February 26, 2012

கூட்டுக்குள் ஒரு வெண்புறா

சிவராமன் சாரை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டே காரணங்கள்தான் உண்டு.

அவர் பக்கத்து வகுப்புதான் எடுத்தார். அவர் தங்கை பூமா.

எங்கள் வகுப்பின் இரைச்சல் அவரைச் சங்கடப்படுத்த, எட்டிப் பார்த்ததும் மொத்த சத்தமும் அடங்கி, ஒரு பூனை மட்டும் கத்தியது.

"ஷட்டப்" என்றார் மூக்கு நுனியில் சிவப்புடன். "யாருடா கிளாஸ் லீடர்?"

நான் எழுந்து நின்றேன். இயற்கை என்னை வஞ்சனையின்றிப் படைத்திருந்தது. வகுப்பாசிரியன் என்று சொன்னால் கூட நம்பத்தகுந்த உடம்பு. இத்தனைக்கும் என் பெற்றோர் 'ஓம்சக்தி' ரகம்!

"உன்னால் கூடவா வகுப்பில் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை?" என்கிற சந்தேகப் பார்வையை வீசினார்.

விதி எனக்குள் சதி செய்திருந்தது. மகத்தான உருவம் தந்து விட்டு மனசை மிகவும் இளகச் செய்திருந்தது. எனக்குக் குரல் கூட எழும்பாது. வகுப்பில் ஒரு முறை ஆசிரியர் ஓய்வெடுத்து, ஒரு பார்வை படிக்கச் சொன்னபோது 'பஞ்சு' என்ற உச்சரிப்பை அத்தனை லேசாக நான் உச்சரித்தும் "அழுத்திச் சொல்லுடா" என்ற மிரட்டலுக்கு ஆளானதும்தான் என் குணாதிசயத்திற்குச் சான்று.

ஒரு சின்ன சத்தம் கேட்டாலும்...என்னை பொறுப்பாக்கி முறைத்துப் போனார்.

பிள்ளைகள் மிகவும் நல்லவர்கள். எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத வரை.

ஹெட் மாஸ்டரே வந்து விட்டார். உ டன் சிவராமன் ஸாரும்.

"என்ன சிவராமன்! உங்க பக்கத்து செக்க்ஷன்ல சந்தைக் கடை மாதிரி சத்தம்?"

வராத கணக்கு வாத்தியாருக்கு எந்த விமர்சனமும் இல்லை.

"ஸாரி... ஸாரி..."

"டிசிப்ளின்தான் ஃபர்ஸ்ட் படிப்பு பிறகுதான்." ஹெட் மாஸ்டர் போய் விட்டார். சிவராமன் பார்வை என்னைத் தேடியது. தலை கவிந்திருந்தும் அக்னி என்னை சுட்டது.

"நீட்டு கையை"

ஸ்கேல் ஒரே அடியில் முறிந்தது. "வெளியே போய் முட்டி போடு"

என்னை வெளி நடப்புச் செய்ய வைத்ததில் குளிர்ந்து மற்ற மாணவர்கள் அந்த வினாடியில் திருந்திவிட்டனர்.

பகல் உணவு இடைவேளை வரை அதே நிலையில் அமர்ந்திருந்தேன். எனக்குள் கோபம்கூட ஸ்தம்பித்துப் போயிருந்தது.

சிவராமன் அவர் வகுப்பு முடிந்து ஆசிரியர்கள் அறைக்குப் போய்விட்டார். பின்னர் ஒரு தூதன் வந்து எனக்கு விடுதலைப் பத்திரம் தந்தான். எழுந்து பையை மாட்டிக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினேன்.

இந்த நேரம் நான் வீடு திரும்பும் நிலையில் இல்லை. வீட்டாரின் அட்டவணைப்படி விதி மீறல்.

ஏன் சிவராமன் ஸாரின் வீட்டுப் பக்கம் போனேன் என்பதும் புரியவில்லை. எனக்குள் ஒரு குரூரம் வழி நடத்திக் கொண்டிருந்தது. அதன் கட்டளைப்படி இயக்கம்.

சிவராமன் ஸாரின் வயதான தாயார் இன்னொரு மகனுடன் வசிக்க, மணம் செய்து கொள்ளாத இவர் சமையல் பொறுப்பு நிர்வகிக்க தங்கையுடன் வந்திருப்பதாய்த் தகவல்கள்.

"தங்கைக்குக் கல்யாணம் பண்ணலையா?"

"தெரியலை..."

கதவு மூடியிருந்தது என்ன செய்யலாம் என்று அபத்தமாய் நிறைய விவாதித்து முடிவில் கதவைத் தட்டினேன்.

"யாரு?"

"நான்தான்"

"நான்தானா?"

கேட்டவாறே கதவு திறந்தது. மனுஷி தெரியவில்லை. "ஸ்கூல்லேர்ந்து வரேன்."

கதவின் இடுக்குவழி என்னை அலசியிருக்க வேண்டும். பிற மாணவர்கள் அரை டவுசரில் வளம் வர, என் ஆகித வளர்ச்சி பேண்ட் ஷர்ட்டில் பொருந்தியிருந்தது. குரல் உடைந்த பருவம். பூனை மீசை, சற்றும் முடி குறையாத சலூன் விஜயம்.

"என்ன?" குரலில் லேசான அதட்டல்.

"வெத்திலை தீர்ந்து போச்சாம்... வேணுமாம்"

சில நேரங்களில்தான் மூளைப் பிரதேசத்தின் அரிய ஞாபக சக்தியை உணர முடியும். பழக்கத்திற்கு அடிமையான சிவராமன் சார் வாழ்க!

"உள்ளே வா"

சந்தேகக் கண் குளிர்ந்து க்தவு முழுவதுமாய்த் திறந்து கொண்டது. என் அந்த நிமிஷத் துக்கம், வெறி, பழிவாங்கும் உணர்வு எல்லாம் சட்டென்று வடிந்து எதிரில் நிறைவளைத் திகைப்புடன் பார்த்தேன்.

கன்னங்களில், கழுத்தில், இடுப்பில், பாதங்களில்... இப்படி பார்வைக்குப் புலப்பட்ட பிரதேசங்களில் எல்லாம் வெண்திட்டுகள். அடிவயிற்றில் என்னவோ செய்தது. நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. இதனால்தான் சார் வந்து ஆறேழு மாதங்கள் ஆகியும் சகோதரியை கடைத்தொரு, கோயில் எதிலும் பார்க்க முடியவில்லை? சுய கட்டுப்பாடா, விமர்சனப் பார்வை தவிர்க்கும் நோக்கமா? கூட்டுக்குள் வெண்புறா!

"இந்தா..." பிரமித்து நின்றவனிடம் வெற்றிலைப் பொட்டலத்தை நீட்டினாள். சிரமப்பட்டு அவளைப் பார்த்தேன். நிறைய மைனஸ்களைத் தந்த இயற்கை அவள் பார்வையில் மட்டும் குளுமையை வாரிக்கொட்டியிருந்து. "

"அது..." என் மோவாயைத் தொட்டு நிமிர்த்தினாள்.

தலை கவிழ்ந்தேன். இப்போதுதான் அவமானத்தை உணர்ந்தேன். மண்டியிட்டு வகுப்புக்கு வெளியில் நின்றபோது உணராத துக்கம்.

"என்ன நடந்தது?"

ஏன் சொன்னேன் என்று புரியவில்லை. ஆனால் ஒப்பித்தேன்.

"ப்ச்... பாவம்... ஹெட்மாஸ்டர் முன்னால பதில் சொல்ற மாதிரி ஆனதும்... உன்மேல் கோபத்தைக் காட்டிட்டாராக்கும்?"

"வரேன்..."

"இரு.. எதாவது சாப்பிடத்தரேன்"

வெளியேறி வந்து விட்டேன். வீட்டிற்கும் திரும்பி விட்டேன். அடுத்த வீட்டுக்குப் பேசப் போயிருந்த அம்மா திரும்பியபோது என் நேரம் வந்து விட்டிருந்தது.

மறுநாள் எந்தத் துணிச்சலில் பள்ளி வாசலை மிதித்தேன் என்றே புரியவில்லை.

சிவராமன் ஸாரின் பார்வையில் அகப்படாமல் அலைந்தேன். அல்லது அவர் என்னைத் தேடவில்லை.

பகல் இடைவேளைக்குப் பிறகு தமிழ் வகுப்பில் ஆழ்ந்திருந்தபோது சிவராமன் சார் குரல் கேட்டது.

"கணேசன்! ஓர் உதவி."

தமிழாசிரியர் கணேசன் நிமிர்ந்தார். "என்ன சார்?"

"அவசரமா வீடு வரை போயிட்டு வரணும். இவனை அனுப்ப முடியுமா?" என்னைக் காட்டினார்.

"போடா..."

புரிபடாமல் நான் சிவராமன் ஸாரை நெருங்கினேன்.

"வீட்டுக்குப் போய் வெத்திலை எடுத்திக்கிட்டு வர்றியா? மறந்து போச்சு..."

ஆழம் பார்க்கிறாரா? குழப்பமாய்ப் பார்த்தேன்.

"போ... சீக்கிரம் வா..." என்றார் இயல்பான குரலில் .

வீட்டில் பூமா சிரிப்புடன் என்னை வரவேற்றாள்.

"பயப் படாதே... ஸார் இனிமேல் உன்னை அனாவசியமா மிரட்ட மாட்டார்..."

வெற்றிலைப் போட்டலத்தை நீட்டினாள். என் தலையை வருடிக் கொடுத்தாள்.

சிவராமன் ஸார் ஆசிரியர்கள் அறையில் தனியே இருந்தார். வெற்றிலைப் போட்டலத்தை வாங்கிக் கொண்டார்.

"வரேன் ஸார்"

"போ, நல்லாப் படி... ஏதாச்சும் புரியலைன்னா என்னைக் கேளு. பீஸ் வேணாம்... அரை மணி, ஒரு மணி கூட சொல்லித்தரேன்..."

தலையாட்டினேன். 'சரி' என்பது போல்.

"வீட்டுக்கு வா..." என்றார் மெல்ல...

வேலு படிப்பை நிறுத்தி அப்பாவின் மளிகைக் கடையில் பொறுப்பெற்று நிற்கிறான். என் ஒரே நண்பன். எவரிடமாவது சமீப கால நிகழ்வுகளைப் புதிய வேண்டியிருந்தது. போனேன்.

"போடா... முட்டாள்... இது கூடவா புரியவில்லை?"

கை நிறைய முந்திரிப் பருப்பு அள்ளித் தந்து சின்ன பெஞ்சில் அமரச் சொன்னான். கடையில் அவன் மட்டும். அப்பா சரக்கு எடுக்க காந்தி மார்க்கெட் போயிருந்தார்.

"அவர் தங்கையை எவனும் கட்டமாட்டான். அவளும் பாவம். நீயும் வளர்ந்து பெரிய மனுசனாட்டாம் இருக்கே... வந்து போனா அவ பிரியத்தைக் காட்ட வசதின்னு...'

அவன் படிப்பு நின்று நின்று போனதன் காரணம் இதுதான். மூளையில் விபரீதக் கற்பனைகள். பாடப் புத்தகம் பிரிக்க, அதில் பிரசுரத்துக்கு ஒவ்வாத வரிகளின் பவனியால் பள்ளியை விட்டு விலகியவன்.

"ச்சீ" என்று துப்பினேன். இரண்டொரு முந்திரி தெரித்தது.

"சொன்னா நம்ப மாட்டே.. பின்னால நீயே வருவே..."

எழுந்து வந்து விட்டேன்.

ஒரு பாடத்தில் தோல்வியுற்று என் படிப்பும் அந்த வருடம் நின்று போனது. சிவராமன் ஸாரும் வேறு ஊருக்கு மாற்றல் கேட்டுப் போய் விட்டார். கடைசி வரை அவரிடம் டியூஷன் கற்க நான் போகவில்லை.

பூமாவை நான் சந்தித்தது மூன்றே முறைதான். மூன்றாவது முறை அவர்கள் ஊருக்குக் கிளம்பிய தினம்.

சிவராமன் வெளியே போயிருந்தார்.

குளுமையான பார்வை. என்னால் அந்த நிமிஷம் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. கண்களில் என்னையும் மீறி வெளிப்படுத்திய ரசனை.

பூமா என் கைகளைப் பற்றிக் கொண்டாள். "எல்லாரும்... என்னோட உடம்பைப் பார்த்து அருவருத்து சுணங்கினப்ப... நீதான்... என் கண்ணைப் பார்த்துப் பேசினவன்... என்னால உன்னை மறக்க முடியாதுடா..."

சட்டென்று என் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டாள். வெகு நாட்களுக்குப் பின்னும் நினைத்தால் அதன் ஜில்லிப்பை உணர முடிந்தது என்னால்.



(அமுதசுரபி பிரசுரம்)

22 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சட்டென்று என் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டாள். வெகு நாட்களுக்குப் பின்னும் நினைத்தால் அதன் ஜில்லிப்பை உணர முடிந்தது என்னால்.//

அமுதசுரபியில் வெளிவந்த இந்தக்கதை எனக்கு அமிர்தமாக இனிக்குது, சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"கூட்டுக்குள் ஒரு வெண்புறா"//

மிக மிக அருமையான தலைப்புத் தேர்வு. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

காலத்து ஏற்றபடி கதையை வெளியிட்டுள்ளீர்கள்.

பொதுவாக எல்லா மாணவர்களும் அடிப்படையில் மிகவும் நல்லவர்களே.

அவர்களின் தன்மானம் பாதிக்கும் போது, அந்த மன நிலையில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது யாருக்கும் [ஏன் அவர்களுக்கே கூட] தெரியாது தான். அது போன்ற நல்லது கெட்டது சிந்திக்கத்தோன்றாத விடலைப்பருவம் அல்லவா அது.

நிறைவானதோர் கதையைப்படித்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் vgk

இராஜராஜேஸ்வரி said...

"கூட்டுக்குள் ஒரு வெண்புறா" தன் மன உணர்வுகளை அருமையாய் சிறகடித்து வெளிப்படுத்திய பகிர்வுகள்.. சிறப்பு..பாராட்டுக்கள்..

Thava said...

அருமை..அருமை..சிறப்பான பகிர்வு..நன்றி சகோ.
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட சிறுகதை...

middleclassmadhavi said...

//சிவராமன் சாரை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டே காரணங்கள்தான் உண்டு.// ?!!
கதையும் பிடித்துப் போனது.

CS. Mohan Kumar said...

மனதை என்னவோ செய்கிறது கதை.

ADHI VENKAT said...

மனதை நெகிழ வைத்த கதை... தலைப்பும் கதையும் அருமை சார்.

மாதேவி said...

அருமையான கதை.
தலைப்பும் கதையுடன் மிகவும் ஒன்றி நிற்கிறது.

ஹேமா said...

வெண்புறா மனதோடு நிற்கிறாள்.அருமையான கதை !

Unknown said...

//அவன் படிப்பு நின்று நின்று போனதன் காரணம் இதுதான். மூளையில் விபரீதக் கற்பனைகள். பாடப் புத்தகம் பிரிக்க, அதில் பிரசுரத்துக்கு ஒவ்வாத வரிகளின் பவனியால் பள்ளியை விட்டு விலகியவன்//
இடையிடையே வரும் இந்த மாதிரியான வரிகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன.

நல்லாயிருக்கு பாஸ்!

vasan said...

என்ன‌ சொல்லுங்க‌ள், உங்க‌ள் அந்த‌ ந‌டைதான், எதையும் க‌ண் முன் கொண்டுவ‌ந்துவிடுகிற‌து.
அல்ல‌து வாச‌க‌னை அங்கே இழுத்துக் கொண்டுபோய் விடுகிற‌து.

கீதமஞ்சரி said...

நெகிழவைக்கும் உணர்வுகளின் சங்கமத்தை அழகிய கதையாய்ப் படைத்ததற்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.

RAMA RAVI (RAMVI) said...

// "எல்லாரும்... என்னோட உடம்பைப் பார்த்து அருவருத்து சுணங்கினப்ப... நீதான்... என் கண்ணைப் பார்த்துப் பேசினவன்... என்னால உன்னை மறக்க முடியாதுடா..."//

மனதை நெகிழ வைத்து விட்டது.

சிறப்பான கதை.

Shakthiprabha (Prabha Sridhar) said...

மனதை தொட்ட கதை

அப்பாதுரை said...

பிரமாதம்.
நிறைய வரிகளை மிகவும் ரசித்தேன்.

manichudar blogspot.com said...

கண்ணைப் பார்த்துப் பேசியவனுக்கு கிடைத்த அன்பு முத்தத்தின் ஜில்லிப்பை நானும் உணர்ந்தேன் ரிஷபன்.

நிலாமகள் said...

பிள்ளைகள் மிகவும் நல்லவர்கள். எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத வரை//

மேலிருந்து மெல்ல‌ இற‌ங்கும் உதிர்ந்த‌ சிற‌கு காற்றுட‌ன் கை கோர்த்து வ‌ருடிச் செல்வ‌து போலான‌து எழுத்தின் இத‌மான‌ தீண்ட‌ல்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

முதல்தரமான எழுத்தைக் கடைசியாய்ப் படிக்க வாய்க்கிறது.(இந்த வரிசையில்)

அபாரம் ரிஷபன்.

Anonymous said...

வணக்கம்
ரிஷபன்(அண்ணா)

கூட்டுக்குள் ஒரு வெண்புறா என்ற ஆக்கம் படிப்பதற்கு நன்றாக உள்ளது,இன்று25.12,2012 உங்களின் இந்த ஆக்கம் வலைச்சரம் வலைப்பூவில் வந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Viji Raja said...

very splendid work of art.the lines reveal ur authority over the thought.so skillfully knitted story.congrats.