January 25, 2010

யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்

எதிர்ப்படும் எந்தக் குழந்தையையும்
தொட்டு கொஞ்சி நகரும் பெண்ணுக்கு மட்டும்..
மணமாகிய பின் ஏன்
குழந்தை இல்லை?
பிறந்த வீடு வந்துதிரும்பும்போது எல்லாம்
'அவளுக்குப் பிடிக்கும்' என்று
ஒரு பை நிறைய விளையாட்டு சாமான்கள்..
தின்பண்டங்கள்..
'யாருக்குடி' அம்மா கேட்பாள்.
'பக்கத்து வீட்டு வாலு'
எப்போது மடி கனக்கும் என்று
மனம் கனத்துப் போகும் அம்மா.
'அசடு' என்று பெயர் வாங்கியசிநேகிதன் கூட
இரு குழந்தைகளுடன் போகிறான்.
திறக்காத சொர்க்க வாசல்
மழலைக்கு ஏங்கும் மனம்
கனவில் வருடி விட்டுப் போன
பிஞ்சு விரல்..
யார் குழந்தையோ
'அம்மா' என்று அழைக்கும்போது..
வீதியில் கவனிப்பாரற்று
ஓடி வரும் மழலையை
வாரி எடுத்து ஒப்படைக்கும்போது..
எலுமிச்சை மூடியில்விளக்கு எரியும்போது..
கண்மூடி இறைஞ்சும்போது..
இருட்டில் யாரும் கவனிக்கவில்லை என்கிற
நம்பிக்கையில்சுதந்திரமாய் அழும்போது..
நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை!

14 comments:

மாதவராஜ் said...

நல்ல கவிதைத் தெறிப்புகள் கொண்ட வரிகள். இன்னும் வரிகளையும், வார்த்தைகளையும் குறைத்து, அர்த்தத்தை அடர்த்தியாக முயற்சிக்கலாம் போலத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் நண்பரே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எழுதின உங்களுக்கே தெரியலே...
எங்களுக்கு எப்படீங்க தெரியப் போகுது?

Rekha raghavan said...

//திறக்காத சொர்க்க வாசல்
மழலைக்கு ஏங்கும் மனம்
கனவில் வருடி விட்டுப் போன
பிஞ்சு விரல்//

மனதை கணக்கச் செய்த வரிகள்.அருமையான கவிதை.

ரேகா ராகவன்.

செ.சரவணக்குமார் said...

நெகிழ வைத்த கவிதை நண்பா. மழைக் கவிதையிலிருந்து உங்களை வாசிக்கிறேன், அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

Chitra said...

நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை!
.............உண்மைங்க. அந்த சோகம் கொடியதுதான்.

வசந்தமுல்லை said...

ரிஷபன், இந்த பதிவிற்கு என் வலை பகுதியில் உங்களுக்கு ஒரு பரிசு.(வா வா என் தேவதையே !) காத்திருக்கிறது !!

LinuxAddict said...

People need to stop big time worrying about not having their own kids if they cant and start adopting. Just Saying...

நிலாமதி said...

உண்மைங்க. அந்த சோகம் கொடியதுதான்......

சொல்லச் சொல்ல said...

சமுதாயப் பார்வைக்காகவே குழந்தைக்காக எங்கும் பெண்கள் கூடுதல். இப்படி sentiment பேசுவதாலேயே உசுப்பேத்தி உசுப்பேத்தி தன்னைத்தான் நொந்து கொள்பவர்களும் பலர்.
உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் இவர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தாமல் நம்பிக்கை தரும்படியாக எழுதினால் நிச்சயம் இதைத்தாண்டி வேறு விஷயங்களில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும்.

குழந்தை இன்மையால் சிகிச்சைக்காக சில கேள்வி ஞானத்தைக் கொண்டு மருத்துவரிடம் செல்வர். அங்கும் உடல் வேதனைகளுக்கு உட்படுவர். குழந்தை உருவாகாமல் மாதம் ஒரு முறை வருவது அதனினும் உடல் உபாதை.
இந்த இரகசிய கண்ணீரை யாரறிவார்.

ஹேமா said...

இந்தக் கண்ணீருக்கு பின்னால் சோகம் நிறையவே இருக்கும்.எங்கள் பெண்களைப் பொறுத்தவரை தன் கணவன் குறையைத்தான் வெளியில் சொல்லாமல் மறைப்பார்கள்.அழுகை அதுவாய்த்தானிருக்கும்.வைத்தியரிடம் மனம் விட்டுப் பேசச்சொல்லுங்கள்.

கே. பி. ஜனா... said...

கவிதை நல்ல உருக்கம்...

திவ்யாஹரி said...

எனக்காகவும் என்னை போல உள்ளவங்களுக்க்காகவும் எழுதியது போல உள்ளது.. கண்ணீரைத் துடைக்க பிஞ்சு விரல் வருமா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை

உண்மை தான் நண்பரே !
அந்த வருத்தம்
பாதிக்கப்படுவோருக்கு
மட்டுமே முழுமையாகத்
தெரியும்.

vidivelli said...

அருமையான கவிதை.பிடிச்சிருக்கு