December 11, 2009

காற்றோடு பேசலாம்

இன்றைய தினம் எல்லா வேலைகளையும்
ஒத்திப் போடுங்கள்.
ஆற்றங்கரைக்குப் போகலாம்.
நீர் ஓடிய மண்தான்.
மனிதக் கழிவற்ற
நடு ஆற்று மண்ணில் அமரலாம் .
வேறு கவனம் இல்லையே
அப்படியே கண் மூடி
காற்றை உணருங்கள்.
காது மடல்களினூடே
அது உரசிப் போகிறதா..
இந்த இடத்தில்
காற்றைத் தடை செய்ய ஏதுமில்லை.
அதன் சுதந்திர பூமி..வெட்ட வெளி..
காற்றின் வாசனையை நுகருங்கள்..
நகருக்குள் பிற வாசனைகளால்
கலப்படமான காற்றுதான் கிட்டும்.
கூச்சமே வேண்டாம்.
மனம் விட்டுப் பேசலாம்.
கூவும். கிள்ளும்.
முகத்தில் அடிக்கும் .
சீண்டும். தழுவும். முத்தமிடும்.
அணைத்துக் கொள்ளும்போது
இதுவரை அறியாத சுகம்..
என்ன.. நேரம் பார்த்து ஆச்சர்யமா ..
போனதே தெரியவில்லையா..
நேரம் கிட்டும்போதெல்லாம்வரலாம். பேசலாம்.
மனசுக்குள்.. அல்லது வாய் விட்டு..
எல்லாப் பிரச்னைகளுக்கும்காற்றிடம் தீர்வு உண்டு..
நிச்சயம் திரும்பிப் போவீர்கள்..
தீர்வுகளுடன்.. அல்லது
சமாதானத்துடன் ..!

7 comments:

கிருபாநந்தினி said...

//கூவும். கிள்ளும்.
முகத்தில் அடிக்கும் .
சீண்டும். தழுவும். முத்தமிடும்.
அணைத்துக் கொள்ளும்போது
இதுவரை அறியாத சுகம்..// கடற்கரைக் காற்றின் இதத்தை ரொம்ப அருமையாச் சொல்லியிருக்கீங்க. ஹூம்... மெட்ராஸ்காரங்க கொடுத்து வெச்சவுங்க!

Chitra said...

எல்லாப் பிரச்னைகளுக்கும்காற்றிடம் தீர்வு உண்டு..
நிச்சயம் திரும்பிப் போவீர்கள்..
தீர்வுகளுடன்.. அல்லது
சமாதானத்துடன் ..!
...................... காற்றின் மடியில் சாய்ந்து அமைதியுடன் புன்னகைத்த முகம் கவிதையில் தெரிகிறது.

என் நடை பாதையில்(ராம்) said...

/*எல்லாப் பிரச்னைகளுக்கும்காற்றிடம் தீர்வு உண்டு..*/
புதிய கோணத்தில் சிந்தித்துள்ளீர்கள். சூப்பர்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பஞ்ச பூதத்தில் ஒன்றான காற்றினைப்
பற்றி இவ்வளவு விரிவான கவிதை நான்
படித்ததேயில்லை

ஹேமா said...

பதில்களை முரணாய்ப் பேசும் மனிதரைவிட எங்களை அணைக்கும் காற்றோடு பேசுவது சந்தோசம்தான் ரிஷபன்.

கமலேஷ் said...

ரொம்ப புடிச்சிருக்கு

வசந்தமுல்லை said...

"'நான் சென்னையில் இருக்கும்போது மனது பாரமானால் நேரே பீச்சுக்கு சென்றுவிடுவேன். கடற்கரை காற்றுடன் பேசி, என் மனதில் உள்ள பாரங்களை இறக்கிவிட்டு, லேசான மனசுடன் வீட்டுக்கு திரும்புவேன். இதற்க்கு அனகமாக இரண்டு மணி நேரம் கூட ஆகிவிடும். அதை அனுபவித்தவன் நான். காற்றோடு பேசுவது ஒரு அலாதி sugamthan......."