November 24, 2011

இப்படியும்..

”துலா ஸ்நானம் ரொம்ப நல்லது.. “

ராஜகோபுரம் வழியே நடத்தியே அழைத்துக் கொண்டு போனார் ராஜப்பா.

கூடவே பிருந்தா, அவள் மகள் ராஜ்யஸ்ரீ, மகன் ராஜேஷ்.

“தாத்தா இப்பவும் ஸ்பீடா நடக்கிறார்”

“அப்பல்லாம் தாத்தா வெளியே கிளம்பினா நானும் பாட்டியும் அரை கிமீ தள்ளி நடந்து வருவோம். அவ்வளவு ஸ்பீடு.. “ பிருந்தா சிரித்தாள்.

“இது திருமஞ்சன வாய்க்கால்.. அந்த காலத்துல இங்கேர்ந்தே பெருமாளுக்கு அபிஷேகத்துக்கு தீர்த்தம் கொண்டு போவாங்க. அவ்வளவு சுத்தமா இருக்கும். இப்ப பாரு”

கூவத்துக்கு நிகராய் ஒரு சாக்கடையைக் காட்டினார்.

“நீங்க ஸ்ரீரஙகம் வந்து ரொம்ப நாளாச்சுல்லப்பா”

பிருந்தா கேட்டாள்.

“ம்ம்.”

“ஏம்பா. உங்களுக்கு மறுபடி வரத் தோணல”

”உங்கம்மா போனதும் எனக்கு இங்கே இருக்க மனசில்லம்மா”

“ஆனா அம்மாக்கு இந்த ஊர்தான் ரொம்பப் பிடிக்கும்பா”

“ம்ம்”

“அம்மாவோட ரிலேஷன் யாரும் இங்கே இல்லியா இப்போ”

“இருப்பாங்க.. எனக்குத்தான் இப்ப யாரோடவும் டச் இல்லியே”

“எப்படிப்பா.. இப்படி சட்டுனு உதறிட்டீங்க”

பிருந்தா ஆச்சர்யமாய் பார்த்தாள்.

ராஜப்பா பதில் பேசவில்லை. ஸ்ரீரங்கம் பற்றி பேச்செடுத்தாலே மௌனமாகி விடுகிறார்.

அவர் மனசில் ஏதோ சொல்ல முடியாத ரகசியம் இருக்கிறதா..

பிருந்தாவுக்குள் குழப்பம்.

அம்மாமண்டபம் வரை நடந்தே வந்து விட்டார்கள். தெருவில் தான் எத்த்னை டிராபிக் நெரிசல். ‘பார்த்து.. பார்த்து’ என்று பதற வேண்டியிருந்தது.

திருடர்கள் ஜாக்கிரதை என்கிற பெரிய போர்டு . ராஜேஷ் படித்துக் காட்டி ‘சரியா அம்மா’ என்றான்.

” ஹை. தமிழ் நல்லா படிக்கிற.. “ என்று ராஜ்யஸ்ரீ கேலி செய்தாள்.

”ஆடி பதினெட்டுக்கு ரெங்கநாதர் இங்கே வருவார்”

"இப்படியே குளிங்கோ.. ரொம்ப போக வேணாம்”

“குளிர்றது தாத்தா”

சொன்னாலும் இருவரும் காவிரியில் இறங்கி குளிப்பதில் கும்மாளம் போட்டனர்.
பிருந்தாவும் குளித்து விட்டு வந்தாள்.

ராஜப்பா குளித்து விட்டு மேலே வரும் போது ஒரு பெரியவர் கொஞ்சம் தடுமாறி கீழே வழுக்கி விழப் போனார்.

“பார்த்து.. “

ராஜப்பா அவரைப் பிடித்து நிறுத்திவிட்டார்.

அப்புறம்தான் அவரை யாரென்று பார்த்தார்.

“நீயா”

“ராஜப்பாவா”

சட்டென்று கையை உதறினார்.

“வா பிருந்தா.. பசங்களா வாங்கோ.. சீக்கிரம்”

“ராஜப்பா.. நில்லுடா .. என்னை மன்னிச்சேன்னு சொல்லுடா”

அந்தப் பெரியவர் பின்னாலேயே ஓடிவந்தார். பிருந்தா சங்கடப்பட்டாள்.

“அவனை நிற்கச் சொல்லும்மா”

ராஜப்பா வேகமாக நடக்க பின்னாலேயே குழந்தைகளும் ஓடின.

“மன்னிச்சுக்குங்கோ.. அவர் ஏதோ வருத்ததுல போறார்..”

“ஆமாம்மா.. உங்க அம்மாவை பெண் பார்த்து வேண்டாம்னு சொன்ன பாவி நான். அது மட்டுமில்ல.. எங்க வீட்டுல அவளைப் பத்தி மட்டமா இவளுக்கெல்லாம் கல்யாணமே நடக்காதுன்னு பேசிட்டாஙக.. அப்புறம் உங்கப்பா அவளைபெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டார்.. ஒரு நாள் கோவில்ல என்னைப் பார்த்து அவ முகம் மாறினதைப் பார்த்து ராஜப்பா விசாரிச்சுருக்கான். அப்பதான் அவனுக்கு என்னைப் பத்திச் சொல்லி அழுதுருக்கா. “

பிருந்தா நம்ப முடியாத அதிர்ச்சியில் அவரைப் பார்த்தாள்.

“சொன்னா வேடிக்கையாத்தாம்மா இருக்கும். ஆனா நெஜம்மா. அன்னிக்கு அவனுக்கு என்னைப் பிடிக்காம போச்சு.. அவ மனசை ரணம் பண்னவன்னு என் மேல கோபம்.. அதுக்கப்புறம் உங்கப்பா அம்மா நல்லாத்தான் வாழ்ந்தாங்க. எத்தனை வருஷம் ஆனாலும் என் மேல உள்ள கோபம் அவனுக்கு போகல்ன்னு புரியுது.. “

பிருந்தா அவரைப் பரிதாப உணர்ச்சி மேலிடப் பார்த்தாள்.

“ வரேம்மா.. அவன் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு”

வீட்டுக்குள் வந்ததும் அப்பாவிடம் பிருந்தா கேட்டாள்.

“அவர் தப்பே பண்ணியிருக்கட்டும்.. ஆனா அவர் வேண்டாம்னு சொன்னதால தானே எங்கம்மா உங்களுக்குக் கிடைச்சாங்க.. அதுக்காவாவது அவர் மேல உள்ள கோபத்தை விட்டுரலாமேப்பா”

ராஜப்பா பதில் பேசவில்லை.


(இந்த நிகழ்ச்சியை ஒருவர் குமுறலோடு சொன்னதை கதையாக்கி விட்டேன்.. வாழ்க்கை என்பது எத்தனை வேடிக்கை காட்டுகிறது..)20 comments:

கணேஷ் said...

எல்லாக் காயங்களும் ஆறி விடுவதில்லை. சில நிரந்தர வடுவாகவே தங்கி விடுகின்றன. அப்படி ஒரு அனுபவத்தை அழகாகக் கதையாக்கி விடுகிறீர்கள். (அதென்ன... எல்லோருக்கும் ஸ்ரீரங்கம் பக்கமே நிறையக் கதைகள் கிடைக்கிறது. சுஜாதாவும் வாலியும் வந்த பூமி என்பதால் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன போலும்...) பிரமாதமான அனுபவக் கதை!

Ramani said...

அருமை அருமை
எல்லா பிரச்சனைகளிலும் நிகழ்வுகளிலும்
இன்னொரு கோணம் இருப்பது
அதில் சிக்காமல் வெளியில் இருந்து
பார்பவர்களுக்குத்தான் தெளிவாகத் தெரிகிறது
மனம் கவர்ந்த படைப்பு
த.ம 1

ரேகா ராகவன் said...

யாரோ சொன்னதை கேட்டு அதை அருமையான கதையாக்கித் தந்ததற்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான அனுபவக் கதை... நம்மைச் சுற்று எத்தனை எத்தனை கதைகள்..... ஆனால் பதிவு செய்ய உங்களைப் போன்றவர்கள் தான் சரி.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

Tamilmanam : 4
Indli: 4
Udance: 4

அருமையான பதிவு.

அவரவர் வாழ்க்கையில் இதுபோல எவ்வளவோ விஷயங்கள்!
மனதில் மட்டுமே அசை போடக்கூடியவை. சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். மற்றவை என்றுமே மர்மங்களாகவே தான் இருக்க முடியும்.

பதிவுக்கு நன்றிகள்.
vgk

அமைதிச்சாரல் said...

அனுபவக்கதை அருமையாயிருக்கு..

raji said...

ஒருத்தர் சொன்னதை எல்லாம் கதையாக்கற வலிமை உங்க மாதிரி ஆளுக்கெல்லாம்தான் கை வந்த கலை சார்!.

அருமையான பதிவு.பகிர்விற்கு நன்றி

மகேந்திரன் said...

வாழ்க்கை பல வண்ணங்களைக் கொண்டது, அதிலும்
சில வண்ணங்கள் இருட்டடிப்பு நிலையிலேயே இருக்கும்.. அதுபோல
வாழ்வின் நிகழ்வுகளில் சில சந்தர்பங்கள் மனதில் ஓங்கி ஆணி அடித்து நிற்கும்.. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை அருமையான கதையாக்கி இருக்கிறீர்கள் நண்பரே..
அருமை.

Philosophy Prabhakaran said...

ராஜப்பாவின் கோபமே அதானே... கெரகம் புடிச்சவன் அன்னைக்கே ஓகே சொல்லியிருந்தான்னா இந்த சண்டாளியை நம்ம தலைல கட்டியிருக்க மாட்டாங்களேன்னு நினைச்சு இப்பவும் ஃபீல் பண்றார்...

கீதா said...

இன்னும் சொல்லமுடியாத வலி ஏதேனும் அந்த தளர்ந்த தேகத்துக்குள் இருக்கிறதோ என்னவோ? எல்லார் மனத்தையும் எல்லாராலும் எளிதில் திறந்துவிடமுடிகிறதா என்ன? ஆழமான, அர்த்தமுள்ள கதை ரிஷபன் சார்.

ஹ ர ணி said...

எப்போதும் எல்லாவற்றையும் தாண்டி மனசுதான் வெற்றிபெறுகிறது. எத்தனை ஆழமான நேசிப்பு இது. இன்னொருவன் தன் மனைவியை வேண்டாம் என்று சொன்னதோடு இவளுக்கெல்லாம் கல்யாணமே ஆகாது என்பது எத்தனை காயங்களை உள்ளடககிய சொற்கள். வலிக்காதா பின்னே? மனைவி இறந்தபிறகு அதனை வெப்பமுட்ன் பராமரிக்கும் தாத்தா மனதில் உயர்ந்துபோகிறார் ரிஷபன். மனைவியை நேசிக்கவேண்டும் எல்லாவற்றையும் கடந்து என்பதை வலியுறுத்தும் பண்பாட்டை இறுக்கிப்பிடித்த கதை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். உங்க்ளின் நடை நாளுக்குநாள் என்னை ஆக்கிரமிக்கிறது. ரிஷபன். அனுபவிக்கிறேன். என்னையும் மறுபடியும் தொடர்ந்து தெர்ய்வில்லாமல் எழுதத் துர்ண்டுகிறீர்கள். நன்றிகள்

G.M Balasubramaniam said...

ஒரெநிகழ்ச்சி. ஒவ்வொருவர் பார்வை ஒவ்வொருவர் கோணத்தில். நான் ஃபிலாசஃபி பிரபாகரனின் பார்வையைச் சொன்னேன். எனக்கு ராஜப்பாவின் வெறுப்பு ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. .

வானம்பாடிகள் said...

ப்ரமாதம் ரிஷபன்.

Anonymous said...

சில நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள முடிவதில்லை.. நேசத்திற்கு வானமே எல்லை ம்ம்ம்ம் இப்படி ஒருவர் நேசிக்கவும் ஒரு கொடுப்பினை வேண்டும்..யாரோ சொன்னதில் உணர்வுகள் உயிர் கொண்டவைகளாய் தெரிகிறது கதையாக்கிய விதத்தில்..

இந்திரா said...

கோபத்திற்கான உண்மையான காரணமே அதுதான் போல..

//வாழ்க்கை என்பது எத்தனை வேடிக்கை காட்டுகிறது.//


உண்மை தான்..

Jagannathan said...

தப்பாக நினைக்காதே, கதையின் முக்கிய நிகழ்வுகள் விவரிக்கப் படாததால் ஆழம் இல்லை என்று படுகிறது. ஒருவர் சொன்ன நிகழ்ச்சியுடன் உன் கற்பனையும் கலந்து எழுதியிருக்கலாம். முதல் ஆள் ஏன் வேண்டாம் என்றார்? இத்தனை வருஷத்துக்கப்புறமும் ஏன் மன்னிப்பு கேட்கிறார்? எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டு பிறகு வாக்கப்பட்டு போகிறார்கள்? பையனும் நிராகரிக்கலாம் பென்ணும் நிராகரிக்கலாம். எல்லாம் அந்த பெண் பார்க்கும் சில நிமிட இம்ப்ரஷன் தானே. இன்னும் கொஞ்ஜம் நெரம் செலவழித்து எழுதியிருக்கலாம் என்பது என் ஆதங்கம். - ஜெ.

துரைடேனியல் said...

Nalla kathaithan. Vote pottuttomla.
TM 8.

கோவை2தில்லி said...

அனுபவக் கதை பிரமாதமாயிருக்கு சார். யாரோ ஒருவர் சொன்னதை அழகா கதையா ஆக்கிட்டீங்க.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

இதுதான் உண்மையான காதலோ?

middleclassmadhavi said...

//(இந்த நிகழ்ச்சியை ஒருவர் குமுறலோடு சொன்னதை கதையாக்கி விட்டேன்.. வாழ்க்கை என்பது எத்தனை வேடிக்கை //
ம்! மிகச் சரி
நல்ல கதை!