ஸ்ரீரங்கம் முனிசிபல் அலுவலகம் அருகில் லைப்ரரி .. பூங்காவின் உள்ளே கடைசியாய் கட்டிடம்.
கல்லூரி நாட்களில் வாரந்தவறாமல் போய் புத்தகம் எடுப்பேன். அப்போது தெரியவில்லை .. பின்னொரு நாளில் என் புத்தகமும் அங்கிருக்கப் போகிறது என்று.
பூங்கா ஓய்வுபெற்றவர்களின் சுக வாசஸ்தலமும் கூட. குடை போல் கவிழ்ந்திருந்த இடத்தில் அடியில் சிமென்ட் பெஞ்சுகள். பெரும்பாலும் அரசியல் பேச்சு. அதை எந்த அரசியல்வாதியாவது கேட்டால் மானஸ்தனாய் இருந்தால் தொங்கி விடுவான் முழம் கயிற்றில். ஆனால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நமக்கு இல்லை.
அறுபது பிளஸ் இத்தனை ஆங்காரத்துடன் இருக்கலாமா .. என்கிற படபடப்பு வந்து விடும். பொறி பறக்க அவர்கள் பேசும்போது. பேசுகிற இருவரை மற்றவர்கள் வந்து விலக்கும் போது திமிறுகிற காட்சி கண்கொள்ளாதது.
'என்ன அப்பு .. இவ்வளோ கோபம்.. '
'பின்ன என்ன மசிருக்கு அவன் பேசுறான் '
'விடுங்க.. நாம பேசி என்ன ஆகப் போவுது'
'பேசுனா ஒரு நியாயம் இருக்கணும்'
மெல்ல இருட்டுத் திரை இறங்கும். எட்டு மணிக்கு மேல் அங்கிருக்க இயலாது. ஒவ்வொருவராய் எழுந்திருக்க மனதின்றி ஊர்ந்து போவார்கள்.
வீடு திரும்பியதும் அவர்களை ஒரு வெறுமை தாக்கப் போகிறது.. மறுநாளின் விடியலுக்காய் காத்திருக்கவேண்டும்.
மற்றவர்கள் நகர்ந்ததும் சண்டையிட்ட இருவரும் கடைசியாய் போவார்கள்.
கீழே மஞ்சள் சரக்கொன்றை சிதறி நடைபாவாடை விரித்திருக்கும். அதன் மணம் சற்று காட்டமாகவே மூக்கில் இறங்கும்.
ஒருத்தர் தடுமாற அடுத்தவர் கை பிடிப்பார்.
'ஏலே .. பார்த்து..'
'ம்..'
'கணேசனும் போயிட்டான்.. ஒரு வருஷம் பெரியவனா ? '
'ஆமா'
'போன வருஷம் ஆறு பேர் இருந்தோம்.. மார்கழி மாசம் கோபால் போனான்..'
'ம்'
கண்கள் மறைத்த அந்த அரை வெளிச்ச மயக்கத்தில் ஒருவர் இன்னொருவரை பார்த்து கசிந்தது அவரவர் மனசுக்கு மட்டுமே புரிந்திருக்கும்.
'போடா.. எதுக்கு நாம சந்திச்சு பழகினோம்.. இப்படி பொசுக்குனு பிரிஞ்சு போகவா'
வாசல் கேட்டு மூடி இருக்கும். சுழல் கதவில் நுழைந்து வெளியே வரும்போது கொஞ்சம் குழந்தைத்தனம் எட்டிப் பார்க்கும்.
'பென்ஷன் வாங்க என்னிக்கு போற '
'சொல்றேன்.. உன்னை விட்டு போக மாட்டேன்..'
இரு திசைகளில் பிரிந்து அவர்கள் போகும் போது ஆண் பெண் காதல் எல்லாம் சற்றே அலட்சியமாய் தெரியும்.. அப்போது!
22 comments:
Nice.,
வாசிக்கும்போது எதையோ யோசிக்கவும் சொல்லுது.
அனைத்தும் அருமை
அருமையிலும் அருமையாய் எனக்கு:
//அப்போது தெரியவில்லை .. பின்னொரு நாளில் என் புத்தகமும் அங்கிருக்கப் போகிறது என்று.//
//'சொல்றேன்.. உன்னை விட்டு போக மாட்டேன்..'//
இதில் தான் எத்தனை அர்த்தங்கள்!
வியந்தேன், மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள்.
அருமை சார். என் மாமனாரும் அந்த லைப்ரரியில் தான் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு வந்து படிப்பார்.
நல்ல நூலகம். நான் கூட அங்கே சில சமயம் சென்றிருக்கிறேன். நூலகத்தில் கிடைக்கும் அனுபவங்கள் சுகமானவை. பகிர்வுக்கு நன்றி.
சார் கையை கொடுங்க! ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வு. ரிஷபன் நீங்க இதை ஒரு சிறுகதையா எழுதணும்.!
இறுதி நாட்களில் நண்பர்களை இழப்பது உடலின் உறுப்புக்களை ஒவ்வொன்றாய் இழப்பதற்குச் சமம்.
மரணம் இயல்பானதுதான் எனினும் முதுமையில் நேசத்தின் பிரிவை எல்லோராலும் இயல்பாய் எடுத்துக்கொள்ள முடிவதில்லை.
த ஹிந்துவின் ஒபீச்சுவரி பக்கங்களில் தன் நண்பர்களைத் தேடுபவர்களில் இதைக் கண்டிருக்கிறேன்.
பாரமான பதிவு ரிஷபன்.
வாசல் கேட்டு மூடி இருக்கும். சுழல் கதவில் நுழைந்து வெளியே வரும்போது கொஞ்சம் குழந்தைத்தனம் எட்டிப் பார்க்கும்.
..... மிகவும் ரசித்தேன்.....
எப்பொழுதும் போல அருமை.
\\இரு திசைகளில் பிரிந்து அவர்கள் போகும் போது ஆண் பெண் காதல் எல்லாம் சற்றே அலட்சியமாய் தெரியும்.. அப்போது!\\
மிக அற்புதமாக உணர்வுகளை வடித்திருக்கிறீர்கள். மிக அருமையான பதிவு.
ஆம்..வாழ்வின் விளிம்பில் உள்ள சினேகம் வசந்தத்தில் வரும் காதலை விட சற்று அடர்த்தி கூடத் தான்!
உங்கள் நூலகத்தின் காட்சி கண்முன்னே விரிகிறது.. முதுமையின் ஊன்றுகோலாய் நட்பும்,தள்ளாட்டமாய் நண்பர் மறைவுமே ஆட்கொள்ளும்..
வயசே ஆகக் கூடாதுங்க... பாரதி மாதிரி.. விவேகானந்தர் மாதிரி.. பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மாதிரி வந்தவேலை முடிஞ்சதுமே கிளம்பிடணுமோ?
ரொம்ப நல்லா இருக்கு சார்
முதுமையின் உரையாடலில் தெரியும் இழப்பின் வலி...
அப்படியே பகிர்ந்திருக்கிறீர்கள் நண்பா.
நல்ல எழுத்து.
பகிர்வு அருமை...!
//'பென்ஷன் வாங்க என்னிக்கு போற '
'சொல்றேன்.. உன்னை விட்டு போக மாட்டேன்..'//
நெகிழ்ச்சியான வரிகள்...
தி.ஜாவின் ஒரு கதையில் அப்பா, அவரோட அப்பா, அவரோட அப்பா என்று மூன்று தலைமுறையினர் பென்ஷன் வாங்கும் படலம் பற்றி கொஞ்சம் நகைச்சுவையோட எழுதியிருப்பார். ஏனோ அது கொஞ்சம் ஞாபகம் வந்தது. ;-)))
நானும் என் தங்கையும் சிறு வயதில் -பெண்கள் அவ்வளவாக போகாத அந்த லைப்ரரிக்குப் போவோம் - லைப்ரரியன் சிங்கராயர் -ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் போகப்போக பழகி விட்டார்! பல மொழிபெயர்ப்புக் கதைகளை வாசித்தது அப்போது தான்!
வானொலியும் அலறிக் கொண்டிருக்கும் பூங்காவில்!
உங்கள் பதிவு எனக்கு இந்த ஞாபகங்களைக் கொண்டு வந்தது - நன்றி!
arumai
good one rishabhan!
வரப்போகும் முதுமையை நினைத்தால் கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது.
வாழ்வில் தனிமைக் கொடுமை. அதிலும் முதுமையில் ??? அவர்கள் வயதை ஒத்த சிலர்தான் துணை. அவர்களும் போய்விட்டால்??
Post a Comment