November 10, 2015

அம்மு - 6

அம்மு – 6
சித்திரை வீதிகளில் வீடுகளின் அமைப்பு (இப்போது இல்லை).. ஒரு வீட்டின் மாடிப்பக்கம் போனால்.. கொஞ்சம் வளையும் உடம்பு இருந்தால்.. வீதியின் கடைசி வீடு வரை மாடியிலேயே ட்ராவல் பண்ணி விடலாம்.
அம்முவைப் பார்க்கத் தோன்றினால் இந்த உபாயம். அதுவும் சித்திரைத் தேர் நாளைக்கு என்றால் முதல்நாள் வையாளி. குதிரை வாகனத்தில் நம்பெருமாள் கொஞ்சம் ஆஸ்வாசமாய் நடந்து வந்து தேர் கிட்டே வந்ததும் இரு பக்கமும் ஜனங்கள் கூச்சலுக்கிடையே வித்தை காட்டுவார்.
அந்த நாளைய கட்டிடங்கள் என்பதால் கொஞ்சம் கோக்குமாக்காகத்தான் அமைப்பு. இதில் மழை பெய்து பாசி பிடித்திருக்கும். கரும்பாசி. சுவரில் கை வைத்து எக்கி தெருவைப் பார்த்தால் முழுத் தெருவும் புலனாகும். கீழே நின்று பார்ப்பதை விட தேர்ப்பக்கமிருந்து நூறடிக்கு குதிரை வந்து விட்டுப் போவதை.. டிவியில் மேட்ச் பார்க்கிற மாதிரி அழகாய்ப் பார்த்து விடலாம்.
அம்மு குட்டை இல்லை. உயரம்தான். குண்டும் இல்லை. ஆனால் லேசாய் சலித்துக் கொள்வாள். அது அவள் மேனரிசம் என்று பழக ஆரம்பித்தபின் புரிந்தது.
ஆங்.. ஒரு முக்கிய கேரக்டரை விட்டு விட்டேன். அம்முவின் தம்பி வெங்கடேஷ். பார்த்தால் சோனிப்பயல். ஆனால் சரியான விவரம். எங்களை மிஸ்யூஸ் பண்ணுவதில் கெட்டி.
கோலிக்குண்டு விளையாட்டில் சிகரட் அட்டைகளுக்கு படு கிராக்கி. சிஸர்ஸ்.. பெர்க்லி.. கோல்ட்ப்ளேக்.. இதைப் பொறுக்கத் தெருதெருவாய் அலைவோம். அதை அப்பாவுக்குத் தெரியாமல் ஒளித்து வைக்க பாடுபடுவோம். ‘என்னடா கையெல்லாம் நார்றது’ என்று அம்மா மோப்பசக்தியால் கண்டுபிடிக்கக் கூடாதென்று என்ன தேய்த்தாலும் நுரை வராத சோப்புக் கட்டியால் கழுவி விட்டு வருவோம்.
வெங்கடேஷுக்கு வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம். அதனால் அவனுக்கும் சேர்த்து சிகரட் அட்டை பொறுக்கி வருவதில் எனக்கும் அவனுக்கும் ஒரு பந்தம் ஏற்பட்டது. தெரியாத்தனமாய் அவன் வீட்டுக்குள் போய் அன்று திரட்டிய வசூலைப் பெருமையாய்க் காட்டப்போக.. அவன் அம்மா வந்து விட்டாள். அப்படியே அம்மு.. வயசான தோற்றத்தில்.
“என்னடா இது சனியன்” என்றாள்.
என்னைச் சொன்னாளா.. அட்டையையா என்று நான் தெளிவாக்கிக் கொள்ள இப்போதும் விரும்பவில்லை.
“இல்லம்மா.. ஸ்கூல்ல ஒரு காம்பெடிஷன்.. அதுக்கு” என்று மழுப்பினான்.
“தூக்கிப் போடு.. என்ன கர்மாந்திரமோ”
போய்விட்டாள். வெங்கடேஷ் என்னை இனி வீட்டுப் பக்கம் வந்தால் இதை எல்லாம் கொண்டு வராதே என்று சொல்லி அனுப்ப முயன்றபோதுதான் அம்முவின் முதல் தரிசனம்.
பெண்களை நீங்கள் வெளியே.. கோவிலில்.. கடைத்தெருவில்.. இன்ன பிற பிரதேசங்களில் பார்ப்பது ஒரு தனி ரகம். வீட்டில் இயல்பில் பார்க்கும்போது ஒரு அசாதாரண காட்சி கிடைக்கும். அவர்களின் உண்மையான அழகு.
அம்மு ஒரு அசாத்திய அழகி. எந்தப் பெண்ணையும் கொஞ்ச நேரம் கிட்டக்க சேர்ந்தாற்போல பத்து நிமிஷம் பார்க்கமுடியாது. இருக்கும் மைனஸ் பாய்ண்ட்ஸ் தெரிய ஆரம்பித்து விடும். மூக்கு சப்பை.. கண்ணு டோரி.. உதடு பிதுக்கல்.. இதெல்லாம் தாண்டி அவள் அழகாய்த் தெரிவது வாத்யார் சொல்வதைப் போல ஆண்ட்ரோஜன்.. ஹார்மோன்களின் வேலை.
அம்முவுக்கு அப்போ மைனஸ் இல்லியா.. இருக்கு. அந்த முதல் காட்சியில் அதெல்லாம் பதிவாகவில்லை. அ..ம்..மு.. தேர்ந்த வல்லுனர் புகைப்படம் போல விழிவழி நுழைந்து மனசுக்குள் பச்சக்கென்று பதிந்து விட்டாள்.
அதன்பின் காட்டுத்தீ போல பரவி ரெயில்வே ஸ்டேஷனில் அவரவர் ரயிலுக்குக் காத்திருப்பதைப் போல அம்முவுக்குக் காத்திருக்கும் பசங்கள்.. எதிர் வீட்டுத் திண்ணையில்.. தெரு முக்கில்.. அண்ணாச்சி கடை வாசலில்.. சக்கரத்தாழ்வார் சன்னிதியில்.. அவள் அம்மா ‘ஏண்டி அம்மு பெருங்காயம் வாங்கிண்டு வரியா’ என்று சமையல்கட்டில் குரல் கொடுத்தால் ஆறு டப்பா எல்ஜி பெருங்காயம் வீட்டு வாசலில் வைக்கப் பட்டிருக்கும்.. அம்மு வெளியே வருவதற்குள்.
பைத்தியமாய் அலைந்தோம் என்று  சொல்ல.. இப்போதும் பெருமையாகத்தான் இருக்கிறது. அதுதான் அம்மு.
குயுக்தியான யோசனை எனக்குத் தோன்றியதே சித்திரைத்திருநாள் வந்த போதுதான். அம்மு வீட்டிலிருந்து வையாளி முழுமையாகப் பார்க்க முடியாது. வெங்கடேஷுக்கு எதிரே ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தபோது அம்மு கேட்டாள்.
“வையாளி நன்னா இருக்குமாமே”
எனக்குக் கதை சொல்ல சொல்லித் தரணுமா என்ன.
“நம்பெருமாள் கிளம்பும் போது குதிரை கேஸுவலா வரும்.. சும்மா அப்படியே ஜாலி வாக் போறாப்ல. தேர் கிட்ட வந்ததும் அப்பவும் முதல்ல சாதாரணமா.. அப்புறம் இன்ஸ்பெக்‌ஷன்.. குதிரை வையாளி,, குறுக்கும் நெடுக்கும் சும்மா அதிரும்.. அப்படிப் போகும்.  ஓடி முடிச்சு நிக்கும் போது அதோட நாக்கு மூச்சிரைச்சு வெளியே வந்துட்டு போகும் பாரு.. ஆஹா”
ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்து ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தபோது நான் எதிர்பார்த்த நெருப்பு பற்ற வைக்கப் பட்டிருந்தது அவள் கண்களில்.
”எங்காத்துல இருந்து தெரியுமா”
“ம்ஹூம்.. எங்காத்து மாடிதான் கரெக்ட்”
நான் அவளை இன்வைட் பண்ணுவேன் என்று எதிர்பார்த்தாள்.
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா வாங்கோ” என்றேன் வெங்கடேஷிடம்.
அம்முவைப் பார்க்காத மாதிரி பேசியதற்கு இரு காரணங்கள். சும்மா ஒரு பாவ்லா. அப்புறம் அவளைப் பார்த்தால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு பேச்சிழக்கும் அபாயம்.
ஒரு வசதி.. இருட்டியபிறகுதான் வையாளி. அதுவும் எட்டு மணி ரேஞ்சில். மாடிப்பக்கம் லைட் கிடையாது. தெருவிளக்கின் மங்கல் ஒளி. சுற்றி 30 பேரை வைத்துக் கொண்டு வேறு அல்ப யோசனைகளுக்கு வழியில்லை. இத்தனை இடைஞ்சல்களிலும் அம்முவுக்கு ஸ்பெஷல் சீட் ஏற்பாடு பண்ணியிருந்தேன்.
அவள் வந்ததும் ஒளித்து வைத்திருந்த திடகாத்திரமான ஸ்டூலைக் கொண்டு வந்து போட்டேன்.
“இது மேல ஏறி நில்லு.. நல்லாத் தெரியும்”
என் சகோதரிகள் இருவரும் இருட்டில் என்னை எரித்தது யாருக்கும் தெரிந்திருக்காது. ‘பாவம் டி அவ.. பார்க்கணும்னு ஆசைப்பட்டா’
‘நாங்க மட்டும் பாவம் இல்லியா’
ஹோவென்ற இரைச்சல்.. குதிரை ஓடியது. நம்பெருமாள் அழகன். ஜனத் திரள். மாடி இருட்டு. மங்கல் ஒளி. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அழியாச் சித்திரமாய்.. கண் மூடி யோசித்தால்.
குதிரை வாகனம் போய் விட்டது. தெருவில் மறுநாள் தேர் பார்க்க வந்திருந்த சுற்றுக் கிராமக் கூட்டம். ஒவ்வொருவராய் மரப் படியில் இறங்கி.. குனிஞ்சு.. குனிஞ்சு.. பார்த்து.. உட்கார்ந்து.. மெல்ல இறங்கி கூட்டம் கலைய ஆரம்பித்தது.
அம்மு.. வெங்கடேஷ்.. நான் மூவர் மட்டுமே இப்போது.
“இருட்டா இருக்கு” என்றாள். குரலில் லேசாய் பயம்.
“என் பின்னாடி வா” என்றான் வெங்கடேஷ்.
முதலில் வெங்கடேஷ்.. பிறகு அம்மு.. அப்புறம் நான்.
அவன் இறங்கத் தடுமாறிக் கொண்டிருந்த அந்த இரண்டு நிமிடங்களில் அம்மு என் கையைப் பற்றிக் கொண்டாள். குட்டிக்கூரா பவுடர் வாசனை அடித்தது. தாவணி உரசியது.
பறவை உதிர்த்த இறகு காற்றில் அலைபாய்ந்து தரையில் அடங்குவதைப் போல படிக்கட்டில் இறங்கினேன் மிக லேசாக.
அம்மு கல்லூரிப் படிப்பிற்கு சென்னை போய் விட்டாள். கல்யாணமாகி இரண்டு பெண்கள். ட்வின்ஸ். வெங்கடேஷை பல்லவனில் ஒரு சமயம் பார்த்தேன். பூசியிருந்தான். கன்னம் பப்பென்று. சிகரெட் அட்டை பற்றி பேசிச் சிரித்தோம். அம்முவின் பாமிலி போட்டோ காட்டினான். அவன் குடும்பப் படமும்.
நான் ஸ்ரீரங்கத்தில் இறங்க.. அவன் ஜங்ஷனில்.
“வரேன்” என்றேன் இறங்க எழுந்த போது.
“கண்ணா”
“ம்ம்”
“அம்மு உன்னை விசாரிச்சா ஒரு தடவை.. “
“…..”
”பார்த்ததா சொல்றேன் “ என்றான். என்னை நேராகப் பார்த்து.

அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க முடிந்தது அதற்குள் ரெயில் ஸ்ரீரங்கம் சமீபித்து ப்ளாட்பார்மில் நின்று விட்டதாலும் என்னைத் தள்ளிக் கொண்டு இறங்க ஆரம்பித்தவர்களாலும்.

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குட்டிக்கூரா பவுடர் வாஸனையுடன் .... கதாநாயகனின் மேல் தாவணி உரச ... அம்மு படி இறங்கிய அழகைப் படிக்கப்படிக்க எனக்குள் சில நினைவுகள் வையாளி போட வைத்ததை மறுக்க முடியவில்லை.

என்ன அற்புதமானதோர் எழுத்துக்கள்!!!!! என் மானஸீக குருநாதராகிய தங்களின் கை விரல்களைப்பிடித்து கண்களில் மானஸீகமாக ஒத்திக்கொள்கிறேன். {அம்முவே அவ்வாறு செய்ததுபோல தாங்கள் நினைத்துக்கொண்டாலும் .... நோ ப்ராப்ளம், சார்} அம்மு சீரியல் தொடர வாழ்த்துகள்.

பிரியத்துடன் வீ.....ஜீ

வெங்கட் நாகராஜ் said...

வாசலில் ஆறு பெருங்காய டப்பா... :))))

ஆங்காங்கே மிளிரும் நகைச்சுவை. அம்மு ரசிக்க வைத்தது...

எத்தனை அம்மு பதிவுகளும் எழுதி முடித்த பின் புத்தகமாகவோ/மின் புத்தகமாகவோ வெளியிடலாம்....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

உங்களின் அம்மு எப்போதுமே ரசிக்க வைக்கிறாள்! அருமை!

மோகன்ஜி said...

அம்மு ... தொந்தரவு செய்கிறாளே!