February 17, 2012

போபால்-படா தாலா



முதல் நாள் அலுவலக வேலை முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பியதும் எதிரே இருந்த ஷாப்பிங் மாலுக்கு போனோம்.

திருச்சியில் பார்த்ததை விட மிகப் பெரிய அளவு. ஆறு மாடி. எஸ்கலேட்டர்தான் எல்லா மாடிக்கும். அதைத்தவிர கண்ணாடிகூண்டு லிப்ட்.

50% தள்ளுபடி.. 60%.. 70% என்று ரகவாரியாய் தள்ளுபடிகள். பார்த்ததெல்லாம் ‘தள்ளும்’படிதான் இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுற்றியும் முடியவில்லை. அவ்வளவு பெருசு..

எப்படியும் செலவு வைக்க வேண்டும் என்று தீர்மானித்து, டார்க் ஷோவுக்குள் போனோம்.

பேய் அறை என்று அதைச் சொல்லலாம். கையில் திருப்பதி போல ஒரு பேண்ட் கட்டி இருட்டறைக்குள் அனுப்புகிறார்கள்.

அதற்கு முன் எச்சரிக்கை. இதயபலவீனமுள்ளவர், குழந்தைகள், கர்ப்பிணிகள் வரவேண்டாம் என்று.

ஆ.. ஊ.. என்று பேய் அலறல்கள். சவப்பெட்டி திறந்து வெளியே வந்த உருவம் அந்த அரை இருட்டில் கலவரப்படுத்துகிறது. குறுக்கே எலும்புக் கை நீண்டு மறிக்கிறது. பட படவென பட்டி அதிருகிறது. இத்தனைக்கும் ஐந்து நிமிடம்தான்.
அத்தனை பயமுறுத்தல்கள்.

வெளியே வரும்போது - உள்ளே வரமறுத்து வெளியே நின்ற நண்பர் கேட்டார்.

‘பேய் அனுபவம் எப்படி’

சகோதரி சொன்னார். ‘அது கூடத்தான் இருபது வருஷமா குடும்பம் நடத்தறோமே’

மறுநாள் ‘படா தாலா’ போனோம்.

மிகப் பெரிய ஏரி. போபாலுக்கு குடிநீர் சப்ளை அங்கிருந்துதான்.

ஆறு கிலோமீட்டர் நீளம். அடுத்த கரை தெரியவில்லை.




நீங்களே பாருங்க.. அடுத்த கரை தெரியுதான்னு..

ரகவாரியாய் படகு சவாரி. முதலில் ஸ்பீட் போட்டில் போனோம். அப்புறம் மனசு அடங்காமல் பெடலிங் போனோம்.

நாமே பெடல் செய்து போவதில் ஒரு த்ரில்லிங் தெரிந்தது. நம் படகை மோட்டார் போட் கிராஸ் செய்யும்போது படகில் மோதிய அலை நீரில் படகு ஆடி.. கவிழப் போகும் அபாயம்.. ஆஹா..

‘நீச்சல் தெரியுமா..’ என்று ஒவ்வொருவரைக் கேட்டுக் கொண்டோம்.

எங்கள் நால்வரில் இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும்.

‘கவலையே இல்லை.. நீ அவன் கையை பிடிச்சுக்க.. நான் இவர் கையைப் பிடிச்சிக்கிறேன்’ என்றேன்.

வாத்துக்கள் ‘கக்.. கக்’ என்று சப்தமிட்டு நாம் போடுகிற பாப்கார்ன் சாப்பிடும் அழகே அழகு.




இருபுறமும் நீர்.. நடுவே நாங்கள்.. மனசு குழந்தையாய் மாறி கும்மாளமிட்டது..

மறக்க முடியாத அனுபவம்.




(பயணம் தொடரும்)



15 comments:

கே. பி. ஜனா... said...

படா அழகு தான்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘பேய் அனுபவம் எப்படி’

சகோதரி சொன்னார். ‘அது கூடத்தான் இருபது வருஷமா குடும்பம் நடத்தறோமே’//

நல்ல நகைச்சுவை.

அழகான வாத்துக்கள்!
அன்பான வாழ்த்துகள்!!

பால கணேஷ் said...

தண்ணியில மிதக்கும் போது (அட, ஓடுற தண்ணியச் சொன்னேங்க) எல்லாருமே குழந்தையாயிடறோம் இல்லை? அந்த பேய் ஜோக்... சாதாரணமா கணவர்கள் சொல்வது, இங்கே உல்டாவாகியிருக்கு. போபால் பயண அனுபவங்கள் சுவாரஸ்யம்தான்!

RAMA RAVI (RAMVI) said...

//‘பேய் அனுபவம் எப்படி’
சகோதரி சொன்னார். ‘அது கூடத்தான் இருபது வருஷமா குடும்பம் நடத்தறோமே’//

ஹா..ஹா.. ஹா...

சுவாரசியமான பயணம்.
ஏரி படங்கள் அழகாக இருக்கு.

நிலாமகள் said...

அலுவ‌ல‌க‌ப் ப‌ணி நெருக்க‌டியிலான‌ ப‌ய‌ண‌மெனினும் இப்ப‌டியான‌ அனுப‌வ‌ங்க‌ள் ந‌ம்மை புதுப்பித்துக் கொள்ள‌ ஏதுவாய். ஜ‌மாய்ங்க‌!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பேயின் அனுபவத்தை போபாலிலும் அனுபவித்த தோழியின் கதை பெயின்ஃபுல்.

பேய்கள் எப்போதும் நிழல் போலத் தொடர்கின்றன.

இல்லையா ரிஷபன்?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

விருது அளித்துள்ளேன். எனது பதிவுப் பக்கம் வந்து பாருங்கள் ரிஷபன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//சகோதரி சொன்னார். ‘அது கூடத்தான் இருபது வருஷமா குடும்பம் நடத்தறோமே’
//

ஹஹஹ்ஹ :)))

//இருபுறமும் நீர்.. நடுவே நாங்கள்.. மனசு குழந்தையாய் மாறி கும்மாளமிட்டது..
மறக்க முடியாத அனுபவம்//

படங்களுடன் ரசித்தோம்!

ADHI VENKAT said...

படா தாலா.... வாத்து எல்லாமே அழகா இருக்கு.

இருட்டு அறை பேய் அலறல்கள்.... சத்தியமா எனக்கு ஜுரமே வந்திருக்கும்.....

போபாலில் ஸ்ரீகண்ட் சாப்பிட்டீங்களா சார்?

vimalanperali said...

பயணங்கள் கற்றுத்தருகிற அனுபவங்கள் மிகப்பெரியது.அதைவிட நாம் மனம் இணைந்து பயணிப்பது மிகவும் இனியது.

ஹ ர ணி said...

புகைப்படங்கள் பேசுகின்றன. அனுபவிக்கிறேன் ரிஷபன்.

சாந்தி மாரியப்பன் said...

சுவாரஸ்யமான பயண அனுபவம். ஸ்பீட் போட் க்ராஸ் செய்யறப்ப நம்ம போட் புயல்ல மாட்டிக்கிட்ட மாதிரிதான் ஆடிருது. ஆனாலும் அதுவும் ஒரு த்ரில்தான் இல்லையா?..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பேய் ஜோக் பழசு தான்..பதிவு போகும் ஸ்டைல் அருமை!

வெங்கட் நாகராஜ் said...

படா தாலா - படா ஜோரா இருக்கு...

தொடருங்கள். அடுத்த பகுதிக்கான ஆவலான காத்திருப்புடன்....

அப்பாதுரை said...

தாலா என்றால் என்ன?