March 29, 2011

என் மேல் விழுந்த மழைத்துளியே 3

"உங்க மாமனார் நம்பர் இருக்காடா" என்றான் ஒரு நாள்.

நானும் யதார்த்தமாய்க் கொடுத்துத் தொலைத்து விட்டேன்.

புவனி அப்புறம் சொன்னாள்.

"உங்க ஃப்ரெண்ட் சரியில்லீங்க"

"ஏன்.. என்ன ஆச்சு"

"எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி விஜயாகிட்டே பேசணும்கிறார்"

"யார் விஜயா"

"அதான் எங்க பக்கத்து வீடு.. அவர் தொந்திரவு தாங்காம அவங்க வீட்டு நம்பரைக் கொடுத்துட்டோம்.. நேரங் கெட்ட நேரத்துல எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணதால"

தலையில் அடித்த்துக் கொண்டேன்.

"ஏம்மா அப்படி பண்ணே.. "

"நீங்க வேற.. நான் கொடுக்காட்டியும் விஜியே கொடுத்திருப்பா"

அப்புறம் விஜயாவின் கதையைச் சொன்னாள்.

அவளுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். இரண்டும் எப்போதும் ஏதாவது உடல் நலக் குறைவால் அவதிப்படும் ஜீவன்கள்.

விஜயாவின் கணவனுக்கு நல்ல வேலை இல்லை. குடிப் பழக்கம் வேறு. எந்தக் கம்பெனியிலும் பொருந்தி இருக்க மாட்டான்.

இத்தனைக்கும் விஜயாவும் அவனும் காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள்.

விஜயா அவனை இப்போதும் குறை சொல்வதில்லை.

'அவர் நல்லவர்தான்.. பாரேன்.. ஒருநா இல்லாட்டி ஒருநா எங்க கஷ்டம் விடிஞ்சுரும்' என்பாளாம் புவனியிடம்.

'இப்ப கணேசன் அவங்க வாழ்க்கையில நுழைஞ்சிருக்கார்.. என்ன ஆவப் போவுதோ' என்றாள் புவனி கவலையாய்.

என்னிடம் பொறுப்பு கட்டினாள்.

"பேசுங்க உங்க ஃப்ரெண்டுகிட்டே.."

கணேசனைப் பிடிப்பதுதான் பெரும்பாடாய் இருந்தது. அலுவலகம் போனால் ஆள் இல்லை. அவன் வேலைப்படி அடிக்கடி வெளியே போகலாம். கஸ்டமர் விசிட், ஃபாலோ அப்.. இத்யாதி.

எந்த கஸ்டமரையும் பார்த்த மாதிரி தெரியவில்லை.

புவனி எப்போது பேசினாலும் 'உங்க ஃப்ரெண்ட் வந்திருந்தார்..பக்கத்து வீட்டுக்கு' என்பாள்.

ஒரு வழியாய் அவனைப் பிடித்து விட்டேன்.

"உன்னோட பேசணும். ரொம்ப அர்ஜெண்ட்"

"இப்ப எனக்கு நேரம் இல்ல"

"கணேஷ்.. பி சீரியஸ்.. நான் உன்னோட பேசியே ஆகணும்" அரைமனதாய் சம்மதித்தான்.

ரெஸ்டாரண்ட் மூலையில் அமர்ந்தோம்.

"கணேஷ் நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா"

"எது"

"நடிக்காதே.. விஜயா பத்தி கேட்கறேன். அவங்க வீட்டுக்கு நீ அடிக்கடி போறே.. அவ கல்யாணமானவ.. ரெண்டு பெண் குழந்தை இருக்கு" கணேசனிடம் எந்த பதற்றமும் இல்லை.

சிரித்தான்.

"நீ என்னைத் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கே.. நான் எப்ப போனாலும் அவங்க புருஷன் இருக்கறப்பதான் போறேன். இன் பாக்ட் இப்ப என்னோட ஃப்ரெண்ட் அவங்க புருஷந்தான்"

விஜயாவை அவன் 'அவங்க' என்றே சொன்னது திகைப்பாய் இருந்தது.

"எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.. ஆனா அவங்க வாழ்க்கையில எந்தப் பிரச்னையும் வர அளவு மோசமா நடந்துக்குவேன்னு சொன்னேனா.. அவங்க புருஷன்கிட்டே பேசி இப்ப அவரை டிரீட்மெண்ட்டுக்கு அழைச்சுகிட்டு போறேன். அது மட்டுமில்லே.. அவர் ஓரளவு கண்ட்ரோலுக்கு வந்ததும் நல்ல வேலை பார்த்துத் தரப் போறேன்.. அப்புறம் அவங்க குழந்தைகள் படிப்பு செலவு என்னோடதுன்னு சொல்லிட்டேன்.. வருமானம் இல்லாம நல்ல சாப்பாடு இல்லாம இளைச்சுப் போச்சுங்க.. கடனா வச்சுக்குங்கன்னு வீட்டு சாமான் வாங்கிப் போட்டிருக்கேன்.."

நான் திறந்த வாய் மூடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன் வியப்புடன்.

"நான் நேசிச்சவ எனக்கே கிடைக்கணும்கிறது நல்ல ஆசைதான். ஆனா அதுக்கு சான்ஸ் இல்லாதப்ப, அவங்க நல்லா வாழணும்னு நினைக்கறேன்.. நிஜமாப் பார்த்தா, இப்ப என்மேல எனக்கே ஒரு மதிப்பு வந்திருக்கு.. என்னால தலை நிமிர்ந்து நிற்க முடியும்.. ஒரு நல்ல மனுஷனா.."

என் கண்களில் நீர் தன்னிச்சையாய் வழிந்தது.

நான் கேலி செய்தவன் இன்று என் முன் விசுவரூபம் எடுத்து நிற்கிறான்.

"அவங்க வீட்டுக்கு நான் போகறப்ப அவங்க புருஷன் இல்லேன்னா, அப்புறம் வரேன்னு சொல்லிட்டு வந்திருவேன்.. மறுபடி சொல்றேன்.. எனக்கு உருவமில்லாத அந்த அன்பு பிடிச்சிருக்கு.. வேற எந்த உள்நோக்கமும் இல்ல.. என் மனசுக்குள்ள"

எனக்கு பேச்சு மறந்து போனது.

கணேசன் கைகளைப் பற்றி அழுத்தமாய்க் குலுக்கினேன். (ஹப்பாடா .. முடிச்சாச்சு !)13 comments:

அன்னு said...

முதல் ரெண்டு பாகமும், எப்பவும் போன்ற கதைதானே என்று எண்ண வைத்தது, அந்த நண்பனையும் என்ன செய்வானோ என்றே எண்ண வைத்தது. ஆனால் கடைசி பகுதி எதிர்பாராதது. கொஞ்சமும் எதிர்பாராதது. இப்படியும் மனிதர்க/ல் இருக்கத்தான் செய்கின்றனர், சத்தமில்லாமல். உச்சஸ்தாயியில் சொல்லபடும் கதைகளிலோ தங்களின் உறவுக்குள் வர மறுக்கும் ஆணோ / பெண்ணோ அவர்களின் குழந்தைகளையும் குடும்பத்தினரையுமே குறி வைக்கிறார்கள்.!!!

RVS said...

உத்தமன்டா!!! ன்னு கத்தனும் போல இருந்தது. நீங்க சொன்ன சொல் தவறாம மூணாவது பார்ட்ல முடிச்சுட்டீங்க. நமக்கு தான் அந்தக் கலை கை வர மாட்டேங்குது. அற்புதம் சார்! எந்த கதையிலையும் கடைசியில மனசைக் குடைஞ்சுடுறீங்க.. ;-))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ம்....ஏதோ ’ஓ ஹென்றி’ படிச்சாப்புல இருக்கு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, நல்ல வித்யாசமான எதிர்பாராத முடிவு தான். இப்படியும் சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள், ஏதோ ஒரு குறிக்கோளுடனோ அல்லது எந்த குறிக்கோளும் இல்லாமலோ. [குஷ்புவுக்கு கோவில் கட்டினால் போல]

Chitra said...

"நான் நேசிச்சவ எனக்கே கிடைக்கணும்கிறது நல்ல ஆசைதான். ஆனா அதுக்கு சான்ஸ் இல்லாதப்ப, அவங்க நல்லா வாழணும்னு நினைக்கறேன்.. நிஜமாப் பார்த்தா, இப்ப என்மேல எனக்கே ஒரு மதிப்பு வந்திருக்கு.. என்னால தலை நிமிர்ந்து நிற்க முடியும்.. ஒரு நல்ல மனுஷனா.."

என் கண்களில் நீர் தன்னிச்சையாய் வழிந்தது.

நான் கேலி செய்தவன் இன்று என் முன் விசுவரூபம் எடுத்து நிற்கிறான்.

......இங்கேதான் ரிஷபன் சார் தனது அக்மார்க் முத்திரை பதித்து நிற்கிறார். சூப்பர்!

நிலாமகள் said...

வாழ்க கணேசன்...!
வாழ்க கணேசன்...!
முதல் பகுதியில் போட்ட என் கருத்துரை காணாத ஆதங்கத்தில் ரெண்டுக்கு போட விட்டாச்சு. முடிவின் அசத்தல் உறுத்தலாகி இப்போ போட்டாச்சு.

எல் கே said...

நண்பன்டா!!!! அட்டகாசம்

raji said...

உண்மையில் எதிர்பார்ப்பற்ற உருவமற்ற அன்பிற்கு
உயர்ந்த உள்ளம் அமிந்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு கணேசனைப் படைத்த உங்களுக்கு நன்றிகள்
வித்தியாசமான முடிவுடன் கூடிய அருமையான கதை

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை. முதலிரண்டு அத்தியாயங்களும் விறுவிறுப்பு. முடித்த விதம் வெகு சிறப்பு.

middleclassmadhavi said...

வெகு அருமை! ஆனாலும் புவனி ஏன் இதைப் புரிந்து கொள்ளவில்லை, பக்கத்து வீட்டில் இருந்தாலும்? நாயகன் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பது நல்லது!
கணேஷ் அருமையான காரக்டர்!

மோகன்ஜி said...

பட்டுகத்தரித்தாற்போல் என்பார்களே.. அந்த ட்ரீட்மென்ட் கதைல இருக்கு. கச்சிதம்.. கனக்கச்சிதம்

வெங்கட் நாகராஜ் said...

மூன்று பகுதிகளையும் ஒன்றாகப் படித்து முடித்தேன். முதல் இரண்டு பகுதிகளிலும் இருந்த விறுவிறுப்பும், கடைசி பகுதியில் கிடைத்த எதிர்பாரா நல்ல முடிவும் அருமை! நச் சென்று மூன்று பகுதிகளில் நல்ல கதை படித்த திருப்தி. பகிர்வுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

புவனிக்குக் கொடுத்து வைக்கவில்லை!! எனினும், இத்தகைய உறவு/நட்புகள் பிறரால் எப்படி விமர்சிக்கப்படும் என்பதற்கு புவனியின் கூற்றே உதாரணம். விஜயாவின் கணவனும் “தெளிந்த”பின்னரும் தெளிவாய் இருந்தால் மகிழ்ச்சி.

(சாரி ஃபார் லேட் கமிங் & கமெண்டிங்)