October 29, 2010

மணமகள் அவசரத் தேவை

மேளச்சத்தம் கேட்டது. முகூர்த்த தினங்கள் ஆரம்பித்து விட்டன. ஒருவித எரிச்சலுடன் புரண்டு படுத்தேன்.

கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்து வீட்டில் குடி வந்தது தப்பு என்று மனசு முனகியது.முதல் கேசட் நாதஸ்வரம் அப்புறம் 'என்னைத் தாலாட்ட வருவாளா' என்று விடியற்காலையில் ஸ்பீக்கர் அலறும். காலையின் சொகுசுத் தூக்கம் அவுட்.

அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். என் உயரத்திற்கும் குறைவான காம்பவுண்டு சுவர். அந்தப் பக்கம் கல்யாண மண்டபம். சிரமமின்றி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.சமையலறை துல்லியமாகத் தெரியும். எல்லா வித வாசனைகளும் வீசும்.

சுவரை ஒட்டிய இறுதி மூலையில் வரிசையாய் பாத்ரூம்கள். வரிசையாய் அவஸ்தை மனிதர்கள் தெரிவார்கள். 'இந்த மாதம் இன்னும் எத்தனை முகூர்த்தங்கள்' என்று அலுப்புடன் பிரஷ்ஷைக் கையிலெடுத்த அந்த வினாடியில் என் வாழ்வையே திசை திருப்பும் சம்பவம் நிகழ்ந்தது.

காம்பவுண்டு சுவரை மீறித் தெரிந்த முகம் எனக்குப் பரிச்சயம் இல்லாதது.

"ஸார்."

முதலில் எவரையோ என்று நினைத்தவன் குரலின் அழுத்தம் ஸ்பீக்கர் இரைச்சலை மீறிக் கேட்க, திரும்பினேன்.

"இந்தாங்க காப்பி."

பில்டர் காப்பியின் மணம்.

"எனக்கா!"

"பிடிங்க ஸார். என்க்கு நிறைய வேலை இருக்கு. ஆங்... அப்புறம்... டிபன் ரெடியானதும் கொண்டு வரேன். நீங்க எட்டு மணிக்குத் தானே கிளம்பணும்?"

அடக்கடவுளே. இது என்ன புதுக் குழப்பம்.

"ஸார். நீங்க தப்பா... நான் இங்கே குடியிருக்கிறவன்"

மறுக்க முயன்றேன்.

"உங்க பேர் சிவராமகிருஷ்ணன்தானே."

"ஆமா."

"அப்ப காபியைப் பிடிங்க. டிபன் தர வரும்போது டபரா செட்டை வாங்கிக்கறேன்."

போய்விட்டான்.அதிர்ஷ்டம் காம்பவுண்டு சுவரை மீறி அடிக்கிறதா? எடுத்துக் குடிக்கலாமா? வேறு பிரச்சினைகள் வருமா?ஊசலாடும் மனதை காபி ஆசை வென்றது.

வாய் கொப்பளித்து காபி குடித்ததும் உடம்பு முழுக்க புத்துணர்ச்சி பரவியது.

இங்கே ஒரு தகவல் சொல்ல வேண்டும்.

பக்கத்துக் கல்யாண மண்டப நீளத்துக்கு நான் குடியிருக்கிற வீடும் அமைந்திருக்கிறது. மெயின் வாசலில் சொந்தக்காரர் குடியிருக்க, வீட்டின் வலது பக்க நடை பாதை வழியாய் வந்தால் எனக்கு அமைந்த வாடகை போர்ஷன்.

என்னைத் தவிர இன்னொரு நபரும் அடுத்த போர்ஷனில் குடியிருக்கிறார், பாதி நாட்கள் டூரில் இருப்பார். மீதி நாட்களில் பாதி சொந்த ஊருக்குப் போய் விடுவார். எதற்காக இந்த அறைக்கு மாசம் ஐநூறு தருகிறார் என்று எனக்கே புரியாத புதிர்.

குளித்துவிட்டு வந்தேன்.நன்றாக விடிந்து விட்டது. நாளை கல்யாணம். இன்று மாப்பிள்ளை அழைப்பு என்று பக்கத்து மண்டபம் நிகழ்ச்சி நிரல் மனத்தில் ஓடியது.

பெண் வீட்டார் வந்து விட்டார்கள். பெண்ணின் மாமாவோ... யாரோ ஒருத்தர் 'இந்தக் கல்யாணமே அவர் நடத்தி வைப்பது' என்கிற பொறுப்புணர்வுடன் அலைந்து கொண்டிருந்தார்.

மணி ஏழு எட்டு மணிக்குக் கிளம்பினால் போதும். வாசற்படியில் நின்று இவ்வளவும் அவதானித்துக் கொண்டிருந்தேன்.

விடியலில் தெரிந்த அதே முகம் மீண்டும் முகம் காட்டியது.

"காபி நன்னா இருந்துதா?"

"ம்."

டபரா செட்டை நீட்டினேன்.

"இந்தாங்கோ டிபன், இன்னொரு டோஸ் காபி கொண்டு வரேன்."

என்னால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

"ஸார். நீங்க யார்னே எனக்குத் தெரியலே. தப்பா... எனக்கு உபசாரம்... ப்ளீஸ்... வேண்டாமே. யாராவது பார்த்து...உங்க மேல... பிரச்சினை."

துண்டு துண்டாய் வார்த்தைகளை உதிர்த்தேன்.

"டிபனைப் பிடிங்கோ. இன்னும் அஞ்சே நிமிஷத்துல உங்க குழப்பம் தீரும்!" போய்விட்டார்.

இட்லி, பொங்கல், வடை, கேசரி. தனியே தம்ளரில் சட்னி, சாம்பார். இன்று என்ன ஆச்சு, என் கிரகங்களுக்கு?

டிபனைச் சாப்பிட்டு கை கழுவியபோது, காபி தம்ளர் நீண்டது. இந்தத் தடவை வேறு முகம்.

"என்னைத் தெரியறதா...சிவா."

புன்னகை மின்னிய பார்வை.

"நீ... நீங்க."

"சங்கரன்."

என்னுடைய கிளாஸ்மேட். ஸ்கூல் பைனல் வரை ஒன்றாய்ப் படித்தோம். பின்னர் நான் கல்லூரி வாசலைத் தொட்ட போது சங்கரன் 'சரஸ்வதி வந்தனம்' செய்து விட்டு படிப்பிலிருந்து விலகிக் கொண்டான்.

"நான் இப்போ கல்யாண காண்ட்ராக்ட் எடுக்கறேன்."

விசிட்டிங் கார்டை நீட்டினான் ஃபோன் நம்பருடன் விலாசம்.

என்னுடைய டிஸ்டிங்ஷன். இன்றைய ஒற்றை அறை வாசம். காமன் பாத்ரும் டாய்லட். மாதச் சம்பளத்திற்கு நாயாய் உழைத்து, பெருமூச்சு வெளிப்பட்டது.

"நேத்தே பார்த்துட்டேன். நீ இங்கே குடியிருக்கேன்னு புரிஞ்சுது. ஒரு சர்ப்ரைஸ் தரலாம்னு காத்திருந்து, மார்னிங் காபில ஆரம்பிச்சேன்" என்றான் சிரிப்புடன்.

"தேங்க்ஸ் சங்கர்."

"அதுக்குள்ளே சொல்லாதே. நைட் டின்னர். அப்புறம் நாளைக்கு எல்லாம் முடியட்டும்."

"எதுக்கு வீண் சிரமம்."

"பேசாதே. என்னோட சமையல் பிடிக்கலியா."

"சேச்சே."

"சித்ரா இப்ப எப்படி இருக்கா?"

"அவளை இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா?"

சங்கரன் வெட்கமாய்த் தலையசைத்தான்.

"ரெண்டு குழந்தைகள். இங்கே இல்லே. சிங்கப்பூர் போயிட்டா."

"நல்லா இருந்தா சரி" என்றான் முழு மனசாய்.

அவனை வினோதமாய்ப் பார்த்தேன். காதலித்தவளைக் கைப்பிடிக்க முடியாமல் போனாலும், 'எங்கிருந்தாலும் வாழ்க' மனப்பான்மை சற்று அதிசயிக்க வைத்தது.

"சாயங்காலம் எப்ப வருவே.. ஃபர்ஸ்ட் கிளாஸ் டிபன் இருக்கு."

"வேணாம் சங்கர். நான் வர எட்டு மணியாகும்."

"சரி. சாப்பாடு இங்கேதான். புரிஞ்சுதா"

தம்ளரை வாங்கிக் கொண்டு போனான்.இன்னொரு தடவை பெருமூச்சு விட்டேன்.

இரவு எட்டரை மணிக்கு வீடு திரும்பியபோது ஜானவாசக் கார் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்தது. கூட்டம் அதிகரித்திருந்தது. பட்டுப் புடைவைகள், நகைகள் என்று சூழலே ஜாஜ்வல்யமாகிக் கொண்டிருந்தது.

சங்கரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.எனக்குள் தடுமாற்றம். அவனை நம்பிச் சாப்பிடாமல் வந்து விட்டேன்.

மண்டபத்திலிருந்து சாப்பாடு அனுப்புவது என்ன இருந்தாலும் அத்தனை சுலபம் இல்லை.அரை மணி நேரம் கழிந்திருக்கும்.

கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அதுவும் அலுப்புத் தர, எழுந்து கதவை வெறுமனே மூடிவிட்டு வாசலுக்கு வந்தேன். ஜானவாச கார் இல்லை. கூட்டமும் குறைந்திருந்தது. ஏதாவது கோவிலிலிருந்து அழைப்பு இருக்கும். அங்கே போயிருப்பார்கள்.

பத்து நிமிஷம் நின்றேன். இனி காத்திருப்பது வீண். கடை வீதிக்குப் போனால் இட்லிக் கடை ஆரம்பித்திருக்கும். பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்ப எண்ணி அறைக்குத் திரும்பினேன்.

கதவைத் திறந்தால்... விளக்கு அணைந்திருந்தது. போட்டு விட்டுத்தானே போனேன்.

ஸ்விட்சைப் போட முயன்றபோது ஒரு பெண்ணின் கரம் என்னைத் தடுத்தது.இருட்டிலும் புலப்பட்ட பெண்ணின் ஸ்பரிசம்.

அலறியிருப்பேன். உள்ளுணர்வு தடுத்து விட்டது.

"யா... யாரு?"

"ப்ளீஸ். லைட்டைப் போடாதீங்க."

மண்டப வெளிச்சம் லேசாய் ஜன்னல் வழியே கசிந்தது. இதற்குள் அந்த அரையிருட்டிற்கு விழிகள் பழகி அவளைப் பார்த்தேன்.பட்டுப் புடவையில் இருந்தாள். அலங்கரிக்கப் பட்டவள்.

"நீ..."

"கல்யாணப் பெண்தான். எனக்குத்தான் நாளைக்கு மேரேஜ்."

"இங்கே... எதுக்கு?" என்றேன் புரியாமல்.

"எனக்கு இஷ்டமில்லே. எங்கப்பா அம்மா என் பேச்சைக் கேட்கலே. மிரட்டி இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க. இத்தனை நாளா... வீட்டுல அடைச்சு வச்சிருந்தாங்க,"

அடிப்பாவி. என்னை சிக்கலில் மாட்டி விடத் தீர்மானித்தாயா?

"உன்னைத் தேட மாட்டாங்களா?"

"தேடட்டும். நல்லாத் தேடட்டும்."

"நீ இங்கே இருக்குறதை..."

"நிச்சயமா. நான் இங்கே இருப்பேன்னு நினைக்க மாட்டாங்க. நீங்க மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணா."

மிக மெல்லிய குரலில்தான் பேசிக் கொண்டிருந்தாள்.அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்குள் பிரளயம் தந்தன.

"எனக்கு பயம்மா இருக்கு" என்றேன் கவலையுடன்.

"ப்ளீஸ். ஹெல்ப் பண்ணுங்க. அவங்க டென்ஷன் ஆகி... ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்துருவாங்க. ஒரு வேளை என் தங்கையைக் கூட கல்யாணம் பண்ணிக் கொடுத்துரலாம். நீங்க மட்டும் உதவினா எனக்கு நான் விருப்பப்பட்ட வாழ்க்கை கிடைக்கும். ப்ளீஸ்..."

குழந்தைத்தனமாய்ப் பேசுவது போலிருந்தது.பெண்ணைக் காணோம் என்றதும் அப்படியே விட்டு விடுவார்களா?

பக்கத்தில் தேட முயன்றால்...

என் அறையில் அவளைக் கண்டு பிடித்தால்...

போலீஸ் வரை புகார் போய் விட்டால்.

"சிவராமகிருஷ்ணா!"

அதே சமயம் குரல் வெளியிலிருந்து சத்தமாய்க் கேட்டது.

(தொடரும்)

- கல்கியில் நாலு வாரத் தொடர்.

24 comments:

THOPPITHOPPI said...

குடும்ப மலர் கதை போல் உள்ளது வாழ்த்துக்கள்

Rekha raghavan said...

ஆரம்பமே படு அமர்க்களம். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.


ரேகா ராகவன்.

Anonymous said...

நல்ல ஆரம்பம்..
ரெண்டாவது பார்ட்டுக்கு வெய்டிங்..

க ரா said...

aha.. aha....

பொன்கார்த்திக் said...

சகா கற்பனை எகுருது கண்டதெல்லாம் தோணுது..
சீக்கிரன் தொடர எழுதுங்க இல்ல நாங்க எழுதிருவோம்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

”அப்புறம் என்ன ஆச்சு” என்ற ஆவலைத் தூண்டும் விதமாக முதல் பகுதியின் ஆரம்பமே நல்லா இருக்கு.

Anonymous said...

அடுத்து தொடரும் வரை காத்திருக்கனுமேன்னு இருக்கு..

நிலாமதி said...

வித்தியாசமான் ஆரம்பம்.......வாழ்த்துக்கள்

Chitra said...

ஆரம்பமே அசத்தல்! பாராட்டுக்கள்!

Thenammai Lakshmanan said...

அருமை ரிஷபன்.. ரொம்ப சஸ்பென்ஸா இருக்கே.. சீக்கிரம் தொடருங்கள்..

vasu balaji said...

போடு சக்கை. அப்ப எங்களுக்கு நாலு நாள் விருந்தா:))

அன்பரசன் said...

அருமை

அலைகள் பாலா said...

கதை செம ஸ்பீட் சூப்பர்

Philosophy Prabhakaran said...

இப்படி எதிர்பார்ப்பை கூட்டிவிட்டு தொடரும் போட்டால் என்ன அர்த்தம்...

vasan said...

எல்லாமே வித்தியாச‌மா இருக்கு, காலை எழுந்த‌வுட‌ன் காபி, பின்பு வாய்க்கு ருசியா டிப‌ன்,
இர‌வில், வாச‌லில், விள‌க்கு அணைத்து விட்டு நிற்கும், ம‌ண‌ம‌கள். ப‌க்க‌த்து போர்ஷ‌ன் காலியா இருக்கிற‌து, எப்ப‌டியோ க‌தைக்குள்ள‌ வ‌ருது. ஆனா எப்ப‌டின்னு தான் தெரிய‌லை. ம்..சீக்கிர‌ம்
இர‌ண்டாம் பாக‌ம்.

சென்ஷி said...

முன்னாடியே படிச்சு பிடிச்ச கதை.. மீள் பகிர்விற்கு நன்றிகள் பலப்பல :)))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப..ரொம்ப ’ஸ்பீடாப்’ போறது..அஃபீஸ் பஸ்ஸைப் பிடிக்க,
பின்னங்கால் பிடறியில் படற வேகத்தில,
ஓடுவோமே, அது போல இருக்கு நடை!

S.முத்துவேல் said...

வெரி குட்

படிக்க படிக்க உள்ளுனர்வு அதிகமாகுகின்றது..

இது அரம்பமாக இருந்தாலும் அசத்தலாய் உள்ளது.

கதை படிக்க சுவையக இருக்கிறது..

அடுத்த கட்டம்

எதிர்ப்பாற்ப்புடன்.

நன்றி..........

Anisha Yunus said...

செமையா ஸ்டார்ட் பண்ணிட்டீங்க ரிஷபன் ண்ணா, அடுத்தடுத்து சீக்கிரம் போட்டிங்கன்னா நல்லாயிருக்கும் :)) புது டெம்ப்ளேட்டும் சூப்பர் :)

கே. பி. ஜனா... said...

விறு விறு முதல் அத்தியாயம் இப்படி எப்பவும் அமைவதில்லை....
Super!

கே. பி. ஜனா... said...

விறு விறு முதல் அத்தியாயம் இப்படி எப்பவும் அமைவதில்லை....
Super!

a said...

சூப்பர்......ரெண்டாவது பகுதி எப்போ???

சாந்தி மாரியப்பன் said...

முன்னாடியும் படிச்சேன்.. மறுபடியும் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி..

வெங்கட் நாகராஜ் said...

அசத்தலான ஆரம்பம். அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்

வெங்கட்.