இந்தக் கேள்வியை பாபு கேட்டபோது அவன் ஸ்கூல் வாசலில் நின்று கொண்டிருந்தோம். பின்னால் இருந்து குதித்தவனிடம் ஏய் என்று அதட்டிவிட்டு பைக்கின் முன்னால் மாட்டியிருந்த அவன் பையை எடுத்துக் கொடுத்தேன்.
வாங்கிக் கொண்டு ஓடியவன் திரும்பி வந்து கேட்ட கேள்வி..
'லவ்வுன்னா என்னப்பா?'
"எதுக்குடா"
"நீ பதில் சொல்லு முதல்லே"
"லவ்வுன்னா பிரியம்"
"ம்.. சரி ஈவ்னிங் பேசிக்கலாம்.."
மறுபடி ஓடிப் போய் விட்டான்.
எனக்கு அன்று அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. புவனாவுக்கு லஞ்ச் நேரத்தில் ஃபோன் செய்தேன்.
"என்ன உன் பிள்ளை ரொம்ப விவரமாகிட்டு இருக்கான்"
"புதிர் போடாதீங்க. விஷயத்தைச் சொல்லுங்க"
காலையில் நடந்ததைச் சொன்னேன்.
"உங்க லவ் மேட்டர் எல்லாம் எடுத்து விட்டுராதீங்க.. என்னை மாதிரி பொறுமையா கேட்டுக்க மாட்டான்."
அடிப்பாவி. கல்யாணமான புதிதில் எல்லாவற்றையும் மனசு விட்டு பகிரும் எண்ணத்தில் சொன்னதை ஞாபகம் வைத்து போட்டுக் காட்டுகிறாளே..
"இப்ப அவனுக்கு என்ன பதில் சொல்றது.."
"அதெல்லாம் அவன் நினைப்புல இருக்காது.. ஏதோ உளறிட்டு போயிருப்பான்.. நீங்க அவனுக்குப் பதில் சொல்லணும்னு உங்க பழைய ஃபிளாஷ் பேக்கை மனசுல ஓட்டி ஆபீஸ் வேலையை கோட்டை விட்டுராதீங்க"
வைத்து விட்டாள்.
ஃபிளாஷ் பேக்! அம்சவல்லி! எனக்குள்ளும் ஒரு காதல் கதை!
படித்து முடித்ததும் டைப்பிங் சேரச் சொல்லி அப்பா விரட்டிவிட அரைமனதாய் இன்ஸ்டிடியூட் போனபோது பார்த்த ரெட்டைப் பின்னல் தேவதை. வரிக்கு நாலு தப்போடு நான் அடித்தால், ஒரு தப்பும் இல்லாமல் முழுப் பக்கம் அடித்து எல்லோருக்கும் முன்னால் ஸ்பீடை முடித்து 'வெரி குட்' வாங்குவாள்.
pack my box with five dozen liquor jugs என்று அடிப்பதற்குள் விழி பிதுங்கி விடும். அனாயாசமாய் அம்சவல்லி அடிப்பதை மாஸ்டர் வருவதற்குள் ரவுண்டு கட்டி வேடிக்கை பார்ப்போம்.
"ஒரு பொண்ணு அடிக்குது.. வெட்கமா இல்ல உங்களுக்கு" என்று அவர் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்கும்போது அம்சவல்லி மீதே கோபம் வரும். ஏன் இப்படி ஒருத்தி அழகாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறாள்..
அதையும் மீறி என் மனசுக்குள் காதல் அரும்பியதை உணர்ந்தபோது திகைத்துப் போனேன். அம்சவல்லி ஐ லவ் யூ என்று என் ஸ்பீட் பயிற்சி மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. எக்ஸாம் முடிவதற்குள் அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று தவித்தபோதுதான் அம்சவல்லி ஒரு வாரமாய் இன்ஸ்டிடியூட்டே வரவில்லை. எப்படி டைப்பிங் எக்ஸாம் போவாள்.. அதுவும் கடைசி நிமிட பயிற்சி இல்லாமல்..
பிறகுதான் தெரிந்தது.. அவளுக்கு அம்மை போட்டிருந்தது.. அதுவும் தலைக்கு தண்ணீர் விட்ட உடனே மீண்டும் அம்மை திருப்பிக் கொள்ள சீரியஸாகி.. இன்ஸ்டிடியூட்டிற்கு அன்று விடுமுறை..அவள் வீட்டிற்கு எல்லோரும் போயிருந்தோம். அம்சவல்லியின் கடைசிப் பயணத்திற்கு.
என் காதலைச் சொல்லவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இதை மணமான முதல் இரவன்றே புவனாவிடம் சொல்லிவிட்டேன். அப்போது எதுவும் பேசவில்லை. பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் காதலைச் சொல்லி கேலி செய்வாள்.
மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் பாபு ஓடி வந்தான்.
"அப்பா.."
"என்னடா"
"யோசிச்சு வச்சிட்டியா.."
"எ..தை.."
"ப்ச்.. லவ்வுன்னா"
புவனாவைப் பரிதாபமாகப் பார்த்தேன். 'அது உங்க பிரச்னை' என்பது போல மையமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
பார்வையைத் திருப்பினால்.. எதிரே அப்பாவின் ஃபோட்டோ. என்னுள்ளும் ஒரு ஐடியா!
"பாபு.. தாத்தாவை உனக்கு நினைவிருக்கா?"
"எப்படிப்பா மறக்க முடியும்.. எம்மேல எவ்வளவு பிரியம்.. அவர் மட்டும் இருந்திருந்தா.."
பாபுவின் கண்களில் கற்பனை மின்னியது.
"அதேதான்.. ஒருத்தர் இருந்தாலும் இல்லாட்டாலும்.. அவரைப் பத்தி நினைச்சா.. உள்ளே ஒரு ஜில்லுன்னு ஃபீலிங் வருதே.. அதான் லவ்"
"போப்பா.. என் பர்த் டேக்கு ஒரு டெடி பேர் பொம்மை கொடுத்தாங்களே.. அது மேல லவ்வுனு போட்டிருக்கே.. கரடிக்கும் லவ்வுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டா.. என்னவோ சொல்றே"
வெளியே விளையாடப் போய் விட்டான். நான் தான் கரடி போல புவனா முன் விழித்துக் கொண்டிருந்தேன்.
(எப்பவோ எழுதின கதை.. )
21 comments:
சூப்பர் கதை..சமயத்தில் குழந்தை குரு பீடம் ஏறிக் கொண்டு விடும். அந்த மாதிரியோ என்ற எதிர்பார்ப்பில் படித்த நானும், அந்த கரடி போலவே....
அட அட என்னமா இருக்கு சார் கதை.
முழுசா படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு.
எப்பவோ எழுதிய கதை... என்றாலும் ரசித்த கதை...
மனைவி முன் கரடி போல... :)))
குழந்தைகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் சொல்வதே ஒரு பெரிய கலை....
எப்போவோ தாங்கள் எழுதியதை, எப்போவோ நானும் படித்திருந்தாலும், இப்போ மறுபடியும் படிக்கும் போதுதான், அந்த தங்களால் மறக்கமுடியாத இரட்டைப்பின்னல் ஸ்பீடு குயின் அம்சவல்லியைப் புதியதாக நானும் இன்று சந்தித்தது போன்ற மகிழ்சசி ஏற்பட்டது. அருமையான லவ்வுன்னா என்னப்பாக் கதைக்கு நன்றி. கடைசியில் அந்தப்பையன் ஏதோ கரடி விட்டுவிட்டுப் போய் விட்டானே! சபாஷ். பாராட்டுக்கள். vgk
சுவாரசியமான கதைக்குள் சுவாரசியமான கதைக்குள் சுவாரசியமான கதை. nice.
அருமையான பதிவு
அப்பாவிடம் லவ் குறித்து கேட்கும் போதே
அவன் லவ்வை ஒரு மிக்ப் பெரிய அளவில்
யோசிக்கிறான் எனப் புரிந்தது
அதை முடிவில் மிக அழகாகச் சொல்லிப் போவது
மிக மிக அருமை
மனம் கவர்ந்த கதை தொடர வாழ்த்துக்கள்
மூன்றாம் கோணம்
பெருமையுடம்
வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30
இடம்:
ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்
போஸ்டல் நகர்,
க்ரோம்பேட்,
சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )
11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து
எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்
குழந்தைகள் எப்பவும் குழந்தைகள் தான்
கதை எழுதறதே ஒரு டெக்னிக்.எங்க தொடங்கி எப்பிடி ஓடி எப்பிடி முடியுது !
அப்பா மகன் ரெண்டு பேருமே அதைப்பற்றி ஆழமாக யோசித்து கருத்துக்களை கடைசியில் பரிமாறிக் கொள்வது நல்ல முடிவு!
அசத்தல் கதை..
பையன் கொடுத்த பில்டப் செம :-))
//ஒருத்தர் இருந்தாலும் இல்லாட்டாலும்.. அவரைப் பத்தி நினைச்சா.. உள்ளே ஒரு ஜில்லுன்னு ஃபீலிங் வருதே.. அதான் லவ்//
வாயை குடுத்து வாங்கிக்கட்டிக்கறது இது தான் போல..
//ஒரு டெடி பேர் பொம்மை கொடுத்தாங்களே.. அது மேல லவ்வுனு போட்டிருக்க//
குழந்தைகள் என்றும் குழந்தைகளே...
வழக்கம்போல ரி டச் இதுலயும்...பாராட்டுக்கள் ரி.
இன்னிக்கு ஒரே மலரும் நினைவுகள் பதிவா படிச்சிகிட்டு இருக்கேன்..
நானும் டைப்பில் ஹையர் பர்ஸ்ட் க்ளாசில் பாஸ் செய்திருப்பதால் பனக்ராம்ஸ்சை அடித்துப் பார்த்தேன்.. :))
மனைவி சமயம் பார்த்து பழி தீர்த்துக் கொண்டார்!! :-))
நல்ல கதை!
ஒரு எட்டு வயதுக் குழந்தை அம்மாவிடம் கேட்டதாம். செக்ஸ் என்றால் என்ன அம்மா என்று. இப்படித்தான் அம்மாவும் கொஞ்சநேரம் முழித்துவிட்டு குழந்தைக்குத் தேவையான அளவாகவும், கொஞ்சம் இலைமறை காயாகவும் பட்டும் படாமலும் ஆண் பெண் உறவை எப்படியோ தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தாளாம். முடித்ததும், பள்ளியில் கொடுக்கப்பட்டப் படிவத்தில் பெயரை அடுத்து செக்ஸ் என்று கேட்டிருக்கும் இடத்தைக் காட்டி பிள்ளை கேட்டதாம், இத்தணூண்டு இடத்தில் எப்படியம்மா இவ்வளவையும் எழுதுவேன் என்று. இந்தக் கதை நினைவுக்கு வந்தது தங்கள் கதை படித்து. குழந்தைகள் எண்ணவோட்டம் புரியாதவரை நாம் கரடிகள்தாம். சுவையான நினைவுப் பதிவு. பாராட்டுகள் ரிஷபன் சார்.
ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ரிஷபன் ஜி. பழைய கதை என்று, சொன்னால்தான் அறிந்துகொள்ளமுடிகிறது.
ஒவ்வொரு தடவையும் உங்க எழுத்தைப் படிக்கும் பொழுதும் நமக்கு இப்பிடி எல்லாம் எழுத வர மாட்டேங்குதேன்னு ரொம்ப ஃபீல் ஆவுது சார். (ராஜி!நீ வேஸ்ட்டுடி!நானே
என்னைப் பாத்து சொல்லிக்கிட்டேன் சார்!வேறென்ன செய்ய?)
//பள்ளியில் கொடுக்கப்பட்டப் படிவத்தில் பெயரை அடுத்து செக்ஸ் என்று கேட்டிருக்கும் இடத்தைக் காட்டி பிள்ளை கேட்டதாம், இத்தணூண்டு இடத்தில் எப்படியம்மா இவ்வளவையும் எழுதுவேன் //
Ms. கீதா அவர்கள் குறிப்பிட்டுள்ள கதையில் வரும் நிகழ்ச்சியும், மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளது.
அவன் குழந்தையாகவே,
நாம் தான் சிறுபிள்ளைத்தனமாய்.....
ஹா ஹா..அட்டகாசமான முடிவுரை..! ஒருவரின் எண்ணவோட்டங்களை அளந்திடும் சக்தி நமக்கிருப்பின் உலகில் நாம் தான் முதலாளி!
எளிதாய் முடித்திருக்கின்றீர்கள்.. லவ்வுன்னு சொன்னாலே அந்தப் பக்கம் படிக்கக் கூட போகாத நான் கதையின் தொடக்கம் முதல் சுவராசியம் இருந்ததினால் முழுமையையும் படித்து விட்டேன்.
நன்றி
Post a Comment