December 24, 2009

மீண்டும் ஒரு குழந்தையாய்..

குழந்தைகள் பற்றி பேச்சு வந்தது.

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அனுபவம் சொன்னார். பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் 'நீ என்னவாக விரும்புகிறாய்' என்று கேட்டிருக்கிறார்.

"ரெயில் ஓட்டுவேன்'

"ஏம்மா.."

"எல்லா ஊருக்கும் போலாம்ல"

"அப்படியா"

"எஞ்சின் ரெண்டு பக்கமும் கல்லு போட்டுகிட்டே போகும்.. ஜாலியா இருக்கும் "

"எஞ்சின் கல் போடுமா?"

"அய்ய.. நீங்க பார்க்கலியா.. தண்டவாளத்துல ரெண்டு பக்கமும் கல்லு கொட்டிக் கிடக்குமே.. அது எஞ்சின் போட்டதுதான்"

"ஆமா.. எதுக்கு கல்லு போடுது.."

"அப்பதான் திரும்பி வரப்ப வழி தெரியும்"

தாத்தா பாட்டியிடம் கதைகள் கேட்டு வளர்கிற குழந்தை!

அதன் கற்பனையில் ரெயில் எஞ்சின் கல் போடும்.

இன்னொரு நண்பனின் மகன் காவிரிப் பாலத்தைக் காரில் கடக்கையில் சொன்னது. நீர் ஓடாத காலம். பாலத்தின் கீழே எட்டிப் பார்த்து கேட்டானாம். 'ஏம்பா.. இங்கே இவ்வளவு மண்ணு கொட்டி வச்சிருக்காங்க'

குழந்தைகளின் உலகத்தில் நாம் பிரவேசிக்கும்போது அங்கே நம்முடன் தேவதைகள் ரொம்ப சுலபமாய் கை கோர்த்து விடுகின்றன. பிசாசுகளைத் துணிச்சலாய் விரட்ட முடியும். நிலவில் கால் பதித்து அதே வேகத்தில் உடனேயே பூமிக்கும் திரும்பிவிடலாம்.அவர்களின் உலகில் விரோதங்களுக்கு இடம் இல்லை. மனஸ்தாபங்களும் அரை நிமிடம் தான்.

விசும்பி அழுத குழந்தை சுட்டிக் காட்டிய எதிரியுடன் அரை மணிக்குப் பின் கை கோர்த்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்!

என் பால்ய கால நண்பர்கள் பலரை மறுபடி என்னால் சந்திக்க முடியவில்லை. எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

கண்ணில் படுகிற ஒரு சிலரில் ஒருவர் இளநீர் வியாபாரம். பள்ளி நண்பன். படிப்பு வரவில்லை. . கடை என்று கூட சொல்ல முடியாது. தெரு முக்கில் 10, 12 இளநீர்களைக் குவித்து தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதவன் போல ஒதுங்கி நிற்பான். என்னைப் பார்த்தால் உதட்டோரமாய் ஒரு சிரிப்பு. இப்போது அந்த இளநீர்க் கடையும் காணோம். என்ன ஆனானோ?

இன்னொருத்தன் சாம்பார் வாளியுடன் கல்யாண மண்டபத்தில் வந்தான். 'டேய்.. நீ சிவாதானே'

சிவராமகிருஷ்ணன்!

அடுத்த நிமிஷம் வாளியை வைத்து விட்டு ஓடிப் போய் விட்டான். வேறு ஒருவர் வந்து சாம்பார் ஊற்றினார். தேடியதில் அவன் கண்ணில் படவில்லை. அடுத்த முறை அந்த பக்கம் கிராஸ் செய்தபோது மண்டப வாசலில் அழுக்கு வேட்டியுடன் உட்கார்ந்திருந்தான்.

நல்ல நல்ல பதவிகளில்.. வசதியுடன் இருக்கிற நண்பர்களும் உண்டு. கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குப் போனதில்லை.

மூன்று பேர் இன்று என்னோடு வேலை பார்க்கிறார்கள். என்னோடு கல்லூரியில் படித்தவர்கள்.

என் பள்ளிப் பருவ நண்பர்களைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன்.

என்னை ஒரு கல்யாண மண்டபத்தில் பார்த்த பெண்மணி 'நீ..' என்று என் பெயரை சொல்லி கேட்டதும் அவரை எனக்கு அடையாளம் புரியவில்லை.

"நீங்க?"

என்னுடன் முதல் வகுப்பு படித்தவராம். என் அப்பா தபால் துறையில் பணி. போஸ்ட்மாஸ்டராய் ஊர் ஊராய் மாற்றல் வருடத்திற்கு ஒரு முறை. ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊரில் என்று ஆறு வகுப்புகளை ஏழு ஊரில் (அந்த வருடம் இடையிலேயே மாற்றல்) படித்தவன்!

சுத்தமாய் அவர் முகம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அவர் துல்லியமாய் எங்கள் இளமைப் பருவ நிகழ்ச்சிகளைச் சொன்னார்.

நான் அப்பாவிடம் அடி வாங்கியதைச் சொல்லும்போது அவர் முகத்தில் லேசான வெட்கமும், சிரிப்பும்.

என் சகோதரிகள் அருகில் நின்று என்னை அவதானித்தார்கள். நான் ஒரு வேடிக்கை பொருள் போல நின்றேன் அப்போது.

எதிரே நின்ற பெண்மணிக்குக் கண்களில் குழந்தைப் பருவம் தெரிந்தது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவும், ஒரு மகனுக்குத் தந்தையும் அந்த நிமிடம் முதல் வகுப்பிற்கு போனோம்.

அன்றிரவு தூங்குமுன் யோசித்தேன்..

பெரியவன் ஆனதில் எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறேன் என்று !

10 comments:

Paleo God said...

பாலத்தின் கீழே எட்டிப் பார்த்து கேட்டானாம். 'ஏம்பா.. இங்கே இவ்வளவு மண்ணு கொட்டி வச்சிருக்காங்க' //

மிகவும் ரசித்த சோகமான வரிகள் நண்பரே.... நல்ல எழுத்து..

//அன்றிரவு தூங்குமுன் யோசித்தேன்..பெரியவன் ஆனதில் எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறேன் என்று //

உண்மை தான்....::)

Rekha raghavan said...

//என்னைப் பார்த்தால் உதட்டோரமாய் ஒரு சிரிப்பு. இப்போது அந்த இளநீர்க் கடையும் காணோம். என்ன ஆனானோ?//

மிகவும் நெகிழ்ந்தேன் இந்த வரிகளைப் படித்த போது. ஒரு நிமிஷம் மீண்டும் சின்ன பையனாகி என் பள்ளி நண்பர்களுடன் ஒரு ரவுண்டு போய்விட்டு வந்தேன். அருமையான பதிவு சார்.

ரேகா ராகவன்

கே. பி. ஜனா... said...

//குழந்தைகளின் உலகத்தில் நாம் பிரவேசிக்கும்போது அங்கே நம்முடன் தேவதைகள் ரொம்ப சுலபமாய் கை கோர்த்து விடுகின்றன..//
அங்கே தான் நிக்கறீங்க!

வசந்தமுல்லை said...

பள்ளி பருவத்தை நினைக்கையில் கண்ணீரும் சந்தோசமும் மல்கும். அப்படி ஒரு நண்பனை தேடி விசாரித்தபோது, அவன் நாகப்பட்டினத்தில், சுனாமியில், குடும்பத்தோடு அடித்து சென்ற செய்தி கேட்டு,மிகவும் அதிர்ச்சியும் துக்கமும் அடைந்தேன்.அந்த உயர் நண்பன் அஹமதுவின் சிரித்த முகம்,என்றென்றும் என் நினைவிலிருந்து ,மறக்காத படிக்கு ஆக்கிட்டான், ஒரு தூய முஸ்லீமுக்கு அடையாளமாக வாழ்ந்துள்ளான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஹேமா said...

இளமைக் காலங்களைக்
கிளறிவிட்டு வேடிக்கை
பார்க்கிறீர்கள் ரிஷபன்.
எத்தனை இழப்புக்கள்.

கா.பழனியப்பன் said...

சூப்பர்.மனச கசக்கிப்புட்டிங்க.
நானு இனனைக்கு ஒக்காந்து கிழே வருபது போல யோசிப்பேன் :
பெரியவன் ஆனதில் எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறேன் என்று

வை.கோபாலகிருஷ்ணன் said...

டியர் சார்,
தங்கள்
புதிய பதிவான "மீண்டும் ஒரு குழந்தையாய்" படித்தேன் ரசித்தேன், அருமையாக இருந்தது. என் குழந்தைப் பருவ நகைச்சுவை சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. நன்றி. பாராட்டுக்கள். vgk

na.jothi said...

பசுமையான காலங்களை தூண்டியது
நன்றி ரிஷபன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

குழந்தைகளாய் மட்டும் இருந்து விட மாட்டோமா காலம் முச்சூடும் என்கிற ஏக்கம்
எழுத்தில் தெறிக்கிறது!

கிச்சான் said...

"எல்லா ஊருக்கும் போலாம்ல"

"அப்படியா"

"எஞ்சின் ரெண்டு பக்கமும் கல்லு போட்டுகிட்டே போகும்.. ஜாலியா இருக்கும் "

"எஞ்சின் கல் போடுமா?"

"அய்ய.. நீங்க பார்க்கலியா.. தண்டவாளத்துல ரெண்டு பக்கமும் கல்லு கொட்டிக் கிடக்குமே.. அது எஞ்சின் போட்டதுதான்"

"ஆமா.. எதுக்கு கல்லு போடுது.."

"அப்பதான் திரும்பி வரப்ப வழி தெரியும்"


தோழா
உங்களின் இந்த வரிகள்
ஒரு சுட்டி குழந்தை
நேராக என்னிடம்
வந்து அதன் முகபாவத்தோடு
சொல்கிறமாதிரி
இருக்கிறது


பெரியவன் ஆனதில் எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறேன் என்று


இத வரியை படிக்கும் போது
இதுவரை
இருந்த
சந்தோசம்
காற்றாக
பறந்து
விட்டது