகம்.. நான் படித்த ஸ்கூல்.. கல்லூரி.. வசித்த தெரு.. எல்லாம் விசாரிப்பார்கள்.

கடைசியா 'இல்ல.. உங்கள நான் எங்கேயோ பார்த்திருக்கேன்..' என்று சொல்லி விட்டு போவார்கள்.

'எப்படி சமாளிக்கிறான் பாரு..' என்று நான் பெருமூச்சு விட்டாலும் ஒரு தடவை என் மனைவியிடம் மாட்டிக் கொண்டேன்.

'அது எப்படிங்க.. அவ்வளவு உறுதியா சொல்றாங்க.. ஆனா நீங்க இல்லேங்கிறீங்க'

"நீயே பார்த்தீல்ல.. அவரால எதுவும் பேச முடியல"

"நீங்கதான் அவரைக் குழப்பிட்டீங்களே"

"அய்யோ.. அவரே தேவல போல இருக்கே.."

"எனக்கு என்ன டவுட்டுன்னா.. "

"வேணாம்.. சொல்லாத"

சந்தேகப் பார்வையுடன் அவள்.

ஏதோ ஒரு சினிமாவில் இப்படித்தான் பஸ்ஸில் போகிறவரிடம் "எலே.. நல்லா இருக்கியா" என்று வரிசையாய் கேட்டுவிட்டு பஸ் போனதும் சொல்வார். 'பாரேன்.. பஸ்ஸுல உட்கார்ந்ததும் தூங்கறத.. இப்ப நான் யாருன்னு மண்டை காஞ்சிகிட்டு போவான்ல"

எனக்கு இப்பவும் அவ்வளவாய் ஞாபகசக்தி இல்லை.. அதுவும் குறிப்பாய் என் உறவுக்காரர்கள் பற்றி.

'என்னை யாருன்னு சொல்லு'

"வந்து.."

'பார்த்தியா.. அதுக்குள்ளே மறந்துட்டே.. போன மாசம் நெய்வேலில ஒரு கல்யாணத்துல பார்த்தோமே'

"நான் போன மாசம் எங்கேயும் போகலியே"

'என்னைதான் ஞாபகம் இல்ல.. கல்யாணம் அட்டெண்ட் பண்ணதும் மறந்துருச்சா..'

என் மனைவி பக்கம் திரும்பி 'நல்ல டாக்டரா பார்த்து காட்டும்மா'

'நீங்க வேற.. அவருக்கு என்னையே ஞாபகத்துல இருக்கிறதில்ல''

ஆபீஸ் முடிஞ்சு கரெக்டா வீட்டுக்கு வந்திடறார்தானே'

ஒருத்தன் மாட்டினா அவனை வச்சு காமெடி பண்ணி சிரிக்க ஒரு கூட்டமே இப்ப கிளம்பி இருக்கு.

சோதனை என்னவென்றால் என்னை விசாரிக்கிற அத்தனை பேரும் துல்லியமாய் என் பனியன் சைஸ் முதல் சொல்லிவிடுகிறார்கள்.

எனக்கு அவர்களின் பிள்ளைகள் பெயர் ஞாபகம் வருவதில்லை.

என் நண்பனின் மனைவி பெயர் ராஜி .. பெண் அகிலா.. ஆனால் எனக்கு அதில் எப்போதும் குழப்பம்.. பெண் அகிலா.. வொய்ப் ராஜி.. என்று மாற்றி அழைத்து.. ஒரு முறை பெண்ணை ' ஹாய்.. ராஜி செல்லம்.. நல்லா இருக்கியாம்மா' என்று கேட்கப் போக, ஏன் அத்தனை பேரும் என்னை முறைக்கிறார்கள் என்று முதலில் புரியவில்லை.

சரி.. இந்தத் தொல்லைக்கு பார்க்காத மாதிரி போகலாம் என்றால்.. 'என்ன ஆச்சு.. அவருக்கு.. மூஞ்சிய திருப்பிகிட்டு உர்ருன்னு போறாரு' என்று கமெண்ட்!

வல்லாரை.. மெமரி பில்ஸ் எதுவும் வொர்க் அவுட் ஆகல. சிரசாசனம் பண்ணுன்னு சொல்ல.. தலைகீழா நின்னு கழுத்து சுளுக்கினதுதான் மிச்சம். மனசுக்குள்ள திருப்பி திருப்பி சொல்லி பாருன்னு சொல்ல.. அதை ட்ரை பண்ணப் போக.. 'இவன் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கான்னு' விமர்சனம் வந்தாச்சு.

உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க.. ஞாபகசக்தியை வளர்த்துக்க என்ன வழி?

"எனக்கு கடன் கொடு .. தன்னால இன்க்ரிஸ் ஆகும்னு ' கடிக்கக் ' கூடாது !

(இந்தப் பதிவை எழுதி வைத்து ரொம்ப நாளாச்சு.. பிளாகில் போட இப்பதான் நினைப்பு வந்தது..)

12 comments:

CS. Mohan Kumar said...

என்னவோ Comment எழுத நினைச்சேன்.. மறந்துட்டேன்.. :)))

என் நடை பாதையில்(ராம்) said...

என்ன ரிஷபன் சௌக்கியமா!

என் நடை பாதையில்(ராம்) said...

என்ன முழிக்கிறீங்க? மறந்திடீங்களா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

'எனக்கு கடன் கொடுத்துப் பாருங்க'ன்னு சொல்லப் பார்த்தேன். அதுக்குள்ள
முந்தின்னுட்டீங்க.. பரவாயில்லை...
மறதிங்கறது வரம்ங்க..சாபம் இல்ல..
சந்தோஷமா இருங்க..மறதியும்,தூக்கமும்
கிடைக்கக் கொடுத்து வைச்சிருக்கணும்ங்க...


அன்புடன் ஆர்.ஆர்

Rekha raghavan said...

நல்ல வேளை ப்ளாக் ஒன்னு இருக்கேன்னு ஞாபகம் வந்து இந்த பதிவை இப்பவாவது போட்டீங்களே! நன்றி கே.பி.ஜெ.

ரேகா ராகவன்.

Rekha raghavan said...

ஐயோ சாரி ஞாபக மறதியா உங்க பேரை ரிஷபன்னு போடறதுக்கு பதிலா கே.பி.ஜெ.ன்னு போட்டுட்டேன்.

ரேகா ராகவன்

வசந்தமுல்லை said...

மறதிக்கு மருந்து கேட்டவரே! மறதிக்கு மருந்து சாப்பிட்டால் எல்லாமே மறந்து போகும். அப்படி மறந்து போகாமல் இருக்க, மறதியை மறந்து நம் இயல்பாக இருப்போம். அப்படியும் யாரேனும் கிண்டல் செய்தால் அவரையே நாம் மறப்போம். கவலை வேண்டாம். எல்லாவவற்றையும் மறந்து நம் சந்தோசமாக இருப்போம். மறதி ஒரு அருமையான வரப்ப்ரசாதம். எவ்வளவு இடங்களில் நம்மை காப்பாற்றும் தெரியுமா? so ரிலாக்ஸ்.

Chitra said...

சோதனை என்னவென்றால் என்னை விசாரிக்கிற அத்தனை பேரும் துல்லியமாய் என் பனியன் சைஸ் முதல் சொல்லிவிடுகிறார்கள். ........உங்களுக்குள் தூங்கி கொண்டிருந்த நகைச்சுவை மிருகத்தை தட்டி எழுப்ப மறக்காம நல்ல காமெடி இடுகை தந்ததுக்கும் நன்றி.

Thenammai Lakshmanan said...

!

//(இந்தப் பதிவை எழுதி வைத்து ரொம்ப நாளாச்சு.. பிளாகில் போட இப்பதான் நினைப்பு வந்தது..)//

ஹாஹாஹா இதுதான் ஹைலைட் ரிஷபன்

வெங்கட் நாகராஜ் said...

மறதிக்கு ஒரு நல்ல மருந்து இருக்கு. ஞாபகம் வந்ததும் உங்களுக்கு எழுதி அனுப்புறேன், மறந்துடாம இருந்தா!

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது, அதுக்கு ஏதாவது மருந்து இருக்கா?

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

R. Jagannathan said...

Very hilarious piece! I am in the same league - perhaps worse as I am losing my memory for names rapidly. It is a torture / great embarassment trying to recollect a face and fix a name to it without offending the other party. Naan yeppavume peN kuzhanthigalai - Kannukkutti / Pattukkutti enru safe-aaga kooppittu viduvaen! - R. Jagannathan

வை.கோபாலகிருஷ்ணன் said...

படித்து மகிழ்ந்ததும் உடனே பாராட்ட நினைத்தேன். ஆனால் மறந்து விட்டேனா என்பதும் மறந்து விட்டது. மீண்டும் மறப்பதற்குள் அனுப்பி விடுகிறேன். சுவையான நகைச்சுவை. பாராட்டுக்கள்.