அம்மாவுக்குக் கோபம் வந்து பார்த்ததே இல்லை. இன்று வாசலுக்குக் குரல் கேட்டது.
"அவளுக்கு புத்தி கெட்டு போச்சா என்ன.. யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்தாளாம்"
கையில் அலைபேசியுடன் நின்ற சரவணன் தடுமாறினான்.
"அவளாத்தான் முடிவு எடுத்திருக்கா.. இப்ப கூட நாம யாராச்சும் வரப் போறோமான்னு கேட்டுத்தான்.."
"ஏய்.. ஒங்கப்பா கேட்டா வெட்டியே போட்டுருவாரு.. பத்து வருஷமா பேச்சு வார்த்தையே இல்லைன்னு ஆயிருச்சு. இவ என்ன துணிச்சல்ல இப்படி முடிவு எடுத்தா?"
"பூரணி ஆபீஸ்ல வேலை பார்க்கற ஒருத்தருக்கு பத்திரிக்கை வைக்க வனிதா வந்திருக்கா. அப்ப பூரணியைப் பார்த்துட்டு அவளாவே வந்து பேசி.. கையிலேயே பத்திரிகையும் கொடுத்துட்டாளாம்.."
அம்மா முகம் செவ செவ என்றிருந்தது.
வனிதா சரவணனின் பெரியப்பா மகள். இரு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை நின்று பல வருடங்களாகி விட்டன. இப்போது பெரியப்பா மகள் வனிதாவிற்குக் கல்யாணம். பூரணி சரவணனின் தங்கை. என்ன தைரியம் இருந்தால் வனிதா, இரு குடும்பத்துக்கும் பிரச்னை என்று தெரிந்தும், பூரணிக்கு பத்திரிகை வைப்பாள்?
"இங்கே கொடுரா.. நானே அவகிட்டே பேசறேன்"
"கட் பண்ணிட்டாம்மா.."
"மறுபடி கூப்பிடுரா"
முயற்சித்து பார்த்து சொன்னான்.
"இல்லம்மா.. ஸ்விட்ச் ஆஃப்னு வருது"
"பாவிமக... வேணும்னிட்டே பண்ணுவா.."
அம்மாவின் தவிப்பு தெரிந்தது வெளிப்படையாக. இனி வீட்டில் இருந்தால் அம்மா நினைத்து நினைத்து ஏதாவது கேட்பார் என்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் சரவணன்.
நண்பன் வீட்டுக்குப் போனாலும் பேச்சில் மனசு லயிக்காமல் பூரணி செய்த காரியம் பற்றியே நினைப்பு.
இரு குடும்பமும் ஒற்றுமையாய்த்தான் இருந்தது. ஒரு சின்ன விவகாரத்தில் சண்டை வெடிக்க உடனே பிளவு. இதில் என்ன கொடுமை என்றால் சரவணனின் பாட்டி கூட பெரிய மகனுக்குத்தான் ஆதரவு. சின்னவனை - சரவணனின் அப்பாவை ஏசி அனுப்பிவிட்டாள்.
அப்பா சொல்லிச் சொல்லி புலம்புவார்.
'அவன் மேல தப்புன்னு தெரிஞ்சும் கிழவி என்னை என்ன பேசிட்டா'
கிழவி காலமானபோது பக்கத்து வீட்டுக்காரர்தான் ஃபோன் செய்தார்.
'துக்கம் கேட்க போனேன்.. அப்பதான் தெரிஞ்சுது.. அவங்க உங்களுக்குக் கூட சொல்லலேன்னு.. மனசு கேட்காம ஃபோன் பண்ணிட்டேன்' என்றார்.
அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் போனார்கள். அதற்குள் சுடுகாட்டுக்கே கொண்டு போய் விட்டார்கள். சரவணனின் அப்பாவும் சரவணனும் அங்கே போனபோது தீ வைத்து விட்டார்கள்.
'என்ன பெரியப்பா..இப்படி செஞ்சிட்டீங்க' என்றான் சரவணன்.
'போடா.. பெரிய மனுசன் மாதிரி பேச வந்திட்ட.. அம்மா சொல்லிட்டாங்க.. இவன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு'
'அது எப்பவோ கோவத்துல சொன்னதுதானே'
'நாங்க சொன்னா சொன்னதுதான்.. வார்த்தை மீறமாட்டோம்'
அவரிடம் பேசிப் பயனில்லை என்று ஆற்றில் முழுக்கு போட்டு திரும்பியாகி விட்டது.
இவ்வளவும் பூரணிக்குத் தெரியும். தெரிந்தும் இப்படி செய்திருக்கிறாள்.
இரவு அப்பா வந்ததும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சரவணன் விழித்தபோது பூரணியே ஃபோன் செய்து விட்டாள்.
"அப்பா.. எப்படி இருக்கீங்க.. பிரஷருக்கு மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுத்துக்கிறீங்களா?"
ஸ்பீக்கர் பட்டனை தற்செயலாக அழுத்திவிட்டார் அப்பா. பூரணி பேசியது எல்லோருக்கும் கேட்டது. அப்பாவின் முகத்தில் லேசாக சிரிப்பு.
"அதெல்லாம் இல்லம்மா. ஒழுங்கா மாத்திரை சாப்பிடறேன்"
"அப்பா.. வனிதாக்கா எங்க ஆபீஸுக்கு வந்தாங்க.. அவங்க மேரேஜாம்.. பத்திரிகை வச்சாங்க. பொது இடம்னு நான் எதுவும் பேசாம வாங்கிட்டேன்பா" சரவணனுக்கு அதிர்ச்சி. எப்படி மழுப்புகிறாள்..
"அப்படியாம்மா.. "
அப்பாகூட எந்த உணர்ச்சியும் காட்டாமல் பேசினார்.
"ஏம்பா.. அவங்க உங்களையும் வந்து பார்த்தாங்களாமே"
அடுத்த அதிர்ச்சி சரவணனுக்கும் அவன் அம்மாவிற்கும். வனிதா இவரைப் பார்த்தாளா..
"ஆமா.. நாதான் என்னால வரமுடியுமான்னு தெரியல.. என் ஆசி எப்பவும் உண்டுன்னு சொன்னேன்"
"என்னையாச்சும் வரச் சொல்லி கெஞ்சி கேட்டாப்பா.. என்ன செய்யட்டும்"
"நீ என்னம்மா முடிவு எடுத்தே"
"போய்ப் பார்க்கலாம்னு"
சரவணன் அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே பார்த்தான்.
"நல்லதும்மா.. அப்படி ஏதாச்சும் தகராறு வந்தா.. எதுவும் பேசாம திரும்பிரு.. வச்சிரவா"
சரவணன் அப்பாவையே பார்த்தான்.
"அப்பா.. என்ன சொன்னீங்க"
கையில் ஐந்தாறு மாத்திரைகள். ஷுகர்.. பிரஷர் என்று. அவற்றைக் காட்டினார்.
"மனுஷன் வாழ்க்கை மாத்திரைலதாம்பா.. இப்பல்லாம். அண்ணனுக்கும் இப்ப உடம்பு சுகமில்லைன்னு கேள்விப்பட்டேன்.. ஒருவேளை அவர் மனசுலயும் மாற்றம் வந்திருக்கலாம்..தப்பைத் திருத்திக்க நினைச்சிருக்கலாம்.. சீரியஸ்னு ஆசுபத்திரில சேர்த்தா டாக்டர் காப்பாத்தி விட்டுரலியா.. வாழ்க்கை இன்னொரு சான்ஸ் எப்பவும் கொடுத்துப் பார்க்கிற மாதிரி நாமளும் கொடுத்துப் பார்க்கலாமே.. அவங்களுக்கு.."
வாழ்க்கை ரகசியத்தை அப்பா எளிமையாகச் சொல்லி விட்ட உணர்வு சரவணனிடம்.
18 comments:
ரொம்ப அருமையான கதை. ending கவிதை டச்ன்னு சொல்லலாம். மாத்திரைல தான் வாழ்க்கை ஓடுது........ம்ம்ம் உண்மைதான்
ஹ்ம்ம் புத்திசாலி .இன்னொரு சான்ஸ் கொடுத்து ஒரு சான்ஸ் வாங்கிவிட்டார் .
நல்லா இருக்கு ரிஷபன் .
கவிதையாய் ஒரு கதை..
அருமை ரிஷபன்
பாராட்டுக்கள் .......
நிஜம் தான். எதார்த்தமான கதை!
இப்படி மட்டும் இருந்துட்டா உறவுகள் அழகா இருக்கும். அருமை ரிஷபன்.
ரொம்ப நல்லா இருக்கு
ரிஷபன்.
"மனுஷன் வாழ்க்கை மாத்திரைலதாம்பா.. இப்பல்லாம். அண்ணனுக்கும் இப்ப உடம்பு சுகமில்லைன்னு கேள்விப்பட்டேன்.. ஒருவேளை அவர் மனசுலயும் மாற்றம் வந்திருக்கலாம்..தப்பைத் திருத்திக்க நினைச்சிருக்கலாம்.. சீரியஸ்னு ஆசுபத்திரில சேர்த்தா டாக்டர் காப்பாத்தி விட்டுரலியா.. வாழ்க்கை இன்னொரு சான்ஸ் எப்பவும் கொடுத்துப் பார்க்கிற மாதிரி நாமளும் கொடுத்துப் பார்க்கலாமே.. அவங்களுக்கு.."
......இந்த மனப்பக்குவம் எல்லோருக்கும் வந்து விட்டால், எவ்வளவு சமாதானமாக உலகம் இயங்கும். அருமையான கதையில் ஆழ்ந்த விஷயங்களை சொல்லி விட்டீர்கள். பாராட்டுக்கள்!
class.. romba nannaa irukku...
உங்கள் சிறுகதையை படித்ததும் காட்சிகளை நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. அது உங்கள் எழுத்தின் மகிமை. அருமையான கதை சார்.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
//சேர்த்தா டாக்டர் காப்பாத்தி விட்டுரலியா.. வாழ்க்கை இன்னொரு சான்ஸ் எப்பவும் கொடுத்துப் பார்க்கிற மாதிரி //
பாடம் இந்த வரிகள்
மனித நேயத்தை அழகாகச் சொல்லும் கவிதை!
நான் ரசித்த கதைகளில் இனி இதுவும் ஒன்றாக இருக்கும் . மிகவும் அருமை நண்பரே !
நல்லவேளை, சிலரைப் போல அவர் இன்னும் வறட்டுப் பிடிவாதத்தோடு இருக்கவில்லை!!
very fine.This shows the life understandings between the relations. Hats off for the kathai!!!!
நல்லதொரு அருமையான கதை. எங்கள் உறவுகளிலேயே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற சந்ததியில் ஏற்பட்ட பகை, என் மூலம் சமீபத்தில் சரி செய்யப்பட்டு இன்று நல்லுறவுகளுடன் அன்பும் பாசமும் துளிர்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கோபத்தில் திடீரென வாய் தவறி பேசிவிடும் வார்த்தைகளால் மிகப்பெரிய பிளவுகள் ஏற்பட்டு விடுகின்றன. யாகாவாராயினும் “நா” காக்க வேண்டும். உங்கள் கதை நிச்சயம் ஒரு சிலரையாவது சிந்தித்து, தங்களை தாங்களே மாற்றிக்கொள்ள உதவிடும்.
மறப்போம், மன்னிப்போம்
மறுபடியும் மலரும்
தாமரையாய் வாழ்க்கை
தலைமுறை தலைமுறையாய்.
விரிந்த கரங்களும், குவிந்த கரங்களும்
வேண்டுவது கூட வேறு வேறு தான் !!
இப்பல்லாம் இந்த மனோபாவம் கொறஞ்சு போய் ரெண்டாவது சான்ஸுக்கே இடமில்லாம வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்துடுத்து ரிஷபன்.நல்ல உணர்ச்சிப்பூர்வமான சம்பாஷனை.
:-)
பெரியப்பா மனசும் மாறி தான் இருக்கும்!!
Post a Comment