November 21, 2011

கல்யாண சாப்பாடு
இன்று விருதுநகர் வரை போக வேண்டியிருந்தது.

அலுவலக நணபருக்கு கல்யாணம்.

நாங்கள் 5 பேர் ஒரு அம்பாசிடர் காரில் போனோம். காலை 6 மணிக்குக் கிளம்பி நடுவில் ஒரு இடத்தில் டிபன் சாப்பிட நிறுத்திவிட்டு 9.30க்கு போய்ச் சேர்ந்து விட்டோம்.

மணமகள் வீட்டார் தனி மண்டபம். அங்குதான் திருமணம். மணமகன் வீட்டார் இன்னொரு மண்டபம். 5 நிமிட நடை தூரம்.

திருமணம் முடிந்ததும் மொய் கொடுக்க மேடை ஏறினால்.. ‘மணமகன் அங்கே வருவார்ங்க.. அங்கே கொடுங்க’ என்றார்கள்.

சாப்பாடும் எங்களுக்கு அங்கேதானாம்!

எனக்கு இது புது அனுபவம். இரு வீட்டார் இணையும் நிகழ்ச்சியில் சாப்பாடு தனித்தனியாகவா..

கூட வந்த இன்னொரு நண்பர் விளக்கம் தந்தார். சில பிரிவுகளில் இப்படித்தானாம்.

மறக்காமல் எங்கள் ஓட்டுநரையும் சாப்பிட அழைத்தோம். ‘இல்லை.. நீங்க போயிட்டு வாங்க’ என்று மறுத்து விட்டார்.

நண்பர் சொன்னார். ‘பொதுவா டிரைவர்கள் எல்லாம் சாப்பிட மாட்டாங்க.. ஓட்டும்போது தூக்கம் வரும்னு’

நாங்கள் மட்டும் போய் வாழ்த்திவிட்டு, உணவருந்தி விட்டு திரும்பினோம்.

திருச்சி திரும்பியதும் கடைசியில் இறங்கியது நான் தான். மற்றவர்களை அவரவர் இடங்களில் இறக்கி விட்டபிறகு.

‘அடடா.. நீங்க சாப்பிடவே இல்லியே.. பணம் கொடுத்து வெளியே சாப்பிடுங்கன்னு சொன்னா அதையும் கேடகல..’ என்று என் வருத்தம் சொன்னேன்.

அப்போது அவர் சொன்னார்.

“இதுக்கு முன்னால ரொம்ப அவமானப்பட்டிருக்கேன்.. சவாரி வரவங்க சாப்பிட் கூப்பிடுவாங்க.. போனா கல்யாண வீட்டுல யாராச்சும் தடுத்து திருப்பி அனுப்பிருவாஙக."

"அது சரி.. ஆனா இப்ப நாங்கதான கூப்பிட்டோம்.. அதுவும் எங்க கூடவே சாப்பிட அழைச்சுகிட்டு போகறதால்ல இருந்தோம்..”

மென்மையாக மறுத்தார்.

“இல்லிங்க.. நாலஞ்சு தடவை இப்படி அவமானப்பட்டுட்டேன்.. அதனால இப்பல்லாம் கல்யாண வீட்டுல சாப்பிடறதே இல்ல.. இதே போல ஒரு டாக்டர் கூட காரோட்டிகிட்டு போனேன்.. அவர் போன் பண்ணி வரச் சொன்னார்.. படியேறி போனபோது ஒருத்தர் போ.. போன்னு விரட்டிட்டார்.. டாக்டர் ஏன் வரலன்னு மறுபடி போன் பண்ணார்.. விவரத்தைச் சொன்னேன்.. உன்னை யார் விரட்டினதுன்னு கேட்டார்.. சரியா அடையாளம் தெரியலன்னு சொன்னதும் அவரும் சாப்பிடாம என் கூட வந்துட்டார்.. வீடு வர வரை புலம்பிட்டார்.. ச்சே இப்படி பண்ணிட்டாங்களேன்னு”

“நான் அழைச்சுகிட்டு போன டிரைவர்ஸ் எல்லாம் சாப்பிட வச்சிருக்கேன்.. அதுவும் நான் எந்த கல்யாணத்துக்கு போனேனோ.. அந்த வீட்டுக்காரங்களே ஞாபகப்படுத்தி அழைச்சுகிட்டு வரச் சொல்வாங்க” என்றேன் என் அனுபவத்தை.

“இருக்க்லாம்.. ஆனா எனக்கு இப்படி ஆச்சு.. நான் சம்பாதிக்கிறேன்.. என் பணத்துல எங்க வேணா சாப்பிட்டுக்கலாமே.. ஏன் பேச்சு வாங்கணும்னு நான் வரதில்ல.. மனசு கஷ்டம் தாங்க முடியல.. ஏதாச்சும் சொல்லிட்டாங்கன்னா”

அவரிடம் நூறு ரூபாயை மறுத்தபோதும் வற்புறுத்தி கொடுத்தேன்.

காரை விட்டு இறங்கி நடந்த போது அவர் சொன்னது மனசில் நெருடிக் கொண்டிருந்தது.15 comments:

கே. பி. ஜனா... said...

\\காரை விட்டு இறங்கி நடந்த போது அவர் சொன்னது மனசில் நெருடிக் கொண்டிருந்தது.\\
படித்து முடித்ததும் எங்கள் மனதிலும் நெருடுகிறது!

ஷர்மி said...

கே. பி. ஜனா...said...
\\காரை விட்டு இறங்கி நடந்த போது அவர் சொன்னது மனசில் நெருடிக் கொண்டிருந்தது.\\
படித்து முடித்ததும் எங்கள் மனதிலும் நெருடுகிறது!

மனித நேயம் இருக்கும் எல்லோருக்கும் நெருடும் சார். சிலர் தான் இந்தக் காலத்தில் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கிறார்கள்...
சிறு வயதிலிருந்தே எங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை எங்களுடனேயே அமர்ந்து உணவருந்தச் செய்வார்கள் எங்கள் அப்பா அம்மா. அப்போதெல்லாம் பிற்கு தனியாக அப்பா சொல்வார் ஒருவருடைய வயிறு நிரம்புவதை விட அவர்களின் மனம் நிறையும் போது தானம்மா நாம் சந்தோஷமடைய முடியும் என்று.

raji said...

இது மாதிரி நான் கூட கேள்விப்பட்டிருக்கேன் சார்!
எத்தனையோ பேருக்கு கல்யாணத்துல சாப்பாடு போடறவங்க இதுலதான் சிக்கனம் பாக்கறாங்க.என்னத்தைச் சொல்ல?
*************

தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Good experience. It is very true.

I have taken many of our official jeep drivers to so many functions, along with me.

But some of them may not be interested to come with us, stating so many other reasons.

Thanks for sharing.

TM 3, Indli 3, Udance 4 vgk

DrPKandaswamyPhD said...

டிரைவர்களை சாப்பிட வைப்பது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது.

கீதா said...

எந்த அளவுக்கு அவர் மனம் காயப்பட்டிருந்தால் அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பார். படிக்கவே மனம் கனக்கிறது. அவர்களும் மனிதர்கள்தானே! நம்மை பத்திரமாக பயணிக்கவைப்பதில் அவர்கள் பங்கு பெரும்பங்கு அல்லவா? மனித நேயம் மறந்த சிலரால் எத்தனைப் பேரின் தன்மானம் சிதைக்கப்படுகிறது. மனம் தொட்ட பதிவு ரிஷபன் சார்.

வெங்கட் நாகராஜ் said...

மனதை நெருடும் விஷயம் தான் இது. பலர் இப்படி தான் இருக்கிறார்கள்.....

அவர்களும் மனிதர்கள் தானே... எப்போது புரிந்துகொள்வார்களோ.....

கோமதி அரசு said...

“இருக்க்லாம்.. ஆனா எனக்கு இப்படி ஆச்சு.. நான் சம்பாதிக்கிறேன்.. என் பணத்துல எங்க வேணா சாப்பிட்டுக்கலாமே.. ஏன் பேச்சு வாங்கணும்னு நான் வரதில்ல.. மனசு கஷ்டம் தாங்க முடியல.. ஏதாச்சும் சொல்லிட்டாங்கன்னா”//

மனது மிகவும் கஷ்டப்படுகிறது இப்படிக்கூட மனிதர்கள் இருப்பார்களா?

எங்களை அழைத்து செல்லும் டாக்ஸி டிரைவர்களுக்கு எங்கு சென்றாலும் உணவு நேரத்தில் உணவை எங்களுடன் சாப்பிட வைத்தால் தான் மனது திருப்பித்து படும்.

கணேஷ் said...

நெருடல் உங்கள் மனதில் மட்டும்ல்ல... மனிதரை மனிதராக மதிக்கும் மனப்பாங்கு இன்னும் வளர வேண்டும் என்பதையே உங்கள் அனுபவம் அழுந்தச் சொல்கிறது. மதிக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு வந்தனம்!

சென்னை பித்தன் said...

உண்மை! ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே!

பூங்குழலி said...

நான் சென்றிருந்த ஒரு திருமண வீட்டில் ஒருவர் காரிலிருந்த டிரைவர்களை எல்லாம் அழைத்து ....ட்ரைவர்களுக்கென தனி பந்தி வைத்திருந்தார்கள் ..அங்கு அழைத்து போய் சாப்பிட வைத்தார்

G.M Balasubramaniam said...

ட்ரைவர்களும் நம் போன்றவர்கள்தான் என்ற எண்ணம் இல்லாதவர்களை என்னவென்று சொல்ல. ஒரு சமயம் சமூக வித்தியாசங்களின் வெளிப்பாடோ.?தொழில் கண்டு ஏற்ற தாழ்வுகளா.?எப்படிப் பார்த்தாலும் இவையெல்லாம் மாறப்பட வேண்டியவை. மாற்றப்படவேண்டியவை.

கோவை2தில்லி said...

இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். :(((

மோகன் குமார் said...

சார் நாடார் இல்ல திருமணங்களில் இப்படி தான் தனி தனி மண்டபம் தனி தனி சாப்பாடு

டிரைவர் செய்தி மனதை சற்று கனக்க வைக்கிறது

இராஜராஜேஸ்வரி said...

நெகிழ்வான பகிர்வு..