November 29, 2015

அம்மு 10



அம்மு
இதைப் பிரிக்குமுன் மாடிக்கு வந்து விடு. ஞாபகமாய் உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டு விடு. ஏன் 20 பக்கம் என்று யோசிக்கிறாய்.. இதற்கு மேலும் எழுதணும். ஆனால் ஸார் எப்போ முடிப்பீங்க கட்டு எடுக்கணும் என்று தலைமாட்டில் போஸ்ட்மென் ரெண்டு செகண்டிற்கு ஒரு முறை குரல் கொடுக்கிறார்..
அம்மு.. இந்தக் கடிதத்தை உன்னை ரெயிலேற்றி விட்டு வந்த மறு நிமிடமே மனசுக்குள் எழுத ஆரம்பித்து விட்டேன். நானும் கூட வரேனே என்று எத்தனை முறை கெஞ்சியிருப்பேன்.. சம்பிரதாயம் அது இது என்று ஏதோ சொல்லி என்னை வர விடாமல் செய்து விட்டீர்கள். சீட்டின் கீழ் ஒரு பெட்டி உன் காலை இடிக்கிற மாதிரி வைத்திருந்ததே.. அதை அப்புறம் உள்ளே நகர்த்தி வைத்தீர்களா..  ப்ளாஸ்க் காபி சூடா இருந்ததா..
பொதுவாய் பெண்கள்தான் நிறையப் பேசுவார்கள்.. ஆண்கள் அப்படி இல்லை என்பார்கள். நம் வீட்டில் அதற்கு விதிவிலக்கு. என்ன கேட்டாலும் உன்னிடம் ஒரு புன்முறுவல் மட்டும். நானோ காலையில் ஆபிஸ் கிளம்பியதிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும் வரை நிமிடம் பிசகாமல் பட்டியலிடுவேன். ஏன் இப்படி இருக்கிறேன்.. எனக்கே புரியவில்லை..
எதுவாக இருந்தாலும் உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும்.. உனக்குத் தெரியாமல் என் வாழ்க்கையில் ஒரு குந்துமணி ரகசியம் கூட இருக்கக் கூடாது… என்கிற தவிப்பு எப்போதும் எனக்குள் கனன்று கொண்டே இருக்கிறது.
இந்த வீட்டில் குடித்தனம் வந்தபோது நமக்கு மாடி போர்ஷன். மொட்டை மாடியில் குருவி..காக்கா..கிளி.. பார்த்து நீ சந்தோஷப்பட்டதை என்னால் மறக்கவே முடியாது.  கீழ் வீட்டு மாமிதான் ஆரத்தி எடுத்தது. தட்டில் பத்து ரூபாய் போடப் போனேன்.  நூறு ரூபாய் இல்லியான்னு நீ எனக்கு மட்டும் கேட்கிற குரலில் சொன்னாய். முதல் ஆச்சர்யம் அது.
நீ சிக்கனக்காரி இல்லை. உன் மனசு ஒரு பிரபஞ்சத்தையே உள்ளடக்கியது. ஹிண்டு போடுகிற பையன் நம் வீட்டுக்கு வருவதற்கு முன் மழை நீரில் சறுக்கி விழுந்து சிராய்த்திருந்ததை உன் பார்வை கவனித்து விட்டது. டெட்டால் போட்டுத் துடைத்து ஆயின்மெண்ட் போட்டு அனுப்பினாய். சூடாக டீயும் கொடுத்து. ‘கொஞ்சம் இருங்கோ.. வேற டீ போட்டு எடுத்து வரேன்’ என்று என்னிடம் சொல்லிவிட்டு.
காய்கறிக்காரி.. வீட்டு வேலைக்காரி.. பூக்காரி.. அயர்ன்காரி.. யாருமே உனக்கு விதிவிலக்கு இல்லை. உனக்குப் பிடிக்குமே என்று நான் வாங்கி வருவதை அவர்களுடன் நீ பகிரும் போதெல்லாம் ..  அம்முக்குட்டி.. சிரிக்காதே.. எனக்குக் கொஞ்சம் பொறாமையே வரும்.
அன்னிக்கு நீ மருதாணி அரைத்துக் கொண்டிருந்தாய்.  நான் ஆபிசிலிருந்து வர லேட் ஆகிவிட்டது. கடைசி விழுதை அள்ளிப் போட்டு கையலம்பிக் கொண்டு நீ வருவதற்குள் பசி ருசி அறியாது.. ஏதோ தொகையல் என்கிற நினைப்பில் கொஞ்சம் அள்ளி விழுங்கப் போனேன். சிரித்தாய்.
“என்னமா பத்திக்கிறது பாருங்கோ’ என்றாய்.
‘எதுக்கு இவ்வளவு அரைச்சு வச்சிருக்கே’ என்றேன் வியப்புடன்.
‘எல்லாருக்கும் கொடுக்கத்தான்’
உன் கையை மடக்கி உன்னிடமே காட்டினேன்.
‘பார்.. உன் கை முழுக்க அரைத்ததின் சுவடு.. இதுல நீ எப்படி வச்சுப்ப’
‘இந்த முறை எல்லாருக்கும் நான் வச்சு விடப் போறேன்.. அப்புறம் ஒரு நாள் அவா எனக்கு வச்சு விடுவா’
அம்மு.. உன் காதல் இத்தனை பவித்திரமா.. என் சுயநலக் காதலை நினைத்து எனக்கே வெட்கம் வந்தது அப்போது.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஃபேன் காற்றில் உன் தலைமுடி அறை மூலையில் சுற்றிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தேன். ‘என்ன பெருக்கறா.. இவ’ என்று எத்தனை தடவை உன்னிடமே சொல்லி இருக்கிறேன். இன்றைக்கு அவள் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. என்ன அழகாய்ச் சுற்றுகிறது..
உன் வார்ட்ரோப்பில் நீட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உன் உடைகள்.. அதிலும் கவனம் எடுத்து உன் உள்ளாடைகள் வெளியே தெரியாமல்.. புடவைகள் மட்டும் புலப்படுகிற மாதிரி.. ஒரு புடவையை எடுத்தால் செட்டாய் அதற்கான பிற துணிகளுடன்.. ஒரு ஒழுங்கு.. ஒரு நேர்த்தி..
என் தங்கை ஆச்சர்யமாய்க் கேட்டதாய் நீ சொன்னாய்.. முன்பொரு முறை.. கண்ணனா இதெல்லாம் கவனிச்சு கேட்கிறான்..
அம்மு நீ என் வாழ்வில் வந்தபிறகு என்னை வெகுவாக மாற்றி விட்டாய். கோவில் வாசலில் அந்தச் சிறுமி.. அண்ணே.. இதன் கடைசிண்ணே.. இருபது ரூவாதான்.. என்றதும் முதலில் நான் எதுவும் சொல்லாமல் மேலே நடந்ததும் அவள் பின்னாலேயே வந்ததும்..
 ‘பூ இருக்கும்மா’
“வாங்கிக்கங்கண்ணே.. அக்கா சொல்லுக்கா”
“பூ வேணாம்னு சொல்லக் கூடாது.. போ வேற யார்ட்டயாவது கேளு”
‘ப்ளீஸ்ணே.. நோட்டு வாங்கணும்ணே”
அந்தச் சிறுமியை அருகில் இருந்த கடைக்கு அழைத்துப் போய் பாட நோட்டுகளை வாங்கிக் கொடுத்து.. அந்தப் பூவை பாதி கிள்ளி நீ அவள் தலைக்கு வைத்து விட்டு மீதியை நீயும் வைத்துக் கொண்டு..
இந்த உலகம் அழகானது.  உன் கண்ணாடியை நீ எனக்கு அணிவித்தபிறகு.. எல்லோரையும் நேசப் பர்வை பார்க்க ஆரம்பித்தேன். சில நேரங்களில் என்னைக் கேலி செய்யும் விமர்சனங்களைக் கூட அலட்சியம் செய்து நகரவும் நீதான் கற்றுக் கொடுத்தாய்.
இதென்ன.. பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு ஒரே புகழாரம்னு நீ செல்லமாய் சலித்துக் கொள்வது புரிகிறது. இனி நீ இங்கே திரும்ப இன்னும் எத்தனை நாட்களாகுமோ.. மாதம் ஒரு முறை உன்னை வந்து பார்ப்பதும்.. தினசரி இரவு உன்னோடு பேசுவதும்.. எப்போதும் எந்த நிமிடமும் நீ என்னோடு இருப்பதற்கு சமமாகாது இல்லையா..
அம்மு.. நான் உன்னை இழக்கப் போகிறேன்.. அதனால்தான் இத்தனை விஸ்தாரமாய்.. இந்த நிமிஷம் என் அம்முவாய் நீ இருக்கும்போதே இதையெல்லாம் சொல்லிவிடுகிறேன்.
இரு ஷாக் ஆகாதே.. உனக்குப் புரிந்திருக்கும். நீ லேசுப்பட்டவளா.. உன் நமுட்டுச் சிரிப்பு எனக்குத் தெரிகிறது.  ஒரு குட்டி அம்முவோ.. ஒரு குட்டிக் கண்ணனோ வரப் போகிறது.. அதன் பின் எனக்கே எனக்கான அம்மு.. இருக்க மாட்டாள். அவளை என் ஞாபகப் பேழையிலிருந்து எடுத்துத் தான் நான் பார்க்கவேண்டும். பேச வேண்டும்.
அக்கம் பக்கம்.. யார் அறிமுகமானாலும் அன்பைச் சொரிகிற இந்த அம்மு.. வீட்டின் நாலு சுவர்களுக்குள் எனக்கே எனக்காய் பூத்து வைத்திருந்த பவழமல்லி வாசனை.. இனிப் பங்கிடப்படும். என் பங்கு குறைவாய்..
தப்பில்லை. உலக நியாயம் தான். குறையும் இல்லை. ஆனால் அம்மு.. இந்த சீண்டல்.. இந்த கொஞ்சல்.. உன் மடி.. உன் முத்தங்கள்.. எனக்கு மட்டுமில்லை இனி.. அம்மு எனக்கு அழுகை வருகிறது.. தள்ளிப் போட்டிருக்கலாமோ என்று கூட லூசுத்தனமாய் யோசிக்கிறேன்..
போகட்டும். இந்த இடைவெளி எனக்கு இன்னொரு ஞானத்தைக் கொண்டு வரட்டும். என் இரு கைகளில் நீயும் பாப்பாவும். ஆளுக்கொரு பக்கமாய். வாழ்க்கையெனும் நதி இரு கரைகளுக்குள் தானே ஓட வேண்டும்.
அம்மு.. படிச்சுட்டு கிழிச்சுரு. என் அசட்டுத்தனங்கள் என்றும் உனக்கு மட்டுமே பகிரப்பட்டு.
உன்.. 

கண்ணன்

5 comments:

G.M Balasubramaniam said...

அன்பின் ஆழமும் பிரிவின் சோகமும் வெகு நேர்த்தியாய்ப் பகிரப் பட்டிருக்கிறது வாழ்த்துக்கள் ரிஷபன் சார்

வெங்கட் நாகராஜ் said...

அழகாய் வெளிப்பட்ட அன்பு..... அம்மு கதைகள் தொடரட்டும்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

அம்மு-10 மிகவும் அழகாகவே என்னைச் சொக்க வைத்துவிட்டாள்.

படித்ததும் சொக்கிப்போன எனக்கு பின்னூட்டமாக என்ன எழுதுவது? அதை எப்படி எழுதுவது? என ஓராயிரம் குழப்பங்கள். மனதில் உள்ள அனைத்தையும் எழுத்தில் கொண்டுவர திக்குமுக்காடிப்போனேன், அந்தக்கண்ணன் போலவே, நானும்.

மிகவும் ரஸித்த வரிகள்:

//சீட்டின் கீழ் ஒரு பெட்டி உன் காலை இடிக்கிற மாதிரி வைத்திருந்ததே.. அதை அப்புறம் உள்ளே நகர்த்தி வைத்தீர்களா.. ப்ளாஸ்க் காபி சூடா இருந்ததா..//

//கடைசி விழுதை அள்ளிப் போட்டு கையலம்பிக் கொண்டு நீ வருவதற்குள் பசி ருசி அறியாது.. ஏதோ தொகையல் என்கிற நினைப்பில் கொஞ்சம் அள்ளி விழுங்கப் போனேன். :)))))) //

//‘இந்த முறை எல்லாருக்கும் நான் வச்சு விடப் போறேன்.. அப்புறம் ஒரு நாள் அவா எனக்கு வச்சு விடுவா’ :)))))) //

//இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஃபேன் காற்றில் உன் தலைமுடி அறை மூலையில் சுற்றிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தேன். ‘என்ன பெருக்கறா.. இவ’ என்று எத்தனை தடவை உன்னிடமே சொல்லி இருக்கிறேன். இன்றைக்கு அவள் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. என்ன அழகாய்ச் சுற்றுகிறது.. :)))))) //

//அதிலும் கவனம் எடுத்து உன் உள்ளாடைகள் வெளியே தெரியாமல்.. புடவைகள் மட்டும் புலப்படுகிற மாதிரி.. ஒரு புடவையை எடுத்தால் செட்டாய் அதற்கான பிற துணிகளுடன்.. ஒரு ஒழுங்கு.. ஒரு நேர்த்தி.. :)))))) //

//”கண்ணனா இதெல்லாம் கவனிச்சு கேட்கிறான்..”
- கண்ணனின் தங்கை சொன்னதாக அம்மு சொன்னது :)))))) //

//அந்தப் பூவை பாதி கிள்ளி நீ அவள் தலைக்கு வைத்து விட்டு மீதியை நீயும் வைத்துக் கொண்டு.. :)))))) //

//ஒரு குட்டி அம்முவோ.. ஒரு குட்டிக் கண்ணனோ வரப் போகிறது.. அதன் பின் எனக்கே எனக்கான அம்மு.. இருக்க மாட்டாள். :)))))) //

//வீட்டின் நாலு சுவர்களுக்குள் எனக்கே எனக்காய் பூத்து வைத்திருந்த பவழமல்லி வாசனை.. இனிப் பங்கிடப்படும். என் பங்கு குறைவாய்.. :)))))) //

EXCELLENT WRITING Sir ....... தங்களின் விரல்களை மானஸீகமாக என் கண்களில் ஒத்திக்கொண்டேன்.

பகிர்வுக்கு நன்றிகள், சார்.

அம்மு போல ஒரேயடியாக இல்லாவிட்டாலும், அதில் கொஞ்சமாவது .....
பிரியமுள்ள வீ.....ஜீ

நிலாமகள் said...

அம்முவின் அகத்துக்காரருக்கு திருஷ்டி கழிக்கணும். என்னது... முதலில் உங்களுக்கா...?!

Thenammai Lakshmanan said...

அட்டகாசம்.. லவ்லி.. !!!!!!!