May 26, 2010

உறுத்தல்

அலுவலக விலாசத்திற்கு வழக்கமாய் எனக்குக் கடிதங்கள் வருவதில்லை.

அட்டெண்டர் திடீரென ஒரு கடிதத்தை என் மேஜை மீது வீசி விட்டுப் போனதும் முதலில் புரியவில்லை.

"யாருக்கு லெட்டர்" என்றேன்.

"ஒங்களுக்குத்தான்" என்றார் போகிற போக்கில்.

மஞ்சள் கவரில் நீண்ட உறை. பார்த்தாலே உள்ளுக்குள் சற்று உதறும். பத்திரிக்கைகள் திருப்பி அனுப்பும் கதைகள் சாதாரணமாக அலுவலக விலாசத்திற்கு வருவதில்லை. அதெல்லாம் வீட்டோடு சரி. பின் இந்தக் கடிதம் யாரிடமிருந்து.. மாற்றலாகிப் போன நண்பன் எழுதியிருப்பானோ?

வீசிய வேகத்தில் கீழே விழுந்திருந்த கடிதத்தை எடுப்பதற்குள் மனசுக்குள் ஆயிரம் யோசனைகள். குனிந்து எடுத்தேன். பெறுநர் விலாசத்தில் என் பெயர்தான். அனுப்புனர் பெயர் மனோகர் என்றிருந்தது. கீழே வேலூர் சிறைச்சாலை என்ற வார்த்தை என்னை உலுக்கி விட்டது.

"யார் லெட்டர் போட்டிருக்காங்க"

பக்கத்திலிருந்து டைப்பிஸ்ட் கேட்டார்.

"ஃப்ரெண்ட் தான்" என்றேன் அவசரமாக.

கவரைப் பிரிப்பதற்குள் மனக்குரங்கு மறுபடி தாவி வித்தை காட்டியது.'ஏதாவது கதையைப் படிச்சுட்டு திட்டி எழுதியதா?'

கை நடுங்கப் பிரித்தேன்.

'மதிப்பிற்குரிய எழுத்தாளர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.' என்று ஆரம்பித்திருந்தது.

ஆயுள் தண்டனை பெற்ற கைதியாம். சிறைச்சாலை அவரைப் புடம் போட்டுக் கொண்டிருக்கிறதாம். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறாராம். ஓம் முருகா என்று தினம் 108 தடவை எழுதுகிறாராம். ஜெயிலர் ஒரு தடவை கையில் வைத்திருந்த சிறுகதைத் தொகுப்பைப் பார்த்தாராம். படிக்கக் கேட்டிருக்கிறார்.

'உங்கள் கதைகள் எனக்கு இப்படித்தான் அறிமுகம் ஆனது. ஜ்வாலை கதையைப் படித்து விட்டு அன்றிரவு முழுக்க தூக்கம் வராமல் புரண்டேன். அடுத்த கதையினை என்னால் உடனே படிக்க முடியவில்லை. ஜ்வாலை அப்படியே என்னைப் புரட்டி போட்டு விட்டது. எழுத்துக்கு சக்தி உண்டு என்று இதற்கு முன்பு சிலர் சொன்னபோது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போதோ எனக்கு அதன் வலிமை புரிகிறது.'

என்னதான் சொல்லுங்கள்.. பாராட்டு எந்த திசையிலிருந்து வந்தால்தான் என்ன.. அது தருகிற உற்சாகமே தனி.கடிதத்தை இப்படி முடித்திருந்தார்.

'உங்களுக்கு சிரமம் எதுவும் இல்லையென்றால் பதில் போடுங்கள்'

எனக்கும் பதில் எழுத ஆர்வம் இருந்தது. எழுதிவிட்டேன்.

'நன்றி. வேறு புத்தகங்கள் வேண்டுமானால் எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன். விடுதலை ஆனதும் புது வாழ்வு அமைய நல்வாழ்த்துகள்'

விலாசம் எழுத முனைந்தபோது சட்டென்று அறிவு விழித்துக் கொண்டது. 'வீட்டு விலாசம் வேண்டாம். எதற்கு வீண் வம்பு'

பதிப்பகத்திற்குத்தான் எழுதி கேட்டிருக்கிறார். அவர்கள் என் அலுவலக விலாசம் கொடுத்திருக்கிறார்கள். அதுவே இருந்து விட்டுப் போகட்டும்.கடிதத்தை போஸ்ட் செய்து விட்டேன்.

பத்தே நாட்களில் பதில் வந்து விட்டது.

'நீங்கள் பதில் போடமாட்டீர்கள் என்று இங்கு ஒருவர் சொன்னார். ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை, உங்கள் பதில் வருமென்று. என் நம்பிக்கை வீண் போகவில்லை'

ஜானகிக்கு - என் மனைவி - கடிதங்களைக் காட்டினேன்.

'பாவம் அவனுக்கு ரெண்டு தண்டனையா'

'யார் யார் எப்படி இருப்பாங்கன்னு சொல்லவே முடியலே' என்றேன் பொதுவாக.

வீட்டு விலாசமே கொடுத்திருக்கலாம் என்று தோன்றிவிட்டது. மாதம் 3 கடிதங்களுக்கு குறையாமல் கடிதப் போக்குவரத்து. கிருஷ்ணன் பிறப்பு பண்டிகையன்று கைமுறுக்கு, சீடை பார்சல் அனுப்பினேன். நன்றி சொல்லி கடிதம் வந்தது. விஷயம் இத்தோடு முடியவில்லை. என்னிடம் அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அல்லது அவன் என்னைத் தொடர்பு கொண்டதே இந்த காரணத்திற்குத்தானோ? அவர் விரித்த புகழ் வலையில் சுலபமாய் விழுந்திருக்கிறேன்.

'அய்யா.. எனக்கு உங்களால் ஒரு உதவி ஆக வேண்டியிருக்கிறது. ஒரு விலாசம் தருகிறேன். உங்கள் பகுதிதான். மாதாமாதம் உங்கள் பெயருக்கு எம்.ஓ என்னிடமிருந்து வரும். அந்த விலாசத்தில் உள்ளவர்களிடம் சேர்க்க வேண்டும். செய்ய இயலுமா? உங்கள் பதில் பார்த்து எம்.ஓ. அனுப்புகிறேன். சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும்'

ஜானகியிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.

"புரியவே இல்லை. இவரே நேரடியாக அனுப்பிர வேண்டியதுதானே" என்றேன் குழப்பமாய்.

டிவி சீரியல் பார்க்கிற ஜோரில் பதில் சொன்னாள்.

"அவன் ஏதோ தப்பு பண்ணிட்டு உள்ளே போயிருக்கான். அவங்க குடும்பம் அவமானம் தாங்காம ஊரை மாத்தி இங்கே வந்திருக்காங்க போல. அவனுக்கு மனசாட்சி உறுத்துது. ஜெயில்ல சம்பாதிக்கிற பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைக்கிறான்னு நினைக்கிறேன். நேரடியா கொடுத்தா வாங்க மாட்டாங்க. உங்க மூலமா ஏதாச்சும் பொய் சொல்லி பணம் தர முயற்சி பண்ணறான்னு நினைக்கிறேன்"

அவள் சொன்னதில் லாஜிக் இருந்தது.ஆனாலும் நான் வெறும் சம்மதம் மட்டும் சொல்லி கடிதம் எழுதவில்லை. என் சந்தேகத்தையும் சேர்த்து எழுதினேன்.

'அய்யா.. என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. என்மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்குமானால் செய்து கொடுங்கள். நிச்சயமாக என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது'

அடிமனதில் எல்லோருக்கும் எப்போதாவது ஒரு த்ரில் வேண்டியிருக்கிறது. எனக்கு இப்போது அந்த நேரம் போலும்.

'முழு சம்மதம்' என்று எழுதினேன்.மாதாமாதம் எம்.ஓ. வர ஆரம்பித்தது. முதல் மாதம் அவன் கொடுத்த விலாசத்திற்கு போனேன். விதவைத்தாய், 3 பெண்கள், கடைக்குட்டி பையன். குடும்பத்தலைவர் புகைப்படம் சந்தனப் பொட்டுடன் சுவரில் தொங்கியது.

"உங்க விலாசம் ஒருத்தர் கொடுத்தாரு.. உங்க குடும்பம் மேல அக்கரை உள்ள ஒருத்தர். நாங்க உதவி தேவைப்படற குடும்பத்திற்கு சேவை செய்யற அமைப்பு வச்சிருக்கோம். இது இனாம்னு நீங்க நினைக்க வேணாம். நல்ல நிலைமைக்கு வந்ததும் நீங்களும் இந்த அமைப்புக்கு பணம் தரலாம். அடுத்தவங்களுக்கு உதவலாம்." என்றேன்.

எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டார்கள். மூத்த பெண் வந்து தொகையை வாங்கிக் கொண்டாள். எனக்கு காப்பி கொடுத்து உபசரித்தார்கள். என் வீட்டு விலாசம் கொடுத்தேன்.

அரை மணி நேரம் பேசி விட்டுத் திரும்பியபோது மனசு நிறைந்திருந்தது.

முதலில் நான் ஏன் தயங்கினேன் என்று கூட வெட்கப்பட்டேன். நாம், நம் குடும்பம் என்று ஒரு வட்டத்தில் சுழல்கிறோம். அதை விட்டு விலகி வந்து பிறர் நலம் நினைக்கும்போது அதனால் வரும் மன நிறைவே தனி. மனோகர் என்னை ஒரு புது அனுபவத்திற்கு தயார் செய்திருக்கிறார்.

ஜானகிக்கும் அவர்களைப் பிடித்துப் போய் விட்டது.

'அண்ணி.. அண்ணி' என்று அவர்கள் உறவு கொண்டாடுவதை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.

"சொல்லிட்டீங்களா.. மனோகர்தான் பணம் தரார்னு"

பதறி விட்டேன்.

"ஊஹூம். நீயும் சொல்லிராதே. மனோகர் அனுமதி தருகிறவரை வாயைத் திறக்கக்கூடாது"

எழுத்தாளனுக்கே உரிய அடுத்த அரிப்பும் வந்து விட்டது.'இதை அப்படியே ஒரு கதையாக்கினால் என்ன?'முதலில் முழு மனசாய் எழுதமுடியவில்லை. மனோகர் என்னைப் பற்றி தப்பாக நினைக்கலாம். அல்லது அவன் உதவி செய்கிற குடும்பத்திற்கு உண்மை தெரிந்து விடக் கூடும். எழுத வேண்டும் என்கிற என் ஆர்வத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எழுதி விட்டேன். ஜானகியிடம் படிக்கக் கொடுத்தேன்.

"என்னை மிரட்டிட்டு நீங்க கதையாவே எழுதிட்டீங்களா?"

"எனக்கு இந்த தீம் பிடிச்சுப் போச்சு.. அதான்"

"இப்ப என்ன செய்யப் போறீங்க"

"பத்திரிகைக்கு அனுப்ப முடியாது. மனோகர் தப்பா நினைச்சுக்குவார்"

அலுவலகத்தில் ஏதோ வேலைக்கு நடுவில் அந்த திடீர் யோசனை.'கதையை மனோகருக்கே அனுப்பினால் என்ன'அவ்வளவுதான் யோசனையை உடனே செயலாக்கி விட்டேன். வழக்கமாய் உடனே பதில் வந்து விடும். பதினைந்து நாட்களுக்குப் பின்னும் பதில் இல்லை. எனக்குள் சங்கடமானது. என்மேல் நம்பிக்கை வைத்திருந்த ஒருவரை ஏமாற்றி விட்டேனா.

மறுபடியும் அந்தக் கதையின் காப்பியை எடுத்துப் படித்துப் பார்த்தேன்.சந்தர்ப்பவசத்தால் ஜெயிலுக்குப் போன ஒருவன் தன் நண்பன் மூலமாக அநாதரவாக விட்டு வந்த தன் குடும்பத்திற்கு உதவுகிறான். உண்மை தெரிந்தபிறகு அவனை சபித்துக் கொண்டிருந்தவர்கள் விடுதலையாகி வரும் நாளுக்காகத் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று முடித்திருந்தேன்.

'சிறைப் பறவைகள்' என்று தலைப்பு.

'நெஜம்மா நாங்கதான் ஜெயில்ல இருக்கோம். அவனைப் பார்க்காத சோகத்தை தண்டனையா அனுபவிச்சுகிட்டு சிறைப் பறவைகளா காத்திருக்கோம்' என்று முடித்திருந்தேன்.

மீண்டும் படித்தபோது தவறு எதுவும் புலப்படவில்லை. இன்னொரு கடிதம் எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியது.20 வது நாள் பதில் வந்தது.

'அருமையான கற்பனை. ரசித்துப் படித்தேன். உடனே பதில் போடாததற்கு மன்னிக்கவும். எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. கடும் ஜுரம். இன்றுதான் முழுமையாகக் குணம் அடைந்தேன். உடனே உங்களுக்குப் பதில் எழுதி விட்டேன்'

ஆனால் அந்தக் கதையைப் பிரசுரத்திற்கு அனுப்பலாமா என்பதற்கு பதில் இல்லை. ஜானகியிடம் காட்டினேன்.

"வேணாம்னா சொல்லியிருப்பாரே" என்றாள்.

எனக்கு அதில் திருப்தி வரவில்லை. மனோகர் என் முடிவிற்கு விட்டுவிட்டதாகத் தோண்றியது. அவன் வெளிப்படையாக சம்மதம் தராதபோது எனக்கும் அனுப்ப மனம் வரவில்லை.

சந்தானம் - என் அலுவலக நண்பர் - கேட்டார்.

"நேற்று உங்களை ராம்நகர் பக்கம் பார்த்தேன். அங்கே யார் இருக்காங்க"

நெருங்கிய நண்பர்தான். சொல்லக்கூடாது என்று மறைத்து வைத்திருந்தது சட்டென்று வெளிப்பட்டு விட்டது. ரகசியம் காப்பதில் எனக்கு அத்தனை சாமர்த்தியம் இல்லைதான்.

"என்ன ஆச்சர்யம் பாருங்க. சொந்தக் குடும்பத்திற்கே இன்னொரு நபர் மூலம் உதவி செய்ய வேண்டியிருக்கு. இதுதான் விதி"

சொன்னபிறகு சத்தியம் வாங்கிக் கொண்டேன். 'யார்கிட்டேயும் சொல்லிராதீங்க'

இரண்டு நாட்கள் கழிந்தன.வீடு திரும்பியபோது மனோகர் உதவுகிற குடும்பத்து மூத்த பெண் என் வீட்டில் காத்திருந்தாள். ஜானகியிடமும் பதற்றம்.

"ஏதாச்சும் சாப்பிடக் கொடுத்தியா" என்றேன்.

"எதுவுமே வேணாம்னு சொல்லிட்டா. என்ன விஷயம்னு கேட்டா பதிலே இல்லை. நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டு பேசாம உட்கார்ந்திருக்கா"

"என்னம்மா.. யாருக்காச்சும் உடம்பு சரியில்லையா"

"அம்மா உங்களை அழைச்சுகிட்டு வரச் சொன்னாங்க" என்றாள் என் முகம் பார்க்காமல்.

என்ன நிகழ்ந்தது.. திகைப்புடன் போனேன்.என்னை உட்காரக் கூடச் சொல்லவில்லை.

"இனிமேல நீங்க இங்கே வராதீங்க. நீங்க கொடுத்த இந்த மாசப் பணம் இதோ. இதுக்கு முன்னால நீங்க கொடுத்த பணத்தை எப்படியும் திருப்பிக் கொடுத்திருவோம்"

"என்னம்மா.. என்ன ஆச்சு"

"வேணாங்க. எங்களை விட்டுருங்க"

எதுவும் புரியாமல் வெளியே வந்தேன். தெரு முனையில் சந்தானத்தைப் பார்த்தேன்.

"ஒரு தப்பு நடந்து போச்சு" என்றார் தவிப்புடன்

"என்ன"

"நீங்க சொன்னதை அப்படியே என் வீட்டுக்காரியிடம் உளறிட்டேன். அவ சும்மா இல்லாம அந்த வீட்டுல போய் சொல்லிட்டா. அப்புறம்தான் தெரிஞ்சுது. அவங்களோட இந்த நிலைமைக்குக் காரணமே மனோகர்தான்னு."

குடும்பத்தலைவன் இறப்பிற்குக் காரணமாய் இருந்த மனோகர் பிராயச்சித்தமாய் இந்த உதவியைச் செய்திருக்கிறான். என் அஜாக்கிரதையால் தப்பு நடந்து விட்டது. மனோகருக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்.

ஜானகியும் தன் பங்கிற்கு என்னைச் சாடினாள்.

"லேடீஸை குறை சொல்வீங்களே. இப்ப நீங்களே சொதப்பிட்டீங்க"

எழுதிவிட வேண்டியதுதான். மனோகர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க வேண்டியதுதான்.பதில் வருகிறவரை நிம்மதி இல்லை. ஒரு மாதம் கழித்து ஜெயிலரிடமிருந்து பதில் வந்தது.

"மனோகர் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தார். அவர் உடல் நிலை மீண்டும் மோசமாகி ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தோம். உயிர் பிரிந்த கடைசி நிமிடம் வரை உங்கள் நினைவுதான் அவருக்கு. அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் நான் அவருடன் பிறக்க வேண்டும் என்று சொன்னார். அவர் உறவினர்கள் என்று யாரும் இல்லாததால் ஜெயில் நிர்வாகமே இறுதிக் கடன்களைச் செய்து விட்டது. உங்களுக்குத் தகவல் தெரியப்படுத்தவே இந்தக் கடிதம்."

என் கடிதம் மனோகர் பார்வைக்கே போகவில்லை. தபாலில் தவறி இருக்கிறது. கடைசி வரை என்னைப் பற்றி நல்ல நினைப்புடன் இருந்திருக்கிறார்.

ஒரு கைதிக்கு தன் தவறின் பிராயச் சித்தம் தெரிந்திருக்கிறது.

ஆனால் எனக்கு?

20 comments:

பத்மா said...

அருமை ரிஷபன்
நல்ல கதை

settaikkaran said...

கோர்வையாக, குழப்பமின்றி நேரடியாகச் சொல்லப்பட்ட கதை!

கே. பி. ஜனா... said...

மிகச் சிறப்பான கதை! மறக்க முடியவில்லை அவனையும் அவர்களையும்! மனமார்ந்த பாராட்டுக்கள்!
//'பாவம் அவனுக்கு ரெண்டு தண்டனையா' // ஜோர்!
//'யார் யார் எப்படி இருப்பாங்கன்னு சொல்லவே முடியலே' என்றேன் பொதுவாக.//(ஜோர்! ஜோர்!)
--கே. பி. ஜனா

vasu balaji said...

எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உணர்வுபூர்வமான கதை. அருமை.

muthusivakumaran said...

நல்ல ஒரு குறும்படத்திற்கான கதை..

muthusivakumaran said...

நல்ல ஒரு குறும்படத்திற்கான கதை

அம்பிகா said...

நல்ல உணர்வு பூர்வமான கதை.
எழுத்து நடை சிறப்பாக உள்ளது ரிஷபன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கடைசியில் சிறைப் பறவை ரிஷபன் தானா? மனேகரின் அன்புச் சிறையில் !!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை நல்ல விறுவிறுப்பாக இருந்தது.

பனித்துளி சங்கர் said...

ஒரு கைதிக்குள் இருக்கும் உணர்வுகளை அழகாக எழுத்தில் கசியவிட்டு இருக்கிறீர்கள் . என்னை மிகவும் கவர்ந்தது .

க ரா said...

முடிவை ஒரு மாதிரி முன்பே உகிக்க முடிந்தது. இருந்தாலும் நல்ல கதை.

ஹேமா said...

விறுவிறுப்பாய் ஒரு சிறுகதை வாசித்த திருப்தி ரிஷபன்.

Chitra said...

என் கடிதம் மனோகர் பார்வைக்கே போகவில்லை. தபாலில் தவறி இருக்கிறது. கடைசி வரை என்னைப் பற்றி நல்ல நினைப்புடன் இருந்திருக்கிறார்.

ஒரு கைதிக்கு தன் தவறின் பிராயச் சித்தம் தெரிந்திருக்கிறது.

ஆனால் எனக்கு?


..... அருமையாய் ஒரு கதை..... இந்த கதைக் கருவுக்காகவே, உங்களை வெகுவாக பாராட்ட வேண்டும்....

ஹுஸைனம்மா said...

//எழுத்துக்கு சக்தி உண்டு என்று இதற்கு முன்பு சிலர் சொன்னபோது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. //

மிகச் சரியாத்தான் மனோகர் சொல்லிருக்கார். என்னாலயும் இந்தக் கதையிலிருந்து மீள முடியலை!!

வசந்தமுல்லை said...

very good story. keep it up rishaban!!!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நடை. அருமையாகச் சொல்லி இருக்கீங்க சார். மனதைத் தொட்டது.

குட்டிப்பையா|Kutipaiya said...

ரொம்ப இயல்பா, நல்லா இருக்கு ரிஷபன்...

சுந்தர்ஜி said...

கொடுத்த வார்த்தை என்றும் துரத்தும் நம்மை.காப்பாற்றப்படாத சத்தியமும் அதன் தண்டனையும் பற்றி ஒங்க அழகான நடையில் கனமான கதை ரிஷபன்.சபாஷ்.

சாந்தி மாரியப்பன் said...

ரிஷபன், உங்களுக்கு ஒரு விருது காத்திருக்குது இங்கே.

http://amaithicchaaral.blogspot.com/2010/05/blog-post_27.html

butterfly Surya said...

எழுத்தும் நடையும் அருமை.