May 31, 2010

எஸ் எம் எஸ் - பகுதி 4

"இன்னிக்கு டிபன் வேணாம். நான் ஆபீஸ் போகலே" என்றேன் புனிதாவிடம்.

ஏன் லீவு என்று அவள் கேட்பாள் என்றுநினைத்தேன். கேட்கவில்லை. பேசாமல் போய்விட்டாள்.

கண்களை மூடி படுத்திருந்தேன். என்ன செய்யலாம். டெலிபோன்ஸ் நண்பர் சொன்னது போல போலீஸ் உதவியை நாடலாமா. இப்போது போய் அவர்களிடம் சொன்னால் என்ன கேட்பார்கள்?

ஏன் ஸார்.. அதுதான் வேண்டாத எஸ் எம் எஸ் என்று தெரிந்து விட்டதே. பிறகு ஏன் அவனோடு பெண் குரலில் பேசினீர்கள்? என்று கேட்டு விட்டால். உங்க ஸைடுலயும் தப்பு இருக்கு.. என்று சொன்னால்?

எனக்கு தலை சுற்றியது. சைபர் கிரைம் என்று கண்ட நியூஸ் படித்திருந்ததில்.. இதை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று புரிபடவில்லை.

எனக்கு மணி என்று ஒரு நண்பன். பால் வியாபாரம். பொழுது போகவில்லை என்றால் அடிதடியில் இறங்கி விடுவான். யாரையாவது பிடிக்கவில்லை என்றால் முதல் அடி அவனுடையது. மவனே.. நாளைக்கு பால் உனக்கு எங்கையாலதான்.. இது அவனுடைய பஞ்ச் டயலாக்!

என்னோடு ஹைஸ்கூல் வரை படித்தவன். நல்ல மோட்டாவான ஆள். கிளாஸுக்கே தண்ணி அடித்து விட்டுத்தான் வருவான். காலையில் மூன்று மணிக்கே எழுந்து பால் ஊற்றி விட்டு வருவதாலும் 'தண்ணி' மேட்டராலும் கடைசி பெஞ்சில் படுத்துத் தூங்கி விடுவான்.

என்னுடைய கணக்கு நோட்டை கடைசி தினங்களில் வாங்கிப் பார்த்து பாஸ் மார்க் வாங்கி விடுவான். அல்லது வாத்தியாருக்கே பால் ஊற்றுவானோ என்னவோ.

அவனுக்கு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்க உதவி செய்யப் போய் என்னையே வம்பில் மாட்டி விட்டான். பசுமாடு வாங்க லோன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டவில்லை. பேங்க் மேனேஜர் என் நண்பர்தான். அவர் டிரான்ஸ்பரில் இந்த பிராஞ்சுக்கு வந்ததும் நிலுவையில் இருந்த கடன்களை வசூலிக்கக் கிளம்பினார். இவன் கேஸும் அதில் இருந்தது. எனக்கு ஃபோன் செய்தார். "என்ன ஸார், ரெபரென்ஸுல உங்க பேர் இருக்கு.."

"அப்படியா"

பாவி என்னிடம் சொல்லவே இல்லை. அதை விட மோசம்.. அவன் ஃபோட்டோவிற்கு பதில் யாருடைய புகைப்படமோ ஒட்டியிருந்தது. எப்படி அதைச் சாதித்தான் என்று புரியவே இல்லை.

நானும் பேங்க் மேனேஜரும் பேச்சு வார்த்தை நடத்தியதில் எங்கள் பழைய சிநேகத்தை நினைவு கூர்ந்து மேனேஜருக்கு பால் ஊற்றி (வீட்டுக்குத்தான்) கடனைக் கழிப்பதாய் ஒப்பந்தம் ஆனது.

"ஒரே தண்ணி" என்றார் மேனேஜர் பின்னொரு நாள்.

அவனுக்கும் செல் (இப்போது யாரிடம்தான் இல்லை!) இருந்தது.

"டேய்.. மணி" என்றேன்.

"சொல்லுப்பா"

"ஒரு உதவி வேணும்"

"யாரைப் போட்டுத் தள்ளணும்"

"என்கூட வா. என்ன செய்யலாம்னு அப்புறம் சொல்றேன்"

"சரிப்பா"

இப்போது அடுத்த அழைப்பு என் இனிய எதிரிக்கு! அழைத்த உடன் எடுத்துவிட்டான்.

"மெசேஜ் அனுப்பலேன்னு கோபமா" என்றான்.

"பார்க்கணுமே"

"நீல்கிரிஸ் தெரியுமா"

"ம்"

"ஷார்ப்பா பத்து மணிக்கு வந்துரு. ப்ளூ டிரெஸ் மறக்காதே"

மணிக்கு தகவல் கொடுத்து விட்டேன். வந்து பிக்கப் பண்ணிக் கொள்வதாக. இருவருமாய் போனோம். பத்தரை வரை காத்திருந்ததுதான் மிச்சம். எவனையும் சந்தேகப்பட முடியவில்லை. அவன் குறிப்பிட்ட இடத்திற்கு அருகிலேயே நின்றும்.

செல் ஒலித்தது.

"ஸாரிடா.. வெயிட் பண்றியா"

"ம்"

"கோவிச்சுக்காம ஸோனா தியேட்டர் வரியா.. வாசல்லியே பைக் வச்சுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு நிக்கறேன்"

வேறுவழி. போனோம். மறுபடி அரை மணி காத்திருந்ததுதான் மிச்சம். அவன் அழைப்பு மீண்டும்.

"என்னை அடிக்கணும் போல இருக்கா"

நான் பேசவில்லை.

"நிஜமாவே நீ என்னைப் பார்க்க விரும்பறியா.. இல்லே வேறு நோக்கமான்னு எனக்குப் புரியலே. அதனாலதான் இப்படி செஞ்சேன்.."

"என் மேல சந்தேகமா"

"சேச்சே. இப்பதான் புரிஞ்சு போச்சே.. இப்ப உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.."

எனக்குப் புரியவில்லை. எங்காவது நின்று கொண்டு பேசுகிறானா.. சுற்றுமுற்றும் பார்த்ததில் அப்படி யாரும் கவனத்தை ஈர்க்கும்படி நிற்கவில்லை.

"நோட் பண்ணிக்க.. என் அட்ரஸ். நேரா எங்க வீட்டுக்கு வா. நான் இப்ப தனியாத்தான் இருக்கேன்"

விலாசம் சொன்னான். என்னை முழுவதுமாய் நம்பி இருக்க வேண்டும். அவனிடம் இப்போது பரபரப்பு தெரிந்தது. என்னை நேரில் பார்க்கப்போகிற படபடப்பு. குறித்துக் கொண்டேன்.

"எப்படி வருவே.. டூ வீலரா.. ஓட்டுவியா"

"ஓ.. இன்னும் அரை மணில அங்கே இருப்பேன்.."

"வாடா செல்லம்"

மணிக்கு இன்னும் எதுவும் நான் சொல்லவில்லை. இப்போது எடிட் செய்து சொன்னேன். ஆள் யாருன்னு தெரியலே. டார்ச்சர். என் பொம்பளைக் குரலைக் கேட்டு நிஜம் லேடின்னு நினைச்சுகிட்டு மெசேஜ் அனுப்பறான்.. ஃபோன் பேசறான்..

மணிக்கு சுவாரசியம் போய் விட்டது.

"ப்பூ.. இவ்வளவுதானா.. இதுக்கு போயி ஏன் இத்தனை பிளானு.. வூடு பூந்து நாலு தட்டு தட்டி விட்டா சரியாப் போச்சு"

"சரி. வா" என்றேன்.

விலாசம் ஒரு சந்துக்குள் இருந்தது. அழைப்பு மணியை அடித்தேன். மணியை நான்கு வீடுகள் தள்ளி நிற்கச் சொன்னேன். சூழ்நிலை பார்த்து அழைப்பதாய் சொன்னேன்.

"யாரு"

"நான் தான்"

என் பெண்குரலின் கடைசி பிரயோகம்!

"கதவு திறந்துதான் இருக்கு செல்லம்.. உள்ளே வா"

கதவைத் திறந்தேன்.

"உள்ளே வா"

ஹாலில் யாரும் இல்லை.

"இங்கே.. பெட் ரூமில்"

ராஸ்கல்! போனேன். சின்ன அறை. மூலையாக ஒரு கட்டில். பக்கத்தில் ஒரு வீல் சேர். என்னைப் பார்த்ததும் அவன் திகைத்ததை விட என் திடுக்கிடல்தான் அதிகம்.

"நீ.."

"நீங்க"

"மெசேஜ் கொடுத்தது.. பேசினது?"

"லேடி வாய்ஸ்?"

கட்டிலில் அமர்ந்து விட்டேன். இதற்குள் மணிக்குப் பொறுக்க முடியாமல் அவனும் உள்ளே வந்து விட்டான்.

"என்ன தட்டிரலாமா"

அவனுக்கும் ஷாக். "அட.. நாக்காலிப் பய.. இவனா?"

"ஸ்ஸ்.. மணி. கொஞ்சம் பேசாம இரு."

எனக்கு திடீரென ஏனோ ஒரு பொறுமை. விவரித்தேன். என் மனைவி எனக்குக் கொடுத்த மெசேஜ் தவறுதலாய் அவனுக்கு வந்து விட்டதை. என் இரு குரல் திறமையை.

"உங்களால ரெண்டு வாய்ஸ்ல பேச முடியுமா"

"பாடவும் முடியும்"

செருமிக் கொண்டான்.

"எ..னக்கு என்ன சொல்றதுன்னு புரியலே. கடவுள் என்னை இப்படி படைச்சிட்டாரேன்னு நொந்து போயிருந்தப்ப.. அந்த மெசேஜ்.. எனக்கு யார் அன்பாச்சும் கிடைச்சா தேவலை மாதிரி. எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. டிவோர்ஸி. ஆபீஸ் போயிருக்காங்க. என்னைக் கவனிக்க ஒரு அம்மா வருவாங்க. இப்ப அவங்களை நாதான் நீங்க வரதுனால வெளியே அனுப்பிட்டேன். புக்ல படிச்சிருக்கேன். இப்பல்லாம் மெசேஜ் அனுப்பி அதனால வர வம்பு பத்தி எல்லாம். இருந்தும் எனக்குள்ளே ஒரு தைரியம்.. நான் மாட்டிக்க மாட்டேன்னு.. என்னால எதுவும் முடியாது.."

அழுதான்.

"அதனால பைக் ஓட்டுவேன்.. அதைப் பண்ணுவேன்னு பீலா விட்டேன்..என்னை மன்னிச்சுருங்கன்னு சொல்ல மாட்டேன். நான் செஞ்சது தப்புதான். இந்த கொஞ்ச நாள் நிச்சயமா எனக்கு ஒரு சந்தோஷம் கிடைச்சுது.. நான் ஒரு முழு மனுஷன் போல.."

மணி அதட்டினான்.

"ஏண்டா.. மாட்டிகிட்ட உடனே ஏதாச்சும் மழுப்பறியா.."

"மணி பேசாம இரேன்"

"அவரு சொல்றது கரெக்ட் தான். எம்மேல தப்புதான்."

நான் எழுந்தேன்.

"தம்பி.. உன்னை என்ன செய்யறதுன்னு எனக்குப் புரியலை. நீ செஞ்சது விளையாட்டுத்தனமா இருக்கலாம். பட் இதைக் கண்டின்யூ பண்ணா நிச்சயம் பிரச்னையில மாட்டிப்பே. பீ கேர்ஃபுல்"

வெளியே வந்து விட்டோம். எதிரில் ஒரு வயதான அம்மா வந்தார். எங்களைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் போனார்.

மணி கேட்டான்.

"என்ன சும்மா வுட்டுட்டே"

"ஏற்கெனவே அவனை இயற்கையே தண்டிச்சு வச்சிருக்கு. அதுவே போதும்" மணியை விட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். செல் சிணுங்கியது. அவன் தான்.

"ஸாரி ஸார்.. இனிமேல் நான் மெசேஜ் எதுவும் அனுப்பமாட்டேன். உங்க நம்பரை இப்பவே டிலீட் செஞ்சிருவேன்"

"சரிப்பா"

"ஸார்.."

"என்ன"

"எனக்காக.. உங்க லேடி வாய்ஸ்ல ஒரே ஒரு பாட்டு பிளீஸ்"

'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே'

"தேங்க்ஸ் ஸார்"

புனிதா ஹாலில் அமர்ந்திருந்தாள். டிவி திரையில் அவள் கவனம் முழுமையாய் இல்லை என்று புரிந்தது.

அருகில் போய் அமர்ந்தேன். நானும் தப்புதான் செய்து விட்டேன். என்னை அவள் மன்னிப்பாளா..

"புனி.. ஸாரிடா செல்லம்"

செல் ஸ்விட்ச்டு ஆஃப் !(முற்றும்)

14 comments:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

உஸ்.. அப்பாடா.....

அமைதிச்சாரல் said...

எதிர்பாராத திருப்பம்.

வசந்தமுல்லை said...

great

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////////////"ஸாரி ஸார்.. இனிமேல் நான் மெசேஜ் எதுவும் அனுப்பமாட்டேன். உங்க நம்பரை இப்பவே டிலீட் செஞ்சிருவேன்"

"சரிப்பா"

"ஸார்.."

"என்ன"

"எனக்காக.. உங்க லேடி வாய்ஸ்ல ஒரே ஒரு பாட்டு பிளீஸ்"

'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே'
////////


இந்த இடம் என்னை மெய் மறக்க செய்துவிட்டது மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

K.B.JANARTHANAN said...

விறு விறு கடைசி வரை! - கே.பி.ஜனா

ஹேமா said...

படபடப்பு எஸ்.எம்.எஸ்.
பாராட்டுகள் ரிஷபன்.

வெங்கட் நாகராஜ் said...

எதிர்பாரா முடிவு - எஸ்.எம்.எஸ் விருவிருப்பான தொடராக இருந்தது.

narumugai said...

ஹாய் ரிஷபன்..

உங்களின் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகிறேன்.. நல்ல எழுத்து நடை தொடருங்கள்..

பட் மற்றுதிறனாளிகளை குத்திக்காட்ட வேண்டாம்.. நீங்கள் அவரை ஒரு சராசரி மனிதனாகவே தண்டித்திருக்கலாம்.. எந்த மாற்றுத்திறனாளியும் உங்களின் கருணையை எதிர் பார்ப்பது இல்லை அவர்களை சமமாக கருத வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்..

நன்றி.ஒரு சாரி என் கருத்தில் தவறு இருப்பின்..

www.narumugai.com

ஹுஸைனம்மா said...

ம்ம்.. தப்பு செய்துட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா?ன்னு சொல்லவும் பயமாருக்கு!! பதிவுலகம் இருக்கும் இப்பத்திய நிலைமை அப்படி!!

ரிஷபன் said...

பட் மற்றுதிறனாளிகளை குத்திக்காட்ட வேண்டாம்.. நீங்கள் அவரை ஒரு சராசரி மனிதனாகவே தண்டித்திருக்கலாம்.. எந்த மாற்றுத்திறனாளியும் உங்களின் கருணையை எதிர் பார்ப்பது இல்லை அவர்களை சமமாக கருத வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்..

நன்றி.ஒரு சாரி என் கருத்தில் தவறு இருப்பின்..
---நறுமுகை

நன்றி நறுமுகை..
தயவு செய்து என் முந்தைய பதிவுகளைப் படியுங்கள்..

ஃபிக்‌ஷனில் தேவை/சூழலுக்கேற்ப சில நிகழ்வுகளை/உரையாடல்களை அமைக்க வேண்டியதாயிருக்கிறது..

நான் கருணை காட்டவில்லை.. அவர்களை நேசிக்கிறேன்..

Matangi Mawley said...

இப்போதுதான் நான்கு பகுதிகளையும் படித்தேன். மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. நல்ல திருப்பம்! நல்ல எழுத்து!

kudos!

VAI. GOPALAKRISHNAN said...

/ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே.../தங்களின் கதையின் ஒவ்வொரு வரிகளும் சொல்கிறதே....ஒரு ராங்க் நம்பரினால் தொடர்ச்சியாக எவ்வளவு தொல்லைகள் என்று; நல்ல கற்பனை; தொடர்ச்சியாக விறுவிறுப்பு அளித்தது. பாராட்டுக்கள்.

vasan said...

உங்க‌ளின் நாயக‌ன் ம‌ணைவியை (SMS)க்காக,
ச‌ந்தேகிக்கிறான் என்ற‌துமே, க‌தையை தெட‌ர்ந்த‌லும்,
ஏனே ர‌‌சிக்க‌ முடியாம‌லாகி விட்ட‌து, ரிஷப‌ன். சாரி.

Ponkarthik said...

சகா கதையின் நடை அருமை சகா!! ஆனால் முடிவின் நடை வைத்து முடிவை கணித்து விட்டோம் நானும் என் நண்பர்களும். வாழ்த்துக்கள் சகா!