March 20, 2011

சிவக்குமார்

" திருப்பதி போலாம்னு இருக்கேன்.. வரியா”
சிவா என்கிற சிவக்குமாரின் கேள்வி. என்னைப் பார்த்து.
வெறுமையாய் இருந்த சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்து தலையசைத்தேன்.
வற்புறுத்தி அழைத்துப் போனான்.
கீழிருந்து மேலே நடந்து போய் தரிசனம் செய்தோம். திரும்பும்போது அவன் ஊருக்கு அழைத்துப் போனான். பெற்றோர் அங்கே. இவன் மட்டும் மாமா வீட்டில் தங்கி படிப்பு. சிவா என் பள்ளி/கல்லூரி சினேகிதன்.
குளிக்கப் போய் விட்டு திரும்பியபோது கூடத்தில் ஆணியில் தொங்கிய என் சட்டைப் பையில் கைவிட்டு அவன் நின்றதைப் பார்த்து விட்டேன்.
‘பணம் இல்லை’ என்று சொன்னதை நம்பவில்லையா..
கவனிக்காதது போல வந்தேன். உணவருந்தி விட்டு கிளம்பினேன். பஸ் ஸ்டாண்டில் கொண்டு வந்து விட்டான்.
“லீவு முடிஞ்சு ஊருக்கு வரேன்”
பஸ் கிளம்பியதும் சட்டைப் பையை பார்த்தேன். ஐம்பது ரூபாய்த் தாள். என் பஸ் செலவுக்கு அவன் எனக்குத் தெரியாமல் வைத்தது.
அவனுக்கு ஒரு கால் சற்றே கோணல். மாமா ஜவுளிக் கடை. அவர் வீட்டில் தங்கிப் படிப்பு என்பதால் மாமாவின் அதிகாரம் அவன் மீது.
அவன் அவரை டபாய்ப்பது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதம்.
சினிமா என்றால் உயிரை விடுவான். தேவி தியேட்டரில் அவன் படம் பார்ப்பது தனி ஸ்டைல்.
முதல் நாள் டிக்கட் வாங்கி இண்டர்வெல் வரை படம் பார்த்து விட்டு வந்து விடுவான். மறு நாள் மறுபடி டிக்கட் வாங்கிக் கொண்டு வந்து விட்டு இடை வேளைக்குப் பின் போவான். தியேட்டர் வாசலில் நிற்பவரைக் ‘கவனித்து’ விடுவான்.
சில நேரங்களில் முழு படமும்! அதாவது இரவுக் காட்சியில். திண்ணையில் படுப்பதாக சொல்லி விட்டு தலையணையை போர்வையால் போர்த்தி விட்டு போய் விடுவான்.
ஒரு நாள் பயங்கர மழை அடித்து அவன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி விட்டது. திண்ணையில் சாரல் அடிக்கப் போகிறது என்று தாத்தா வந்து அவனை எழுப்பினால்.. உள்ளே ஆள் இல்லை.
ஒரு மணிக்கு சினிமா முடிந்து வந்தவனுக்கு அடுத்த ஷோ காத்திருந்தது!
வருடம் முழுக்க இப்படி படிப்பை கோட்டை விட்டு இறுதி நாட்களில் தேர்வுக்கு முதல் நாள் படிப்பான். கூடவே நாங்களும்.
தூக்கம் விழிக்க மாத்திரை இருக்கு என்று அவன் தான் சொல்லி வாங்கிக் கொண்டு வந்திருந்தான். இவன் என்ன சொன்னானோ.. கடைக்காரர் என்ன புரிந்து கொண்டாரோ.. மாத்திரையைப் போட்டதும் சுகமாய் ஒரு தூக்கம் சுழற்றி அடித்து, முதல் நாள் இரவு பதினொரு மணி வரை படித்தது போக, அன்று ஒன்பது மணிக்கே கட்டையை நீட்டியாகி விட்டது.
சவுக் - பழைய புத்தகங்களின் வாசஸ்தலம். தில்லானா மோகனாம்பாள் தொடராய் வந்தது.. கோபுலுவின் படங்களோடு.. இரண்டு வால்யூமையும் பார்த்து நான் சட்டைப்பயை தடவ.. உடனே பணத்தை எடுத்துக் கொடுத்து வாங்கச் சொன்னவன்.
நேஷனல் காலேஜின் வாசலில் கூட்டம் நின்றால் அன்று காலை ஏதோ ஸ்ட்ரைக் என்று அர்த்தம். அவ்வளவுதான். பதினொரு மணி ஷோவுக்கு பிளாசா போய்விடுவோம். பட் ஸ்பென்ஸர்.. டெர்ரன்ஸ் ஹில், சார்லஸ் பிரான்சன்.. என்று பெயர்கள் அப்போதுதான் அறிமுகம். ஒரு படம் விட்டதில்லை.
இப்படி ஒரு முறை ‘நிஜம் செப்பிதே நம்மரு’ (உண்மையைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள்) ஒரு மாதிரி தெலுங்குப் படம் பார்க்க அழைத்துப் போனான்.
‘வேணாம்டா’ என்று மறுத்துக் கொண்டே, அங்கங்கே கறுப்பு பெயிண்ட் அடித்த போஸ்டர் பார்த்து உடம்புக்குள் அநேக திரவங்கள் சுரக்க கொஞ்சம் பயம் கொஞ்சம் ஆர்வமாய் போனோம் அவனுடன்.
டிக்கட் வாங்கிக் கொண்டு விளக்கணைத்ததும் உள்ளே அழைத்துப் போனான்.
‘யாரும் பார்க்காமல் இருக்க முன்னேற்பாடு’
இடைவேளையில் அந்த குண்டைத் தூக்கிப் போட்டான்.
‘முன் சீட்டுல எங்க மாமா’ என்றான்.
‘அய்யோ.. ஓடிரலாமா’
‘சும்மா இரு.. இதுவரைக்கும் எந்த சீனும் வரல’
’பயம்மா இருக்குடா இதுக்குதான் நான் அப்பவே வரலைன்னேன்’
‘இதே பயம் அவருக்கும் இருக்கும்டா..’ சிரித்தான்.
‘நான் வீட்டுல சொல்லிருவேன்னு. கடையை விட்டுட்டு அவர் ஏன் இங்கே வந்தார்’
மாமா இவனைப் பார்த்த அதிர்ச்சியில் இடைவேளையுடன் ஓடிப் போக.. நாங்கள் முழுப் படமும் பார்த்தோம். பாவி.. போஸ்டரில் மட்டும் பீதி கிளப்பி.. தியேட்டரில் கடைசி வரை எதுவுமே காட்டவில்லை! படத்தை ஓட்ட அது ஒரு டெக்னிக் என்று பின்னால் புரிந்தது.
கல்லூரிப் படிப்பு முடிந்து (அவன் பிஏ.. நாங்கள் பிகாம்) அவரவர் திசையில் போனோம். அவனுக்கு படிப்பு ஒரு அடையாளத்திற்கு மட்டும். ஊருக்குப் போய் ஜவுளிக்கடையைப் பார்த்துக் கொண்டான். திருமணத்திற்குப் போனோம்.
எனக்கும் வேலை கிடைத்து மாற்றலாகி திரும்ப யதாஸ்தானம் வந்து.. எனக்கும் அவனுக்குமான கடிதப் போக்குவரத்தும் நின்று.. இடைவெளி இரண்டு வருடங்கள்!
அவன் மாமா வீட்டைக் கடந்துதான் நான் எப்போதும் போக வேண்டும். அவர் வீட்டில் மற்றவர்கள் எல்லாம் ‘தம்பி’ என்று பிரியமாகப் பேசுவார்கள். இவரைப் பார்த்தால் மட்டும் தலை குனிந்து ஸ்தலத்தை விட்டு வேகமாய் ஓடி விடுவேன்.
அவன் அக்கா, அவர் மகள் நின்றிருந்தார்கள். சிரித்தார்கள்.
“நல்லா இருக்கியாப்பா”
“ம்.. எங்கே சிவாவைக் காணோம்.. ரொம்ப நாளாச்சு”
“தெரியாதாப்பா”
என்ன சொல்றாங்க..
“அவன் போயி ரெண்டு வருஷமாச்சு”
பவர் கட் நேரத்தில் இவன் டிவி பின்னால் போய் பிளக்கை எடுத்து ஏதோ செய்ய முயலும்போது திடீரென கரண்ட் வந்துவிட..
“உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சேன்பா.. எப்படியோ விட்டுப் போச்சு..”
இரண்டு வருஷமாய் அவன் போனது கூடத் தெரியாமல்..
அவர்களிடம் எதுவும் பேசக் கூடத் தோன்றாமல் அப்படியே நான் வந்த வேலை மறந்து வீட்டுக்குத் திரும்பிப் போய்..
‘என்ன ஆச்சுடா..’
அந்த அழுகை இன்றும் கூட நிற்கவில்லை எனக்கு.

15 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாரஸ்யமாய் தொடங்கி, விறுவிறுப்பாய் சென்ற உங்கள் பகிர்வு கடைசியில் சோகத்தினை அப்பி விட்டது! நல்ல பகிர்வு.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

முடிவு.. அச்சோ ...

RVS said...

ப்ரில்லியன்ட்!!.... கடைசியில் சோகம் மனத்தைக் கவ்விக் கொண்டது..

ரேகா ராகவன் said...

அட! போட வைத்த சிறுகதை. உங்களிடம் நாங்கள் கற்பதற்கு நிறைய உள்ளது.

எல் கே said...

முடிவு மனதை கனக்க வைத்தது

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுவாரஸ்யமா ஆரம்பிச்சு, இடையில் த்ரில்லிங்ககா போய் கடைசியில் அந்த தேவி டாக்கீஸ்ஸில் பார்த்தபடம் போல ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டானே அந்த சிவா, பாவம் சார் அவன்.

உங்களுக்குத்தான் கடைசியில் இப்படி ஒரு அதிர்ச்சி.

வாழ்க்கையில் சில நேரங்களில் இது போல துயரங்களையும் பார்க்க நேர்ந்து விடுகிறது. சம்பவங்கள் மட்டும் என்றும் நம் நினைவுகளில் தேங்கிவிடுகிறது. நல்ல பகிர்வு.

raji said...

பதிவை சுவாரசியமாய் படிக்க ஆரம்பித்தேன்.ஆனால் முடிவில்...

middleclassmadhavi said...

முன்யோசனையுடன் பணமில்லாத நண்பன் பாக்கெட்டில் பணம் வைத்தவர், மின்வெட்டை நம்பி விட்டாரே!
மனதில் நிற்கும் மனிதர்களில் ஒருவர்!

கோவை2தில்லி said...

மனதை கனக்க வைத்த முடிவு. :(

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கனத்த இதயத்துடன் படித்து முடித்தேன்!

கிருஷ்ணப்ரியா said...

வாழ்வின் ஓட்டத்தில் இப்படித் தான் பலரையும் மறந்து விடுகிறோம். எப்போதாவது நினைவு வரும் போது ஒன்று அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். அல்லது நட்பு காணாமல் போய் விடுகிறது... நெகிழ வைத்த கதை.... பாராட்டுக்கள் ரிஷபன்.....

நிலாமகள் said...

எனக்கும் இப்படியொரு நெருங்கிய தோழியின் இறப்பை நெடுநாள் கழித்து அறிந்த அனுபவமுண்டு... இன்னும் இருக்கு அதன் வேதனை...

Harani said...

அன்புள்ள ரிஷபன்.

என்னுடைய நண்பர்கள் சிலபேர் இப்படித்தான் அவர்களைத் தேடிப்போகும்போது அவர்கள் பிரிவை அறிந்து தாங்க முடியாது தவித்த நாட்கள் உண்டு. உங்களின் வழக்கமான நேர்த்தியான கதைசொல்லும் திறன் கதை முடிவு இரண்டும் அழவைக்கின்றன நினைவுகளைக் கூட்டி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

As others said, the ending pained me.

ஹுஸைனம்மா said...

சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.