July 10, 2011

மூன்று







மற்றவர்கள் எழுதும் போது சுவாரசியமாய்த் தோன்றுகிற விஷயங்கள் என் கைக்கு வரும் போது ஏன் மிரட்டத் துவங்குகின்றன..?!

ஒரு மதிய குட்டித் தூக்கத்திற்குப் பின் (நல்ல வேளை.. மின்சாரம் இருந்ததால்) கணினி முன் உட்கார்ந்தால்.. சுந்தர்ஜி அழகாய் என்னை மாட்டி விட்டிருக்கிறார்.

மாதங்கியின் அருமையான.. நேரடி த்வனியில்.. படித்து ரசித்து விட்டு,
ஆர்.வி எஸ். அமர்க்களப்படுத்தியதில் பிரமித்து..

வேற வழி.. கள்ளத் தொண்டையில் ஒரு கச்சேரி பண்ணிர வேண்டியதுதான்.

1. விரும்பும் மூன்று விஷயங்கள் :-

பயணம். அதுவும் எனக்குப் பிடிச்சு.. மலைப் பிரதேசம்னா ரொம்ப ஹேப்பி..ரெயில் பெட்டர்.. கூட ஜமா சரியா அமைஞ்சுதுன்னா ஆஹா!

புத்தகங்கள். சில புக்ஸ் யாராச்சும் போற போக்குல சொல்லிட்டு போனது.. தேடி அலைஞ்சு வாங்கிப் படிச்சா.. சொர்க்கம் அதுதான்.

தனிமை. அப்பப்ப அப்படி ஒதுங்கி வாய், மனசு பேசறத நிறுத்தி வச்சு..
(பாவம் யாரு பெத்த புள்ளையோ.. கூப்பிட்டா கூட காதுல விழாம கண்ணுல தண்ணியோட என்னமோ மாதிரி ஒக்காந்திருக்கே)

2. விரும்பாத மூன்று விஷயங்கள் :-

புத்தகம் இரவல் கொடுப்பது. பல நல்ல புத்தகங்களை நம்பிக் கொடுத்து இழந்திருக்கிறேன். ‘ஜெய் சிவாஜி’ என்று ஒரு நாவல். குலோத்துங்கன் என்கிற புனைபெயரில் யோசாசன மாஸ்டர் சுந்தரம் எழுதியது. சத்ரபதி சிவாஜி பத்தி (யாராச்சும் படிச்சிருக்கீங்களா..)

அடுத்தவர் சொல்லாமல் நாமாய் துருவித் துருவி பர்சனல் மேட்டர் கேக்கறது.

என்ன கஷ்டம் வந்தாலும் புலம்பித் தீர்க்கறது.

3. பயப்படும் மூன்று விஷயங்கள் :-

என் கருத்தை அப்படியே சொல்லும் தைரியம் இன்னும் வரல. அப்படிச் சொல்லி முன்னால நிறைய அதிருப்தியை, நட்பின் இழப்பை சம்பாதித்த வலி.. அதனால சொல்லவும் முடியாம.. படற கஷ்டம்..

ஆத்மார்த்தமா கொஞ்ச பேர் போதும்னு தோணுது.. சுந்தர்ஜி மாதிரியே கூட்டம்னா அலர்ஜி.. கோவில் போனாக் கூட திருவிழா இல்லாம சாதா நாட்கள்ல போனாப் போதும்.. சமீபமா திருப்பதி போய் டேயப்பா.. என்னா கூட்டம்..

எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் லேசா ஒரு பயம். இந்த தடவையாச்சும் சொதப்பாம ஒழுங்கா எழுதணும். ‘இன்னொரு தடவை பாடுங்கோ’ அப்படின்னு 100 வது தடவை கேட்டப்ப, ‘என் பாட்டுன்னா அவ்ளோ பிரியமா’ - ‘சே.. இப்பவாச்சும் ஒழுங்காப் பாடறீங்களான்னு பார்க்கத்தான்’ (அது மாதிரி ஆயிடக் கூடாது!)

4. புரியாத மூன்று விஷயங்கள் :-

நான் என்னதான் சரண்டர் ஆகி, விட்டுக் கொடுத்து, தழைஞ்சு போனாலும் மூஞ்சிய தூக்கி வச்சு குறை சொல்ற சிலர்.

சில பேரோட புதுக் கவிதைகள்!

என்னோட மனசு!

5. மேஜையில் உள்ள மூன்று பொருட்கள் :-

மானிட்டர்

மொபைல்

ஸ்பீக்கர்

6. சிரிக்க வைக்கும் மூன்று :-

எப்பவும் டாம் & ஜெர்ரி

’இன்னிக்கு முடிச்சிரலாம்’ என்று 10வது நாளாகச் சொல்லும் சக அலுவலர்.

கடவுளைத் திட்டுகிறவர்கள்

7. தற்போது செய்து கொண்டிருக்கும் மூன்று காரியங்கள் :-

பிடித்த பிற மொழிப் படங்களை டவுன் லோட் செய்து பார்ப்பது.

ஏதாச்சும் புதுமையா செய்ய மண்டையைக் காய்ச்சுவது..

அடுத்த சிறுகதைக்கு ஜன்னல் வழியே வெறிப்பது

8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று :-

உருப்படியாய் அதற்குள் வாழக் கற்றுக் கொண்டு விடுவது.

என்னை ஞாபகப் படுத்துகிற ஒரு படைப்பு எழுதுவது.

ஏதேனும் ஒரு வகையில் என்னைச் சுற்றியுள்ள/தேவை இருக்கிற மனிதருக்கு நிரந்தரமாய் பயன்படும் வகையில் ஒரு திட்டம்.

9. உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள் :-

எதுவும் தெரியாது என்று ஒதுங்கிப் போய் பழக்கமில்லை. தெரியாததைத் தெரிந்து கொள்ள எப்போதும் முயற்சி உண்டு.. அப்புறம் அது கை வரலை என்றால்தான் சல்யூட்.

நான் பேசப் போனால் பகையாளிகள் சமாதானமாகி விடுவார்கள். (என்னுடன் மட்டும் பகையாகி விடுவார்கள் அதன் பின்)

சோர்ந்து போகிறவர்களைப் பேசித் தேற்றி எப்படியும் நம்பிக்கை ஊட்டி விடுவேன். (அப்புறம் அதே மாதிரி மேட்டர்ல நான் டல் ஆகி என் வார்த்தைகளே என்னைச் சுற்றி கும்மி அடிக்கும்போது, ஓ.. அதனால் தான் நேற்று அப்படி பேச வைத்ததா விதி என்று தெளிவேன்)

10. கேட்க விரும்பாத மூன்று :-

வம்பு.

வம்பு

வம்பு


11. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று :-

இசை. மிருதங்கம் கற்றுக் கொள்ளப் போன என் நண்பனும் (அவர் மாரடைப்பில் மரணம் ) புல்லாங்குழல் கற்கப் போன நானும் (அவர் வீட்டை விட்டே ஓடி விட்டார்) இன்னொரு மாமியிடம் போய் ப்ளூட் வாசித்த போது (?) மாமி கீழே விழுந்து முதலில் ஆறு மாத ரெஸ்ட்.. அப்புறம் பர்மனண்ட் ரெஸ்ட்.. அந்த புல்லாங்குழலின் கடைசி மூச்சு எங்களால் (செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி என்கிற சொலவடை அப்பதான் எனக்கு அறிமுகம் மாமி மூலம் - அதாவது எங்க கையில் ப்ளூட்!

எழுத்து. உருப்படியா எழுதக் கத்துக்கணும். எத்தனை நாள் இப்படியே டகல்பாஜி வேலை பண்றது.

கணினி. சாமி சத்தியமா புரியல. ஏதோ கீபோர்ட் வாசிக்கிறேன் அதுல.


12. பிடித்த மூன்று உணவு :-

சீயாளம் : உச்சரிப்பு சரிதானா தெரியல. எங்கம்மா பண்ணுவா. பயத்தம்பருப்பில் ஊற வச்சு, கரகரன்னு அரைச்சு, வேக வச்சு, சின்னச் சின்ன பீஸா கட் பண்ணி ஒரு பக்கம் வச்சிருங்க. மல்லி, கடலைப்பருப்பு, மிளகாய் வாணலியில் வறுத்து பொடி செஞ்சு வச்சுக்கணும். மறுபடி வாணலியில் எண்ணை நிறைய விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சிவக்க வறுத்து புளித்தண்ணியை கெட்டியா விட்டு கட் பண்ண பயத்தம்பருப்பு பீஸையும் பொடியையும் போட்டு வதக்கணும். அவ்வளவுதான்.. (நார்த்ல டோக்ளா மாதிரியா)

பருப்பு ரசம் (அ) ஏதாவது ரசம் சாதம்.

பால்மாங்காய் : மன்னார்குடிப் பக்கம் காரப்பங்காடு என்று ஒரு கிராமம். அங்கே வரதராஜன், பெருந்தேவி. அவுங்க வீட்டு (அட.. கோவில் தான்) மடப்பள்ளியில வைகாசி விசாகத்துக்கு (நம்மாழ்வார் திருநட்சத்திரம்) பால் மாங்காய் கண்டருளப் பண்ணுவார்கள். (நைவேத்தியம்)


13. அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் :-

காதில் வந்து விழும் பாடலை அன்று முழுக்க முணுமுணுக்கிற ரகம்தான் நானும்.

அமைதியான நதியினிலே ஓடம்.

ஜெய் ஜெய் ராதா ரமண ஹரி போல்.. ( ஆர்ட் ஆப் லிவிங் - சுதர்சனக் க்ரியா நிறைவுப் பாடல்)

பி சுசீலா பாடல்களில் ஏதாவது.


14. பிடித்த மூன்று படங்கள் :-


நவராத்திரி.

மொழி

சங்கராபரணம்

(ஸாரி.. இது வடி கட்டின பொய். நிறைய படங்கள் பிடிக்கும். மூன்று என்று சொன்னதால் வேறு வழியின்றி அவசரமாய் யோசிக்காமல் டைப் பண்ணது)

15. இது இல்லாமல் வாழ முடியாதென்று :-

மூச்சு !

உணவு!

உடை!


16 . இதை எழுத :-


ஆரண்யநிவாஸ்

எல்லென்

பத்மா (காகித ஓடம் - என்ன ஆச்சு? எங்கே போயிட்டீங்க)











26 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பரவால்லயே சுடச்சுட எழுதினதோட பொய் சொல்லவும் கத்துக்கிட்டீங்க ரிஷபன்.

கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எழுத்தா? அப்ப நானெல்லாம் என்ன சொல்றது ரிஷபன்?

யதார்த்தமாகவும் சிரிக்கவும் வெச்சுட்டீங்க. சபாஷ்.

எல் கே said...

செம சுறு சுறுப்பு


//சில பேரோட புதுக் கவிதைகள்!//

எல் கே வோட கவிதைன்னு சொல்லிடுங்களேன் ரிஷபன் ஜி (சும்மா தமாசுக்கு சொன்னேன் )

தெளிவா பளிச்சுன்னு இருக்கு சார்

ரிஷபன் said...

பொய் ஒண்ணுதான் கத்துக்காம சொந்தமா வச்சிருக்கிறது சுந்தர்ஜி!

ஹாய் எல் கே உங்க பேரைப் போட மறந்துட்டேனே.. அடடா..

ஷர்புதீன் said...

//என் கருத்தை அப்படியே சொல்லும் தைரியம் இன்னும் வரல. அப்படிச் சொல்லி முன்னால நிறைய அதிருப்தியை, நட்பின் இழப்பை சம்பாதித்த வலி.. அதனால சொல்லவும் முடியாம.. படற கஷ்டம்..//

அட என் நிலைமை., !!



என்னோட 33 கேள்விகள் பதிவு மாதிரி போட்டிருக்கலாமே...

R. Gopi said...

Good ones

நிரூபன் said...

வணக்கம் சகோ, வித்தியாசமான ஒரு நடையில் மூன்று விடயங்களைப் பல்வேறு தலைப்புக்களில் அலசியிருக்கிறீங்க.

நிரூபன் said...

சுவாரஸ்யமாகவும் இருக்கிறது, கூடவே உங்கள் ரசனைகளை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.

Matangi Mawley said...

"புத்தகம் இரவல் கொடுப்பது. "-- can't agree more!!! என்னோட பல ரொம்ப நல்ல collections லாம் இப்படி தான் தொலஞ்சு போச்சு! :(
நல்ல interesting பதில்கள்... யதார்த்தமாகவும் இருந்தது... :)

வெங்கட் நாகராஜ் said...

மூன்று.... ஒவ்வொரு கேள்விகளுக்கும் அழகான மூன்று பதில்கள்...

கற்றுக் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களில் எழுத்துமா... நீங்களே இப்படிச் சொன்னால் நாங்கள் எல்லாம் இன்னும் ”அ, ஆ” வே கற்றுக் கொள்ளவில்லை என ஆகிவிடுகிறது...

நல்ல பதில்கள் சார். நடுநடுவே மிளிரும் உங்கள் நகைச்சுவையான பதில்கள். ரசித்தேன் மொத்தமாய்...

A.R.ராஜகோபாலன் said...

உங்களின் தனி ராஜபாட்டையில் பயணிக்கும் ரசனையான பதிவு சார்

மோகன்ஜி said...

ரிஷபன் சார் ! உங்கள் முத்திரையோடு 'மூன்றை' முத்துமாலையாக்கி விட்டீர்கள். ரசிகர் ஸ்வாமி நீங்கள்!

கதம்ப உணர்வுகள் said...

ரொம்பவே சுவாரஸ்யமா இருந்தது.... மூன்று விஷயங்கள் நம் எல்லோரின் வாழ்க்கையுடன் ஒன்றியதாகவும் கூட... அதெப்படி சீராளா பயத்தம் பருப்பை கரகரன்னு அரைச்சு வேகவெச்சு கரெக்ட்... பிடிக்காத மூன்று அழுத்தமா சொன்னது வம்பு வம்பு வம்பு.... அதனால் ஏற்படுவது எல்லாமே பயங்கரமானதா இருப்பதால்.....ரசிக்கவைத்த மூன்று விஷயங்களாக நீங்கள் சொல்லிய விதம் சிறப்பு ரிஷபன்....

அதுலயும் நீங்க கத்துக்க ஆசைப்படறதா சொல்லி மிருதங்கம், ஃப்ளூட் , ஐயோ போவம் எல்லாரையுமே மேலே டிக்கெட் வாங்கி அனுப்பிட்டேளே...

அன்பு வாழ்த்துகள்....

RVS said...

சுந்தர்ஜி சொன்னது போல அப்ப நாங்கெல்லாம் எழதறது... டூ மச் ஐ சே!

வம்பு... எங்களுக்கெல்லாம் அது இல்லாம தூக்கம் வராது. ரொம்ப நல்லவர் சார் நீங்க...

ஃபுளூட்... நான் மிருதங்கம்.. ஓ.கே.. ஓ.கே...

மூன்றுகள் முக்கனி போல சுவைக்கிறது. ;-)

ஹேமா said...

உங்களை மனம் விட்டு நிறையப் பேச வச்சிட்டார் சுந்தர்ஜி !

எல் கே said...

//
ஹாய் எல் கே உங்க பேரைப் போட மறந்துட்டேனே.. அடடா..//

எஸ்கேப் ஆக்கிட்டேன்

எல் கே said...

/நான் மிருதங்கம்//

naanga paavam rvs

பத்மநாபன் said...

பளிச் பதில்கள் .... நீங்க எழுத கத்துக்கணும் என்றால் ...நாங்க எங்க போய் முட்டிக்கிறது .....
ரசித்த பதில் : கடவுளை திட்டுபவர்கள் - சிரிப்பு வரும் தருணம் ...தன்னுடைய டார்ச்சால் சூரியனை மங்க வைக்கும் முயற்சி உண்மையில் சிரிப்பு வரும் எனக்கும் ....
ஜெய் ஜெய் ராதா ரமண --- பாம்புக்கு மகுடி மாதிரி ....எவ்வளவு ஆயிரம் கூட்டம் இருந்தாலும் அந்த பாடலை கேட்டு விட்டுத் தான் கலையும்

சாந்தி மாரியப்பன் said...

சுவாரஸ்யமான முத்துகள்..

தக்குடு said...

நன்னா இருக்கு உங்க பதில் எல்லாமே. அந்த நாலாவது மூனுல முதல் பதில்ல சிலர்=தங்கமணி கரெக்டா?..:)))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

very nice

middleclassmadhavi said...

அருமை, நேரில் இன்டர்வ்யூ செய்த மாதிரியே இருந்தது!

ADHI VENKAT said...

நல்ல பதில்கள் சார். நகைச்சுவையுடன் நன்றாக் இருந்தது.

Geetha6 said...

வாழ்த்துகள்....

பத்மா said...

நானாகத்தான் இருக்கும் (,இருக்க வேண்டும்)என்று நினைத்துக் கொண்டே வந்தேன் ..நானே தான் .தேங்க்ஸ் ரிஷபன் சார். எங்க போய்டுவேன் இதோ வந்துட்டேன் தானே ..?

vidivelli said...

நகைச்சுவை கலந்த சுப்பர் பதிவு..சிரித்தேன்
வாழ்த்துக்கள்...

vetha (kovaikkavi) said...

சில பேரோட புதுக் கவிதைகள்!
realy....I have the samme problem...
interesting....
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com