March 27, 2011

என் மேல் விழுந்த மழைத்துளியே

நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஞாயிறு காலை பத்து மணிக்கு கைபேசி சிணுங்கியது. அலாரம் என்று நினைத்து அணைத்து விட்டு திரும்பிப் படுத்தேன். மறுபடியும் அழைப்பு.



"யா..ழு"


"டேய்.. எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்"


கணேசனின் குரல் பயங்கர டெசிபலில் கேட்டது. அவ்வளவுதான். தூக்கம் கலைந்து விட்டது.


"டேய்.. வேணாம்டா" என்று சொல்ல முயற்சிப்பதற்குள் கணேசன் மறுபடி அலறினான்.


"ரெண்டு மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" வைத்து விட்டான். போச்சு. ஒரு லீவு நாள் அவுட். அதை விடவும் கொடுமை அவனுடன் பெண் பார்க்கப் போவது. விஷம், துப்பாக்கி, தூக்குக் கயிறு, கணேசனுடன் பெண் பார்க்கப் போவது இதில் எது கொடுமை என்றால் கணேசன்!

ஒவ்வொரு தரமும் என்னை ஏண்டா கூப்பிடறே என்று கேட்டதற்கு சிரிக்காமல் சொன்னான்.

'என்னை விட சுமாரா ஒருத்தன் பக்கத்துல இருந்தாத்தான் நான் அழகாத் தெரிவேன்'

மாடிப் போர்ஷனை என்னை மாதிரி நாலு பிரம்மச்சாரிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் எங்கள் ஹவுஸ் ஓனர் பாட்டி.

கணேசன் என்னிடம் எங்கே குடியிருக்கே, யார் ஓனர் என்கிற விசாரணையை நடத்தியபோது ஓனர் பெயர் 'சந்திரா' என்றதும் 'அழகா இருப்பாங்களா' என்றான் அவசரமாய்.

'இருந்திருப்பாங்க'

'புரியலியே'

'இப்ப 77 வயசு. பையன் ஸ்டேட்ஸ்ல.'

அவனுக்குக் கல்யாணம் ஆகாத வருத்தத்தை விட அவனைச் சேர்ந்த நண்பர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது அவனைச் சங்கடப் படுத்தியது. கொஞ்ச நாட்கள் கிரகங்களின் பெயரிலும், பிறகு வீட்டார் பேரிலும் அப்புறம் அவன் பெண் பார்த்த வீட்டார் பேரிலும் பழியைப் போட்டான்.

ஒரு முறை நானும் அவனும் மட்டும் இருந்தபோது கண் கலங்கிப் பேசினான்.

'என்னன்னே தெரியலடா. எனக்கு எதுவுமே அமைய மாட்டேங்குது. போராட வேண்டியிருக்கு.. பாரேன். பொண்ணு பார்க்கப் போனாக் கூட தகராறு.. ஏதோ காரணம் சொல்லி தட்டிக் கழிக்கறாங்க'

நான் சொன்ன சமாதானங்கள் அவனுக்கு திருப்தி தரவில்லை. என் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

'பிளீஸ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா.. மாட்டேன்னு சொல்லிராதே' எதைக் கேட்டு தொலைக்கப் போகிறான் என்று புரியாமல் பதற்றமாய் இருந்தேன் அப்போது.

'எனக்கு செட்டில் ஆகறவரை நான் பொண்ணு பார்க்கப் போகும்போது எனக்கு கம்பெனி கொடுக்கறியா.

.' ஹப்பாடா. எனக்கு பெருமூச்சு வந்தது.

'ச்சீ.. அசடு மாதிரி பேசாதே. சீக்கிரமே பாரு.. குட் நியூஸ் சொல்லப் போறே' என்று சொல்லி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

அப்போது கொடுத்த வாக்குறுதி மீறாமல் கூடவே போக வேண்டி இருக்கிறது. கணேசனுடன் கூடப் போனதில் எனக்கே கல்யாண ஆசை வந்து விட்டது. அப்புறம் என் தங்கைகள் ஞாபகம் வந்து மனதைக் கட்ட வேண்டியிருந்தது. இந்த முறை ஊருக்குப் போயிருந்தபோது அம்மா கேட்டார்கள்.

'அப்படி இப்படி மனசு போகாம பார்த்துக்கடா தம்பி.. புவனியும் செல்வியும் எப்பவும் மனசுல இருக்கட்டும்'

எதிரில் தங்கைகள் இருவரும் பவ்யமாய் நின்றார்கள். அவனவன் த்ரிஷா, நயன் தாரா, நமீதா என்று பேசிக் கொண்டிருக்கும்போது நான் 'புவனேஸ்வரி, செல்வி' என்றால் 'எந்தப் படத்துல வராங்க' என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.


நேரம் ஓடியதே தெரியவில்லை. கணேசன் வந்து கதவைத் தட்டும்போது எனக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது.

"ரெடியா"

"ரெண்டே நிமிஷம்"

அவனுக்குத்தான் அழகு பற்றி கவலை. எனக்கென்ன. ஏதோ ஒரு பேண்ட், ஷர்ட். கூடப் போய் மையமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தால் போதும். ஓசியில் டிபன் காப்பி கிடைத்து விடும்.

போனதடவை சாப்பிட்ட உருளைக் கிழங்கு போண்டாவின் டேஸ்ட் இப்போது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறுகிறது.

கால் டாக்சியில் வந்திருந்தான்.

"பர்ப்யூம் வேணுமா" என்றான்.

காருக்குள் அந்த வாசனைதான். டிரைவருக்கு அருகில் முன்னால் நான் உட்கார பின்னால் வசதியாய் கணேசன்.

"அவங்களை நேரா வரச் சொல்லிட்டேன்." என்றான் வீட்டாரைக் குறித்து. "போட்டோ இருக்கா" என்றேன் என்ன பேசுவது என்று புரியாமல்.

கொட்டாவி வந்தது பேசும்போதே. கவருக்குள் பத்திரப் படுத்தி வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான். குரூப் போட்டோ.

"இதுல யாரு"

விரல் நீட்டி அவன் காட்டிய பெண் சுமாராய் இருந்தாள். அவளுக்கு அருகில் 'வாவ்' என்று சொல்ல வைத்த ஒரு பெண்.

"இ..து யாரு" என்றேன் திக்கலாக.

"சொந்தமா.. ஃப்ரெண்டா தெரியல" என்றான் அலட்சியமாக.

"நம்ம செலக்ஷன் எப்படி" என்றான் ஆர்வமாய்.

"நல்லா இருக்காங்க"

இன்னொரு தடவை ஃபோட்டோவை வாங்கி பக்கத்து பெண்ணைப் பார்க்க ஆவல். ஆனால் கணேசனிடம் கேட்க கூச்சம்.

பெண் வீடு வந்து விட்டது. புறநகர்ப் பகுதியில் வீடு. கணேசனின் அப்பா, அம்மா இன்னும் வரவில்லை. பெண்ணின் அப்பா சொன்னார்.

'அந்த நாள்ல வாங்கிப் போட்டேன்.. இப்ப கிரவுண்ட் விலை எக்கச்சக்கம்.. நான் வாங்கினப்ப என்ன விலை இருந்திருக்கும்னு நினைக்கிறீங்க"

புதிர் போட்டார்.

கணேசன் 'பெண்' தெரிகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்க, பதில் சொல்லும் பொறுப்பு எனக்கு வந்து விட்டது.

"ரெண்டு லட்சம் இருக்குமா"

பெண்ணின் அப்பா மிகப் பெரிய ஜோக்கைக் கேட்ட மாதிரி சிரித்தார்.

"வெறும் இருபதாயிரம்.. நம்புவீங்களா"

தனி வீடு. மூலையில் கிணறு. கணேசனைப் பார்த்தபின் பெண் நேராக ஓடி வந்து குதித்து விடலாம். வேறிடம் தேடிப் போகும் சிரமம் இல்லை என்று குதர்க்கமாய் மனசில் தோன்றியது

மனசுக்குள் 'தப்பு' போட்டுக் கொண்டேன். வாசலில் கார் சத்தம் கேட்டது. கணேசனின் அப்பா, அம்மா வந்தாச்சு. கணேசன் அவசரமாய் சீப்பு எடுத்து சீவிக் கொண்டான்.

"எப்படிரா இருக்கேன்" என்றான் கிசுகிசுப்பாய்.

விரல் உயர்த்தி 'ஓக்கே' சொன்னேன். ஹாலுக்குள் சென்று அமர்ந்தோம். எனக்கு தொண்டைக் குழியில் ஏதோ அடைத்த உணர்வு. ஒவ்வொரு முறையும் இவனுக்காக வந்து, ஏதோ நானே நிராகரிக்கப் படுகிற மாதிரி சோகம், நடுக்கம் உடம்பில்.

சம்பிரதாயமாய் விசாரணைகள் முடிந்து பெண் வரும் நேரம். வந்தாள். கணேசன் ஃபோட்டோவில் சுட்டிக் காட்டியவள் இல்லை. நான் ரசித்த பக்கத்து பெண். பட்டுப் புடவையில் ஜொலிப்போடு வந்து நின்றாள்.

ஹா.. இவளா.. கணேசனுக்கா.. நான் தடுமாறித் திகைப்பதற்குள் கணேசன் குமுறினான் உரக்க.

"என்ன இது அநியாயம்.. வேற பொண்ணுல்ல இப்ப வராங்க"

அவனை அமைதிப் படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்

வந்த பெண் மிரண்டு உள்ளே ஓடி விட்டது. பெண்ணின் அப்பா சொன்னார். "தரகர்ட்ட போட்டோ கொடுக்கும் போதே சொன்னோம். சொதப்பிராதே. இவதான் பொண்ணு. இவ பக்கத்து வீடுன்னு. மாத்தி சொல்லிட்டான் படுபாவி" நான் கணேசனை வெளியே அழைத்துப் போனேன்.

"இப்ப என்னடா.. அவ இல்லேன்னா.. இவ.. பொண்ணு உனக்குப் பிடிச்சிருக்கா.. அதைச் சொல்லு"

கணேசன் முகத்தில் இறுக்கம்.

"எப்படிரா.. நான் அந்தப் பொண்ணுன்னு நினைச்சு என் மனசுல ஆசை வளர்த்துட்டேன்.. இப்ப அவ இல்ல.. இவன்னா என்னால எப்படி தாங்கிக்க முடியும்"

'ஏண்டா லூசு.. முப்பது பொண்ணு பார்த்தாச்சு.. அப்ப ஒவ்வொரு தரமும் இதே மாதிரி நினைச்சிருந்தா?' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு சொன்னேன். "சரிடா.. ஏதோ கம்யூனிகேஷன் கேப். இப்ப என்ன.. உனக்கு இந்தப் பொண்ணு ஓக்கேதானே"

கணேசன் முகம் இறுக்கமானது.

"முடியாதுரா.. இவ எனக்கு வேண்டாம்"

"அவங்களுக்கு என்ன பதில் சொல்றது.."

"என் மனசுல விழுந்த பொண்ணு.. கிடைச்சா"

எனக்கு பதற்றம் அதிகமானது. "அது எப்படிரா முடியும்.. அவ புருஷன் ஒத்துக்க மாட்டானே"

உளர ஆரம்பித்தது புரிய உதட்டைக் கடித்துக் கொண்டேன். கணேசன் அம்மா வெளியே வந்தார்கள்.

"என்ன சம்மதிச்சுட்டானா"

"இல்லம்மா.. என்ன சொன்னாலும் அடங்க மாட்டேங்கிறான்"

அம்மாவின் கண்களில் நீர்.

"அப்பவே பூசாரி சொன்னாரு.. கிரகம் சரியில்ல.. இவன் புத்தி தறி கெட்டு போவும்னு. இந்த வரன் பார்க்கலாம்னு முடிவு ஆனதும் சந்தோஷமா இருந்தேன்.. பாவி மண்ணள்ளி போட்டுட்டான்"

பெண்ணுடைய அப்பா பதறிப் போய் வந்தார்.

"உங்க கண்ணுல மண்ணு விழுந்திருச்சா.."

அவரை சமாளித்து உள்ளே அனுப்புவதற்குள் திண்டாட்டமாகி விட்டது. கணேசனையும் சேர்த்து அனுப்பினோம்.

கணேசன் அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டார்.

"எப்படியாச்சும் அவனை சம்மதிக்க வச்சுருப்பா.. உனக்குக் கோடி புண்ணியம்"

நான் தயங்கினேன்

"உள்ளே வாங்க"

அதற்குள் உள்ளிருந்து அலறல் கேட்டது. பதறிக் கொண்டு ஹாலுக்கு ஓடினோம்.


... தொடரும்

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சார், அருமையாக, விறுவிறுப்பாக, நகைச்சுவையாக உள்ளது. அடுத்த பகுதிக்காக ஏங்க வைக்கிறது.

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

மிகவும் ரசித்த வரிகள்:

//யார் ஓனர் என்கிற விசாரணையை நடத்தியபோது ஓனர் பெயர் 'சந்திரா' என்றதும் 'அழகா இருப்பாங்களா' என்றான் அவசரமாய்.
'இருந்திருப்பாங்க'
'புரியலியே'
'இப்ப 77 வயசு.//


//இன்னொரு தடவை ஃபோட்டோவை வாங்கி பக்கத்து பெண்ணைப் பார்க்க ஆவல். ஆனால் கணேசனிடம் கேட்க கூச்சம். //

//தனி வீடு. மூலையில் கிணறு. கணேசனைப் பார்த்தபின் பெண் நேராக ஓடி வந்து குதித்து விடலாம். வேறிடம் தேடிப் போகும் சிரமம் இல்லை என்று குதர்க்கமாய் மனசில் தோன்றியது//

//"என் மனசுல விழுந்த பொண்ணு.. கிடைச்சா"
எனக்கு பதற்றம் அதிகமானது. "அது எப்படிரா முடியும்.. அவ புருஷன் ஒத்துக்க மாட்டானே"
உளர ஆரம்பித்தது புரிய உதட்டைக் கடித்துக் கொண்டேன். //

ரொம்ப ஜாலியாக கொண்டு போகிறீர்கள் !

raji said...

//"அது எப்படிரா முடியும்.. அவ புருஷன் ஒத்துக்க மாட்டானே"//

அதெப்படி கல்யாணமான பொண்ணுனு இவருக்குத் தெரிஞ்சது?

//உள்ளிருந்து அலறல் கேட்டது//

ஐயோ! பார்க்கப் போன பொண்ணு கிணத்துல குதிச்சுடுத்தோ இவர் நினைச்சாப்பலயே?

raji said...

இந்த கதை முதலில் வேறு ஃபார்மேட்டில் எனது டாஷ்போர்டில்
அப்டேட் ஆகியிருந்தது.ஓப்பன் செய்து படித்து விட்டு கமென்ட் போட
ஆரம்பிக்கும் பொழுது ஸ்வாஹா ஆகி விட்டது.திரும்பவும் இப்பதான் வந்திருக்கு.

மோகன்ஜி said...

ரிஷபன் சார்! கொஞ்ச நேரம் இவர்களோடு நானும் பெண் பார்க்கும் படலத்தில் கலந்து கொண்டு இப்பொழுது தான் மீண்டேன்.. என்ன அழகாய்க் கொண்டு செல்கிறீர்கள்.. அழகு.. அழகு

சிவகுமாரன் said...

போச்சு. கிணத்துல குதிச்சிடுச்சா பொண்ணு. . இருக்கிற தண்ணி கஷ்டம் போதாதா..
கதை ரொம்ப ஜாலியா போகுது ரிஷபன் சார் .

ரிஷபன் said...

//அதெப்படி கல்யாணமான பொண்ணுனு இவருக்குத் தெரிஞ்சது?//

உளர ஆரம்பித்தது புரிய உதட்டைக் கடித்துக் கொண்டேன்

ஓக்கேவா.. ராஜி மேடம்,,

middleclassmadhavi said...

தொடர்கதைன்னு தெரியாம படிக்க ஆரம்பித்துவிட்டு தொடரும் பார்த்தப்புறம் யாரோ மிட்டாயை கையில் இருந்து பிடுங்கிய ஃபீலிங்!

அருமை!

மனோ சாமிநாதன் said...

//யார் ஓனர் என்கிற விசாரணையை நடத்தியபோது ஓனர் பெயர் 'சந்திரா' என்றதும் 'அழகா இருப்பாங்களா' என்றான் அவசரமாய்.
'இருந்திருப்பாங்க'
'புரியலியே'
'இப்ப 77 வயசு.//

கதை சுவாரஸ்யமாக, விறுவிறுப்பான நகைச்சுவையுடன் அழகாகச் செல்கிறது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன் சார்...உங்களுக்கே இது ஓவரா தெரியல்லையா?

ஜீவன்சிவம் said...

ஐயோ அப்பறம் என்னாச்சு...?