கை தவறி மொபைலை எங்காவது வைத்து விடுவதும் பிறகு அதை தேடுவதும் எனக்கு வாடிக்கையாகி விட்டது.
சங்கரன் சிரித்தான்.
"அது எப்படி ஒவ்வொரு தடவையும் கை தவறி வைப்பீங்க? சரி. நம்பரைச் சொல்லுங்க. கால் பண்ணா செல் இருக்கிற இடம் தெரிஞ்சுரும்"
"நம்பர்?"
மறுபடி மூளைப் பிரதேசத்தைத் துழாவினேன். போன மாசம் வரை வைத்திருந்த எண் ஞாபகத்தில் வந்தது. புது கனெக்ஷன் நம்பர்.. அதற்குள் என் செல்லே அழைத்தது. மெசேஜ் ஏதோ வந்திருக்கவேண்டும். 'பல்லெலக்கா..' டியூன் கேட்டதும் ஓடிப் போய் ஃபைலுக்குள் இருந்த செல்லை எடுத்துக் கொண்டேன்.
சங்கரன் மறுபடி சிரித்தான்.
"இனியாச்சும் பத்திரம்"
இப்போது லஞ்ச் நேரம். இதற்காகத் தனியே மூலையாக பெரிய மேஜை போட்டிருந்தது. ஒருவருக்கொருவர் கொண்டு வந்திருந்த உணவுப் பதார்த்தங்களைப் பரிமாறிக் கொண்டோம்.
சங்கரன் சினிமாப் பாட்டுப் பிரியன். அதுவும் பழைய பாடல்கள்.
"என்ன.. இன்னிக்கு பாட்டு கிடையாதா?" என்றான்.
"என்ன பாட்டு வேணும்"
"வசந்த கால நதிகளிலே.."
சிரித்துக் கொண்டேன். முதல் தடவை எங்கள் அலுவலக பங்ஷன் ஒன்றில் நான் தான் இறை வணக்கம் பாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும் சங்கரன் ஓடி வந்து கை கொடுத்தான்.
"ஸ்வீட் வாய்ஸ்"
பக்கத்தில் நின்ற நாராயணசாமி
"அவர் ரெண்டு வாய்ஸ்லயும் பாடுவார்.. ஜெண்ட்ஸ்.. லேடீஸ்" என்றதும் திகைப்புடன் பார்த்தான்.
"நிஜம்மாவா"
"ம்"
"ஏதாச்சும் ஒரு லைன் பாடுங்க பிளீஸ்"
வசந்த கால நதிகளிலே தான் பாடினேன். இரு குரல்களிலும். அதிலிருந்து எப்போது பாடச் சொன்னாலும் முதல் சாய்ஸ் வசந்த கால நதிகள்! முழுப் பாட்டையும் பாடினேன் மெல்லிய குரலில். சங்கரனின் கண்கள் மினுமினுத்தன.
சாப்பாட்டு நேரம் முடிந்து என் இருக்கையில் அமர்ந்தேன். கை அனிச்சையாய் செல்லை மேஜை மேல் வைத்தது. இது புனிதாவின் கைபேசி. என்னுடையது இப்போது அவளிடம் இருக்கிறது. அதுவும் ஞாபகமறதிதான். காலையில் கிளம்புகிற அவசரத்தில் அவளுடையதை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். வந்ததும் முதல் ரிங்கே அவள் தங்கையிடமிருந்து.
"என் நம்பருக்கு பண்ணும்மா. மறந்து போய் இதை எடுத்துகிட்டு வந்துட்டேன்" என்றேன்.
"சாயங்காலம் மறக்காம நம்ம வீட்டுக்கு வந்திருங்க" என்றாள் பதிலுக்கு.
சிரிக்க முடியவில்லை. கைபேசி இருப்பது பல நேரங்களில் உதவி. இப்படி சில சங்கடங்களும். மீண்டும் 'பல்லேலக்கா..' ஒலித்தது. அடுத்த மெசேஜ். யாரது..
எடுத்துப் பார்த்தேன்.
இரண்டாவது மெசெஜ்.. en pathil illai? 'ஏன் பதில் இல்லை' தமிழ் + ஆங்கிலக் கலப்பு.
எதற்கு பதில்? முதல் மெசேஜ் பார்த்தால் புரியுமா.. இப்போது என் கை விரல்களில் நடுக்கம்.
முதல் மெசெஜ் திறந்து கொண்டது. 'எப்படி இருக்கே.. எனக்கு உன் ஞாபகம்தான். உனக்கு?'
மெசேஜ் அனுப்பியவன் யார் என்று புரிபடவில்லை. தவறுதலாய் வந்து விட்டதா? அப்படியானால் ஏன் இரண்டு முறை அனுப்ப வேண்டும்? மறுபடியும் மெசேஜ் டோன்.
'உன்னைப் பார்த்தது நான் இல்லை. என் கண்கள். உன்னைப் பார்த்தபின்போ நானே இல்லை!'
கண்றாவி கவிதை. கோபத்தில் அழிக்கப் போனேன். சட்டென்று எனக்குள் ஒரு குழப்பம். புனிதாவிடமே கேட்டு விடலாமே. என் செல்லுக்கு அழைப்பு விடுத்ததில் 'நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்றது ஒரு முறை. அடுத்த தடவை முயற்சித்ததில் பிஸி டோன். அதற்குள் அலுவலக வேலைகள் வந்து விட என் கவனம் திசை மாறியது.
மாலை ஐந்து மணிக்கு சங்கரன் ஞாபகப்படுத்தினார்.
"செல்லை மறக்காம எடுத்துக்குங்க"
சட்டைப்பையிலிருந்து எடுத்துக் காட்டினேன். இன்னொரு மெசேஜ் வந்திருந்தது.
'கடவுள் காதலைப் படைத்தபோது உன்னைப் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் காதல் இத்தனை அழகானதாய் இருக்குமா?!'
ராஸ்கல். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் மனதில். அவனைச் சும்மா விடக்கூடாது. செல்லை அழுத்தினேன். யூஸ் நம்பர்.. அழைப்பு போனது. ஏதோ பாட்டு ஒலித்தது. உடனே அவன் குரல்.
"நினைச்சேன். நீ நிச்சயம் ஃபோன் பண்ணுவேன்னு.."
அந்த நிமிடம் ஏனோ என் குரல் கோபத்தில் பிசிறியது. என் இரட்டைக் குரலில் ஒன்றான பெண் வாய்ஸில் கேட்டேன்.
"என்ன இது விளையாட்டு"
அவன் சிரித்தான்.
"ஏன் பிடிக்கலியா. வேற என்ன விளையாடறதாம்"
என் கோபம் எல்லை மீறியதில் வாயடைத்துப் போனது.
"என்ன பேசலே.. ஓ.. யாராச்சும் வந்துட்டாங்களா.. ஓக்கேடா டார்லிங்.. அப்புறம் பேசலாம்"
துண்டித்து விட்டான். வீட்டுக்குள் நுழைந்ததும் புனிதா சொன்னாள்.
"வசந்திக்கு பத்து பைசா கனெக்ஷன் போட்டிருந்தேன். நீங்க எடுத்துகிட்டு போயிட்டீங்களா.. இதுல பேசினதுல அநியாயமா முப்பத்தஞ்சு ரூபா ஆயிடுச்சு"
எதுவும் சொல்லாமல் அவளுடைய செல்லை நீட்டினேன். வாங்கி வைத்து விட்டாள் அலட்சியமாக. காப்பி சூடாக இறங்கியது. சிறிது நேரம் பேப்பர் பார்த்து விட்டு குளிக்கப் போனேன். தலையைத் துவட்டிக் கொண்டு வெளியே வந்தபோது புனிதா கேட்டாள்.
"யாரது.. மூணு மெசேஜ் வந்துருக்கு"
"என்னவாம்"
"பேத்தல்.."
படுத்ததும் தூங்கிப் போகிறவன் அன்று புரண்டு கொண்டே இருப்பதைப் பார்த்து புனிதா கேட்டாள்.
"என்ன ஆச்சு உங்களுக்கு.. உடம்பு எதுவும் சரியில்லையா?"
"ப்ச்"
"டைஜின் வேணுமா"
ஜீரணிக்க முடியாத ஒரு எரிச்சலில் நான் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் இதற்கு டைஜின் போதாது.
"நீ தூங்கு"
வெளியே ஹாலுக்கு வந்தேன். டிவி சானல் மாற்றிக் கொண்டே இருந்ததில் அதுவும் அலுத்தது. புனிதாவின் செல்லை எடுத்து இன்பாக்ஸ் பார்த்தேன். சமீபமாய் வந்திருந்த மெசேஜ் தவிர வேறெதுவும் இல்லை. அப்படியானால் இப்போதுதான் அனுப்பத் துவங்கி இருக்கிறானா.. அல்லது.. முன்பு அனுப்பியவை அழிக்கப்பட்டு விட்டதா. எப்படித் தெரிந்து கொள்வது? அவனையே கேட்டு விட்டால்..என் கைகள் என் சிந்தனையே இல்லாமல் மீண்டும் மெசேஜில் இருந்த எண்ணை அழைத்தது.
"ஏய்.. செல்லம்.. மணி இப்ப என்ன தெரியுமா? என்ன தூக்கம் வரலியா" சரியான அலட்டல் அவன் குரலில்.
"ம்.." என்றேன் கிறக்கமாய் என் பெண் குரலில்.
"என் மெசேஜ் எல்லாம் புடிச்சிருக்கா.."
"சகிக்கலே"
"ஏய்.. பொய்தானே சொல்றே.. இதுவரைக்கும் அம்பது மெசேஜ் அனுப்பியிருப்பேன்.. உனக்கு என் மேல பிரியம் வரணுமேன்னு எப்படி தவிச்சேன் தெரியுமா.."
"பொய்யி" என் குரல் கொஞ்சியது.
"பிராமிஸ்டா.. டேய்.. நீ என்கூட பேசணுமேன்னு.. ஹா.. என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கணும்.."
எதிர்முனையில் அவன் சுத்தமாய் வழிவது புரிந்தது.
"டேய்.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்டா.. சொல்லு.. உன் அட்ரஸ் கூட எனக்குத் தெரியாதுடா.. பிளீஸ்.. உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்குடா.. உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ரா.."
புலம்ப ஆரம்பித்தான். சட்டென்று துண்டித்து விட்டேன். அடுத்த நிமிடம் அவன் அழைப்பு. மறுபடியும் துண்டித்தேன்.இப்போது மெசெஜ்.
'ஓக்கே.. புரியுது. யாரோ வந்துட்டாங்க. நாளைக்கு பேசலாம். ஆனா எனக்குத் தூக்கம் போச்சுரா'
உனக்கில்லை. எனக்குத்தான். எனக்குள் சுடர் விட்டெறிய ஆரம்பித்தது.. வன்மம்!
(தொடரும்...)
10 comments:
உதவி போல அத்தனை உபத்திரவம் இந்த செல்போன்
அசத்தலான ஆரம்பம்..
தொடர்கிறது ஆவல்... --கே.பி.ஜனா
ஸ்வாரஸ்யம் தொடர்வதற்குக் காத்திருக்கிறது.நல்ல ஆரம்பம் ரிஷபன்.
அருமை சகா! நல்ல துவக்கம் தொடர்ந்து அசத்துங்கள்!!!
ஆவல் அதிகம் ரிஷபன்.
சீக்கிரம்.
kalkkal starting
தொடருங்கள் பாஸ். காத்திருக்கிறோம்.
ரொம்ப நல்லா இருக்கு, ஆரம்பமே!!
ஆரம்பமே கலக்கல்...
Post a Comment