December 27, 2009

கொஞ்சம் கவிதையாய் மனசு

நிறையப் பேச வேண்டும் போல்
இருக்கும்
அருகில் நீ
இல்லாத போது
எதிரில் நீ வந்தால்
நீ பேசி
நான் கேட்கத் தோன்றும்
ஒவ்வொரு சந்திப்பிலும்.


குழந்தைக்குத்
தெரிவதில்லை
வேற்று முகம்..
பெரியவர்களுக்குத்தான்
இந்த அவஸ்தை எல்லாம்.
புது முகம் பார்த்ததும்
மனத் தராசு
ஏதேனும் ஒரு பக்கம்
சரிந்து விடுகிறது தானாக.

சொட்டிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்..
மனப் பாத்திரம்
நிரம்பி வழியப் போகிறது
என்று பதறினால்..
காலியாகவே இருக்கிறது
அதன் மேல் பகுதி..
வீழ்கின்ற துளிகள் எல்லாம்
என் ஜீவனாகி
விடுவதைப் பின்பே உணர்ந்தேன்..

உன் கால்களைக்
கட்டிக் கொண்டிருக்கும்
என் மனக் குழந்தை..
உதறிச் செல்லும்
நீ உணர்வதில்லை..
விரல்கள் விலகினாலும்
விலகாத
ஈரம் படிந்த
உன் பாதங்கள்.

தலை துவட்டி விடத்
தோன்றுகிறது
ஒவ்வொரு மழைக்குப் பிறகும்
ஈரம் சொட்டச் சொட்ட
நிற்கும் மரங்களைக் கண்டால் !

உன் வீட்டைத் தாண்டி
வெளியே
எட்டிப்பார்த்த
கிளைகளை
வெட்டியபோது
நீ அறியமாட்டாய் ..
நீ கழித்து விட்டதில்
என் மனசும்
ஒட்டி இருந்ததை !

வானம் மின்னலாய் வந்து
பூமியை
முத்தமிட்டு
செல்கின்றது
பொறாமையில்
கருகிப் போகின்றன
மரங்கள் !

6 comments:

Paleo God said...

நிறையப் பேச வேண்டும் போல்
இருக்கும்
அருகில் நீ
இல்லாத போது
எதிரில் நீ வந்தால்
நீ பேசி
நான் கேட்கத் தோன்றும்
ஒவ்வொரு சந்திப்பிலும்.
//

இதுலயே நின்னிடிச்சி பார்வை ::)) நல்லா இருக்குங்க :)

வசந்தமுல்லை said...

அருமையான கவிதை. காதல் அனுபவம் உண்டோ? இருந்தால்தான் கவிதை இப்படி வரும்!!!!!!!!!!!

கிருபாநந்தினி said...

கவிதைகள் நல்லாருக்கு. ஆனா, ஒரே கவிதையா, வெவ்வேறு கவிதைகளான்னு புரியலை. குழப்பமா இருக்கு. தனித்தனிக் கவிதைகள்னா தனித் தனித் தலைப்புக் கொடுத்திருக்கலாம். கடைசி கவிதை எனக்கு ரொம்பப் பிடிச்சது.

திவ்யாஹரி said...

ரிஷபன் said...

இந்த அவஸ்தை வந்திருச்சா.. இனிமே கவிதை கொட்டும்.. நிறுத்தறது ரொம்ப கஷ்டம்..

உங்கள் பின்னூட்டத்தின் அர்த்தம் இங்கு வந்தபின் தான் புரிகிறது நண்பா.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?.

வசந்தமுல்லை said...

கொஞ்சம் மனசு, கொஞ்சம் கற்பனை,கொஞ்சம் கரு
இத்தனையும் கொண்ட கலைவைதான் கவிதை !
அந்த கவிதையை அந்த வண்ணத்து பூச்சியின் துணையோடு
காதலுடன் வடிக்கிறாய் ரிஷபன்!!!!
அருமை, எனக்கும் அந்த வண்ணத்து பூச்சியின்
துணையோடு கவிதை வடிக்க ஆசை!
அருள் புரிவீர் ரிஷபன்!!!!!!!!!!!!!!!!!!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

REALLY SUPERB