January 26, 2010

காற்று கவிதைகள்


பூட்டியிருக்கிறது கதவு
ஓயாமல் தட்டுகிற
காற்றுக்குத் தெரிய வில்லை
வீட்டார்ஊர் திரும்பும் தேதி.

சின்னப் பிள்ளையின்
பள்ளிப் பையில் ஒளிந்திருக்கிறது
படிக்கவே அவசியமில்லாதகாற்று.

வாகனங்களுக்கு அடியில்
நசுங்குகிற காற்றைப் பற்றி
என்றேனும் யோசித்ததுண்டா?
தீர்வு தெரியாமல் நான்
முகங்கவிழ்த்துத் திரும்பிப் போகிறேன்
அப்போதெல்லாம்.

கலவரப் பகுதிகள் நடுவே
காற்று மட்டும்பயமற்று.
பூமிக்குள் ஒரு போதும்
புதைவதில்லை காற்று...
உள்ளங்கைக்குள் மட்டும்
அடங்குகிறது அன்பில் !
நேசிக்கத் தெரியாத
மனிதரைக் கண்டால்
காற்றுக்குக் கூட என்னமாய்
கோபம் வருகிறது
புழுதி வாரித் தூற்றுகிறது.



நிறைவேறாத என்
ஒவ்வொரு கனவையும்
காற்று சுமக்கிறது
பெருமூச்சாய் !

அத்தனை மொழிகளையும்
தன்னில் சுமக்கிற காற்றுக்குத்
தாய் பாஷை
மௌனம்

வாயேன்..
ஒரு தரமாவது
ஆற்றங்கரை மணலில் நின்று
காற்றை விசாரிப்போம்.
என்னைப் போல
உன்னைப் போல
அதற்கும் வேண்டியிருக்கிறதுசிநேகம்!


16 comments:

மாதவராஜ் said...

ஆஹா... அருமை.... அருமை!

பல வரிகள் அற்புதமாய் இருக்கின்றன...

//அத்தனை மொழிகளையும்
தன்னில் சுமக்கிற காற்றுக்குத்
தாய் பாஷை
மௌன//

//நிறைவேறாத என்
ஒவ்வொரு கனவையும்
காற்று சுமக்கிறது
பெருமூச்சாய் !
//

வாழ்த்துக்கள்!

மாதவராஜ் said...

தமிழ்மணம் பட்டை இணைக்கவில்லையா இன்னும்...

Chitra said...

நிறைவேறாத என்
ஒவ்வொரு கனவையும்
காற்று சுமக்கிறது
பெருமூச்சாய் !
.............ஒவ்வொரு கவிதைகளிலும் காற்று மெல்லிய தென்றலாக வீசுகிறது. ரொம்ப ரசித்தேன்.

Rekha raghavan said...

போங்க சார். ஒரு அருமையான கவிதையை ரசித்து படித்து முடிப்பதற்குள் அதை விட இன்னொரு அருமையான கவிதையை போட்டா? எப்புடி சார் இப்படி?

ரேகா ராகவன்.

வசந்தமுல்லை said...

வாவ் ! காற்றுக்குக்கு கூட நட்பு தேவைப் படுகிறது எனபதை அழகாய் கவிதை வடித்த அன்பு ரிஷபனே! என்ன சொல்ல? அனுபவிக்க மட்டும்தான் தெரிகிறது! ஆனால் சொல்லத் தெரியவில்லை! சென்னை மெரினா பீச்சில் அமர்ந்து கடலுடன் கடற்காற்று மூலம் பேசும்போது கிடைக்கும் சுகம் உண்டே ! அது போல் எங்கும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் திருச்சி காவேரி பாலத்தில் நின்று கொண்டு காற்றுடன்(தென்றலுடன்) அலவலாவும்போது கிடைக்கும் சுகம் இம்! அது ஒரு சுகம்தான்!!!!!!! மொத்தத்தில் யு ஆர் க்ரேட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கே. பி. ஜனா... said...

காற்றுக்கும் கவிதைக்கும் இல்லை வேலி!

ஹேமா said...

எது நல்லாருக்கு என்று சொல்லமுடியவில்லை ரிஷபன்.அத்தனையும் அருமை.

கவிதை=காற்று.

விஜய் said...

உன் கவிதைக்காற்றின் வருடல் சுகம்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

Paleo God said...

மூச்சே நின்னு போச்ச்....

இடதும் வலதுமா...கவிதைகள்.. நானும் உங்கள பார்த்து டிரை பண்றேன்.:))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

’காற்றுக்கென்ன வேலி’ என்கிற பாடல்
அனிச்சையாக ஞாபகம் வந்தது உங்கள்
கவிதையை கண்டவுடன்!!

செ.சரவணக்குமார் said...

//மாதவராஜ் said...

ஆஹா... அருமை.... அருமை!

பல வரிகள் அற்புதமாய் இருக்கின்றன...

//அத்தனை மொழிகளையும்
தன்னில் சுமக்கிற காற்றுக்குத்
தாய் பாஷை
மௌன//

//நிறைவேறாத என்
ஒவ்வொரு கனவையும்
காற்று சுமக்கிறது
பெருமூச்சாய் !
//

வாழ்த்துக்கள்!//

மாதவ் அண்ணனை வழிமொழிகிறேன். தொடர்ந்து நிறைய எழுதுங்கள் நண்பா.

Toto said...

காற்று க‌விதைக‌ள் ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு ரிஷ‌ப‌ன்.

-Toto
roughnot.blogspot.com

கிச்சான் said...

"நேசிக்கத் தெரியாத
மனிதரைக் கண்டால்
காற்றுக்குக் கூட என்னமாய்
கோபம் வருகிறது
புழுதி வாரித் தூற்றுகிறது."


"நிறைவேறாத என்
ஒவ்வொரு கனவையும்
காற்று சுமக்கிறது
பெருமூச்சாய்"


அத்தனை மொழிகளையும்
தன்னில் சுமக்கிற காற்றுக்குத்
தாய் பாஷை
மௌனம்


எனக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது ரிஷபன்
கவிதைகளை படித்துவிட்டு ரசனையில்... மறந்து போகிறேன் கவிஞ்சனை !



வாயேன்..
ஒரு தரமாவது
ஆற்றங்கரை மணலில் நின்று
காற்றை விசாரிப்போம்.
என்னைப் போல
உன்னைப் போல
அதற்கும் வேண்டியிருக்கிறதுசிநேகம்


வாஞ்சையோடு அழைக்கின்ற ஒரு நேச குரலாக உணர்கிறேன்
காற்றை

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரிஷபன் சார் !
உங்களின் கவிதைக் காற்று என்னை
அன்புடன் தென்றலாகத் தழுவிக்கொண்டது.
சுகமாய் உணர்ந்தேன்.
நன்றியுடன் பாராட்டுக்கள்.

Madumitha said...

ரிஷபன்
வெய்யிலுக்கு
இதமாய் இருக்கிறது
உங்கள் காற்று.

Learn said...

//பூட்டியிருக்கிறது கதவு
ஓயாமல் தட்டுகிற
காற்றுக்குத் தெரிய வில்லை
வீட்டார்ஊர் திரும்பும் தேதி.//

அழகோ அழகு அத்தனையும்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in