July 09, 2011

காத்திருத்தல்


எதற்காகவேனும்
யாருக்காகவேனும்
காத்திருக்க வேண்டியிருக்கிறது..
ஆளற்ற வீட்டில்
பூட்டிய உட்பக்க அறைக்குள்
அழைப்பின் மணி ஒலிக்காக..
கைபேசியின் சிணுங்கலுக்காக..
குறைந்த பட்ச குறுஞ்செய்திக்காக..
தபால்காரர் வரவிற்காக..
எதிர் வீட்டு குழந்தைக்காக..

மகனோ.. மகளோ
தொலைதூரத்தில்..
மனைவிக்கு என்ன அவசரமோ
விட்டுப் பிரிந்து செல்ல..

யாருமற்ற தனியனாய்
உட்பக்கம் பூட்டிய அறைக்குள்..

காத்திருக்கும் மனசு..
ஏதேனும் ஒரு ஒலிக்காக..

அது யமனின் காலடி ஓசையெனினும்.



16 comments:

வெங்கட் நாகராஜ் said...

காத்திருத்தல் - அதுவும் தனிமையில் என்பது கொடுமைதான்... அந்த உணர்வினை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது உங்கள் கவிதை. நல்ல பகிர்வுக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நானும் கனவுகளோடு காத்திருக்கிறேன்..ஆண்டார்வீதி மூலையில்!
போஸ்ட் மேன் நம்பிக்கையோடு சொல்வார்..’ தம்பி..உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், நாளைக்கு’
ம்......அது ஒரு காலம்...
பழைய சிந்தனையை தூண்டி விட்டது, கவிதை!

Unknown said...

காத்திருத்தலே கொடுமை! அதில் தனிமை என்பது...அருமை பாஸ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

I am lonely at Bangalore in an apartment at 3rd floor now & experiencing the contents of your Good Kavithai.

ராமலக்ஷ்மி said...

மிக நன்று. தனிமையின் தவிப்பு கடைசி வரியில் தளும்பி நிற்கிறது கொடுமையாக.

Yaathoramani.blogspot.com said...

"தனியனாய்
உட்பக்கம் பூட்டிய அறையில்
காத்திருக்கும் மனசு"
சொல்லியதை மீறி நிறையச் சொல்லிப் போகிறது
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

தனிமையில் இருப்பது கொடுமையே..

எல் கே said...

தனிமை சில நேரம் வரம் பல நேரம் சாபம்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

காத்திருப்பது எவ்வளவுக்கெவ்வளவு சந்தோஷமானதாக இருந்ததோ அவ்வளவுக்கவ்வளவு துயரமளிப்பதாகவும் மாறும் குரூரம் எல்லோரும் அனுபவித்ததில்லை. அதன் கனம் எத்தகையதாயினும் சுமக்க இயலாததே.

படத் தேர்வும் அருமை.

மோகன்ஜி said...

காத்திருத்தல் வாழ்க்கையின் அடிநாதம்.. இனிமையான சோகம்..
துன்பமான துடிப்பு...
அன்பின் விலை..
காதலின் வெகுமதி..
காலத்தின் கழிவு.

RVS said...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி..... பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி...

Stop..Wait..Wait.. ;-)

Excellent one Sir. ;-)

ad said...

தனிமையில்,பூட்டிய அறைக்குள் என்பது அனுபவிப்பவர்களுக்குதான் புரியும்-யதார்த்தம்.
நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் நிலையும் இதே நிலையோ அல்லது கவிதைக்காக இப்படியொன்று எழுதினீர்களோ என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
ஆனால்...
யதார்த்தத்தை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.
"பூட்டிய உட்பக்க அறைக்குள்
அழைப்பின் மணி ஒலிக்காக..
கைபேசியின் சிணுங்கலுக்காக..
குறைந்த பட்ச குறுஞ்செய்திக்காக.."

"யாருமற்ற தனியனாய்
உட்பக்கம் பூட்டிய அறைக்குள்..
"

"அது யமனின் காலடி ஓசையெனினும்."

வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

ரொம்ப நாளாய் காத்திருந்த நல்ல கவிதை!

ADHI VENKAT said...

தனிமையில் காத்திருத்தல் மிகவும் கொடியது.

நிலாமகள் said...

விட்டுப் பிரிந்த‌ ம‌னைவியிட‌ம் சேர்ப்பிக்கும் ய‌ம‌னின் கால‌டியோசைக்காக‌க் காத்திருக்கும் யாரும‌ற்ற‌வ‌னின் காத்திருப்பு மிக‌ப் ப‌ரிதாப‌த்துக்குரிய‌துதான்...!!

க‌விதைக்கான‌ ப‌ட‌த்தேர்வு ச‌பாஷ் சொல்ல‌ வைத்த‌து. அப்பெண் ப‌ற்றியிருந்த‌ விழுது ப‌ல‌ நேர்ம‌றை எண்ண‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தும்ப‌டி.

jenosh jeyam said...

குறைந்த பட்ச குறுஞ்செய்திக்காக.."

அருமை.. இந்த வரிகள் சும்மா தோனாது பாஸ்!! எனக்கும் இந்த வரிக்கும் கூட ரொம்ப நெருக்கம் :(((