October 02, 2011

ஞாபகம்




காய்கறி சந்தையில் உள்ளே வரும்போதே பார்வை காமராஜ் எங்கே என்று தேட ஆரம்பித்தது.

வழி நெடுக வெண்டை, அவரை, பாகல், வாழைக்காய், உருளை என்று தினுசு தினுசாய் கூடைகள்.

வாங்க வந்தவர்களின் நெரிசல் வேறு. மேலே இடித்துக் கொள்ளாமல் நகர்ந்து நகர்ந்து காமராஜைக் கண்டு பிடித்தேன்.

வாழையிலைக் கட்டுகளின் நடுவே வாழைக்கறை பட்ட காவி வேட்டியுடன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். கையில் நீட்ட கத்தி.

இலைக்கட்டைப் பிரிக்கும்போதே கையும் சேர்ந்து தரம் பார்த்து விடுகிறது காமராஜுக்கு.

நுனி இலையை ஒரு பக்கம்.. ஏடு இன்னொரு பக்கம்.. டிபன் இலை அடுத்த பக்கம்.. உதவாத சிறு துண்டுகள் மறு பக்கம் என்று சரசரவென்று கத்தியால் நறுக்கித் தள்ளினான்.

“வாங்கண்ணா..”

நடுவே எனக்கும் ஒரு வரவேற்பு. கத்தியால் வெட்டிய மாதிரி.

நின்றேன். அவன் தான் வரச் சொல்லியிருந்தான். நாளைக் காலை கிராமத்துக் கோயிலுக்குப் போகவேண்டும். எங்கள் உபயம். பிரசாதம் தருவதற்கு குட்டி இலைகள் வேண்டும். வருடா வருடம் காமராஜ் அவனிடம் கழித்துக் கட்டிய இலைகளை கொடுத்து விடுவான்.

“அம்மா போய் ரெண்டு வருஷம் ஆச்சா.. “

“ம்”

அம்மா பேச்சை எடுத்தாலே தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொள்கிறது.

“என்கிட்டேதான் வாங்கிட்டு போவாங்க.. அதான் அப்பாவைப் பார்த்து சொல்லி இருந்தேன்.. மொத நாள் வந்து வாங்கிக்க சொல்லி”

இரு கை அகல இலைகளாய்ப் பொறுக்கி எடுத்து, 30 தேறும்.. சுருட்டிக் கட்டிக் கொடுத்தான்.

“எவ்வளவுப்பா”

என்னைக் கைக்குழந்தையைப் பார்ப்பது போல பார்த்தான்.

“அம்மாக்கு கொடுக்கறது.. எடுத்துகிட்டு போண்ணா”

நகர யத்தனித்தவனை ஒரு கத்தி வார்த்தை நிறுத்தியது.

“ஒரு நிமிஷம்”

“பங்குனி உத்திரத்திற்கு கோவிலுக்கு பணம் கொடுப்பாங்க அம்மா.. அதோ தெரியுதே அந்த திருமாளிகைல.. “

“ம்.. தெரியும்..”

“வேற யார்கிட்டேயும் தர வேணாம்.. “

அம்மா இருந்த போது கிண்டல் செய்திருக்கிறேன்.

‘உன் புரோகிராம் எல்லாம் காமராஜ் சொல்றான்.. நாளைக்கு சென்னை உன் ரெண்டாவது பிள்ளைட்ட.. அடுத்த வாரம் உன் பெண் வரா ஊர்லேர்ந்து.. உனக்கு நேத்து வயிறு சரியில்ல.. இன்னும் டாக்டர்கிட்ட போகல.. இப்படி உன் சமாச்சாரம் எல்லாம்.. நான் புள்ளையா.. இல்ல அவனான்னு தெரியல..”

கேலியில் ஆரம்பித்து முனகலில் முடிந்தது.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லடா.. அவன் வம்பிழுக்கறான் உன்னை..’

‘கடை ரமேஷும் சொல்றானே.. ‘

அம்மா பேசாமல் இருப்பாள்.

வீட்டை விட்டு கிளம்பினால் அம்மாவின் சாம்ராஜ்யம் பெருசு. வாழைக்காய் கொண்டு வருகிற பரிமளாவுக்கு கல்யாண பட்சணம்.. புடவை.. பிளவுஸ் பிட்.. கடை ரமேஷின் அம்மாவுடன் கவுன்சலிங்.. (வேறெப்படி சொல்ல.. அவர்கள் வீட்டு விவகாரம் எல்லாம் சொல்லி அம்மா அதற்கு தனக்குத் தெரிந்த உபாயங்கள் சொல்ல.. )

எப்படியும் 100 பிரசவங்களுக்கு கூட போயிருப்பாள். யார்.. எந்த வீடு எதுவும் தெரியாது.

‘அம்மா.. வலி எடுத்துருச்சு’ என்று வந்து நின்றாலே போதும்.

டாக்டரிடம் கூட்டிப் போவதில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குக் கொண்டு வந்து.. லேகியம் கிளறி ( அந்த லேகியம் சூப்பர் டேஸ்ட்.. அம்மா எனக்கு .. என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம்) பத்திய சமையல் சொல்லி..

‘ரெண்டாவது கூட படிக்கல.. ஆனா டாக்டரா இருக்க.. போலி டாக்டர்னு பிடிச்சுக்க போறாங்க’ எங்கள் கிண்டல் அம்மாவைப் பாதிக்காது.

”அப்பா எப்படி இருக்கார்”

சத்தம் கேட்டுத் திரும்பினால் அப்பாவின் நண்பர் எதிரில் நின்றார்.

“ம்”

“நடமாட்டமே காணோம்”

“ரொம்ப வெய்யிலா இருக்கா.. அதான் “

“ பார்த்துக்கோ.. “

“ம்”

“மனுஷா இருக்கும்போது நாம அலட்சியமா இருந்துடறோம்.. போனபிறகுதான் ஃபீல் பண்றோம்.. அம்மாதான் போயிட்டா.. அப்பாவை அலட்சியமா விட்டுராதே”

காமராஜும் சேர்ந்து கொண்டான்.

“அப்பாவை பத்தி அம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க.. அவரை பார்த்துகிட்டாலே அம்மா ஆசிர்வாதம் உனக்குக் கிடைச்சிரும்ணா..”

தலையாட்டிவிட்டு நடந்தேன்.

வீட்டுக்குள் நுழையும் போது எதிரில் ஹாலில் அம்மா போட்டோ.

‘உன்னை ஞாபகம் வச்சிருக்க மாதிரி.. என்னை வச்சிருக்க மனுஷாள நான் சேர்த்திருக்கேனாம்மா..’

அந்தக் கேள்வி பிரும்மாண்டமாய் என் எதிரில் நின்று கேலிப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.






27 comments:

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மரணத்திற்குப் பின்னும் வழ்தல்தான் உண்மையான வாழ்வு. நல்ல கதை.

RVS said...

அம்மா!!!

கர்ம வீரனாய் காமராஜின் கேரெக்டர் நெஞ்சில் பின் குத்தி நிற்கிறது..

அபாரமான கதை சார்! :-)

பத்மநாபன் said...

//உன்னை ஞாபகம் வச்சிருக்க மாதிரி.. என்னை வச்சிருக்க மனுஷாள நான் சேர்த்திருக்கேனாம்மா// படிக்கும் அனைவருக்கும் கண்ணீர் துளியோடு இந்த கேள்வி தோன்றும் ...அருமையான கதை

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

உங்கள் அம்மா என்கிற மஹத்தான மனுஷி என் நினைவில் வருகிறார்கள்...என்னவொரு சுறுசுறுப்பு...எத்தனை பாசம்....கிரியும் எனக்கொரு குழந்தைதான் என்று கொட்டிய வாஞ்சை...கீழச்சித்திரை வீட்டில் இருந்தபோது ’நானும் வாழ்வில் ஒரு நிலைக்கு வருவேன்’என்ற நம்பிக்கையை எனக்குள் ஊற்றியவர்கள்.இன்று நான் நன்றாய் இருக்கிறேன் அம்மா - என்னை ஆசிர்வதியுங்கள்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அபாரம்...ஆனால்..பாரமாய் மனதை அழுத்துகிறது எதுவோ......

மனோ சாமிநாதன் said...

நமக்கென்று உண்மையான நேசத்துடன் கண்ணீர் விட, அக்கறைப்பட சில அன்பு நெஞ்சங்களாவது வேன்டும். இந்த யதார்த்த உண்மையை அழகாகச் சொல்லிப்போகிறது உங்களின் சிறுகதை!

vasu balaji said...

கடைசியா வர கேள்வி இருக்கே. அதுக்கு பதில் கிடைச்சாதான் வாழ்ந்ததுக்கு அர்த்தம். அருமை.

ஸாதிகா said...

//
“வாங்கண்ணா..”

நடுவே எனக்கும் ஒரு வரவேற்பு. கத்தியால் வெட்டிய மாதிரி.//
என்ன ஒரு வார்த்தஜாலம்,அருமையான கதை.பொருத்தமான படம்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மனசு நெகிழ்கிறது.
வாழ்த்துக்கள்.

Sharmmi Jeganmogan said...

ரிஷபன், ஒவ்வொருத்தரும் தன்னைப் பார்த்து நிதமும் கேட்க வேண்டிய கேள்வியை, வாழ்க்கையின் தத்துவத்தை, இப்படி எளிய வார்த்தைகளில் கோர்த்துக்கொடுத்து விட்டீர்களே... உங்கள் எழுத்து நடையைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

'அப்புறமும்' ஞாபகம் வெச்சிக்கற அளவுக்கு மனுஷாளை சம்பாதிச்சு வெச்சிருந்த அந்த அம்மா க்ரேட்!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அம்மாவின் நினைவலைகளை அருமையாக உங்களுக்கே உரித்தான அற்புதமான ஸ்டைலில் சொல்லி விட்டீர்கள்.

காமராஜ் நல்ல பெயர் பொருத்தமாக அமைந்துள்ளது.

அம்மா என்றால் சும்மாவா பின்னே!
அம்மா அம்மா தான்!!

தீபம் என்றொரு புதிய இதழ் பிரபல கல்கி பத்திரிகையால் 05.10.2011 அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது.

அந்த ஆன்மீக இதழின் புத்தம்புதிய வெளியீட்டை கடையில் வாங்கி பிரித்ததும் என் கண்ணில் பட்டது 22 முதல் 26 வரை உள்ள பக்கங்கள்.

என் எழுத்துலக குருநாதராகிய தங்களின் வண்ணப்படமும் “தூதுசென்ற தூதுவளை” என்ற சிறுகதையும். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.

உடனே தொலைபேசியில் அழைத்தேன். எடுத்தது தங்களின் மனைவியார். முதலில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன் அவர்களுடன்.
உங்களுடன் பேச வேண்டும் என்ற் கோரிக்கையை வைத்தேன்.

அவருடைய அம்மாவுக்கு இன்று நினைவு தினம். பிறகு பேசச்சொல்கிறேன் என்றார்கள்.

தங்களின் அன்புத்தாயாரின் நினைவு தினத்தில் தங்களின் அருமையானதொரு ஆன்மீகக்கதை, அதுவும் “தீபம்” என்ற புத்தம்புது புத்தகத்தின் முதல் இதழில்.

இந்த ரிஷபன் என்ற இலக்கிய தீபம் என்றும் அணையாமல் தொடர்ந்து பிரகாசிக்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்களே, தங்களைப்பெற்ற அந்த மகராசி, அதுவும் அவர்களின் நினைவு தினத்தில்.

இதைவிட வேறு சிறப்பும் உண்டோ?

தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும், "ஞாபகம்” வைத்துக்கொள்ளட்டும் என்று இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன், சார்.

அன்புடன் vgk

[Voted 2 to 3 in TM & Indli]

Unknown said...

நெஞ்சை நெகிழச் செய்யும் கதை ஐயா நன்றி!


y
புலவர் சா இராமாநுசம்

settaikkaran said...

அந்த பிரம்மாண்டமான கேள்வி தான் பெரும்பாலானோரின் தலையின் மேலே பரந்த வானம்போல வியாபித்திருக்கிறது. அருமை....!

கே. பி. ஜனா... said...

ஆழமான அவசியமான கருத்து..

manichudar blogspot.com said...

ஆம் நன்றாக சொன்னீர்கள் ரிஷபன் இருப்பின் அருமை இல்லாமையில் தான் ரொம்ப தெரிகிறது. அம்மா 27 ந் தேதி இரவு விபத்தில் மறைந்தார், இன்று இரவு இணையதளத்தில் என்னை நுழைத்துக் கொண்டு ஒளிந்துக் கொள்ள முயன்றால் உங்கள் வலைப்பதிவில் அம்மாப் பற்றிய பதிவு.

மோகன்ஜி said...

ரிஷபன் சார்! முத்தாய்ப்பு வரிகள் முத்துக்கள்.. கண்களைக் குளமாக்கி விட்டீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

கடைசி வரிகள்.... எல்லோரும் தினம் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய வரிகள்....

மரணத்திற்குப் பின்னும் ஒருவரை மறக்காமல் இருக்க இது போன்று நல்லது செய்திருக்க வேண்டும்.....

என் நடை பாதையில்(ராம்) said...

எப்பவும் அப்பாக்கள் பற்றித்தான் அனுபவம் சொல்லிக் கொடுக்கும் கதை படிப்பேன்! இப்போது தான் அம்மா பற்றி அனுபவ கதை ஒன்று!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அற்புதமான கதை ரிஷபன்.

அம்மாக்களே இப்படித்தான்.அவர்களுக்கு எல்லாருமே வேண்டியவர்கள்.எதிரிகளாய் இருக்கவே யாருக்கும் தைரியம் வராது அவர்களின் வெளிப்படையான எதையும் மறைக்கத் தெரியாத குணத்துக்கு எதிராய்.

இறுதியாய் நீங்கள் கேட்ட கேள்விக்காய் வாழ்ந்தாலே போதும் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ள.

ADHI VENKAT said...

மனதை கனக்க வைத்து விட்டது.
அம்மா!அம்மா தான்!

ஹுஸைனம்மா said...

அருமை.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஎப்படியும் 100 பிரசவங்களுக்கு கூட போயிருப்பாள். யார்.. எந்த வீடு எதுவும் தெரியாது.

‘அம்மா.. வலி எடுத்துருச்சு’ என்று வந்து நின்றாலே போதும்.ஃஃஃ


தாய்மையைப் பற்றித் தாய்மைக்குத் தானே அதிகம் தெரியும்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி

கதம்ப உணர்வுகள் said...

படிக்கும்போதே என்னவோ தொண்டை அடைத்தது.....

அம்மா என்றால் அதற்கு தெய்வம் என்று தான் இதுநாள்வரை எனக்கு தெரிந்த அர்த்தம்.....

அம்மாவை இல்லாதப்பவும் அவங்களை அன்புடன் நினைவுகூறும் உள்ளங்கள் இருக்கின்றனவே....

அம்மா என்று இங்கே சொன்னது உங்க அம்மாவை தானா ரிஷபன்? அம்மாவின் அன்பு மனதை ஒவ்வொருவரின் விசாரிப்பில் அறிய முடிகிறதுப்பா....

இலை வெட்டி தரும் காமராஜ் அம்மாவை பற்றி சொல்லும்போது மனதை என்னவோ செய்தது.....

எல்லாம் கேட்டுட்டு வீட்டுக்குள் நுழைந்தப்ப நீங்க கேட்ட கேள்வி எனக்குள்ளும் எழுகிறதுப்பா...

நாம இல்லாதப்பவும் நம்மை நினைக்கும் மனுஷா வேணும்னா நாம முதல்ல எல்லார்ட்டயும் அன்பா இருக்கணும்லயா?

துளி அன்பில் கடலளவு அன்பு பெருகுவதை சொல்லும் அனுபவ பகிர்வு அம்மாவை பற்றி அறிய தந்த பகிர்வு.....

வை கோ சார் சொல்லி இருப்பது நிஜம் தானா? உங்கள் அம்மாவை பற்றியதா?

அம்மாவின் கைகள் என்றும் உங்களை ஆசீர்வதித்துக்கொண்டும் உங்கள் வெற்றிக்காகவும் நலனுக்காகவும் பிரார்த்திக்கொண்டும் இருக்கும் கண்டிப்பாக ரிஷபா...

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு....

கவி அழகன் said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

கீதமஞ்சரி said...

"மனுஷா இருக்கும்போது நாம அலட்சியமா இருந்துடறோம்.. போனபிறகுதான் ஃபீல் பண்றோம்.. அம்மாதான் போயிட்டா.. அப்பாவை அலட்சியமா விட்டுராதே”

ஒரு முன்னெச்சரிக்கைப் பதிவு. திருந்தவொரு சந்தர்ப்பம். மனம் நெகிழ்த்தும் பதிவு ரிஷபன் சார்.

ADHI VENKAT said...

இன்று வலைச்சரத்தில் - வானவில்லின் ஏழாம் வண்ணம்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_16.html

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். முடிந்தால் பாருங்களேன்...

நட்புடன்

ஆதி வெங்கட்.