March 10, 2011

உபதேசம்


அண்ணாமலை கண்ணுக்கு தெரிந்தது. இங்கேதான் 'விசிறி சாமியார்' இருக்கிறார்.

'அவர்ட்ட போ.. உன் குழப்பத்துக்கு பதில் கிடைக்கும்'

வந்து விட்டான். 'வாசல் கதவைத் தட்டு மெதுவா.. அவருக்கு உன்னைப் பார்க்கணும்னு தோணினா எழுந்து வந்து கதவைத் திறப்பார் '

நாதாங்கியை மிக மெலிதாக தனக்கே கேட்காத நிதானத்தில் ஆட்டினான்.

அந்த சில வினாடிகள் ..முன்பு இராமகிருஷ்ண மடம் போய் ஒரு இரவு தங்கி விட்டு பிறகு திரும்பி வந்தது நினைவில் வந்தது. மடத்தில் சாமியார் பரிவாகத்தான் பேசினார்.

'லெட்டர் எழுதி வச்சுட்டு வந்துட்டேன்.. எனக்கு துறவறம் பிடிச்சிருக்கு'

புன்னகைத்தார்.

'தங்குப்பா .. காலைல பேசிக்கலாம்.. என்ன சாப்பிடுற.. '

'சாப்பாடு ஆயிருச்சு'

அவனுக்கு ஒதுக்கிய அறையில் ஒரு அயல் நாட்டினரும்.

'எங்கிருந்து வருகிறாய்'

ஊர் பெயரை சொன்னான். குட் நைட் சொல்லி தூங்கி போனார்.

விடியலில் ஒரு கனவு. அவனை நெருப்பு சூழ்ந்து கொள்வதாக. அதிலேயே மாட்டிக் கொண்டு விலக முடியாமல்.

ஆரத்தி நேரம் .. மற்ற பிரமச்சாரிகளுடன் அவனும் பூஜையில் கலந்து கொண்டான்.

'நல்லா தூங்கினியா '

'ம்.'

'ஏதாச்சும் நடந்துதா'

'ஒரு கனவு சுவாமி'

சொன்னான்.

'ஊருக்கு போ .. வீட்டில் சொல்லி விட்டு வா.. '

திரும்பி வந்தவனை பிடித்துக் கொண்டு உறவினர் அழுகை. கொஞ்ச நாட்கள் அப்படியே இருந்தான். இதோ மீண்டும் திருவண்ணாமலை..அழகான சிரிப்பு.. அவர் புகைத்தபோது சிகரட் நெடி தெரியவில்லை.

'உனக்கு என்ன பிடிக்கும்..' என்று அன்பாய் விசாரித்தார்.

'என் தந்தை உன்னை ஆசீர்வதிக்கிறார்' என்றார்.

அவருடைய படம் கொடுத்தார். ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை.

'எங்கே போகப் போகிறாய்'

'திருக்கோவிலூர்.. தபோவனம்..'

அனுப்பிவைத்தார்.

ஞானானந்தர் தபோவனம் சென்ற போது இருட்டி விட்டது. உணவுக் கூடத்தில் படுக்கச் சொன்னார்கள். காலை நான்கு மணிக்கு எழுந்து அதிஷ்டானத்தை நூற்றியெட்டு பிரதட்சிணம் செய்ய நினைத்திருந்தான். பயண அலுப்பு அவனை அப்படியே அசத்தி விட்டது. விடியலில் ஒரு கனவு. ஞானானந்தர் அவர் அறையில் இருந்து வெளியே வருகிறார். அவன் தலைப் பக்கம் வந்து கையைத் தட்டி ‘எழுந்திருக்கலாமே.. மணி நாலு ஆகிவிட்டது’ என்கிறார்.
திடுக்கிட்டு விழித்தால்.. ஹால் கடிகாரம் நாலு மணி அடித்தது!
நூற்றியெட்டு சுற்றி பிறகு ஊர் வந்து சேர்ந்தான்.

‘என்ன இன்னும் உன் அலைச்சல் விடலியா’
நண்பனின் கேலி.
‘ம்’
‘என்னதான் உன் முடிவு’
‘விசிறி சாமியார் சொன்னார்.. கல்யாணம் பண்ணிக்கோன்னு’
“ஓ”
‘இன்னிக்கு ஒரு கனவு..’
‘போச்சுரா.. என்னது’
‘கனவுல ஒரு சாமியார் எனக்கு உபதேசம் பண்ணார்..’
‘என்ன..’

“தாயை அறிந்து காண்
தந்தையை சொல்படி
தக்க குரு ஆத்ம நிவேதனம்
இஷ்ட தெய்வம் பூர்த்தி செய்யும்..”

நண்பன் பாதி புரிந்து பாதி புரியாமல் விழித்தான். இவனுக்கோ தனது ஆன்மத் தேடல் இன்னமும் தொடர்கிறது..

10 comments:

சுந்தர்ஜி said...

எங்கும் நிறைந்திருப்பது எதுவோ அதுவே எங்கும் இல்லாததாக இருக்கிறது.


எங்கும் இல்லாததாக இருப்பது எதுவோ அதுவே எங்கும் நிறைந்திருக்கிறது.


அப்படித்தானே ரிஷபன்?

VELU.G said...

தேடலில் முடிவும் இல்லை பயனும் இல்லை

Chitra said...

“தாயை அறிந்து காண்
தந்தையை சொல்படி
தக்க குரு ஆத்ம நிவேதனம்
இஷ்ட தெய்வம் பூர்த்தி செய்யும்..”

நண்பன் பாதி புரிந்து பாதி புரியாமல் விழித்தான். இவனுக்கோ தனது ஆன்மத் தேடல் இன்னமும் தொடர்கிறது..


..........உபதேசங்கள் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், புரிதல் படி தான் தேடல் பயணம், அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. நல்லா எழுதி இருக்கிறீங்க.

ஜீவன்சிவம் said...

"தக்க குரு ஆத்மநிவேதனம்"
அருமை புரிந்தவர்களுக்கு புரியட்டும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நண்பன் பாதி புரிந்து பாதி புரியாமல் விழித்தான்.//

அந்த நண்பனைப்போலவே நானும் பாதி புரிந்து பாதி புரியாதவனாய் மட்டுமே, இதைப் படித்ததும்.

வானம்பாடிகள் said...

தலைல தட்டி நாலுமணியாச்சு எழும்புன்னு சொன்னதையும் கலியாணம் பண்ணிக்க முடிவு செஞ்சதையும் பார்த்தா சரியாதான் புரிஞ்சிருக்காரு போலயே:)

ஹேமா said...

ஆசைகள் தொலைத்தால் ஆன்மத் தேடல் சுலபம் என்பார்களே !

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நல்ல எழுத்து!

வெங்கட் நாகராஜ் said...

தேடுதல் தொடங்கிவிட்டாலே இப்படித்தான்! நன்றாக இருக்கிறது உங்கள் பகிர்வு.

Lakshminarayanan said...

’என் ஞானகுருவே தன் குரு தேடுகையில் என் செய்வேன் பராபரமே”