May 29, 2010

எஸ் எம் எஸ் - பகுதி 2

ஒவ்வொரு வாரமும் வசந்தியும் அவள் கணவர் சேகரும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். அல்லது நாங்கள் அவர்கள் வீட்டிற்குப் போவோம். இது வசந்திக்குக் கல்யாணமாகி இதே ஊரில் குடித்தனம் வைத்தபின் ஏற்பட்ட எழுதப்படாத உடன்படிக்கை. அக்கா தங்கை பாசம் பொங்கி வழிவதில் நாங்கள் குறுக்கே அணை கட்டுவதாக இல்லை. இந்த ஞாயிறும் வந்து விட்டார்கள்.

எனக்குத்தான் ஏற்கெனவே தலைவலி. நேற்று மட்டும் அவனிடமிருந்து 55 குறுஞ்செய்திகள். எல்லாம் 'கடி' ரகம். பயலுக்கு இப்போது எல்லாம் உச்சத்தில். அவன் தொடர்பு கொண்ட பெண் பேசிவிட்டாளே. அந்த உல்லாசம்.

வசந்தி என்னைப் பார்த்து கேட்டாள்.

"என்ன உர்ர்ருனு இருக்கீங்க..உடம்பு சரியில்லையா"

நான் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வி.

"என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்.

"எவனோ தெரியலே.. மாஞ்சி மாஞ்சி மெசேஜ் அனுப்பறான். எப்படி கட் பண்றதுன்னு புரியலை"

சேகர் கேட்டான்.

"உங்க நம்பர் அவனுக்கு எப்படி கிடைச்சுது"

வசந்தி குறுக்கிட்டாள்.

"இது என்ன பெரிய விஷயமா.. யாராச்சும் வேண்டாம்னு கேன்சல் பண்ன நம்பரைத்தானே சமயத்துல நமக்கு அலாட் பண்றாங்க. அவனோட டார்ச்சர் தாங்காம யாரோ சரண்டர் பண்ண நம்பர் நமக்கு வந்திருச்சு."

"போலிசுக்குப் போலாமே. நம்பரை ட்ரேஸ் பண்ணி ஆளைப் புடிச்சு.."

வசந்தி மறுபடியும் குறுக்கிட்டாள்.

"அக்கா பயப்படறா.. எதுக்கு வம்புன்னு"

"அய்ய.. இது என்ன படிக்காதவங்க மாதிரி. அவங்க கூட தைரியமா புகார் கொடுக்கறாங்க"

வசந்தி கேட்டாள்.

"இப்ப என்ன மெசேஜ்?"

"வந்து.." தயங்கினேன்.

புனிதா சொல்லிவிட்டாள்.

"ஒரு யானையும் எறும்பும் லவ் பண்ணிச்சாம். எறும்பு வீட்டுல பயங்கர எதிர்ப்பாம். யானை என்ன ஜாதி.. நாம என்ன ஜாதின்னு. லவ் பண்ற எறும்பு பிடிவாதமா நான் யானையைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லிச்சாம். அப்படி என்ன கட்டாயம்னு கேட்டப்ப எறும்பு சொன்ன பதிலைக் கேட்டு மொத்த எறும்பு குடும்பமும் தற்கொலை பண்ணிகிச்சாம்"

வசந்தி ஆர்வமாய்க் கேட்டாள்.

"என்ன பதில்?"

"நான் இப்ப முழுகாம இருக்கேன்னு அந்த எறும்பு சொல்லிச்சாம்"

வசந்தியும் சேகரும் கண்ணில் நீர் வரச் சிரித்தார்கள்.

"குட் ஜோக்"

"நீங்களும் உங்க ரசனையும்"

புனிதா தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஜஸ்ட் ஹியூமர் சென்ஸோட பாருங்க.. ஏன் டென்ஷன் ஆகறீங்க"

"நேத்து ஒரு மெசேஜ் வந்தது" என்றேன் பேச்சை மாற்ற நினைத்து.

"என்ன"

"ஆபீசர்ஸ் கிளப். வந்தவங்க எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்ச கேம் விளையாடிகிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு செல்லுல இன்கமிங் கால். ஒருத்தர் எடுத்து பேசினார். சொல்லும்மா.. என்ன விஷயம்.. வொய்ப் கிட்ட பேசறார்னு புரிஞ்சுது. நகைக்கடைக்கு வந்தேன்.. ஒரு நெக்லஸ் புது மாடலா இருக்கு. விலை 25000 தான்.. வாங்கிக்கவா.. ஓக்கேம்மா.. உடனே அவங்க புது மாடல் கார் வந்திருக்கு.. புக் பண்ணிரவான்னாங்க.. விலை எவ்வளவுன்னு கேட்டாரு.. ஃபோர் லாக்ஸ்தான்.. சூப்பர்.. புக் பண்ணிருன்னுட்டாரு. அப்ப இன்னொரு ஆசையும் சொல்லிரவான்னு கேட்டாங்க. சொல்லும்மான்னாரு. தோட்டத்தோட வீடு வாங்கணும்னு நினைச்சமே.. 20 லாக்ஸ்ல ஒரு ஆஃபர் வந்திருக்குன்னு சொன்னாங்க. ம்ம்.. 18க்கு கேளு.. இல்லாட்டி இருபதுக்கே முடிச்சிரு.. ஹைய்யோ.. ஐ லவ் யூன்னாங்க.. செல்லை எடுத்துப் பேசின ஆளு லைனை கட் பண்ணிட்டு எழுந்து நின்னு இது யாரோட செல்லுன்னார்"

மறுபடியும் சேகரும் வசந்தியும் சிரித்தார்கள். புனிதாவின் முகத்தில் இறுக்கம் போகவில்லை. சாப்பாட்டின் போதும் அதிகம் நான் பேசவில்லை. புனிதாவும் வசந்தியும் கையில் எடுத்துக் கொண்டு ஹாலுக்குப் போய் விட்டார்கள். சேகர் டிவி பார்த்தபடி சாப்பிட்டான். நான் டைனிங் டேபிளிலேயே. சீக்கிரம் முடித்து விட்டேன்.

வசந்தி கிண்டலடித்தாள்.

"அடுத்தது என்ன.. வழக்கம் போல தூக்கம் தானே"

சேகர் சொன்னான்.

"நீங்க போங்க.. நம்ம கஷ்டம் அவளுக்கு என்ன தெரியும்"

படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டேன். படுத்தபோது சட்டைப் பையில் இருந்த செல் உறுத்தியது. எடுத்து கீழே வைக்கப் போனபோது ரிங் கேட்டது.

"ஹாய்.. ஜில்லு"

அவனேதான்.

"என்ன"

"இப்ப நீ எங்கே இருக்கேன்னு சொல்லட்டுமா.. பெட் ரூம்லதானே"

அடப்பாவி. அது எப்படித் தெரியும்.

"பார்த்தியா.. கரெக்டா கண்டு பிடிச்சேனா.. என் ஞாபகம் வந்தாலே நீ பெட் ரூமுக்குத்தானே போவே"

இவனை என்ன செய்ய.

"ஜோக்ஸ் எல்லாம் பிடிச்சிருந்ததா.. என் டேஸ்ட்தான் உனக்கும்னு எனக்குத் தெரியும். அதனாலதான் எனக்குப் பிடிச்ச மெசேஜை மட்டும் உனக்கும் அனுப்பறேன்"

நான் பேசாமல் இருந்தேன்.

"ஹேய் டார்லிங், என்னைப் பார்க்கணும் போல இருக்கா"

"ம்"

"இன்னிக்கே பார்க்கலாமா"

"ம்"

"நாலு மணிக்கு ரெடியா இரு. இடம் சொல்றேன். எனக்குப் பிடிச்ச ஸ்கை ப்ளூ ஸாரி.. ஓ.. நீ சுரிதார் போடுவியா.. அப்ப அதே கலர்ல சுரிதார் இருக்கா"

இருக்குடா படவா.

"நாலு மணி.. ஓக்கே"

கட்டாகி விட்டது. யாரோ கதவைத் தட்டிய சத்தம். எழுந்து போனேன். கதவைத் திறந்தால் எதிரே புனிதா.

"பாயசம் எடுத்துக்கலியே" என்றாள் டம்ளரை நீட்டி.

"இப்ப வேணாம்.. அப்புறம்"

வசந்தியின் குரல் கேட்டது.

"அப்புறம் இருக்காது. இன்னிக்கு வழக்கத்தை விட சூப்பரா அமைஞ்சிருக்கு. நானே எடுத்து குடிச்சிருவேன்"

பாயசம் ரசிக்கிற மூடில் நான் இல்லை. ஒரு அண்டா பாய்சன் இருந்தால் மெசேஜ் அனுப்புகிற தடியனுக்கு ஊத்திக் கொடுத்து விடுவேன்.

"இன்னிக்கு சினிமா போலாமா" என்றாள் வசந்தி.

"நா..ன் வரலே" என்றேன்.

"ஏன்.."

"வெளியே போகணும். ஒரு முக்கியமான வேலை இருக்கு"

"அதானே பார்த்தேன். இப்பல்லாம் நாம மாசம் ஒரு தடவை பார்க்கிறதே அபூர்வமாயிருச்சு. ரெண்டு தடவையா நீங்க இல்லாம நாங்க மட்டும் வந்துட்டு போனோம்."

புனிதாவும் கேட்டாள்.

"போலாமே"

ம்ம். யோசித்தேன். அவன் நினைத்தபடி 'நான்' உடனே வந்து அவனைச் சந்தித்து விட்டால்.. என் மேல் இருக்கிற கவர்ச்சி போய் விடும். இவனை இப்படியே விடக் கூடாது. ஒரு தரம் அவனை அலைய விட வேண்டும்.

"சரி. வா.. சினிமா போகலாம்"

புனிதாவுக்கு ஒரே குஷி. தியேட்டரில் பாதி படம் பார்க்கையில் மெசேஜ்.

'ஸாரிடா.. இன்னிக்கு புரொகிராம் கேன்சல்.. அப்புறம் பார்க்கலாம்'

அவனும் என்னைப் போலவே உஷார் பார்ட்டிதான். உடனே வரக் கூடாதென்று மழுப்புகிறான். பத்து நிமிடங்களில் இன்னொரு மெசேஜ்.

'நான் இப்ப எங்கே இருக்கேன் தெரியுமா.. சினிமா தியேட்டர்ல.. ப்ச்.. என் பக்கத்துல நீ இல்லியேன்னு வருத்தமா இருக்கு'

அந்த நிமிடம் எனக்கு டெலிபோன்ஸில் வேலை பார்க்கும் ஒரு நண்பரின் நினைவு வந்தது. எப்படியும் அவரைப் பார்த்துப் பேசி இந்த எண்ணின் சொந்தக்காரன் யார் என்று கண்டுபிடித்து விடவேண்டும்.


(தொடரும்)

5 comments:

ஹுஸைனம்மா said...

அவ்வளவாக மனம் ஒப்பவில்லை கதைப் போக்கோடு. இருந்தாலும் நல்லபடி முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..

ஹேமா said...

வாசித்தேன்....
தொடரை இன்னும் எதிர்பார்த்தபடி !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

விறுவிறுப்பாய் செல்கிறது...சஸ்பென்ஸ் தாங்க முடியாமல், என் நெற்றி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் முட்டிக் கொண்டது....!!!

பனித்துளி சங்கர் said...

நல்லா இருக்கு நண்பரே !
எண்ணின் சொந்தக்காரன் யார் என்று தெரிந்துகொள்ள நானும் மீண்டும் வருவேன் .

Anisha Yunus said...

எனக்கென்னமோ சேகரா இருக்கொம்ம்ன்னு ஒரு சந்தேகம். இருந்தாலும் கதை எப்படி போகுதுன்னு பாக்கலாம். ஹ்ம்ம்...அப்பொறம்??