December 19, 2009

நீடூர் வாழி

(படத்தில் இருக்கும் மூதாட்டிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை)

கல்லூரி நாட்களில் அம்மாவுக்குத் தெரியாமல்.. அப்பாவுக்குத் தெரியாமல்.. தாத்தாவுக்குத் தெரியாமல்.. சித்தப்பா, அத்தை, ,மாமா இன்ன பிற உறவுகளுக்குத் தெரியாமல்.. என்று கைவசம் சில்லறை கணிசமாய்ப் புரண்ட பொற்காலம்.

அப்புறம் வேலைக்கு சேர்ந்தப்ப, பிசாத்து பணம் ஸ்டைபண்டா கொடுத்தாங்க. அதாவது இப்ப வாங்கற துட்டை கம்பேர் பண்ணா.. ஆனா அப்ப செலவழிச்சது போக மிச்சம் நிக்கும்.

கையில நாலு காசு இருந்தா நம்மளுக்கு உடனே 'கர்ணன்' வேஷந்தான் ரொம்பப் பிடிக்கும்!

அப்படி ஒருநாள் அறிமுகம் தான் அந்தப் பாட்டி.

தெருவுல எதிர்ல பார்த்து 'நீடூர் வாழி' என்று எனக்குப் புரியாத ஒரு வார்த்தைய போட்டு நின்னாங்க.

பியூட்டி என்னன்னா அவங்க எங்கிட்ட எதுவுமே வாயத் திறந்து கேட்கல. அழுக்குப் புடவை. அதிலயும் கிழிசல். கக்கத்துல ஒரு துணிப் பை மூட்டையாட்டம்.

சட்டைப் பையில கை விட்டு அஞ்சு ரூபா வந்தத எடுத்து கொடுத்துட்டு போயிட்டேன். அப்ப என்னை அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. (இப்ப வரை அதே நிலைமைதான்.. பாட்டிங்கதான் என் பேவரைட்)

இந்த டீல் நல்லா இருக்கேன்னு மறுநாளும் எங்கிருந்தோ கரெக்டா என் எதிர்ல வந்தாங்க.

'நீடூர் வாழி'

இப்ப உஷாரா ரெண்டு ரூபா போட்டேன். அடடா.. அப்பவும் அதே திருப்திதாங்க.. அவங்க முகத்துல.

இப்படி ரெண்டு வருசம்.. ஞாயித்துக் கிழமை, அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர மத்த நாள்ல.. நான் கொடை வள்ளல்.

இப்படி ஒரு அந்நிய செலாவணி வரும்னு தெரியாம வீட்டுல கொஞ்சமா ஏமாத்திகிட்டிருந்த நான், ஓவர்டைம் பண்ண வேண்டிய கட்டாயம்.

ஏண்டா.. அப்படி என்னதான் உனக்கு செலவுன்னு கணக்கு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம மூஞ்சி மாதிரி கூட இருந்தே குழி பறிக்கற மேட்டர வச்சுகிட்டு சரளமா பொய் சொல்ல முடியல.

பக்கத்து வீட்டு மாமி வந்து டைமிங்கோட பஞ்ச் டயலாக் விட்டாங்க.

"அந்தப் பாட்டிகிட்ட உனக்கு என்னடா சகவாசம்"

உடனடியா கமிஷன் வச்சு விசாரணை நடத்தி என் குற்றப் பின்னணியைக் கண்டு பிடிச்சுட்டாங்க.

"தர்மம் பண்றது நல்லதுதான்.. அதை ஏன் மறைச்ச.. போடா அசட்டுப் புள்ள" சரித்திரத்தில் இடம் பெறும் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பக்கத்து வீட்டு மாமி 'எனக்கேன் பொல்லாப்பு' என்று இடத்தைக் காலி செய்தார்.

கிளைமாக்ஸ் இதுதான்..

அந்த மூதாட்டி என்னை ஒருநாள் வழிமறித்தார்.

பைக்குள் கைவிட்டபோது "அது இருக்கட்டும் தம்பி.. நாளைக்கு எங்கூட வருவியா " என்றார்.

பாட்டியை எப்படி கூட்டிகிட்டு ஓடறது என்று குழம்பிப் போய் ஆட்டோ செலவுல்லாம் யோசிச்சப்ப.. அவர் சொன்னது.

போஸ்ட் ஆபீஸ்ல எஃப்.டி போட்டு வச்சது- ரூ 20000- மெச்சூர் ஆவுதாம். அதை எடுத்து பேங்க்ல போடணுமாம். கூட வர முடியுமா..

போனேன். என்னைத்தான் எண்ணி வாங்கச் சொன்னார்.

"நீயே வச்சுக்கப்பா பத்திரமா.. பேங்க் வரைக்கும்"

பேங்க்கில் அதை பாட்டி பேரில் எஃப்.டி போட்டோம்.

"நாமினி பேரு"

பாட்டி சொன்னார். "அழகேசன்"

வெளியே வந்தபோது எனக்குள் குறுகுறுப்பு. 'யார் அந்த அழகேசன்?'

"வீட்ட வுட்டு தொறத்திட்டாங்கப்பா.. தெருவுல நிக்கறேன்.. நான் போனா கொள்ளி போடுவான்ல.. அதான் அவம்பேர்ல போட்டேன்"

எனக்கு ஏன் பார்வை மறைத்தது..

சற்றே கூன் விழுந்த அந்த மூதாட்டி சிரமப்பட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார்

"நீடூர் வாழி"

என் வாழ்க்கையில் இருந்தே போய் விட்டார். அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. அவன் கொள்ளி போட்டிருப்பானா.. பத்து வருடங்களாய் என் மனதைக் குடைந்து கொண்டிருக்கிற கேள்வியை.. இதோ.. உங்கள் முன் இறக்கி வைத்து விட்டேன்.

15 comments:

கிருபாநந்தினி said...

சில அனுபவங்கள் கதையைவிடவும் உருக்கமா அமைஞ்சிடுறது உண்டு. இதுவும் அப்படித்தான்! நல்லாருக்குங்ணா!

புதியவன் said...

சில சம்பவங்கள் நம் வாழ்க்கையில் மறக்க முடியவதகின்றன...

GR said...

ஐயா,
பத்து வருடங்களாய் உங்கள் மனதை மட்டும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியை
எங்கள் முன் இறக்கி வைத்து விட்டு, எங்கள் மனதையும் குடைய வைத்து விட்டீர்கள். உலகில் ஆங்காங்கே நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டியிருக்கும் தங்கள் படைப்புக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். மிகுந்த நன்றியுடன்
அன்புள்ள
வை. கோ

பலா பட்டறை said...

வாழ்க்கை எல்லோருக்கும் ரொம்ப ஈஸியா நழுவி போய்விடுவதில்லை... நம்மை திகைக்க வைக்கும் தருணம் நிறைய உண்டு கல் மனது விலக்கி விட்டு போய்விடும்... நம் போன்ற இளகிய மனதுக்கு இறக்கி வைக்க முடியாத பாரம் இது... உங்களைப்போலவே ஆடிப்போனேன் நான்...

vasanthamullai said...

"ரிஷபன் சூப்பரோ சூப்பர்!! உங்கள் கொடை வள்ளல் குணத்திற்கு தலை வணங்குகிறேன்"

Chitra said...

"நீடூர் வாழி" ......வேற ஒண்ணும் சொல்ல தோணலை..... உங்கள் நல்ல உள்ளம்:"நீடூர் வாழி"

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

'நீடுர் வாழி' அருமை!

Mohan Kumar said...

அருமை. தங்கள் செயல் நெகிழ்துகிறது.

இந்த சன்பவங்களில் ஒரு சிறுகதைக்கான மேட்டர் நிச்சயம் இருக்கு. சிறு கதையாக கூட எழுதியிருக்கலாமே? பலர் சொந்த அனுபவங்களில் இருந்து தான் கதை எடுக்கின்றனர்.

K.B.JANARTHANAN said...

உங்கள் அன்புக்கும் உதவிக்கும் ஒரு சல்யூட்!

பூங்குன்றன்.வே said...

நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு நண்பா..சரி,நம்பிக்கையாகவே இருப்போம்,அந்த பாட்டி இன்னும் சாகவில்லையென.

கவிதை(கள்) said...

நீவீர் நீடூழி வாழ்க

விஜய்

ஹேமா said...

உங்களுக்கும் வாழ்த்து ரிஷபன்.
நம் சமூகத்தின் ஒரு பள்ளம் இது.

வி. நா. வெங்கடராமன். said...

அன்புள்ள ரிஷபன்,

சில அனுபவங்களை நம்மால் மறக்க முடிவதில்லை. நல்ல பதிவு.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com

thenammailakshmanan said...

அருமை ரிஷபன் நீடூர் வாழி நீங்களும் உங்கள் தரும குணமும்

ரோஸ்விக் said...

நீடூர் வாழி.

நானும் வாழ்த்துகிறேன். :-)