March 14, 2011

யோசித்தால்..

"தாத்தா காலை வலிக்கிறது.. "

"கோவிலுக்கு வந்துட்டு கால் வலின்னு சொல்லலாமாடா “

"ஆனா வலிக்குதே "

"சரி.. ராமா ராமா ன்னு சொல்லு.. வலி போயிடும்.."

"தாத்தா .."

"என்னடா.."

"அம்மாவும் எப்பவும் ராமா ராமா ன்னு தான சொல்லுவா "

"..."

"அப்புறம் ஏன் செத்துப் போனா .. அதுவும் வலி தாங்க முடியாம.."

தாத்தா ஏன் பேசாமல் நிற்கிறார்.. பேரனுக்குப் புரியவில்லை..

========

அலுவலக வாசலில் உள்ளே நுழையும் போது அவனைப் பார்த்தேன் .. கூட வந்த

நண்பர்களுக்கு வேடிக்கை காட்ட .. சுவரில் தேமேன்னு இருந்த பட்டாம்பூச்சியை

கையில் பிடித்தான்.

'இதோ பாருங்கடா .. '

அதே நேரம் அவன் பார்வை என் மீதும்..

'விட்டுருப்பா..'

அவ்வளவுதான் சொன்னேன்.. அது மறுபடி சிறகடித்து போனது..

======

எனக்கு ஜோசியங்களில் நம்பிக்கை இல்லை.. கடவுள் உழைப்பவனுக்குத்தான் உதவுகிறார் என்று யோசிக்கிற ரகம்.

திருமணம் தடைப்பட்டு போனது என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த அலுவலக சிநேகிதியின் ஜாதகத்தை நான்கு மாதங்களுக்கு முன் வாங்கிப் போனேன் .

என் தெருவுக்கு அடுத்த தெருவில் அவர் இருக்கிறார்.

ஜாதகம் பார்த்து மார்ச் நாலாம் தேதிக்குள் வரன் செட்டிலாகும் என்றார். எழுதியும் கொடுத்தார்.

ஐந்தாம் தேதி அந்த சிநேகிதி சொன்னார்.. நேற்று அவரைப் பெண் பார்த்ததாகவும் வந்தவர்கள் விரைவில் நிச்சய தேதி சொல்வதாகவும்..

காக்கை உட்கார பனம் பழமா.. இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த திருமணம் சொன்ன தேதிக்கு செட்டிலானதில் எனக்கும் மகிழ்ச்சிதான்..

======

எனக்கு வண்ணக் கனவுகள்

வேண்டியதில்லை..

வரம் தரும் கடவுள்

அவர் வேலையைப் பார்க்கட்டும்..

சாகா நிலை கூட

சாத்தியமில்லை என்றே புரிகிறது..

ஆனாலும்

வாழ்வே போராட்டமாய் சிலரும்..

வழிப்பறிக்காரராய் சிலரும்..

தீர்க்காயுசு கொடுத்த இயற்கை ,

என்ன யோசித்தது

நல்ல ஆத்மாக்களை மட்டும்

சீக்கிரமாய்

அழைத்துப் போகும் போது..?

‘விட்டு வைத்தால்

துன்பப்படுவார்கள் என்றா?!’

21 comments:

Gopi Ramamoorthy said...

கவிதை சூப்பர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நல்ல ஆத்மாக்களை மட்டும்
சீக்கிரமாய்
அழைத்துப் போகும் போது..?
‘விட்டு வைத்தால்
துன்பப்படுவார்கள் என்றா?!’//

நிச்சயமாக நீங்கள் நினைப்பது போலத்தான் இருக்க வேண்டும்.

என் நீண்டநாள் சந்தேகத்தைத் தீர்த்து வைத்ததற்கு நன்றிகள்.

அருமையான சிந்தனை. பாராட்டுக்கள்.

சேட்டைக்காரன் said...

//தாத்தா ஏன் பேசாமல் நிற்கிறார்.. பேரனுக்குப் புரியவில்லை.. //

கொடுமை! :-(

//காக்கை உட்கார பனம் பழமா.. இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த திருமணம் சொன்ன தேதிக்கு செட்டிலானதில் எனக்கும் மகிழ்ச்சிதான்..//

எதுவாக இருந்தாலென்ன, நல்லது நடப்பின்...? :-)

//நல்ல ஆத்மாக்களை மட்டும்

சீக்கிரமாய்

அழைத்துப் போகும் போது..?

‘விட்டு வைத்தால்

துன்பப்படுவார்கள் என்றா?!’//

அப்படித்தான் இருக்க வேண்டும். நிச்சயம், வேறு காரணம் இருக்குமா தெரியவில்லை.

எல் கே said...

மூன்றாவது , ஜோதிடம் உண்மை. ஆனால் இன்று நல்ல ஜோதிடர்கள் மிகக்குறைவு .

கடைசி விஷயம், நல்லவர்களை ஆண்டவன் விரைவில் அழைத்துக் கொள்வான்.

சுந்தர்ஜி said...

இந்த எழுத்து என் மனதை அசைக்கிறது. அதன் பின் துயருற வைக்கிறது. ஆளை அடித்துப்போட்டுவிடுகிறீர்கள் ரிஷபன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு! கவிதை நன்றாக இருந்தது.

drbalas said...

நல்ல மனிதர்கள் மரிக்கும் போது எழும் ஏனென்ற கேள்விக்கு நல்ல பதில்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அவன் சுகவாசி..சேஷ சயனத்தில்,ஆனந்தமாய் நாரத சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.எத்தனை நாளைக்குத் தான் அவனும் ஓடி வருவான்..வில்,அம்புடன்..பாஞ்ச சைன்யத்துடன்?
அவனுக்கு போரடித்து விட்டது..அவன் இங்கு வராமல், அங்கு நல்லவர்களை அழைத்துக் கொள்கிறான்..அவனுக்கும் போரடிக்காதா, என்ன?

RVS said...

யோசித்தால் ஒன்றோடொன்று கார்வையாக வருகிறது.. அற்புதம் ஸார்! ;-))

சிவகுமாரன் said...

//நல்ல ஆத்மாக்களை மட்டும்
சீக்கிரமாய்
அழைத்துப் போகும் போது..?
‘விட்டு வைத்தால்
துன்பப்படுவார்கள் என்றா?!’//

அருமை.

ஆனால் விட்டு வைத்தால் துன்பப்படுத்துவார்கள் என்று தெரிந்தும் சிலரை விட்டு வைத்திருக்கிறதே (நான் உயிரை சொல்லவில்லை .... திமிரை )

ஹேமா said...

பதிலற்ற கேள்விகள்.ஆனாலும் பதிலும் தெரிஞ்சமாதிரி இருக்கு.செத்துப்போனா வலிக்காதா !

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

பகிர்வு அருமை!

middleclassmadhavi said...

RVS சொன்னதை -யோசித்தால் ஒன்றோடொன்று கார்வையாக வருகிறது.. அற்புதம் ஸார்! ;-))

- நானும் வழிமொழிகிறேன்!

சமுத்ரா said...

good...

சில சமயங்களில் ஜோதிடமும் ஒரு அறிவியல் தான் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

அரசன் said...

நல்ல பகிர்வுகளுக்கு நன்றிங்க

raji said...

முதலாவதும் நாலாவதும் மனதைப் பிசைகின்றது.
பதில் தெரிந்தும் தெரியாதது போன்ற கேள்விகள்.
இதை அற்புதம் என கூற முடியாதபடியான யோசனைகள்...

Harani said...

வழக்கம்போலவே உங்களின் நேர்த்தியான கதைசொல்லும் திறன் சுவையான போக்குடன் மனதை ஈர்த்த கதைகள். எதார்த்தமும் எளிமையும் வாழ்வியலும் அழகூட்டிய கதைகள். கவிதையில் சொல்வதுபோல நல்ல ஆத்மாக்கள் துன்பப்படக்கூடாது என்று அழைத்துக்கொள்வார்கள் என்பதில் நான் சமாதானமாகவில்லை ரிஷபன். அவர்கள் எப்போதுதான் நிறைவும் நீண்ட ஆயுளுட்ன் வாழ்வது? நிறைவிருந்தால் போதும் நீண்ட ஆயுள் தேவையில்லை என்று காரணம் சொல்லாதீர்கள். நல்லவர்கள்தான் நீண்டு வாழவேண்டும். கெட்டவர்கள்தான் சீக்கிரம் அழியவேண்டும். இப்படித்தான் நான் ஆசைப்படுகிறேன். இது என்னுடைய மனம். நன்றி ரிஷபன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சிந்தனைச் சிதறல்களும் அதைக் குவித்த விதமும் அருமை.ரிஷபன்.:)

♔ம.தி.சுதா♔ said...

பல அழுத்தமான விடயங்களை பவ்வியமாக பகிர்ந்திருக்கிறிர்கள் நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

ஹுஸைனம்மா said...

//நல்ல ஆத்மாக்களை மட்டும்
சீக்கிரமாய்//

மற்றவர்களுக்குத் திருந்தும் வாய்ப்பு நீட்டிக்கப்பட்டிருக்க்றதோ? :-))))

கிருஷ்ணப்ரியா said...

உங்கள் எளிய நடையில் மனதை ஈர்க்கும் கதைகள். நல்லவர்களை ஆண்டவன் ஏன் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான்? கெட்டவர்களிடம் மாட்டி, உலகம் இன்னும் அவதியுறட்டும் என்றா? என்னமோ கடவுள் புரியாத புதிராய் இருக்கிறார்... ஹரணி சொல்வதையே நானும் ஆமோதிக்கிறேன்..