May 19, 2010

மயிலிறகு ஒத்தடங்கள்

வித்யாவைப் பார்க்கும்வரை எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை.
எங்கள் அலுவலகத்துக்குப் புதிதாக ஒருவர் மாற்றலாகி வருகிறார் என்று தகவல் வந்ததும் என்னைத் தவிர மற்றவர்கள் பரபரப்பானார்கள்.
"யார் வராங்களாம்"
"ஒருத்தருக்கும் ட்ரான்ஸ்பரே கிடையாதுன்னு சொல்லிகிட்டிருந்தாங்க.. ஹெட் ஆபீஸ்ல.. இப்ப எப்படி?"
"அட அத விடுப்பா.. யாருன்னு சொல்லுங்களேன்"
"அதான் நம்மள மேனேஜ்மெண்ட்ல மதிக்கறதே இல்லை.. உணர்ச்சியே இல்லை ஒருத்தனுக்கும்"
"லேடி ஸ்டாஃப்.. பேரு வித்யாவாம்"
"மேரீடா.. அன்மேரீடா?"
"ரொம்ப முக்கியம்.. உனக்குக் கல்யாணமாகி ரெண்டு பொண்ணு இருக்கு.. மறந்துராதே"
கேட்டவர் வழிந்தார்.
"அதுக்கில்லே.. நம்ம ஆபீஸ் ஒரே பாலைவனமா இருக்கா.. அதான் "
"ஏன்.. எங்களைப் பார்த்தா மனுஷியா தெரியலியா" என்றார் ஒரு பெண்மணி.
"அதனாலதானே அவரு ஃபீல் பண்றாரு.." என்றார் ஒருவர் இடக்கு மடக்காக.
இவர்கள் உரையாடல் என்னைப் பாதிக்கவில்லை.
என் கையிலிருந்த 'மிக அவசரம்' கோப்பை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.
"பாரேன்.. நம்ம திவாகர் ஸார் மட்டும் அசையவே இல்லை.. உலகமே அழியப் போவுதுன்னு மெசேஜ் வந்தாலும் ஃபைலை முடிச்சுட்டுத்தான் வெளியே ஓடுவார்"
எல்லோரும் சிரிக்க நான் என்னவென்று நிமிர்ந்து பார்த்தேன்.
"உங்களுக்கு அஸிஸ்ட் பண்ண ஒரு லேடி ஸ்டாஃப் வராங்க.. தெரியுமா?"
சொன்னவர் கண்களில் கேலி மின்னியது.
"அப்படியா"
"இனிமே நீங்க ரிலாக்ஸ் ஆகலாம்"
நான் மீண்டும் ஃபைல் பார்க்க ஆரம்பிக்க கேலி பேசியவர் அலுத்துப்போய் போய் விட்டார்.
அவர் கேலியாகச் சொன்னது என்னவோ பலித்தே விட்டது. வித்யா- புதிதாக வந்த பெண்மணியை எனக்குத்தான் உதவியாளராக நியமித்தார்கள். வித்யாவின் கற்றுக் கொள்ளும் ஆற்றல் என்னைத் திகைக்க வைத்து விட்டது. படு ஷார்ப்.
வாய் விட்டே சொல்லி விட்டேன்.
"இனிமே நான் தைரியமா லீவுல போலாம்"
சிரித்தாள். அவள் பர்சனலாக எதுவும் பேசுவதில்லை. இதற்குமுன் வேலை பார்த்த ஆபீஸ், ஊர், பிடித்த எழுத்தாளர், படித்த புத்தகங்கள் இப்படி பொதுவாய் எல்லாம் பேசி இருக்கிறோம்.
தற்செயலாக ஒரு தரம் சொன்னாள்.
'வயசான அம்மா.. வீட்டுக்கு நேரத்துக்குப் போயிட்டா நல்லது. பக்கத்து வீட்டுல சொல்லி வச்சிருக்கேன். இருந்தாலும் அவங்களை ரொம்ப தொந்திரவு செய்ய முடியாது. நல்லா இருக்காது.'
நிச்சயம் வயது முப்பது இருக்கும். ஏன் மணமாகவில்லை என்று புரியவில்லை. அந்தக் கேள்வியை 35 வயது பேச்சிலர் கேட்பது சரியாக இருக்காது என்று தோன்றியது.
அன்று மழை பலமாகப் பிடித்துக் கொண்டு விட்டது. சோதனையாக ஹெட் ஆபீஸிலிருந்து கேட்டிருந்த தகவல் தயார் ஆகவே மணி ஏழு ஆகிவிட்டது. வித்யா பக்கத்து வீட்டுக்குத் தகவல் சொல்லி விட்டதால் அத்தனை பரபரப்பு காட்டவில்லை. எனக்குத்தான் உள்ளூர உறுத்தல். சக அலுவலர் தன் நிலைமையை ஏற்கெனவே சொல்லி இருக்கும்போது அவர்களை நிர்ப்பந்தப்படுத்துவது முறையல்ல என்று நினைப்பவன். அதனால் மன்னிப்பு கேட்கும் குரலில் சொல்லிவிட்டேன்.
"என்னைக்கோ ஒரு நாள்தானே.. ஏன் ஃபீல் பண்றீங்க" என்றாள் வித்யா.
"அப்படி இல்லீங்க.. இந்த உலகத்துல அடுத்தவங்களைப் புரிஞ்சுக்கறவங்களே கம்மி.. அதனாலதான் நிறைய பேருக்கு மன அழுத்தம்.. வியாதி எல்லாம். மறைமுகமா அடிமனசுக்குள்ளே ஒருவித எதிர்ப்பு அலை ஓடிகிட்டே இருக்கும்.. உள்ளே ஒண்ணு.. வெளியே ஒண்ணுன்னு இதனாலதான் பாதிப் பேர் மாறிடறாங்க. ஆனாலும் யாராவது நம்மள புரிஞ்சுப்பாங்களான்னு ஒரு எதிர்பார்ப்பு, ஏக்கமும் இருக்கத்தான் செய்யுது. நம்ம மேல அக்கறை இருக்கற நபரைக் கண்டு பிடிச்சுட்டா மனசுக்கு மயிலிறகு ஒத்தடம் கிடைச்ச எபக்ட்"
என் குரலின் அடி ஆழத்திலிருந்து வார்த்தைகள் வந்தது எனக்கே திகைப்பாய் இருந்தது. வித்யா பதில் சொல்லவில்லை .
நான் ஏன் அதிகப்படியாகப் பேசி விட்டேன் என்று மனசுக்குள் திட்டிக் கொண்டேன் என்னையே.
வேலையை முடித்து விட்டோம். கிளம்பவேண்டியதுதான். மழையும் குறைந்திருந்தது. ஆட்டோ பிடித்துப் போய் விடுவதாக வித்யா சொன்னாள். வெளியே வந்து விட்டோம்.
"நீங்க எந்த பக்கம்?"
சொன்னாள். அட.. நான் இருக்கும் பகுதிக்குப் போகும் வழிதான்.
"உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லேன்னா.. வாங்க.. இறக்கி விட்டுட்டு போயிடறேன்.. நானும் ஆட்டோலதான் போறேன்" என்றேன்.
அந்த நிமிடம் வித்யா நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
"பர்சனலா உங்களை ஒண்ணு கேட்கலாமா.."
"எ..ன்ன"
"நீங்க ஏன் கல்யாணம் செஞ்சுக்கல இதுவரை.."
"யாரும் என்னைக் கேட்கலை" என்றேன் பாதி கேலியாய், பாதி உண்மையாய்.
ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும் வித்யா சொன்னாள்.
"எங்கம்மாவுக்கு உங்களைப் பார்க்கணுமாம்.. வீட்டுக்கு வந்துட்டு போறீங்களா.. உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லேன்னா.."
என் வார்த்தைகளை அதே தொனியில் சொன்னபோது அவள் கண்களில் குறும்பும் என் மீதான காதலும் மின்னியது மழை விட்டு விடாத வானத்தைப் போலவே.
(தேவியில் பிரசுரமானது)

21 comments:

சாந்தி மாரியப்பன் said...

மயிலிறகால் ஒத்தடம் கொடுத்தமாதிரி இருக்கு மனசுக்கு. அருமையா எழுதறீங்கப்பா. தொடருங்கள்.

Madumitha said...

இரண்டாம் முறை
படிக்கும் போதும்
மயிலிறகு தான்.

Chitra said...

தேவியில் வெளியான இந்த இதமான கதைக்காக பாராட்டுக்கள்! ரொம்ப நல்லா இருக்குங்க.

Rekha raghavan said...

அருமையான சிறுகதையை இங்கிருந்து படிக்க மனசுக்கு இதமாய் இருந்தது.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

பத்மா said...

நான் அங்கேயே படிச்சுருக்கேன் .இப்பவும் அழகா இருக்கு படிக்க .கண்ணில் மின்னும் காதலுடன் நம்பிக்கை .

vasu balaji said...

ரொம்ப நல்லாருக்கு ரிஷபன்.நீட்:)

கே. பி. ஜனா... said...

படிக்கப் படிக்க மனசுக்கு இதமா இருந்தது. இந்தக் கதைக்கு அதுதான் வெற்றி!

அன்புடன் அருணா said...

மயிலிறகு போல மனதைத் தொட்டது கவிதை.

sundar sp said...

அருமையான காதல்... மிக அழகாக உள்ளது

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மயிலிறகால் நீவி விட்டது போன்ற மென்மை கதையில்...

கமலேஷ் said...

அருமையான கதை ஜி...
கலக்கி இருக்கீங்க...வாழ்த்துக்கள்..

க ரா said...

ரொம்ப நல்லாருக்கு ரிஷபன். தேவியில் வெளியானதற்கு பாராட்டுக்கள்.

நிலாமதி said...

அழகாய் சொல்லியிருகிரீங்க. பாராடுக்கள்

ஹேமா said...

//நம்ம மேல அக்கறை இருக்கற நபரைக் கண்டு பிடிச்சுட்டா மனசுக்கு மயிலிறகு ஒத்தடம் கிடைச்ச எபக்ட்"//

புரிந்து கொண்ட இதமான மயிலிறகு.

அம்பிகா said...

மயிலிறகின் இதம், கதையில்.
தேவியில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மயிலிறகு அவ்வளவு அழகு. உங்க கதை அதை விட அழகு.

vasan said...

ந‌ல்ல‌ கும்ப‌கோண‌ம் டிகிரி காப்பி அதுவும் அப்ப‌ க‌ர‌ந்த‌ ப‌சும் பாலில்,
கார்கால‌ ச‌யாங்காலத்தில், காவேரியை பார்த்துக்கிட்டே, நார்க்க‌ட்டுள்ள‌ உர்கார்ந்து அருந்தும் சுக‌ம்.

சுந்தர்ஜி said...

கொஞ்சம் லேசாகி தண்ணீரில் மிதக்கும் சுகம் கதையின் முடிவில்.ஜோர் ரிஷபன்.

Matangi Mawley said...

hey.. :) .. romba azhakaaka irunthathu! varunanaikal- antha kathaapaaththirangalin sinthanaikalai velippaduththiya vitham.. azhaku!

butterfly Surya said...

Simple.. Sweet... Super..

Unknown said...

கதை எழுதிய விதம் அருமை. ஒரு விஷயம் கேட்கணுமே இல்லாட்டி மனசு உறுத்துமே. இன்றைக்கு நான் படிக்கிற 3 வது மயிலிறகு மேட்டர். ஒரே நாளில் எல்லார் மனதிலும் மயிலிறகு ?.