June 21, 2010

தாமரைக் குளம்


எங்கள் கிராமத்திற்கு வருடத்தில் இரண்டு தரம் நிச்சயம் போய் விடுவோம் . ஒன்று பொங்கலுக்கு மறுநாள் .. அடுத்தது நவராத்திரி முதல் நாள்.

போகிற வழியில் .. அதுவும் கிராமம் நெருங்கும் 30 கிலோ மீட்டர்களில் தென்படுகிற குளங்கள் .. என்ன அழகு!

சில இடங்களில் கொஞ்சம் சின்னதாய் .. சில இடங்களில் சற்றே பெரிதாய் நீர் தளும்பிக் கொண்டு .. வட்டம் வட்டமாய் தாமரை இலைகள் .. பூக்கள்..

சிவப்பு தாமரைப் பூ .. வெள்ளைத் தாமரைப் பூ ..

எங்கள் கிராமத்திலேயே ஓர் குளம் கிழக்கு பகுதியில் உண்டு.. அங்கும் தாமரைப் பூக்கள் ..

'இறங்கிடாதடா.. கொடி சுத்திக்கும்' என்று சிறு வயசில் மிரட்டி கரையிலேயே நிற்க வைத்து விடுவார்கள். குளத்தின் நாலு பக்கமும் குளிக்க இறங்கி தண்ணீர் சாலை போல இரு புறமும் தாமரைக் கொடிகள் நடுவே தெரியும்.

தாமரையின் வாசனையே தனி. அந்த இலையில் சாதம் சாப்பிட்டால் அது ஒரு ருசி. தாமரையும் துளசியும் கலந்து மாலை கட்டித் தருவார்கள். அதன் அழகே அலாதி .

இப்போதும் கிராமம் போகிறோம். அந்தக் குளங்கள் எங்கே என்று புரியவில்லை..

இருக்கும் குளங்களிலும் தாமரையை காணோம் முன்பு போல.

அதற்குப் பதிலாக செல் போன் டவர் .. தொலைக் காட்சிப் பெட்டிகள்.. புகை கக்கி போகும் வாகனங்கள் ..

எனக்குத் தெரிந்து இப்போது இருப்பதெல்லாம் வளர்ந்த நகரங்கள்.. வளர்கிற நகரங்கள்.. உண்மையான கிராமம் அதன் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போவதாய்..


23 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம்..ரிஷபன்.. நாம் கிராமங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்!
இங்கு எல்லாமே tier1,tier2,tier3 cities தான்!!

Rekha raghavan said...

இன்னும் சிலவருடங்களில் ஏரி,குளம்,குட்டை போன்றவற்றை நாம் படங்களில் பார்த்து திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

ரேகா ராகவன்.
(now at Los Angeles)

ஹ ர ணி said...

அன்புள்ள ரிஷபன்....
காரைக்குடி வகுப்பு எடுக்கும்போகும் போதெல்லாம் வழிநெடுக அடர்ந்த இலைகளோடும் பச்சைபசேல்னு உயர்ந்த காம்பின்மீது முருகன் கை வேல்போல தோற்றத்தில் தாமரைப்பூவுமாக குளங்களைப் பார்க்கும்பொழுது காரைக்குடி மக்கள் மேல் உயர்ந்த மதிப்பு வந்துவிட்டது. இன்றும் உங்கள் தாமரைக்குளங்கள் எனக்குள் அதை நினைவூட்டிவிட்டது. குளங்கள் எல்லாம் நடுகற்கள் நடப்பட்ட மயானங்கள் ஆகிவிட்டன ரிஷபன். நாம் சொல்லித்தான் புலம்பவேண்டும். ஆனால் நம்முடைய புலம்பலுக்கு நிச்சயம் ஒரு வழி பிறக்கும். எழுதுங்கள். வாழ்த்துக்கள். அன்புடன் உறரணி.

ஹ ர ணி said...
This comment has been removed by the author.
vasu balaji said...

தாமரைக்கும் வந்தாச்சா கேடு:(

ஹேமா said...

இயற்கை அழிவுகள்.கிராமங்களின் அழிவு பற்றி இந்த வார நீயா நானா வில்கூடக் கதைத்திருந்தார்கள்.

Chitra said...

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டவில்லை...... ஆனால், நவீனமாக்குதலின் சீர்கேடுகள் ஒட்டி விட்டதே..... ஓட்டி விட்டதே..... :-(

சாந்தி மாரியப்பன் said...

நுரையீரலை விற்று வயிற்றை மட்டும் வாங்கிக்கொண்டிருக்கிறோம் :-((

செந்தில்குமார் said...

உண்மைதான் ரிஷபன்

எங்கெ கொண்டுபோய் விடுமோ இந்த மாற்றங்கள் நினைத்தால் நெஞ்சு கொதிக்குது.....

சுந்தர்ஜி said...

பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும் அதிகாலை. ஒரு புறம் மாடுகள். மறுபுறம் நாங்கள்.குளத்தையே ரெண்டாக்கி இருக்கும் அல்லிமொட்டுக்களையெல்லாம் மாலையாக்கி பிடித்த பெண்களிடம் ரகஸ்யமாய்க் கொடுத்து வீடு திரும்பும் நாட்களை நினைவு ’படுத்தி’விட்டீர்கள் ரிஷபன்.

வெங்கட் நாகராஜ் said...

மரங்கள், நீர்னிலைகள் எதையுமே விட்டு வைக்கப் போவதில்லை இவர்கள். வருந்த வைக்கும் நிகழ்வுகள். இதற்கு முடிவு?

VELU.G said...

நல்ல பதிவு ரிஷபன்

vasan said...

இத்த‌கைய‌ இய‌ற்கை இருக்க‌ வேண்டித்தான்,
முன்னோர்க‌ள், க‌ண‌ப‌தி, ல‌ஷ்மி, சர‌ஸ்வ‌தியை,
செந்த‌ம‌ரை, வெந்தாம‌ரைக‌ளில் இருத்தி வ‌ண‌ங்கின‌ர்.

நம்ம‌வ‌ர்க‌ள், ச‌ர‌ஸ்வ‌தியை கான்வென்டிலும்,
த‌னியார் ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்திலும் ல‌ஷ்மி ஆக்கிவிட்டார்க‌ள்.
ல‌ஷ்மியை, புராத‌ன‌ ஆதி மலைக‌ளிலும்,
பூத‌க‌ர‌ ஆலைக‌ளிலும், தோண்டித் துருவி தேட‌
ச‌ர‌ஸ்வ‌தியை ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌ர்க‌ள்.

ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

(1) செந்தாமரையே....செந்தேன் நிலவே...
(2) தாமரைக்கன்னங்கள் .. தேன் மலர்க் கிண்ணங்கள்.... என்றெல்லாம் பாடி பூரித்துப்போனது ஒரு காலம்.

என்ன செய்வது? காலம் மாற மாற காட்சிகளும் மாறிவருகின்றன. பசுமையான,நிம்மதியான,எளிமையான கிராமங்களும், வயல்களும், ஏரிகளும், குளங்களும் குறைந்து தான் வருகின்ற்ன.

Madumitha said...

நாம் இழந்தது தாமரை
மட்டும்தானா?

வசந்தமுல்லை said...

it's nice to see and study the post!!!!

Santhini said...

இயற்கை அதன் உருவத்தை, பசுமையிலிருந்து....கட்டிடங்களாய் மாற்றிக் கொண்டிருப்பதை சொல்லும் ஒவ்வொரு பதிவும்
நெஞ்சை நோக அடிக்கிறது

கே. பி. ஜனா... said...

//தாமரையின் வாசனையே தனி.// அது நினைவுக்கு வருகிறது!

கே. பி. ஜனா... said...

//தாமரையின் வாசனையே தனி.// அது நினைவுக்கு வருகிறது!

ஹுஸைனம்மா said...

//எங்கள் கிராமத்திற்கு வருடத்தில் இரண்டு தரம் நிச்சயம் போய் விடுவோம் . //

எல்லாரும் இப்படித்தான் கிராமத்தைவிட்டு வெளியே வர நேரிடுகிறது; அதனால்தான்..

//உண்மையான கிராமம் அதன் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போவதாய்.. //

:-)))))

துரோகி said...

:-(

அண்ணாமலை..!! said...

எங்க ஊருலயெல்லாம் இன்னும் தாமரைக்குளம் இருக்குதே!!
ஆனா, தண்ணியத்தான் காணோம்!
தண்ணீர் வர்ற வழியெல்லாம் அடைபட்டுப் போச்சுங்க!
நல்ல பதிவு ரிஷபன்!

Matangi Mawley said...

உண்மை.. எனக்கும் கிராமங்களுக்குப் போகவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் அதற்கு வாய்ப்பு அமையவில்லை.
தாமரை இலையில் சாப்பிட்ட அனுபவம் உண்டு. நீங்கள் சொல்லி இருப்பது போல், அதன் ருசி தனி! அருமை அருமை!